Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

சீரடி சாயிக்கு சிறப்பான ஆலயம்!


மங்கையர் மலர் ஜூலை 2006 இதழில் வெளியானது.



சமீபத்தில் நான் சென்னை சென்ற சமயம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு சாயி மந்திருக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அற்புதமான, அழகு மிளிரும், அமைதியான சூழலில் ஐயனின் தரிசனம் கண்களுடன் மனத்தையும் அள்ளிக் கொண்டு சென்றது.

தொழிலதிபரான கே.வி.ரமணி, சீரடி பாபாவின் சிறந்த பக்தர். அவரது முயற்சியால எம்பெருமானுக்கு 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது. 'சீரடி சாயி ட்ரஸ்ட்' என்ற அறக்கட்டளையினால் சீராகப் பராமரிக்கப்படும் இவ்வாலயம், சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கிருஷ்ணன் கரணை கிராமத்தில் அமைந்துள்ளது.

முதலில் நமக்குக் கிடைப்பது ஆனைமுகன் தரிசனம். ராஜகணபதியை வணங்கி, பின் சீரடி பாபாவின் சன்னிதிக்குச் செல்வோம்.

கடலை நோக்கியவாறு அமர்ந்திருக்கும் பாபாவைக் காணும்போது, சீரடியில் இருக்கிறோமா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆம்! நம் சந்தேகம் பொய்யில்லை. சீரடியிலுள்ள பாபாவின் சிலாரூபத்தை உருவாக்கிய அதே அச்சில், அச்சிற்பியின் பேரனால் உருவாக்கப்பட்டதாம் இச்சிலா ரூபம்! அவரது கருணை பொங்கும் விழிகள் நம்முடன் பேசுவது போல் தோன்றுகிறது. 'உன் கவலைகளை, இன்னல்களை நான் களைகிறேன்' என்று கூறுவது போல் உள்ளது. சில படிகள் ஏறிச் சென்று இறைவனை வணங்கி, வலம் வந்து, நம் வேண்டுதல்களை விண்ணப்பித்து கீழே இறங்கி வந்து நமஸ்கரித்து தியானம் செய்தால், நம் மனம் நிச்சலனமாவதை அனைவரும் உணரலாம். தியான மண்டபம் தாண்டி எதிரில் அம்பிகை வடிவமாக மகாமேரு அமைந்துள்ளது. சாயி சன்னதியை வலம் வரும்போது குருஸ்தான், துவாரகமாயி, 'துனி' என்கிற அவர் ஏற்றிய அணையா ஜோதி இவற்றைத் தரிசனம் செய்து, அவரது பிரசாதமான 'உதி' என்கிற திருநீறை அணிந்தால் நம் பாவங்கள் அகலும்.

ஆலயத்தைச் சுற்றிலும் விதவிதமான, வண்ண வண்ணப் பூக்கள் அமைதியான சூழ்நிலை! இதமான கடற்காற்று! அங்கிருந்து வருவதற்கே மனமில்லை!





1 கருத்து:

  1. சீரடியார் நம்முள் வாழ்ந்த மகான். வள்ளலாரைப் பற்றிய கட்டுரை உள்ளதா? தங்கள் படைப்புக்களை tamilspeak.com தளத்தில் தங்கள் படத்துடன் மீள்பதிவிடத் துவங்கியுள்ளோம். விருந்தினர் உபசரிப்பை ஒளவையார் தலைப்புடனும், வெஜிடபிள் இட்லியையும் பகிர்ந்து ளோம். அனைத்தும் தொடர் பதிவுகளாகும். அனுமதிப்பீர்கள் என்று உறுதியான நம்பிக்கையுடன், சங்கர இராமசாமி, BSNL ஒய்வு, சென்னை-53, 044/26581381

    பதிலளிநீக்கு