Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

வருகிறது மகாமகம்

மகாமகம் - மார்ச் -6, 2004
ஞான ஆலயம் பிப்ரவரி 2004 இதழில் வெளியானது

‘கோவில் பெருத்தது கும்பகோணம்’ என்பதற்கேற்ப எண்ணற்ற கோவில்களை உடையது இவ்வூர். பேருழிக் காலத்தில் பிரமன் வேண்டியபடி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது. இவ்வூரில் பதினான்கு கோவில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

இங்கு சிவாலயங்கள் இருப்பதைப் போன்றே விசேஷமான, புராண மகத்துவம் பெற்ற சக்கரபாணி, சாரங்கபாணி, ராமசுவாமி ஆலயங்களும் வைணவத் திருப்பதிகளாக உள்ளன.

புண்ணிய நதிகளான காவிரியும், அரிசொல் எனும் அரசலாறும் இவ்வூரின் இருபுறமும் அமைந்து வளம் சேர்க்கின்றன.

பல பெருமைகளைக் கொண்ட கும்பகோணத்தில் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறும் மகாமக விழா உலகப் புகழ் பெற்றது. குடந்தையின் இருதயம் போல் விளங்குவது மகாமகத் திருக்குளம். இந்த மகாமகம் ஏற்படக் காரணமான நவ கன்னிகைகள் இக்குளத்தின் வடகரையிலுள்ள ஸ்ரீகாசி விசுவநாதர் ஆலயத்தில் காட்சி தருகின்றனர்.

மகாமகக் குளத்தின் தீர்த்தம் சகல பாபங்களையும் போக்கக் கூடியதால் ‘பாப பனோதக தீர்த்தம்’ எனப்படுகிறது. இதில் நீராடுபவரை பாபம் தொடாது என்பதால் மாக தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. அமுத கும்பம் வழிந்தோடித் தங்கியதால் ‘அமுதசரோருகம்’ என்றும் பெயர் பெறும். நவகன்னியர்கள் நீராடி பாவம் தொலைந்து அவ்விடத்திலேயே தங்கி விட்டதால் ‘கன்னியர் தீர்த்தம்’ என்னும் பெயரும் உண்டு.

மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்கள், புண்ணிய தலங்களிலுள்ள நீரில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் விலகி விடும். புண்ணியத் தலங்களில் வாழ்வோர் அவ்விடத்தில் செய்யும் பாவங்கள், காசியில் சென்று கங்கையில் நீராட விலகும். அந்தக் காசியில் வாழ்வோர் செய்யும் பாவங்கள் கும்பகோணம் வந்து நீராடினால் நீங்கும்! கும்பகோணத்தில் செய்யும் பாவங்கள், அங்கேயே நீராடினால்தான் போகும். அதனாலேயே உலகம் முழுதும் வாழ்வோர் தாம் செய்த பாவம் விலக இம்மகாமகக் குளத்தில் நீராடிச் செல்கின்றனர்.

இக்குளத்தில் இருபது புனித தீர்த்தங்கள் உள்ளன. இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. நான்கு கரைகளிலும் பதினாறு சிவ சந்நிதிகளை உடையது. நடுவில் ஒன்பது கிணறுகள் உள்ளன.

இந்த மகாமகக் குளத் திருப்பணிகளையும், அதைச் சுற்றி பதினாறு சிவாலய விமானங்களையும் அமைத்தவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர், மகான் கோவிந்த தீக்ஷிதர். குடந்தையிலுள்ள யாகசாலைத் தெரு இவரது வேள்விச் சாலையாக அந்நாளில் திகழ்ந்தது. சோழர்களுக்குப் பின் கும்பகோணத்தில் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல ஊர்களிலும் ஆலயத் திருப்பணிகளைச் செய்த இவரைப் பற்றி கும்பகோண க்ஷேத்திர மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்காலத்தில் கங்கை, யமுன, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவேரி, பயோஷிணி, சரயு, மகாநதி ஆகிய ஒன்பது நதிகளின் தேவதைகளும் கைலாசபதியான சிவபெருமானிடம் சென்று, “மக்கள் தம் பாபங்களைப் போக்க எங்களிடம் நீராடுகின்றனர். ஆனால் நாங்கள் அப்பாபங்களை எப்படி போக்கிக் கொள்வது?” என்று வினவ, சிவபெருமான் குடந்தையில் உள்ள மகாமகத் தீர்த்தம் சென்று நீராடி பாபவிமோசனம் பெறும்படி அருளினார். நதி தேவதைகள் அவ்விடம் இருக்குமிடம் காட்டுமாறு வேண்ட, சிவபெருமான் அவர்களுடன் காசி சென்று, பின் இறைவியுடனும், இந்திராதி தேவதைகள், கந்தர்வர், அப்சரஸ், பிரதம கணங்கள் சூழ ஒன்பது நவ கன்னியருடன் மகாமக தீர்த்தத்தைப் பார்த்தபடியே அங்கு அமர்ந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், சூரியன் கும்பராசியில் இருக்கும்போது பௌர்ணமியும், மக நட்சத்திரமும் கூடும் நாள் மாசி மகம் எனப்படும். பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் வரும் சமயம், பௌர்ணமியில் மக நட்சத்திரம் கூடும் நாள் ‘மகாமகமா’கக் கொண்டாடப்படுகிறது. மகாமகத்திற்கு ஒரு வருட முன்பே கங்கை முதலான 60 கோடி தீர்த்தங்களும், சமஸ்த தேவதைகளும் கும்பகோணம் வந்து விடுவதாகச் சொல்லபடுகிறது. மகாமகத்தன்று பதினான்கு லோகத்திலுள்ள பிரம்மாதி தேவர்களும் இக்குளத்தில் நீராட வருவதாக புராணங்கள் உரைக்கின்றன.

இக்குளத்தில் 20 தீர்த்தங்கள் உள்ளன. (1) வாயு (2) கங்கை (3) ப்ரம்ம (4) யமுனா (5) குபேர (6) கோதாவரி (7) ஈசானிய (8) நர்மதை (9) இந்திர  (10) சரஸ்வதி (11) அக்னி (12) காவேரி (13) நாக (14) குமரி (15) நிருதி (16) பயோஷிணி (17) தேவ (18) வருண (19) சரயு (20) கன்ய என 20 தீர்த்தங்கள்.

இவற்றில் பிரம்ம தீர்த்தத்தைத் தரிசித்தாலே பாபங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். பிரும்ம ஹத்தி பாபத்தையும் போக்கவல்லது. மகாமகத்தன்று இதில் நீராடுவதால், நீராடுபவரின் மூன்று கோடி தலைமுறையும் நற்கதி அடையும். இது மகாமகக் குளத்தின் வடபுறம் அமைந்துள்ளது.

ப்ரும்ம தீர்த்தத்தின் கீழ்புறம் உள்ள குபேர தீர்த்தம் சகல ஐஸ்வர்யமும் தரவல்லது.

ஈசான தீர்த்தத்தில் நீராடுபவர், கோரிய பலனை அடைவர். இது குபேர தீர்த்தத்தின் கீழ்ப்புறம் உள்ளது.

கன்யா தீர்த்தம் மகாமகக் குளத்தின் நடுவில் உள்ளது. இதில் நீராடினால் ப்ரம்ம மண்டலத்திலுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும்.

ப்ரும்ம, வாயு தீர்த்தத்தங்களின் இடையிலுள்ள பாகீரதி தீர்த்தத்தில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். இன்றும் மகாமகத்தன்று விருஷப லக்னத்தில் இங்கு பல நீர்க்குமிழிகள் ஏற்படுவது, கங்கை இங்கு வருவதைக் குறிக்கும்.

மகாமகத்தன்று கும்பகோணத்திலுள்ள அத்தனை ஆலய மூர்த்திகளும் இக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பது வழக்கம். இந்த மகாமகத்திற்குக் காரணமான ஸ்ரீகாசி விசுவநாதர் ஆலயம் குளத்தின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர், புண்டரீக மகரிஷி, நவகன்னியர்கள் ஆகியோருக்கு ஈசன் ஜோதிரூப தரிசனம் கொடுத்த காரணத்தால், இவ்வாலய இறைவன் ‘ஜோதிர்மய காரோண நாதர்’ எனப் போற்றப்படுகிறார். மகாமகக் குளம் இவ்வாலயத்திற்குச் சொந்தமானதாகும்.

மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வணங்கினால் தேவர்கள் அனைவரையும் வணங்கிய பலன் உண்டாகும். ஒரு முறை வலம் வந்தால் பூமியை நூறு முறை வலம் வந்த புண்ணியமும், ஒரு முறை நீராடினால் கங்கையில் நூறு வருடங்கள் வசித்த புண்ணியமும் உண்டாகும். மகாமகத்தன்று இதில் நீராடினால் ஏழு கோத்திரத்தாரின் பாவம் நீங்கும்.

ஸ்ரீகாசி விசுவநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நவகன்னியர் சந்நிதி கண்ணைக் கவரும் அழகுடன் காட்சியளிக்கிறது. காவேரியை மையமாகக் கொண்டு காட்சி தரும் இந்நவகன்னியரை வழிபடுவதால் பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

ருது ஆகாத பெண்கள் 12 வெள்ளிக் கிழமை விரதம் இருந்தால் ருதுவாகும்.

திருமணம் தடைபடும் பெண்கள் 12 வெள்ளிக் கிழமை விரதம் இருந்து அர்ச்சனை செய்தால், உடன் திருமணம் நடைபெறும்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மக நட்சத்திரத்தில் பொங்கல் செய்து 12 வெள்ளிக் கிழமை விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

ஒவ்வொரு மாதம் மக நட்சத்திரத்தன்று மகாமகத் திருக்குளத்தை மாலையில் ஒன்பது முறை வலம் வந்து, ஸ்ரீநவகன்னியருக்கு பாலாபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகும்.


அத்தனை புண்ணிய தீர்த்தங்களும் மகாமகக் குளத்தில் சேரும் புண்ணிய நாள் இவ்வருடம் மார்ச் 6 அன்று வருகிறது. அன்று இத்தீர்த்தத்தில் நீராடி தான தர்மங்கள், பித்ரு தர்ப்பணம் செய்வோர் அடையும் பயனுக்கு அளவேயில்லை. கும்பகோணம் செல்ல முடியாதோரும் தாங்கள் இருக்கும் இட்த்திலேயே நீராடி, கும்பகோணம் உள்ள திசை நோக்கி நமஸ்கரித்து, தான்ங்களைச் ச்எய்து நற்கதி அடைவோமாக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக