Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

என்ன செய்யறாங்க லேடீஸ் கிளப்பில-2

குமுதம் சினேகிதி மார்ச் 1, 2005 இதழில் வெளியானது






சொந்த ஊரான தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்து தமிழ் கேட்க ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். மும்பை போல் வெகு தூரம் வந்து வாழும் எங்களைப் போன்ற தமிழ் மக்களுக்கு பல தமிழ் நிகழ்ச்சிகளை, இசைக் கச்சேரிகளை, இனிய தமிழ் நாடகங்களை நிழ்த்தி, எங்களின் தமிழ்ப் பசிக்கு உணவிடும் சபாக்களில் மிக முக்கியமான இடம் எங்கள் நவி மும்பை வாஷி ஃபைன் ஆர்ட்ஸ்க்கு உண்டு.

இதன் பெண் அங்கத்தினர்கள் ஓன்று சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் வாஷி ஃபைன் ஆர்ட்ஸின் 'உமன்ஸ் விங்'கை ஆரம்பித்திருக்கிறார்கள். நம் தமிழ்க் கலாசாரம், பண்பாடு, பண்டிகைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதே இதன் முக்கிய நோக்கம்.

ஓவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு, தியாகராஜர் உத்சவம், இசைப் போட்டிகள் இவை கோலாகலமாக நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அங்கத்தினர்களின் வித்தியாசமான திறமைகளை ஊக்குவித்து அவர்களை மேடையேற்றி அவர்கள் சாதனை செய்வதற்கு படிக்கல்லாக இருக்கிறார்கள் இந்த பெண்கள் குழுவினர்.

அங்கத்தினர்களின் குழந்தைகளும் இசை, மாறு வேடம், நடனப் போட்டிகளை நடத்தி அவர்களின் திறமைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது இந்த உமன்ஸ் விங்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல இதன் அங்கத்தினர்களில் திறமையுள்ள சில பெண்கள் இணைந்து ஓரே மாதத்தில் அரங்கேற்றிய 'இவர்கள்' என்ற நாடகம் பலத்த வெற்றியுடன் மும்பையின் பல சபாக்களில் நடைபெற்றது.

ஆண்களே இன்றி, பெண்கள் மட்டுமே நடித்த இந்நாடகத்தில் 'ஒவ்வொரு பெண்ணும் தனித்தனி திறமைகளையும், எண்ணங்களையும், சற்று புரட்சியான நடத்தைகளையும் கொண்டிருந்தாலும், பெண்மையின் அடிப்படைக் குணங்களிலிருந்து மாறாமல், தன்னையும் தூய்மையாக வைத்துக் கொள்வாள்' என்பதை வலியுறுத்தியிருந்தார்கள்.

இதையடுத்து 'தஞ்சாவூர் Vs பாலக்காடு' என்ற நாடகத்தை உமன்ஸ் விங் பிரஸிடென்ட் ரேவதி விஸ்வநாத் எழுத 'சின்னத்திரை நடிகர் பாலா டைரக்ஷனில், வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார்கள்.

இதில் ஆண்களும் பங்கேற்று நடித்தது ஒரு ஸ்பெஷல்! இந்த நாடகம் முபையின் புகழ் பெற்ற சண்முகானந்தா ஹால் மற்றும் டில்லி தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்பட்டு மிகப் பெரிய வெற்றியைக் கண்டுள்ளது.

அடுத்த நாடகமான 'ஹரியும் சிவனும் ஒண்ணு' என்ற நாடகமும் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டதுதான்.

எல்லோரையும் போல் அல்லாமல், நலிந்து வரும் நாடகம், மறந்து போன தமிழர் பண்பாடு போன்ற நல்ல விஷயங்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதில் அக்கறை காட்டுகிறது இந்த உமன்ஸ் விங்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக