Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

செல்வம் அள்ளித் தரும் மும்பாதேவி

ஞான ஆலயம் அக்டோபர் 2002 இதழில் வெளியானதுமும்பை நகரின் வளமைக்கும், பெருமைக்கும் காரணமாய் நின்று நகர வாசிகளைக் காத்து நிற்கும் அன்னை மும்பா தேவி. மும்பையின் முக்கிய வியாபாரத் தலமான பூலேஷ்வர் பகுதியில் கோயில் கொண்டு அருளாட்சி செய்யும் அன்னையின் ஆலயம் சிறிதானாலும், அனுதினம் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் மகிமை பெற்றது. அன்னை மும்பாதேவி பார்வதி தேவியின் அவதாரம் எனப் போற்றப்படுகிறாள். மும்பை இவ்வளவு செல்வச் செழிப்போடு இருப்பதற்குக் காரணம் இவளே என மும்பை மக்களால் வழிபடப்படுகிறாள்.

இவ்வாலயம் தோன்றியதற்கான புராணக் கதை இது. பல்லாண்டுகளுக்கு முன் ‘மும்பாரக்’ என்ற அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அதன் பயனாக அவன் முன் தோன்றிய பிரம்மா, அவன் கேட்டபடி எப்பொழுதும் இறவாத வரம் கொடுத்தார். அவ்வரம் பெற்ற ஆணவத்தால் தேவர்களையும், பூவுலக மக்களையும் கொடுமைப்படுத்த, அனைவரும் மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர்.

மகாவிஷ்ணு, சிவபெருமான் இருவரின் அம்சமாக எட்டு கரங்கள் கொண்ட சக்தி தேவியை அவனுடன் போரிட்டு, அழிக்க அனுப்பினார், ஸ்ரீமந் நாராயணர். வெகு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற போரின் இறுதியில் மும்பாரக்கின் மரணம் நெருங்கிய நேரம், மும்பாரக், தேவியை வணங்கி ஒரு வரம் வேண்டினான். தேவி அவனுடைய பெயரையே கொண்டு, அவ்விடத்திலேயே கோயில் கொண்டு, தீயோரை அழித்து, நல்லோரை வாழவைக்க வேண்டினான். அதனாலேயே தேவிக்கு ‘மும்பாரக் தேவி’ என்று பெயர். நாளடைவில் ‘மும்பா தேவி’யாகக் குறுகிவிட்டது.

400 ஆண்டுகளுக்கு முன் கடலோர மீனவர்களின் குல தெய்வமாக விளங்கிய தெய்வத்திற்கு, ‘முங்காதேவி’ என்ற மீனவப் பெண் அளவற்ற பக்தியால் தன் பெயரையே அன்னைக்கு வைத்து பூஜித்து வந்ததால், முங்காதேவி என்றழைக்கப்பட்டு நாளடைவில் ‘மும்பாதேவி’யாகி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.

மும்பாதேவி ஆலயம் இன்றைய விக்டோரியா டெர்மினஸ் கடற்கரையோரமாக இருந்ததாயும், பிரிட்டிஷார் துறைமுகம் கட்ட வேண்டி கோவிலை அழித்து விட்டதால், சமீபத்தில் ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன் பூலேஷ்வரில் புதிதாக அமைக்கப்பட்டதாயும் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் தேவியின் சக்தி மிகவும் அதிகம். மும்பாதேவியின் முகம் மட்டுமே பெரிதாகக் காட்சி தரும். அலங்கார ஆடையுடன், சிரத்தில் வெற்றி கிரீடம், மூக்கில் பெரிய மூக்குத்தி, கழுத்தில் அழகான நெக்லஸ், எட்டு கரங்களில் விதவிதமான ஆயுதங்களோடு, கருணை பொங்கும் அழகு விழிகளோடு காட்சி தரும் அன்னையின் தரிசனம் கண்களை நிறைக்கிறது. நினைத்ததை நிறைவேற்றும் மும்பாதேவியின் சன்னிதிக்கு இடப்புறம், சிம்ம வாகனத்தில் ஸ்ரீஜகதம்பா என்ற பெயரில் துர்கா தேவியும், மயில் வாகனத்தில் ஸ்ரீஅன்னபூரணியும் அருள் பாலிக்கிறார்கள்.

ஆலயத்திற்கு வெளியே கணபதி, சந்தோஷிமா, அனுமன், சிவபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதி உள்ளன. தினமும் இரண்டு வேளை ஆர்த்தி நடைபெறும். இங்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு தினமும் ஒரு அலங்காரம், தினம் ஒரு வாகனம். திங்களன்று சிவபெருமானுக்குகந்த நந்தி  வாகனம், வெள்ளியன்று மகாலட்சுமிக்கான அன்ன வாகனம், நவராத்திரி முழுவதும் அம்மனின் தரிசனத்திற்கு குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும்.


வேண்டியோர்க்கு வேண்டும் வரம் தந்து, வளமான வாழ்வை அருளும் மும்பை நகரின் பட்டத்து ராணியாய் விளங்கும் மும்பாதேவி இவ்வூரைக் காத்து நிற்கும் காவல் தெய்வம், கண் கண்ட தெய்வமும் கூட!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக