Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

தினமும் கிருஷ்ண ஜயந்திதான்

ஸ்ரீமத் பாகவத ரஹஸ்யம் படித்துக் கொண்டிருந்த போது அதில் கிருஷ்ண ஜயந்தியைப் பற்றிய பாகம் மிக அருமையாக இருந்தது. பாகவத ரகஸ்யம் படிக்கப் படிக்க திகட்டாத தேன்! ஒவ்வொரு வரியிலும் பக்தி ரஸம் ததும்புகிறது. நான் பெற்ற இன்பம் ஆலய வாசகர்களும் பெறும் ஆசையில் அதில் சிலவற்றைத் தொகுத்து எழுதியுள்ளேன்.

ஆலயம் ஆகஸ்ட் 2003 இதழில் வெளியானது

நந்த மஹோத்சவம் மகிழ்ச்சி விழா. தினமும் கொண்டாட வேண்டும். ஜனங்கள் வருஷத்தில் ஒரே நாள்தான், ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 5½ மணி வரை தினமுமே நந்த மஹோத்சவம், பாலகிருஷ்ணன் பிறந்த தினம் கொண்டாடுங்கள். பகவான் எழுந்தருளும் தினமே விழா நாளாகும். விழாவிற்குப் பணம், காசு தேவையில்லை. அதற்கு அன்பே முக்கியம்.

கிருஷ்ண ஜயந்தியை ஆலயங்களில் கொண்டாடினால் போதாது. நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் விழா கொண்டாட வேண்டும். ஜீவாத்மாவின் இருப்பிடம் நம் சரீரமேயாகும். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவது என்றால் அப்பம், வடை, அவல் வெண்ணெய் விநியோகிப்பதல்ல. தயிரும், பாலும் கொடுப்பதா? இதெல்லாம் வேண்டுமென்பதில்லை.

விழாவை மனதில் (இதயத்தில்) கொண்டாட வேண்டும். மனிதன் தன் உடல் உணர்ச்சியற்றிருக்கும் நிலையை அடையும்போதுதான் பகவான் தோன்றுவார். தேக தர்மத்தை மறக்கும்போதுதான் விழா பயனுள்ளதாகும். பகவானை நம் இதயத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். பகவான் நம் இதயத்தை அடைந்ததும் நமக்குப் பசி, தாகம் மறந்து போகும்.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவதற்குக் கொஞ்சம் தயார் செய்ய வேண்டி வருகிறது. நம் உடலையே நாம் வடமதுரையாகச் செய்ய வேண்டும். இதயம் கோகுலமாக அமைய வேண்டும். இது ஆனதும் விழா தானாகவே நடக்கும். இதற்குப் பிறகு இதய கோகுலத்தில் பகவான் வந்து அமர்ந்து விடுவார். கோகுலம் – கோ, இந்திரியம், புலன். குலம் – சமூகம், கூட்டம், இந்திரியங்கள் கூடுமிடம் – இதயம்.

மகாப்ரபு, மதுராபுரி, மதுரா இவ்விரண்டும் ஒன்றே என்று கூறியிருக்கிறார். இந்த மதுவினால் (தேன்) உடலைப் பேணி வந்தால், உடல் மதுராவாகிவிடும். மது இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது, காமசுகம், செல்வசுகம் இவ்விரண்டிலும் மனம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டிலிருந்தும் மனதைப் பிரித்து விலக்கி வைக்க வேண்டும். பல தடவைகள் மனிதன் தன் உடலினால் காமத்தைத் துறந்து விடுகிறான். ஆனால் மனதினால் துறக்க முடிகிறதில்லை.

உடலை மதுராபுரியாக்க வேண்டுமானால் அதை யமுனா நதிக்கரையில் சேர்த்து வைக்க வேண்டும். யமுனா நதி பக்தி ஸ்வரூபமாகும். யமுனைக் கரை பக்தியின் கரையும் ஆகும். பக்திக் கரையை விட்டு விடாதீர்கள். இருபத்தி நான்கு மணி நேரமும் பக்திக் கரையில் தங்கியிருந்தால், உங்கள் சரீரம் மதுராபுரியாக ஆகி விடும். இக்காலத்தில் ஜனங்கள் உடலால் பாவம் செய்வதைவிட மனதால் செய்வதுதான் அதிகம்.

நாம் தீர்த்த ஸ்தலங்களுக்குப் போவது நல்லது. நம் உடலையும் தீர்த்த ஸ்தலம் போல் புனிதமாக்க வேண்டும். பக்தி கண்களாலும், காதுகளாலுல் கூட நடை பெறுகிறது. கண்களால் பக்தி செய்வது என்றால் கண்களில் பகவானை எழுந்தருளச் செய்து உலகைப் பாருங்கள். இவ்விதம் பார்ப்பவர்களுக்கு உலகமே பகவான் ஸ்வரூபமாகத் தோன்றும். துளஸிதாஸருக்கும், ஹனுமானுக்கும் உலகில் சீதாராமனைத் தவிர வேறு எதுவுமே தென்படவில்லையாம். ஒவ்வொரு புலனிலும் பக்திரஸத்தை நிரப்பி வையுங்கள். ஒவ்வொரு புலன் மூலமும் பக்தி செய்யுங்கள். உங்கள் இதயமே விரைவில் கோகுலமாகிவிடும்.

சரீரத்தைத் தவிர மனதினாலும் தினமும் கோகுலம் செல்லுங்கள். உடல் எங்கிருந்தாலும் மனதை பிருந்தாவனத்திற்கு அனுப்புங்கள். யசோதை மடியில் பாலகிருஷ்ணன் இருந்து விளையாடிக் கொண்டிருப்பதாயும் கோபிகள் அவளைப் பார்க்க வேகமாய் ஓடிக் கொண்டிருப்பதாயும் பாவனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு லீலையைப் பற்றியும் சிந்தனை செய்யுங்கள். பகவானை தரிசித்த பிறகு அவன் ஸ்வரூபத்தை, கண்களை மூடிக்கொண்டு உள்ளத்தில் பார்க்க முயலுங்கள். தியானத்திலும், தரிசனத்திலும் ஒன்றிப்பு ஏற்படும்போது, பிறந்த தின விழா கொண்டாடும் வாய்ப்பும் உண்டாகிறது.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி அதிகாலை 4 மணிக்குக் கொண்டாடப்பட்டது. தியானம் செய்ய காலை 4 முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்தம். சிறந்த காலம். பகவான் பஜனை அதிகாலை நேரத்தில் செய்யப்பட்டால் நாள் முழுவதும் ஆன்ந்தம் கிடைத்துவிடும். அதிகாலையில் எழுந்து தினமும் அரை மணி நேரம் பகவானை தியானம் செய்யுங்கள். பகவானுடன் ஒன்றி சற்று நேரம் அமர்ந்திருங்கள், காலை நேரத்தில் ஜபம், தியானம், பிரார்த்தனை இவற்றைத் தினமும் செய்து வந்தால், நாள் முழுவதும் பகவான் நம்மை பாபச் செயல் செய்வதிலிருந்து காப்பான்.


[ஸ்ரீமத் பாகவத ரஹஸ்யம் தசம ஸ்கந்தத்திலிருந்து தொகுத்தது]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக