Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஆன்மீக அதிசயம்--சந்தோஷிமாதா ஆலயம்

குங்குமம் வந்து கொண்டே இருக்கும்
ஞான ஆலயம் ஆகஸ்டு 2004 இதழில் வெளியானது

நம் நாடு முழுவதும் அளவிடற்கரிய ஆலயங்கள்! ஒவ்வொன்றுக்கும் தனிப் பெருமையும், சிறப்பும் உண்டு. சில ஆலயங்களில் இறைவன் தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிக்காட்டிக் கொள்வதும் உண்டு. எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டிருக்கும் திருவானைக்கா, திரியம்பகேசுவரர் ஆலயங்கள், உடம்பில் வியர்வை உருவாகும் புன்னை நல்லூர் மாரியம்மன், தினமும் வளரும் தஞ்சை நந்தி – இது போன்று பலப்பல ஆலயங்கள்; பற்பல அற்புதங்கள்.

மும்பையில் உள்ள சந்தோஷிமாதா ஆலயம் ஒன்றில் தேவியின் கையருகிலிருந்து குங்குமம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது அற்புதமான காட்சி. ஆம்! மணம் நிறைந்த நல்ல மஞ்சள் குங்குமம்! தேவியின் அருள் வெளிப்பாடு.

ஆலயம் மும்பைக்கு அருகிலுள்ள தஹானு என்ற மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் ஆதிவாசிகள் அதிகம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் ஜேட்யா மால்யா கர்மோடா என்ற ஆதிவாசி அந்த மலைப் பகுதியில் ஆடுமாடுகளை மேய்ப்பார். அங்குள்ள ஒரு அரச மரத்தினடியில் அமர்ந்திருப்பார். அப்படியே அசதியில் கண்ணயர்ந்து விடுவார். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாக, ஆதிசக்தி ரூபமான சப்த ச்ருங்கி மாதா அவரது கனவில் தோன்றி, தான் அவ்விடத்தில் இருப்பதாகக் கூறினாள்.

முதலில் ஆதிவாசிக்கு எதுவும் புரியவில்லை. பின் மறு நாளும் அதைத் தொடர்ந்து வந்த பின், ஏழாம் நாள் தான் அவ்விடத்திலுள்ள குகையில் சந்தோஷி மாதா உருவத்தில் இருப்பதாயும், தனக்கு ஆலயம் அமைக்கும்படியும் அன்னை கூறினாள். அந்த ஆதிவாசியும் அங்குள்ள குகையில் பார்த்தபோது, தேவி சுயம்புவாக அங்கு இருப்பது கண்டு மெய் சிலிர்த்தார். தேவியின் திருவிளையாடலை எண்ணி உள்ளம் உவந்தார். அவ்விடத்தை அழகிய ஆலயமாக உருவாக்கினார்.

அப்பொழுதுதான் அவ்வதிசயம் நிகழ்ந்தது. அன்னையின் கைகளுக்கருகிலிருந்து குங்குமம் வர ஆரம்பித்தது. இன்றளவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அன்னையின் சக்தி ஊர் மக்களுக்குத் தெரிய, ஆலயத்திற்கு வருபவர்களின் ஆதரவால், ஆழமான குகையில் கற்பாறையில் சுயம்புவாக இருந்த தேவி, பாறைகள் சீராக செதுக்கப்பட்டு 1961-ல் நவராத்திரி அஷ்டமியில் பிரதிஷ்டை செய்யப் பட்டாள். அதனை உருவாக்கிய ஆதிவாசி பரம்பரையினராலேயே இன்றளவும் பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஆலயம் சிறிதானாலும், சந்தோஷி மாதாவை தரிசிக்கும்போதே நம் மனம் இலேசாவதை உணர முடிகிறது. வெள்ளி கிரீடம், கையில் சூலம் தாங்கி காட்சி தரும் தேவியைக் கண்டு கைதொழுது வணங்கி நிற்கும்போதே அவ்விடத்தில் ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர முடிகிறது. அன்னையின் வலக் கரத்தினருகில் குங்குமம் வந்து கொண்டே இருக்கும் அதிசயத்தைக் காண மெய் சிலிர்க்கிறது.

சிறிய ஆலயம், சந்தோஷிமாதா சன்னிதி மட்டுமே உள்ளது, சுற்றிலும் உள்ள பாறைகளில் தானாகவே தோன்றிய விநாயகர், தேவியின் உருவங்கள் உள்ளன. இங்கு குங்குமம் வருவது அன்னையின் சக்தியே என்கிறார்கள். அந்த குங்குமம் மட்டுமே இங்கு அர்ச்சனைக்கும், பிரசாதமாகவும் உபயோகப் படுத்தப்படுகிறது. சிறிய பள்ளம் போன்று அமைக்கப்பட்ட இடத்தில் குங்குமம் சேரச்சேர அதை அகற்றிவிடுகிறார் பூசாரி. இங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அன்னதானம் நடக்கிறது.

வெள்ளிக் கிழமைகள் தவிர அஷ்டமி, நவராத்திரி தினங்கள் மிகப் பெரிய நாட்கள். அச்சமயம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்களாம். அன்னை மிகவும் வரப்ரசாதி. வேண்டியது தந்து, விரும்பியதை நிறைவேற்றுகிறாள். திருமணம், பிள்ளைப் பேறு, கடன் நிவாரணம், நல்ல வேலை என்று எந்த வேண்டுதலையும் அன்னை விரைவில் ஈடேறச் செய்கிறாள்.

இதற்கு ஒரு தனியான பிரார்த்தனை முறை உள்ளது. வெள்ளிக் கிழமை தவிர மற்ற நாட்களில் ஒரு முழு கொட்டைப் பாக்கை பூசாரியிடம் கொடுத்தால் அவர் தேவியின் முன் வைத்து பூஜித்து நம்மிடம் திருப்பித் தருவார். அதை வீட்டில் கொண்டு வைத்து, காரியம் ஈடேறியதும் அதனை திரும்ப ஆலயத்தில் சமர்ப்பித்து, அன்னைக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்ய வேண்டும்.

அன்னையின் அருளால் காரியங்கள் நிறைவேறிய பலரும் கொடுத்த நன்கொடைகளால் ஆலயத்தில் பல நற்செயல்கள்  நடத்தப்ப்டுகின்றன. மும்பயின் நகரச் சந்தடிகளிலிருந்து விலகி இயற்கை அழகுடன் விளங்கும் இவ்வாலயத்தின் ஆன்மீக சக்தி நம்மை மெய் மறக்கச் செய்கிறது.


மும்பையிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கில் அமைந்துள்ள தஹானுவிற்கு – மும்பையிலிருந்து கார், பஸ்சில் செல்லலாம். மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்லும் ரயிலில், தஹானு ரோட் ஸ்டேஷனில் இறங்கியும் செல்லலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக