Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஆஹா...மகாராஷ்ட்ரா

ஆஹா... மகாராஷ்டிரா!
குமுதம் சிநேகிதி செப்டம்பர் 2003 இதழில் வெளியானது








எல்லா மாநிலங்களும் உங்கள் கிச்சனில்


மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட வட இந்திய ஸ்டைல் உணவு முறைதான். ஆனால் ரொட்டி சப்ஜியோடு மகாராஷ்டிரர்கள் அரிசி சாதம், தயிர் போன்றவற்றையும் சாப்பிடுகிறார்கள். ஜீரா சாதம், மசாலே பாத், புலாவ் இவற்றுடன் தயிரைத் தனியாக சாப்பிடுவார்கள். இவர்கள் உணவில் ஆந்திரா போன்று அதிக தேங்காயோ, எண்ணெயோ கிடையாது. தேங்காயைவிட கொப்பரையே அதிகம் உபயோகிக்கிறார்கள். கடலெண்ணெய்க்கே முதலிடம். அதிக காரமோ எண்ணெயோ இல்லாத சுவையான வித்தியாசமான மகாராஷ்டிர சைவ சமையல் முறைகளில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன்:



பூரண் போளி

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு – 2 கப்
வெல்லம் - 2¼ கப்
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்
கோதுமை மாவு – 1 கப்
மைதா - 1½ கப்
உப்பு – சிட்டிகை
எண்ணெய், நெய், அரிசி மாவு – சிறிதளவு

செய்முறை:

கோதுமை, மைதா மாவுகளுடன் உப்பைச் சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். அத்துடன் 4 ஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். ஒரு தாம்பாளத்தில் வைத்து ஈரத் துணியில் மூடி வைக்கவும்.

கடலைப் பருப்பை சற்று ஊற வைத்து வேக விடவும். நன்கு வெந்ததும் வடிகட்டி, அத்துடன் வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டும் சேர்ந்து கொண்டு கெட்டியானதும், இறக்கி ஆற விடவும். மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். ஏலப்பொடி சேர்த்துக் கலந்து உருண்டைகளாக்கவும்.


பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். உருட்டிய மாவை சப்பாத்தி இடும் கல்லில் வைத்து சின்ன வட்டமாக இட்டு, அதனுள் பூரணம் வைத்து நன்கு மூடி உருட்டவும். இதை அரிசி மாவில் தொட்டு சப்பாத்தி போல் இடவும். சப்பாத்தி வார்க்கும் கல்லில் முதலில் சிறிது நெய்யைத் தடவி, பூரண் போளியைப் போட்டு, வெந்ததும், திருப்பி விட்டு மறுபக்கத்துக்கும் நெய் தடவி எடுத்து வைக்கவும். இனிய பூரண் போளி தயார்! அங்கு ஏறக்குறைய எல்லா பண்டிகைகளுக்கும் செய்யப்படும் ஸ்பெஷம் இனிப்பு வகை இது!




ஸ்ரீகண்ட்

இது மகாராஷ்டிராவின் மிக முக்கிய இனிப்புகளில் ஒன்று. அதிலும் நவராத்திரி ஸ்பெஷல்.

தேவையான பொருட்கள்:

புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2கப்
சர்க்கரை – 2 கப்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு, முந்திரி, பாதாம் – தேவைக்கு
குங்குமப்பூ – சிறு துளி (வெது வெதுப்பான பாலில் ஊற வைக்கவும்)
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:


தயிரை ஒரு துணியில் கட்டி 7 மணி நேரம் தொங்கவிடவும். அதன் நீர் முழுவதும் வடிந்த பின் அந்த கெட்டி விழுதிற்கு ‘சக்கா’ என்று பெயர். அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். அத்துடன் பாலில் ஊறிய குங்குமப்பூ, ஏலப்பொடி, துண்டாக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளையும் சேர்த்து குளிர வைத்து கப்பில் கொடுக்கவும். தயிரின் சுவையுடன் இனிப்பான, வித்தியாசமான ஸ்ரீகண்ட் மகாராஷ்டிரா இனிப்புகளின் ராணி!


பாஸந்தி

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
பாலாடை (க்ரீம்) - ¼ கிலோ
சர்க்கரை - ¾ கப்
ஏலப்பொடி – சிறிதளவு

செய்முறை:


அடி கனமான பாத்திரத்தில் பாலுடன் க்ரீமையும் சேர்த்து அடி பிடிக்காமலிருக்க கைவிடாமல் கிளறவும். பால் நல்ல கூழாகி, பாதியாகி வற்றியதும் அதில் சர்க்கரை சேர்த்து மேலும் பத்து நிமிடம் கொதித்தபின் இறக்கி ஏலப்பொடி சேர்த்துக் குளிர வைத்துப் பரிமாறவும்.



போஹா

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்
உருளைக் கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 3 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/8 கப்
உப்பு தேவைக்கு
காரப்பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலாப்பொடி – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லித் தழை – தேவைக்கு
எலுமிச்சை ஜூஸ் – 4 டீஸ்பூன்
எண்ணெய், நெய் – தேவைக்கு
சர்க்கரை - ½ டீஸ்பூன்

செய்முறை:

இதற்கு மெல்லிய அவலே ருசியாக இருக்கும். மேலும் அது சீக்கிரமாகவே ஊறி விடுவதால் ரெசிபியை சட்டென்று செய்து விடலாம். அவலை சிறிதளவு நீரில் களைந்து, நீரை ஒட்ட வடித்து ஊற விடவும். செய்ய ஆரம்பிக்கு முன் ஊற வைத்தால் போதும். எண்ணெய், நெய் கலந்து (4 டீஸ்பூன்) வாணலியில் காய வைத்து, அதில் கடுகு, சீர்கம் தாளிக்கவும். நிலக்கடலை போட்டு வறுபட்டதும் பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு, வெங்காயம் சேர்த்து ஒரு கிளறு கிளறி, ஊறிய அவலையும் போட்டு ஐந்து நிமிடம் கிளறிவிட்டு இறக்கவும். மேலே தேங்காய்த் துருவல், கொத்தமல்லி தழை, எலுமிச்சை ஜூஸ் மற்றும் சர்க்கரையும் சேர்த்து சுடச் சுடப் பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவும் வேண்டாம். இதில் பொடியாக நறுக்கிய முட்டைக் கோஸ், கேரட், வேகவைத்த பட்டாணி சேர்த்து செய்ய கூடுதல் ருசியாக இருக்கும்!




ஆம்ட்டி

இது நம்முடைய ரசம் போன்றது. இது சாதம் மற்றும் புலாவ் வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு -      1 கப்
மஞ்சள் பொடி -      ½ டீஸ்பூன்
காரப்பொடி   -      1 டீஸ்பூன்
புளி               -      கொட்டைப்பாக்களவு
வெல்லம்        -      1 டீஸ்பூன்
நெய்                    -      2 டீஸ்பூன்
சீரகம்            -      1 டீஸ்பூன்
கடுகு                    -      1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய்     -      4
பெருங்காயம், உப்பு      -      தேவைக்கு
இஞ்சி                   -      சிறு துண்டு
கொத்தமல்லி தழை -      சிறிதளவு
கோடா மசாலா            -      2 டீஸ்பூன்
(‘கோடா மசாலா’ என்ற ஸ்பெஷல் மசாலாவைத் தயாரிக்கும் முறை தனியாகவே தரப்பட்டிருக்கிறது)

செய்முறை:

துவரம் பருப்பை 3 கப் நீர் சேர்த்து ரொம்பக் குழையாமல் குக்கரில் வேகவிடவும். அத்துடன் புளியைக் கெட்டியாகக் கரைத்துவிட்டு, காரப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். 15 நிமிடங்கள் கொதித்தால் போது.

நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாலித்துக் கொட்டவும். நெய்யில் கோடா மசாலா போட்டு தயாராக உள்ள ஆம்ட்டியில் கொட்டி கொத்தமல்லி தழையும் சேர்க்கவும்.





பாக்ரி
இது கம்பு மாவால் செய்யப்படும் மகாராஷ்டிர ஸ்பெஷல் ரொட்டி.

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு, உப்பு, வெதுவெதுப்பான நீர்

செய்முறை:


கம்பு மாவில் உப்பு சேர்த்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கெட்டியாக நன்கு பிசையவும். ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அரிசி மாவைத் தடவி, அதன் மேல் ஒரு உருண்டை கம்பு மாவை வைத்து, கையால் சற்று தடியாக, வட்ட வடிவ ரொட்டி செய்யவும். மெலிதாகச் செய்தால் எடுக்க வராது. சப்பாத்தி கல்லை சுடவைத்து அதில் இந்த ரொட்டியை மெதுவாக உள்ளங்கையால் எடுத்துப் போடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு, பிறகு சப்பாத்தி வாட்டும் கம்பியில் வைத்து நேரடியாக அடுப்பு நெருப்பில் காட்டி வாட்டவும். தீயக் கூடாது. இதன் மேல் வெண்ணெய் அல்லது நெய் தடவி, பூண்டு சட்னியுடன் சுடச் சுடச் சாப்பிடவும்.


லஸன் கி சட்னி (பூண்டு சட்னி)

தேவையான பொருட்கள்:

பூண்டு – 5 பல்
கொப்பரை – 1 கப்
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
புளி – கொட்டைப் பாக்களவு
காரப்பொடி - 1½ டீஸ்பூன்
சர்க்கரை - ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை:


கொப்பரையை வெறும் வாணாலியில் சிவக்க வறுக்கவும். அத்துடன் எள்ளையும் சிவக்க வறுத்து, பூண்டுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் 1 டேபிள் ஸ்பூன் வறுத்த நிலக்கடலை சேர்த்தும் அரைக்கலாம். இது ரொட்டி, சப்பாத்தி, சமோசாக்களுக்கு தொட்டுக் கொள்ள மிக ருசியாக இருக்கும்.





சக்லி

தீபாவளிக்குச் செய்யப்படும் முக்கியமான காரம் இது. தனியா, ஓமம் சேர்ப்பது இதன் ஸ்பெஷாலிட்டி!

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு    -      1 கிலோ
பச்சரிசி                -      2 கிலோ
உளுத்தம் பருப்பு    -      1 கப்
பயத்தம் பருப்பு            -      ½ கப்
அவல்                   -      2 கப்
சீரகம்                   -      50 கிராம்
தனியா                 -      50 கிராம்
பொட்டுக்கடலை   -      ½ கப்
ஓமம்                           -      4 டேபிள் ஸ்பூன்
உப்பு, காரப்பொடி, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:


கடலைப் பருப்பு, அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்துக் காயவிடவும். மற்ற ப்ருப்புகளையும் அவலையும் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சீரகம், பொட்டுக்கடலை, தனியா, ஓமம் மற்றும் காய்ந்த அரிசி-கடலைப் பருப்புக் கலவையையும் போட்டு மிஷினில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு, காரப்பொடி சேர்த்து, சிறிது வெண்ணெயும் சேர்த்து, நீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். முள்ளுத் தேங்குழல் ஒற்றைத் துளைத் தட்டில் மாவைப் போட்டு, பிளாஸ்டிக் பேப்பரில் கைமுறுக்கு போல் வட்டமாகச் சுற்றி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சற்று அடர் சிவப்பு நிறமாக இருக்கும் சக்லி, ருசியில் ‘ஏ’ ஒன்!





கரஞ்சி (மஹாராஷ்டிரா)

தேவையானவை:
மைதா – 1 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சிட்டிகை
கோவா - ½ கப்,
கொப்பரைத் தேங்காய் – 1 கப்
ஏலப்பொடி, கசகசா – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 கிலோ (பொடியாக்கியது)
எண்ணெய் – வேகவிட.
செய்முறை:
மைதாவை நன்கு சலித்து, அத்துடன் நெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

கொப்பரையை மென்மையாகத் துருவவும். கோவாவை உதிர்க்கவும். கசகசாவை வறுத்துப் பொடி செய்யவும். துருவிய கொப்பரை, கசகசாபொடி இவற்றை ஒன்றாகக் கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மாவை சிறு எலுமிச்சை அளவு எடுத்து பூரியாக இட்டு, அதனுள் 2 டீஸ்பூன் பூரணம் வைத்து அரை வட்டமாக மூடி, ஓரத்தை சிறிது நீர் தொட்டுக் கொண்டு ஒட்டி, சோமாசிக் கரண்டியால் கத்தரிக்கவும். எண்ணெயைக் காய வைத்து கரஞ்சிகளைப் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடிய வைக்கவும். மராட்டியர்கள் தீபாவளிக்கு செய்யும் முக்கிய இனிப்பு இது!


மசாலே பாத்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1½ கப்
வேகவைத்த பச்சை பட்டாணி - ¼ கப்
கத்திரி துண்டுகள் - ¼ கப்
வெள்ளரித் துண்டுகள் - ¼ கப்
முந்திரி – 10
திராட்சை – 10
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
பெருங்காயம், உப்பு – தேவையான அளவு
கோட மசாலா - 2½ டீஸ்பூன்
தேங்காய்த் துருவல், கொத்த மல்லி தழை – தேவைக்கு
கிராம்பு – 4
பட்டை – சிறு துண்டு
பிரிஞ்சி இலை – 2
கறிவேப்பிலை – தேவைக்கு
நெய், எண்ணெய் – தேவைக்கு

மசாலாவிற்கு

கொப்பரைத் துருவல்- ¼ கப்
மிளகாய் வற்றல் – 3
தனியா - 1½ டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
இவை எல்லாவற்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து வையுங்கள்.

செய்முறை:

அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வைக்கவும். பிரஷர் பேணில் ½ கப் நெய்யும் எண்ணெயும் கலந்து வைக்கவும், காய்ந்ததும் அதில் கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும். அதில் மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்க்கவும். பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய வெள்ளரி, கத்திரி, வேகவைத்த பட்டாணி சேர்த்து வதக்கவும். அதிலேயே அரிசியைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, 3 கப் நீர் விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்த மசாலா பொடி, கோடா மசாலா, உப்பு சேர்த்து பேனை மூடி, வெயிட் போட்டு சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் ஆனபின் அடுப்பை அணைத்து குக்கரைத் திறந்து மேலே தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை, கொத்து மல்லி தழை தூவிப் பரிமாறவும்.

ராய்த்தா (வெங்காயத் தயிர் பச்சடி), பொடித்த அப்பளம், ஆம்ட்டி ஆகியவை இதற்கு சரியான இணை!





கோடா மசாலா
இது மகாராஷ்டிரா உணவுகளில் சேர்க்கப்படும் ஸ்பெஷல் மசாலா. இது கரம் மசாலாவிலிருந்து மாறுபட்ட ருசியில் இருக்கும். இதற்கு ‘ப்ளேக் மசாலா’ என்ற பெயரும் உண்டு.

தேவையான பொருட்கள்:

தனியா – 4 கப்
கொப்பரைத் துருவல் – 1 கப்
வெள்ளை எள் - ½ கப்
சீரகம் - ¼ கப்
கருஞ்சீரகம் – 4 டீஸ்பூன்
கிராம்பு – 3
பட்டை – சிறு துண்டு
மிளகாய் வற்றல் – 3
கருப்பு ஏலம் – 1
 மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை:


தனியாவையும் , கொப்பரையையும் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். மற்ற சாமான்களை 2 டீஸ்பூன் எண்ணெயில் லேசாக வறுக்கவும். ஆறிய பின் எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடியாக்கி, பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.




வட்டாணி உசல்

தேவையான பொருட்கள்

வேக வைத்த பட்டாணி – 1 கப்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
தனியா பொடி - ¼ டீஸ்பூன்
காரப்பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிட்டிகையளவு
கடுகு - ¼ டீஸ்பூன்
சீரகம் - ¼ டீஸ்பூன்
சீனி – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், கொத்துமல்லி, உப்பு – தேவைக்கு

அரைக்க:

கொப்பரைத் தேங்காய் - ½ கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கோடா மசாலா – 3 டீஸ்பூன்
கொத்து மல்லி தழை – 2 டேபிள் ஸ்பூன்
இவற்றை எல்லாம் சேர்த்து நீர் விடாமல் அரைத்து வையுங்கள்.

செய்முறை:


4 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பெருங்காயம், கடுகு, சீரகம் தாளித்து, வேகவிட்ட பட்டாணி சேர்க்கவும். இத்துடன் கறிவேப்பிலை மற்றும் சீரகம், மஞ்சள், தனியா, மிளகாய்ப் பொடிகள் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் அரைத்த விழுது, சீனி மற்றும் உப்பும் சேர்த்து சில நிமிடங்கள் விட்டு பிறகு கிளறி இறக்கி, கொத்து மல்லி தழை சேர்க்கவும். தேவையெனில் எலுமிச்சை பிழியலாம். சுவையான இந்த ‘பட்டாணி உசல்’ ரொட்டி, சப்பாத்தி, சாதத்திற்கு நல்ல மேட்ச்!



பன்னா

இது மாங்காயில் செய்யப்படும் ஜூஸ். வெயில் நாட்களில் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், வயிற்றுக்கும் நல்லது.

தேவையான பொருட்கள்:
மாங்காய் – 3 (பழமாக இருந்தால் சரியாக வராது)
சர்க்கரை அல்லது வெல்லம் – 2 கப்
ஏலப்பொடி
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
குங்குமப்பூ – தேவையானால் சேர்க்கலாம்

செய்முறை


மாங்காய்களை முழுதாக குக்கரில் வேகவிடவும். தோலி நீக்கி சதையை வழித்து சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அத்துடன் சர்க்கரை, ஏலப்பொடி, சீரகப்பொடி, குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்க விடவும். அதிக அளவு நீர் சேர்க்கக்கூடாது. கூழாக இருக்கும் ஜூஸில் ஒன்றுக்கு 2 பங்கு நீர் சேர்த்து அருந்தவும்.




மேத்தி லட்டு
மங்கையர் மலர் நவம்பர், 2003 இதழில் இம்மாத இல்லத்தரசி பகுதியில் எழுதி ஆறுதல் பரிசு பெற்ற சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்:
வெந்தயம்              -      200 கிராம்
கொப்பரை            -      ½ கிலோ
ரவா                       -      ½ கிலோ
காய்ந்த பேரீச்சை  -      ½ கிலோ
வெல்லம்                -      1¼ கிலோ
வெள்ளை எள்        -      50 கிராம்
கசகசா                   -      50 கிராம்
பாதாம், முந்திரி     -      25 கிராம்
நெய்                      -      6 டீஸ்பூன்
திராட்சை              -      25 கிராம்
ஏலப்பொடி

செய்முறை:
வெந்தயத்தை பச்சை வாசனை போக, தீயாமல் சிவக்க வறுக்கவும். ரவையையும் லேசாக வறுக்கவும். கசகசா, எள்ளைப் பொன்னிறமாக வறுத்து, எல்லாவற்றையும் தனித்தனியாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாதாம், முந்திரியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக உடைக்கவும். கொப்பரையை மெலிதாகத் துருவி வெறும் வாணலியில் சற்று வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, ஏலப்பொடி, திராட்சை சேர்த்துக் கலக்கவும்.

வெல்லத்தில் சிறிதும் நீர் சேர்க்காமல் அடி கனமான பாத்திரத்தில் போட்டு கம்பிப் பாகு ஆக்கவும். நீரில் போட்டால் தொய்யாமல் உருட்ட வர வேண்டும். அதில் நெய்யை விட்டு, கலந்து வைத்துள்ள மாவைப் போட்டு நம்கு கலக்கவும். உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இத்துடன் பச்சைப் பயிறு, நிலக்கடலை, கொள்ளு இவற்றையும் வறுத்துப் பொடியாக்கிச் சேர்க்கலாம். அந்த அளவிற்கு வெல்லம் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

சற்று கசப்பாக இருந்தாலும், இந்த சத்தான ‘மேத்தி லட்டு’ மகாராஷ்டிரா ஸ்பெஷல். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. பிரசவம் ஆன பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை சுத்தமாகும். பால் சுரக்கும். உடலுக்கு வலு கிடைக்கும்.


அநாரஸ்

இது அதிரசம் போன்று செய்யப்படும் தீபாவளி ஐட்டம். இதற்கான மாவை தயாரித்து அவர்கள் ஒரு வருடம் வரை வைத்திருப்பார்கள்! தண்ணீரே சேர்க்காததால் இது வீணாகாது.

தேவையான பொருட்கள்:
பழைய பச்சரிசி            -      1 கிலோ
பழைய வெல்லம்           -      1 கிலோ
கசகசா, ஏலப்பொடி             -      தேவைக்கு
எண்ணேய்                   -      தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை நன்கு களைந்து அதிக தண்ணீர் இல்லாமல் ஊற வைக்கவும். மறு நாள் அந்தத் தண்ணீரை எடுத்துவிட்டு வேறு தண்ணீர் விடவும். இது போன்று அந்த அரிசியை குறைந்த பட்சம் 4 நாட்கள் முதல் அதிக பட்சம் ஏழு நாட்கள் வரை ஊறவைக்க வேண்டும். தினமும் தண்ணீர் மாற்ற வேண்டும். பின் தண்ணீரை நன்கு வடித்து, நிழலில் அரிசியைப் பரப்பி காயவைக்க வேண்டும். பிறகு உரலில் போட்டு நைஸாக இடிக்க வேண்டும். சலித்து கப்பியில்லாமல் இடித்த மாவுடன், வெல்லத்தையும், ஏலப் பொடியையும் உதிர்த்துப் போட்டு இடிக்க வேண்டும். எல்லாம் சேர்ந்து மாவு பந்து போல் உருட்டும் பதமாக இருக்கும். இந்த மாவில் வேண்டியதை எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் அதிரசம் போல் தட்டி, அதன் மேல் கசகசா தூவி, எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இது நாம் பாகு வைத்து செய்யும் அதிரசம் போல இல்லாமல் வேறுபட்ட சுவையுடனிருக்கும்.


இதை உரலில் இடித்து செய்தால்தான் மிக ருசியாக இருக்கும். ஆனால் இன்றோ மிக்ஸியில் அரைத்தே பெரும்பாலோர் செய்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக