Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஸ்ரீ மகா பெரியவர் ஜயந்தி

ஸ்ரீ மகாபெரியவர் ஜயந்தி
ஞான பூமி ஜூன் 2004 இதழில் வெளியானது


மகாபெரியவர், ஆசாரியாள், ஜகத்குரு என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி தினம் ஜூன் 2ம் தேதி வருகிறது, அவரது 110 வது ஜயந்தி விழா கொண்டாடும் இந்நாளில் அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

சுப்ரமணிய சாஸ்திரி, மகாலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகனாக விழுப்புரத்தில் வைகாசி 2ம் நாள், அதாவது மே 20ம் தேதி 1894ம் ஆண்டு சுவாமிநாதன் என்ற பெயரில் ஆசாரியார் அவதரித்தார். வீட்டில் அவர் தந்தையிடமே ஆரம்பப் பாடங்களைப் படித்தவர், எட்டு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1905ம் ஆண்டு உபநயனம் எனும் பூணூல் போடும் வைபவம் நடைபெற்றது.

1906ம் ஆண்டு நான்காவது ஃபாரமில் படித்தபோது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் பிரின்ஸ் ஆர்தராக அற்புதமாக ஆங்கிலம் பேசி நடித்த தன் மகன், பின்னாளில் பெரிய அதிகாரியாக வருவாரென அவர் தந்தை எண்ணினார். ஆனால் ஆண்டவனின் எண்ணம் வேறாயிற்றே! காஞ்சியின் 66வது ஆசார்யர் தென் ஆற்காடு மாவட்டம் சென்றிருந்த சமயம் தந்தையுடன் தரிசனத்திற்கு வந்திருந்த சுவாமிநாதனே தனக்குப் பின் பீடத்தை ஆரோகணிக்கப் போவதை அறிந்து, தக்க முறைகளுடன் அவரை காஞ்சிக்கு வரச் செய்து, 68வது பீடாதிபதியாக அறிவித்தார். 1907, பிப்ரவரி 13, சுவாமிநாதன் காஞ்சி பீடத்தின் 68வது குருவானார். பின் வேத சாஸ்திரங்களை அதற்கான பண்டிதர்களிடம் முறையாகப் பயில, கும்பகோணம் மடத்துக்கு அனுப்பப் பட்டார்.

பீடமேறிய அவரால் நடத்தப் பெற்ற முதல் கும்பாபிஷேகம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் 1908 பிப்ரவரி 6ம் நாள் நடைபெற்றது. குடந்தை மடத்தில் சுவாமியைத் தரிசிக்கவும், சந்திக்கவும் அடிக்கடி மக்கள் வந்தது அவரது படிப்புக்கு இடையூறாக இருந்ததால் திருச்சிக்கு அருகே உள்ள மகேந்திர மங்கலத்தில் தங்கி படித்தார். வேத சாஸ்திரம் மட்டுமின்றி, ஜோதிடம், இசை, இலக்கியம், தத்துவம் என்று பலவும் படித்தார்.

மார்ச் 1919ல் முதன்முறை காசி யாத்திரை சென்றவர் தொடர்ந்து பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தார். தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், சத்யமூர்த்தி, சேட் ஜம்னாலால் பஜாஜ், ராஜாஜி ஆகியோரை சந்தித்த மகா பெரியவர் 1920 முதல் கதர் ஆடை மட்டுமே அணிவதை வழக்கமாகக் கொண்டார்.

ஜனவரி 1931ல் பால் பிரண்டன் என்ற ஆங்கில எழுத்தாளர் பெரியவருடன் சந்தித்துப் பேசி, அதனைப் பற்றி அவரது ‘ஸர்ச் இன் சீக்ரெட் இண்டியா’ (Search in Secret India) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

1932, ஜூன் 14ம் நாள் அவரது தாயின் மரணத்தை எந்த உணர்வும் இன்றி அமைதியாக ஏற்றுக் கொண்டது அவரது சன்னியாசத்தின் உயர்வைக் காட்டுகிறது.

1932 செப்டம்பர் 28 சென்னைக்கு முதன் முறையாக விஜயம் செய்தார். ஒவ்வொரு இடத்திலும் இளம் ஆசாரியாரைக் காண வரும் கூட்டம் கட்டுக் கடங்காது.

1933, மே 18ம் நாள் முதன் முறையாக சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசித்தார். இந்தியாவின் பல இடங்களுக்கு சுவாமிகள் கால் நடையாகவே சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

1954ம் ஆண்டு மார்ச் 22, தனக்கு அடுத்த பீடாதிபதியாக மன்னார்குடியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். 1957 செப்டம்பர் 6ம் நாள் ஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் முன்னிலையில் மகா பெரியவருக்கு காஞ்சியில் கனகாபிஷேகம் நடைபெற்றது.

இரண்டு ஆச்சாரியர்களுமாக இணைந்து பல தலங்களுக்கும், ஊர்களுக்கும் தொடர் விஜயம் செய்தனர். 1966ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 1969 மே 23 வரை இருவரும் நான்கு ஆண்டுகள் காஞ்சிபுரத்திலேயே இல்லாமல் ஆந்திரா முழுவதும் தொடர் விஜயம் செய்தது குறிப்பிடத் தக்கது. அதன் பின் 9 வருடங்கள் காஞ்சியிலேயே தங்கியிருந்த பெரியவர் திடீரென கிளம்பி பாத யாத்திரையாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா முழுதும் 6 ஆண்டுகள் பயணம் செய்தார். 80 வயதில் அவர் செய்த பாத யாத்திரை அவர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும்.

1983, மே 28ம் நாள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அச்சமயம் ஆந்திராவிலிருந்த மகா பெரியவரை இருவருமாகச் சென்று தரிசித்து, அவ்வருட வியாச பூஜையை மூன்று ஆசார்யருமாக இணைந்து செய்தனர். 1984 தமிழ் வருடப் பிறப்பன்று மூவருமாக காஞ்சி திரும்பினர்.


அதன்பின் மடத்தை விட்டு எங்கும் செல்லாத மகா பெரியவர் 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் முக்தி அடைந்தார். நூற்றாண்டுகள் வாழ்ந்து, நடமாடும் தெய்வமாய் விளங்கி, இறையருளை உலகம் முழுதும் பரவச் செய்த ஜகத் குருவின் காலத்தில் வாழும் பாக்கியம் பெற்ற நாம், அவரது தெய்வத் திருவடிகளை இந்நாளில் பணிந்து, அவரருள் பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக