Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

சுற்றுலா கிளம்பிட்டீங்களா?

கிருஹ ஷோபா ஏப்ரல் 2003 இதழில் வெளியானது




அப்பாடா! ஒரு வழியாக பரீட்சைகள் முடிந்து, விடுமுறை குஷியில் இருக்கும் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சுற்றுலா கிளம்பிவிட்டீர்களா? கிளம்பும் முன் மறக்காமல் நீங்கள் செய்ய வேண்டியவை...

1. முதல் விஷயம் தண்ணீர். நீங்கள் காரில் செல்வதானால் பெரிய 10 லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கண்ட ‘குளிர்பான விஷ்’ங்களைக் குடிப்பதைவிட, தண்ணீர் குடிப்பது வெயிலுக்கு இதம், உடம்புக்கு நல்லது.

2. பழங்கள், தயார் நிலையில் உள்ள பழரசங்கள் போன்ற, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுப் பொருட்களை ஒரு தனிப்பையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. வார, மாத இதழ்கள், பாடல் கேசட்டுகள் போன்றவற்றை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். உங்கள் பயணம் சலிப்பின்றி அமையும்.

4. சிறு குழந்தைகளுடன் பிரயாணம் செய்யும்போது, அவர்களின் விளையாட்டு பொம்மைகள், அவர்களுக்குப் பிடித்த பாடப் புத்தகங்கள், வண்ணம் தீட்டும் ஓவியப் புத்தகங்கள், கலர் பென்சில்களையும் கொண்டு செல்லுங்கள். ஒரே இடத்தில் அமர முடியாத வாண்டுகளுக்கு இவை ரொம்ப உபயோகமாக இருக்கும். உங்களையும் நச்சரிக்க மாட்டார்கள்.

5. ஒவ்வொரு நபரும் தனித்தனியே பணம், வீட்டு விலாசம் போன்றவற்றை தங்கள் பர்சில் வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத் தலைவர், பயண டிக்கெட்டுகள், தேவையான பணம், கிரெடிட் கார்டுகள் இவற்றைத் தவறாமல் தனது ரகசிய பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும்.

6. நீங்கள் போகுமிடம் பற்றிய தகவல்கள், தொலைபேசி எண்கள், உங்கள் மொபைல் எண் போன்றவற்றை நெருங்கிய நண்பர்கள் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுத்துச் செல்வது நல்லது. உங்கள் வீட்டுக்கு ஏதேனும் ஒரு ஆபத்து என்றால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். வீட்டின் ஒரு சாவியை மிகவும் நம்பிக்கையான நண்பரிடம் கொடுத்துச் செல்லுங்கள்.

7. சுற்றுலா கிளம்பும் முன் உங்கள் வீட்டை ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். தண்ணீர்க் குழாய்கள் மூடப்பட்டிருக்கிறதா, கேஸ் சிலிண்டர் மூடியுள்ளதா, மின்  சாதன ஸ்விட்சுகள் அணைக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

என்ன, எல்லாம் சரியாக செய்து விட்டிருக்கிறீர்களா? அப்ப கவலையே வேண்டாம், கிளம்புங்கள் சுற்றுலாவுக்கு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக