Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

மணக்கும் மசாலா...மருந்தும் கூட

சினேகிதி செப்டம்பர் 2003 மற்றும் அக்டோபர் 2003 இதழ்களில் வெளியானது.


நம் உணவிற்கு ஒரு ‘ஸ்பெஷல்’ வாசனையையும், ருசியையும் சேர்ப்பவை மசாலாக்கள். இனிப்பானாலும், காரமானாலும், புலாலானாலும், கறியானாலும் அதில் இறுதியாக மசாலாக்களைச் சேர்த்த பின்பே முழுமை பெற்ற சமையலாகும். மணம் கூடி, சுவையை மேம்படுத்தும் இந்த மசாலா சாமான்களுக்கென சில தனிப்பட்ட மருத்துவப் பயன்கள் உண்டு. இவை நம் வயிற்றில் சில என்ஸைம்களை உருவாக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலுடையவை. அவற்றின் தனி குணங்களைப் பற்றிப் பார்ப்போம்.


பெருங்காயம்…

துவர்ப்புச் சுவையும், அடர் மணமும் கொண்ட பெருங்காயம், ஒரு தாவரத்தில் உருவாகும்  பிசினை எடுத்துத் தயாரிக்கப்படுகிறது. இது சமையலிலும், மருத்துவத்திலும் வெகுவாகப் பயன்படுகிறது. இது வயிற்றுப் பொருமல், அஜீரணத்தை உடனடியாகக் கட்டுப் படுத்துகிறது. ஜீரண சக்திக்குத் தேவையான அமில சுரப்பை அதிகரித்து, வயிற்றில் உருவாகும் வாயுவை வெளியேற்றுகிறது. தென்னிந்திய சமையல்களில் மிக அதிகமாக உபயோகப் படுத்தப்படும் ஊறுகாய்களுக்கு மணம் கூட்டுவதுடன், அவற்றில் உள்ள காரம் வயிற்றைப் பாதிக்காதபடி செய்யும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு. ‘ஹீங் பட்டி’ எனப்படும் (ஹீங் என்றால் இந்தியில் பெருங்காயம்) பெருங்காய மாத்திரைகள் வட நாடுகளில் மிகப் பிரபலம்.


ஓமம்

ஓரிகானோ என்ற தாவரப் பெயர் கொண்ட ஓமம் மிக அதிக மருத்துவ குணம் கொண்ட்து. இது அஜீரணம், வயிற்று உப்புசம் இவற்றிற்கு மிக நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. கைக் குழந்தைக்குக் கூட ஓமம் அரைத்துக் கொடுத்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். ஓமம் முழங்கால் வலி, மூட்டு வலி இவற்றிற்கு நல்ல நிவாரணி. இது ரத்தத்திலுள்ள நச்சுகளை அழித்து, மூட்டுகளுக்கு இடையே அடைத்துக் கொள்ளும் டாக்ஸின்களைக் கரைப்பதால் வலி குறையும்.

ஓமம் விதகள் ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலுடையவை என ஆயுர் வேத மருத்துவத்தில் உள்ளது. இது சமையலை விட மருந்துப் பொருட்களிலேயே அதிகம் சேர்க்கப்படுகிறது.

உடலில் ஏற்பட்ட வீக்கம் குறைய ஓமத்தை அரைத்து, எலுமிச்சை சாறுசன் சேர்த்துத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இருமலுக்கு ஓமத்தைக் கஷாயம் செய்து அத்துடன் வெந்தயப் பொடி, தேன் சேர்த்து மூன்று நாள் சாப்பிட வேண்டும்.குங்குமப்பூ…

இது வாசனைப் பொருட்களின் ராணி. மிகவும் விலை உயர்ந்ததும் கூட. பாயசம், இனிப்பு வகைகளில் சிட்டிகை சேர்த்தாலும், மணம் ஊரைக் கூட்டும். இது நம் நாட்டில் காஷ்மீரில் மிக அதிகமாகப் பயிராகிறது. இதில் போலியும் இருப்பதால் கவனித்து வாங்க வேண்டும்.

ஆண், பெண் ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்து, குழந்தைப் பேறு உண்டாக உதவும் இந்த குங்குமப்பூ.கிராம்பு…

இது கிராம்பு செடியின் மொட்டு பாகம். காய வைக்கப்பட்டு வாசனைப் பொருளாக உபயோகப்படுகிறது. கிராம்பிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் பல்வலிக்கு நல்ல மருந்து. பல்லிலுள்ள கிருமிகளை நீக்கி வலியைப் போக்கும். ஜலதோஷம், தொண்டைக்கட்டு, தொண்டை கரகரப்பிற்கு கிராம்பு நல்ல நிவாரணி. இது நம் உடலிலுள்ள செல்கள் மற்றும் திசுக்களின் வேதியியல் மாற்றத்தைச் சமன்படுத்தும். ரத்தத்திலுள்ள நச்சுப் பொருளை அழிக்கும்.

கிராம்பு மசாலாப் பொடிகளிலும், புலால், பிரியாணியிலும் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய வாசனைப் பொருள்.

இரண்டு கிராம்புகளை இரவு வெந்நீரில் போட்டு மூடி வத்து மறு நாள் காலை அந்த நீரைக் குடித்தால் உடலுக்கு நல்லது.

வாய் துர் நாற்றம் நீங்கி மணமாக இருக்கவும், பாலுணர்வு அதிகரிக்கவும் வெற்றிலையுடன் கிராம்பு சேர்த்துச் சாப்பிடலாம்.


வயிற்று அஜீரணம், பொருமலுக்கு நீரில் கிராம்பைப் போட்டு கொதிக்க வைத்து, அந்தக் கஷாயத்தை மூன்று வேளை சாப்பிடவும்.மஞ்சள்…
நம் நாட்டில் மங்கலச் சின்னமாக உயர்ந்த இட்த்தில் வைத்துப் போற்றப்படும் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. சரும நோய்களுக்கு எதிரி. அதனாலேயே பண்டைக் காலத்திலிருந்து அழகிய சருமம் பெற மஞ்சள் பொடி தேய்த்துக் குளிக்கும் பழக்கம் உள்ளது. எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு மஞ்சள் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இரைப்பையிலுள்ள டாக்ஸின் என்ற நச்சுப் பொருளை நீக்கி, உடல் நிலையைப் பாதுகாக்கும் உன்னதப் பணியைச் செய்வது மஞ்சள், ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்கிறது. மஞ்சள் பொடி பெரும்பாலான உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஜலதோஷத்தால் மூக்கடைப்பு ஏற்படும்போது, வரளி மஞ்சளை நெருப்பில் சுட்டு அல்லது மஞ்சள் பொடியைத் தணலில் போட்டு வரும் புகையை இழுத்தால் சளி வெளியேறும்.


தொண்டைக் கட்டுக்கு பசும்பாலை சுண்டக் காய்ச்சி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து அருந்தவும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக