Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

சென்னையில் ஒரு திருநள்ளாறு

தெய்வீகப் பொருட் பக்கங்கள் ஜூன் 2003 இதழில் வெளியானது



நவக்கிரஹ மண்டலத்தில் ஏழாவது கிரஹமாக அமைந்திருக்கும் சனி பகவான் தன்னை வழிபடுவோருக்கு நலன்கள் பலவற்றை வழங்கும் வள்ளல் ஆவார். சூரியன் சாயாதேவியின் புதல்வர் ஆன இவர், சிவபெருமானைத் துதித்து நெடுங்காலம் தவம் செய்தும், காசியில் லிங்கப் பிரதிஷ்டை செய்தும் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பட்டத்துடன், நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்ற பெருமைக்குரியவர். ஜோதிட சாஸ்திர நூல்களில் ஆயுள் காரகனாக விவரிக்கப்படும் சனி பகவான் துதிப்போருக்கு நீண்ட ஆயுளையும் தருகிறார்.

இப்படிப்பட்ட மகிமை பொருந்திய சனி பகவானுக்கு காரைக்கால் அருகே உள்ள திரு நள்ளாற்றில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் விசேஷ சன்னதி இருப்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று தமிழகத்தின் தலை நகரமான சென்னை மாநகர் மேற்கு மாம்பலத்தில் சனி பகவான் தனி ஆலயத்தில் ஸ்ரீ நீலாம்பிகை சமேதராக அருள் பாலிக்கிறார்.

இவ்வாலயத்திற்கு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வருகை புரிந்த காஞ்சி மாமுனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், இதனை ‘வட திரு நள்ளாறு’ என்றே குறிப்பிட்டிருக்கிறார். இங்கே கிழக்கு திசை நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் ஸ்ரீசனீஸ்வர பகவான் மீது, அவரது தந்தையான சூரியனின் கிரணங்கள் விழுந்து ஒளி தருவது மிகச் சிறப்பான அம்சம்.

ஸ்ரீராம பக்தனான ஸ்ரீஆஞ்சநேயர் ஐந்து திருமுகங்களுடன் இக்கோயிலில் பஞ்சமுக ஆஞ்சநேயராகத் தனிச் சந்நிதியிலிருந்து தரிசனம் தருகிறார். இக்கோயில் வளாகத்தினுள் அரச மரத்தடியில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கு யக்ஞ விநாயக மூர்த்தி என்று பெயர். சனி பகவானின் பார்வையால் பாதிப்புக்கு ஆளாகாதவர்கள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீவிநாயகர் ஆகிய இருவர் மட்டுமே என்கின்றன புராணங்கள். இவ்விருவரோடு சனி பகவானையும், ஒருங்கே தரிசனம் செய்து வணங்குவோருக்கு சனி தசை, சனி புக்தி, அஷ்டமத்துச் சனி, எழரை நாட்டுச் சனி ஆகியவற்றின் பாதிப்பினால் விளையும் இன்னல்கள் நீங்கி, ஆரோக்கியம், மன நிம்மதி, காரிய சித்தி, வேலை வாய்ப்பு, புத்திர பாக்கியம் எல்லாம் கிட்டும் என்பதால் இங்கு வந்து வழிபடுவோர் அதிகம்.


தற்சமயம் இந்த ஆலயத்திலுள்ள பழுதுகளை நீக்கிச் செப்பனிட்டுச் சீராக்கிடும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான பொறுப்பை சனஞ்சயா ஆலய டிரஸ்ட் (புது எண்: 33, வெங்கடாசலம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33) என்ற அமைப்பு ஏற்றுச் செயல்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக