Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அஷ்ட விநாயகர்-6

அஷ்ட வி நாயகர் – 6

ஸ்ரீ மயூரேஷ்வர்-மோர்காவ்ன்


ஞான ஆலயம் அக்டோபர், 2003 இதழில் வெளியானது





புனே மாவட்டம் பாராமதி தாலுக்காவில் தர்ஹா நதிக்கரையில் அமைந்துள்ள மோர்காவ்ன் என்ற ஸ்தலத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீமயூரேஷ்வர், விநாயகரின் விகட ரூபமாகப் போற்றப்படுகிறார்.

ஜலந்தாசுரனை அழிக்க மஹா விஷ்ணுவானவர் பிருந்தையின் தூய்மையை அழிக்கச் சென்ற சமயம், அவரது விந்துவிலிருந்து உருவான காமாசுரன் எனும் அரக்கன், சுக்ராசாரியாரிடம் சிவபஞ்சாட்சர உபதேசம் பெற்று சிவபெருமானின் தரிசனம் கிடைக்கப் பெற்றான். அதனால் கர்வமுற்று மூவுலகயும் தன்னாட்சிக்குக் கொண்டு வந்து, தேவர்களையும், பூவுலக மக்களையும் துன்புறுத்தினான்.

அவனது கொடுமை எப்போது நீங்கும் என தேவர்கள் முத்தல முனிவரிடம் வினவ, அவரும் அவர்களை மயூரேஷ் என்னும் மோர் காவ்ன் சென்று கணேசரை வழிபடும்படி கூறினார்.

அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய கணபதி தேவர்களுடன் காமாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டார். அங்கு நடந்த கடும் போரில் காமாசுரனின் மகங்களான சோஷன், தூஷன் இருவரும் மடிய காமாசுரனும் நினைவிழந்தான். நினைவு திரும்பிய பின் கணபதிக்கு முன் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்து சரணடைந்தான். தேவர்கள் மகிழ்ச்சியுடன் விகட கணேசரைத் துதித்தனர். அவர் மயிலை வாகனமாகக் கொண்ட்தால் மயூரேஷ்வர் எனப் பெயர் பெற்றார்.

கண்டகி என்ற நகரை ஆண்ட மன்னன் சக்ரபாணிக்கும், அவன் மனைவி உக்ராவுக்கும் குழந்தைச்செல்வம் இல்லை. அவர்கள் சௌனக முனிவரின் அறிவுரைப்படி, சூரியனை உபாசித்துவர உக்ரா கர்ப்பமானாள். அவள் வயிற்றிலிருந்த சிசுவின் வெப்பம் தாங்க முடியாமல், கடலில் குழந்தைப் பேறு நிகழ்ந்தது. கடலரசன் பிராமண உருவில் குழந்தையை அரசனிடம் அளிக்க, அவனும் அக்குழந்தைக்கு கடல் என்ற பொருளைத் தரும் ‘சிந்து’ என்ற பெயர் சூட்டினான்.

இளவரசன் சிந்து சுக்ராசாரியாரின் அறிவுரைப்படி சூரியனை வழிபட, சூரியனும் அவன்முன் தோன்றி அவனுக்கு அமிர்தம் கொடுத்து, ‘அந்த அமிர்தம் அவன் வயிற்றில் இருக்கும்வர மரணம் கிடையாது’ என்று வரம் கொடுத்தார்.

அதனால் கர்வமடைந்த சிந்து தேவேந்திரனின் அமராவதியைக் கைப்பிடித்தான். மகாவிஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் தன் கண்டகி நகரில் சிறை வைத்தான். அதன்பின் கயிலாயத்தையும், சத்ய லோகத்தையும் தன் வயப்படுத்தினான். அவனது கொடுமை பொறுக்க முடியாத தேவர்கள் பிரகஸ்பதியின் அறிவுரைப்படி சிம்ம வாகனத்தில், 10 தலைகளுடன் காட்சி தரும் கணபதியை வழிபட்டனர். கணபதியும் அவர்கள் முன் தோன்றி பார்வதியின் மகனாகத் தான் பிறந்து சிந்துராசுரனை அழிப்பதாக வரமளித்து மறைந்தார்.

சிந்துராசுரனின் கொடுமை தாளாது சிவனும், உமையும் மேரு பர்வதம் சென்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த சமயம், ஈசன் பார்வதிக்கு கணபதியின் ஓரெழுத்து மந்திரத்தை உபதேசிக்க, பார்வதியும் கணபதியை மகனாகப் பெறும் பொருட்டு அம்மந்திரத்தை விடாமல் 12  வருடங்கள் உபாசித்தாள்.

ஒரு புரட்டாசி சுத்தபட்ச சதுர்த்தியன்று களிமண்ணால் கணபதியை செய்து பார்வதி வழிபட்டபோது, அச்சிலை உயிர் பெற்று, தான் கணபதியின் ஒரு அவதாரமாக சிந்து அரக்கனை அழிக்கப் போவதாகக் கூறியது. பார்வதி மகிழ்ச்சியோடு அக்குழந்தையை வளர்த்துவர, ஈசன் அக்குழந்தைக்கு ‘கணேஷ்’ என்ற பெயரிட்டு, யாராயிருந்தாலும் கணபதியை வணங்க்கி எந்தச் செயலையும் ஆரம்பித்தால் வெற்றியோடு முடிவடையும் என்ற வரமும் அளித்தார்.

அவரது ஆறு வயதில் விஸ்வகர்மா கணபதியைத் தொழுது அவ்ருக்கு பாசம், அங்குசம், பரசு, தாமரை ஆகியவற்றை அளித்தார். மேரு மலையிலிருந்து சிவபெருமான், பார்வதி, குழ்ந்தை கணேசர், தன் சிவ கணங்களுடன் வேறிடம் செல்லும்போது, கமலாசுரன் என்ற அரக்கனால் தாக்கப்பட்டனர். 12 கோடி சேனையுடன் குதிரையில் ஏறிப் போரிட்ட கமலாசுரனை கணேசர் மயில் ஏறீப் போரிட்டார். அவனது படை அழிந்தாலும் கமலாசுரனின் ஒவ்வொரு துளி உதிரத்திலிருந்தும் ஒரு அரக்கன் உருவாக, கணேசர் பிரம்மாவின் புதல்விகளான சித்தி, புத்தியை வரவழைத்து அவ்வரக்கர்களை உண்ணும்படி ஆணையிட்டார். இறுதியில் கமலாசுரன் உடல் இரண்டு துண்டாகி, அவனது தலை விழுந்த இடமே மோர்காவ்ன். அங்கு விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமே இன்றும் உள்ளது.

அடுத்து சிவபெருமான் கண்டகி நகரம் நோக்கிச் சென்றார்.  நந்தியை சிந்துராசுரனிடம் தூது அனுப்பியும், அவன் தேவர்களை விடுவிக்க மறுத்ததால், ஈசனின் படைகள் அவனைத் தாக்கின.

ந.ந்தி, வீரபத்திரர், முருகப் பெருமான் மற்றும் சிவகணங்கள் கணேசரின் தலைமையில் செய்த போரில் சிந்துவின் மைத்துனர்கள், மகள்கள் அழிந்தனர். அவனது தந்தை சக்கரபாணி கூறிய அறிவுரையைக் கேளாது, அவனது கத்தியால் கணேசரை வெட்டுவதற்கு சிந்து ஓடிவந்தபோது, விநாயகர் சட்டென்று சிறு உருவம் எடுத்து, ஒரு அம்பை அவனது தொப்பிளைக் குறீபார்த்து விடவும், அவனது வயிற்றிலிருந்த அமிர்தம் முழுதும் வெளிவர, அவன் உயிரிழந்து விழுந்தான்.

அவனது தந்தை சக்கரபாணியின் வேண்டுகோளூக்கிணங்க்கி, கணேசர், சித்தி, புத்தி தேவியரை மணந்து அங்கு பலகாலம் வாழ்ந்து அதன்பின் தன்னுடைய மயிலை முருகப் பெருமானிடம் அளித்துவிட்டு, அனைவரிடமும் விடை பெற்று மறைந்தார்.

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு என்பது நாம் அறிந்த விஷயம். மயில் எப்படி வாகனமாயிற்று? காஸ்யப முனிவரின் இரு பத்தினிகள் கத்ரு, வினிதா. கத்ருவின் பிள்ளைகளான பாம்புகள், வினிதாவின் மகங்களான ஷ்யேன், சம்பாதி, ஜடாயு போன்றோரை பாதாள லோகத்தில் சிறை வைத்தனர். இதனால் மனம் வருந்திய வினிதாவுக்குப் பல நாள் கழித்து மீண்டும் ஒரு புத்திரன் உருவாயிற்று. ஆனால் அவன் முட்டையிலிருந்த சமயம் கணேசர், அம்முட்டையை உடைத்துவிட, அதனுள்ளிருந்து உருவான மயில் கணபதியுடன் போரிட்டது.

வினிதா இருவருக்கும் சமாதானம் செய்ய, அம்மயில் கணபதி தன்னை வாகனமாகக் கொண்டு, தன் பெயராலேயே கணபதியின் பெயர் வழங்கப்பட வேண்டுமென்று வேண்ட, கணபதியும் தன் பெயரை ‘மயூரேஷ்வர்’ என்று கொண்டு, அந்த மயிலின் உதவியுடன் பாதாள லோகம் சென்று வினிதாவின் மகன்களை மீட்டுத் தந்தார். அன்றுமுதல் மயில் அவரது வாகனமாயிற்று என்பது புராணம்.
 

இனி ஆலயத்தை தரிசிப்போம். மோர் காவ்ன் கிராமத்தின் நடு நாயகமாக விளங்குகிறது மயூரேஷ்வர் ஆலயம். ஒரு மசூதி போன்ற அமைப்பில், சிறு கோட்டை போன்று வடக்கு நோக்கி அமைந்துள்லது ஆலயம். ஆலயத்திற்குள் நுழையும்முன் வெளியிலுள்ள தீப ஸ்தம்பத்திற்கு முன்பாக நான்கு அடிக்குக் குறையாத உயரத்தில் ஒரு பெரிய மூஞ்சூறு சிலை, இரு கைகளிலும் மோதகம் தாங்கியவாறு காட்சியளிக்கிறது. கரு நிறக் கல்லாலான இச்சிலை செந்தூரம் பூசப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.

 

அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய ந்ந்தி மயூரேஷ்வரரை நோக்கியவாறு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறது. சிவன் கோயிலகளுக்கு உரிய நந்தி, விநாயகர் கோவிலுக்கு வந்த காரணம் என்ன? இதன் பின்னணியில் சுவையான கதை ஒன்றஉண்டே! 



 

பல ஆண்டுகட்கு முன் அருகிலுள்ள ஒரு சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்ய வண்டியில் இந் நந்தி சிலை எடுத்துச் செல்லப்பட்ட சமயம், அவ்வண்டி அச்சு முறிந்துபோக, மயூரேஷ்வர் எதிரில் நந்தி கீழே விழுந்து அமர்ந்துவிட்ட்து. பின்பு அதனை மக்கள் நகர்த்த முயற்சித்து முடியாமல் போக, அவ்வண்டிக்காரன் கனவில் நந்தி தோன்றி, “தான் இங்கேயே இருக்க விரும்புவதால் நகர்த்த முயற்சிக்க வேண்டாம்” என்று சொல்ல அன்று முதல் நந்தியம் பெருமான் அங்கு இடம் பெற்று விட்டாராம்!

பாதுஷாவிடம் பணிபுரிந்த இந்திய அதிகாரியான கோலே என்பவரால் இவ்வாலயம் கருங்கல்லால் முகமதிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நான்கு வாயில்களில் கிழக்கில் லட்சுமி நாராயணர், தெற்கில் சிவ பார்வதி, மேற்கில் ரதிமன்மதன், வடக்கில் பூமி மற்றும் சூரியனுக்கும் சன்னதிகள் உள்ளன. இவை தர்ம, அர்த்த, காம, மோட்சத்தைக் குறிக்கின்றன. ஆலயத்தின் எட்டு பக்கங்களில் ஏகதந்தர், மஹோதரர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர், வக்ரதுண்டரின் சிலைகள் அமைந்துள்ளன.

இவ்வாலய இறைவனை தரிசிக்கும் முன்பு நாக்ன பைரவர் என்ற பைரவரை தரிசித்தல் அவசியம் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆலயத்தில் மயூரேஷ்வரின் இடப்பக்கம் இந்த சன்னதி உள்ளதாம். ஆனால் ஆலயத்தில் எவருக்கும் இது பற்றி எதுவும் தெரியவில்லை. ஆலயம் முழுவதும் இடிக்கப்பட்டு கட்டப்படுவதால் பழைய அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.

செய்மயூரேஷ்வர் கிழக்கு பார்த்து, இடப்பக்கம் திரும்பிய தும்பிக்கையுடன் மிக அழகாகக் காட்சி அளிக்கிறார். கண்களிலும், தொப்புளிலும் வைரக் கற்கள் மின்ன சிரத்தில் நாகம் குடைபிடிக்க, சித்தி, புத்தி இருவரும் இருபக்கமும் சிலை வடிவில் காட்சி தர கம்பீரமாக அமர்ந்துள்ளார். எதிரில் மூஷிகமும், மயூரமும் சிலை வடிவில் காட்சி தருகின்றன.

 

இந்த மயூரேஷ்வரின் உருவம் மிகச்சிறியது. மணல், இரும்பு மற்றும் வைரம் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஆதிகாலச் சிலை, தற்போதைய மயூரேஷ்வர் விக்கிரகத்திற்குப் பின்னால் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிந்துராசுரனால் அழிக்கப்பட்ட அவ்விக்கிரகம் பிரம்மாவினால் இருமுறை உருவாக்கப்பட்டு, பின் அங்கு தீர்த்த யாத்திரை வந்த பாண்டவர்கள் அதற்கு கவசம் போட்டதாகக் கூறப்படுகிறது,

தற்போது நாம் தரிசிக்கும் மயூரேஷ்வர் சிந்தூரம் பூசிப்பூசி அளவில் பெரியதாயும், 100 அல்லது 125 வருடங்களுக்கு ஒருமுறை அந்தக் காப்பு நீங்கி சுய உருவம் வெளியே தெரியுமென்றும் கூறப்படுகிறது. அவ்வாறு கி.பி. 1788 மற்றும் 1822ம் ஆண்டுகளில் இறைவனின் சுயமான ரூபம் தெரிந்ததாம்.

இங்கு பக்தர்கள் தாமே பூஜை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. காலை, மதியம், இரவு பூஜைகள் முறையாகச் செய்யப்பட்டு, கிச்சடி, சப்பாத்தி, பால்சாதம் இவை நிவேதிக்கப் படுகின்றன. புரட்டாசி, மாசி மாத சுத்த சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். அத்துடன் விஜௌஅ தசமி மற்றும் சோமவார அமாவாசை, மாசி சுத்த பஞ்சமியன்று அன்ன சந்தர்ப்பணா என்ற உற்சவங்க்களும் கொண்டாடப்படும்.

மயூரேஷ்வரின் வரலாறு பற்றி கேட்பவர்களும், படிப்பவர்களும் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபட்டு, விரும்பியன அனைத்தும் கிடைக்கப் பெறுவர் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற துறவியான சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் இவ்வாலய இறைவனை தரிசித்த பின்பே ‘சுக கர்த்தா, துக்க ஹர்த்தா, வார்த்தா விக்னாசி’ என்ற மராட்டிய ஆரத்தியை இயற்றினார். இது மராட்டிய நாடு முழுவது பாடப்படும் முக்கிய ஆரத்திகளில் ஒன்று.


 

ஜடபரத முனிவரின் ஆசிரமம் இங்கு இருந்ததன் அடையாளமாக, இவ்வூரில் ஒரு பாறையில் 5 லிங்கங்கள் உள்ளன. இவ்வூர் அமைந்திருக்கும் கரஹகங்கா என்ற நதி பிரம்மாவின் கமண்டலத்திலிருந்து உருவானதால் ‘பிரம்மா கமண்டலு கங்கா’ எனப்படுகிறது. இதில் ஸ்நானம் செய்பவர்கள் பாவம் நீங்கி புனிதம் பெறுவர் என்று மயூரேஷ்வர் வாக்கு. இதனைச் சுற்றிலும் மேலும் 7 புனித தீர்த்தங்கள் உள்ளன.

மேலும் இவ்வாறு பல அதிசயச் செய்திகள் மற்றும் வரலாறுகளைக் கொண்ட இவ்வாலயம், அஷ்ட விநாயக ஆலயங்களுள் மிகுந்த விசே ஷமும், பெருமையும் கொண்டது.

மோர் காவ்ன் பூனா-ஷோலாப்பூர் ஹைவேயில் 56 கி.மீ. தூரத்தில் அமைதுள்லது. பூனாவிலிருந்து இங்கு செல்ல இரண்டு, மூன்று வழிகள் உள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக