Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

பணத்துணைவன்

மங்கையர் மலர் ஜூலை, 2005 இதழில் வெளியானது
(உழைப்போம் உயர்வோம் பகுதி)

நம் வாழ்க்கையின் மிக முக்கிய ஒரு அங்கமாக வங்கிகள் செயல் படுகின்றன. முன்பெல்லாம் பணம் டெபாசிட் செய்யவும், பணம் பெற்றுக் கொள்ளவும் வங்கிகளுக்கு நேரில் சென்று பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ நள்ளிரவு 12 மணிக்கு பணம் தேவையென்றாலும் உடனே சென்று ஏ.டி.எம் (ஆட்டோ மெடிக் டெல்லர் மெஷின்) மெஷினில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மனிதர்கள் செய்து கொண்டிருந்த பல வேலைகளையும் இன்று இயந்திரங்கள் நிமிடமாகச் செய்து முடிக்கின்றன. (இந்த ஏ.டி.எம் மையங்களில் கூட இன்று வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டியிருப்பது வேறு விஷயம்)!)

இந்த முறையிலும் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஏடி.எம்.ஐ அடிக்கடி உபயோகிப்பவர் அவ்வப்பொழுது வங்கிக்கும் சென்று கணக்குகளை நேரடியாகச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

இன்று பல வங்கிகளும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு, வாடிக்கையாளர்களைக் கவர பல திட்டங்களை அறிவிக்கின்றன. அந்தச் சேவைகளுக்கென பிரத்தியேக சட்ட திட்டங்களும் உள்ளன. அந்த வங்கிகளில் நாம் அக்கவுண்ட் ஆரம்பிக்குமுன் அது பற்றி முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. பெரும்பாலான வங்கிகளில் நம் கணக்கில் இருக்கும் தொகை, வரவு மற்றும் பற்று முதலிய குறிப்புகளை பாஸ் புக்கில் பதிந்து கொடுப்பது வழக்கம். அந்த நிலை மாறி தற்பொழுது ஸ்டேட்மெண்ட் ஆக மாற்றி பேப்பரில் பிரிண்ட் செய்து அனுப்புகிறார்கள். இதற்காகக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஈமெயில் மூலம் அந்த ஸ்டேட்மெண்டுகளைப் பெற கட்டணம் கிடையாது. அவற்றை உடனுக்குடன் ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து செக்-புக் என்ற காசோலைகள்:வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தத் தொகைக்கு அதிகமாகப் பணம் இருந்தால் மட்டுமே காசோலைகளை உபயோகிக்கலாம். சில வங்கிகளில் காசோலை புத்தகத்திற்கும் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.

புதியதாக ஆரம்பிக்கப்படும் வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்சத் தொகை ஒன்றை நிர்ணயித்து, கணக்கிலுள்ள தொகை குறிப்பிட்ட தொகைக்குக் கீழே போனால் ஃபைன் அதாவது அபராதத் தொகை வசூல் செய்கிறார்கள். சம்பளத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளில் இந்த விதிமுறை கிடையாது. மற்ற கணக்குகளுக்கு இந்தத் தொகை எவ்வளவு மீதமிருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது நல்லது.

ஏ.டி.எம் மிஷின்களில் இந்நாளில் எல்லா வங்கிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. கணக்கு ஆரம்பிக்கும்போதே ஏ.டி.எம் மிஷினுக்கான கார்டும் கொடுத்து விடுவார்கள். எந்த அவசர, ஆபத்துக்கு பணம் தேவை என்றாலும் இந்தக் கார்டின் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட வங்கியின் கார்டை உபயோகித்து, அந்த வங்கியின் ஏ.டி.எம்-மில் மட்டுமின்றி வேறு சில வங்கிகளின் ஏ.டி.எம் மிஷின்களிலிருந்தும் பணம் பெற வாய்ப்புண்டு. ஆனால், ஒரு வங்கியின் கார்டை வேறு வங்கியின் ஏ.டி.எம் மிஷினில் உபயோகப்படுத்தும் போது அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இக்கால இளைய தலைமுறையினர் பல வங்கிகளின் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஏ.டி.எம் கார்டுகள் வைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். இந்த வசதிகளையும், வாய்ப்புகளையும் உபயோகிக்கும்போது, அவற்றிற்கான விதிமுறைகளையும் சரியாக அறிந்து கொண்டால், அநாவசியமாக பண நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்!மேற்குறிப்பிட்ட கட்டுரை பற்றிய விமரிசனம் ஆகஸ்டு, 2005 இதழில் வெளியானது
 ஏ.டி.எம் எனப்படும் ஆட்டோமெடிக் டெல்லர் மெஷின் பற்றிய ஒரு பக்கத்தையும் (விதிமுறைகளைச் சரிவர அறியாமையினால் ஏற்படும் பணநஷ்டம்) சுட்டிக் காட்டி விளக்கியது அருமைகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக