Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

எங்கள் குல தெய்வம் கனிவான மதுர வீரன்





குமுதம் சிநேகிதி மார்ச் 2003 இதழில் வெளியானது

வித்தியாசமான ஒரு மதுர வீரன் கோவில் எங்களுடையது.

‘ஃபேமிலி டாக்டர்’ என்பவர் எப்படி நம் குடும்பத்தினரின் உடல் நிலை பற்றிய விஷயங்களை அறிந்து அதன்படி சிகிச்சை வழங்குகிறாரோ அதுபோல்தான் நம் குலதெய்வமும்! நம் குடும்பத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட தெய்வம் அது! நமக்குக் கஷ்டம், கவலைகள் ஏற்படும் போது நாம் முதலில் பிடிப்பது நம் குல தெய்வத்தின் கால்களையே.

எங்கள் குலதெய்வத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன் ஒரு சிறிய கதை...

விருஷத்வஜன் என்ற அரசன் தன் குலதெய்வமான மகாவிஷ்ணுவை வணங்காது, சிவபெருமான் மற்றும் ஏனைய தெய்வங்களை வணங்க, சூரிய நாராயணனின் சாபத்தால் ஏழ்மை அடைந்தான். அவனோ அதுபற்றி சிவபெருமானிடம் முறையிட, ஈசனுடன், பிரம்மா முதலிய தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று விளக்கம் கேட்டனர். ‘விருஷத்வஜன், தனது குல தெய்வமான என்னை வணங்காததால் ஏழ்மை அடந்தான்’ என மகாவிஷ்ணு கூறினார். பின் வ்ருஷத்வஜன் வம்சத்தில் பிறந்த அரசன் ஒருவனின் மணைவி குலதெய்வ வழிபாடு செய்ய, அவர்கள் மீண்டும் செல்வந்தர்களாக மாறியதாக தேவி பாகவதத்தில் உள்ளது. இதிலிருந்து குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.

இறை வழிபாடு ஆண், பெண் இருபாலருக்குமே பொதுவானது. எனினும், பெரும்பாலான வீடுகளில் குலதெய்வ வேண்டுதல், நேர்த்தி, அபிஷேகம், ஆராதனை இவை பெண்களாலேயே ஈடுபாட்டோடு செய்யப் படுவதால், பெண்கள் இதழான சிநேகிதியில் எங்கள் வீட்டு குலதெய்வம் பற்றி எழுதுவதில் நான் பெருமைப்படுகிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-திருவையாறு பாதையில் உள்ளிக்கடை என்ற ஊரை அடுத்துள்ளது ‘வடகுரங்காடுதுறை.’ இங்குள்ள ஆடுதுறை பெருமாள் கோயிலில், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற, ஸ்ரீதயா நிதீசுவரர் அருள் பாலிக்கிறார். இது ஒரு தோஷ நிவர்த்தித் தலம். இவ்வூரில், அடர்ந்த தோப்பினுள் பசுமையான வயல்வெளி, வாகாய் ஓடும் வாய்க்கால் இவற்றிற்கு இடையில் அருளாட்சி செய்து வரும் ஸ்ரீமதுர வீரன் எங்கள் குலதெய்வம்.

பல காலங்களுக்கு முன் முனிவர்களின் யாகத்தை தஞ்சன் என்ற அசுரன் அழித்து, அட்டகாசம் செய்து வந்தான். அவனால் துன்புற்ற தேவர்களும், முனிவர்களும் பரமசிவனை வேண்டினர். ஈசனும், ஈசான்ய மூலையிலிருந்து ‘மதுர வீரன்’ என்ற பெயரில், ஒரு சக்தியை உருவாக்கி தஞ்சனை அழிக்க அனுப்பினார். அன்னை காமாட்சி, அவளது தமையன் நீலமேகப் பெருமாளுடன் மதுர வீரனும் இணைந்து தஞ்சனை வதம் செய்தனர். தஞ்சன் இறக்கும் சமயம் வேண்டிக் கொண்டதால், அவ்வூரின் பெயரும் தஞ்சாவூர் ஆயிற்று. அங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயமும் மிகப் பிரசித்தமானது. மதுர வீரனே ருத்ர வீரன் என்று ஈசனின் அம்சமாகப் போற்றப்படுகிறார்.

என் கணவரின் கொள்ளுத் தாத்தா காலத்தில் பராமரிக்கப்பட்டு, பூஜைகள் சரிவர நடந்த இவ்வாலயம், அதற்கடுத்த, தலைமுறையினர் வேலை நிமித்தம் ஊரை விட்டு வெளியூர் போய்விட, பராமரிப்பும் கவனிப்புமின்றி இருந்ததாம். சில திருடர்கள், சுவாமி சிலையின் அடியிலுள்ள நவரத்தினங்களை அபகரித்துக் கொண்டு சிலையை அருகிலுள்ள வாய்க்காலில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

என் பெரிய மாமனாரின் பிள்ளைக்கு டைஃபாய்டு வந்து நிலைமை மோசமான போது, ‘வாய்க்காலில் தலை குப்புற கிடக்கும் என்னை கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் உன் குடும்பம் நன்றாக இருக்கும்...’ என ஏதோ அசரீரி போல் என் பெரிய மாமனாருக்குக் கேட்க, உடனே அவரும் சிலையை மீட்டு பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தாராம். ஆச்சரியப்படும் விதத்தில் மறுநாளே அவர் மகன் உடல் நிலை தேறிவிட்டதாம்!

இக்கோயிலின் சரித்திரம், பூஜை முறை பற்றி அறிய என் பெரிய மாமனார், காஞ்சி மகாபெரியவரை அணுகி விசாரித்தபோது, பெரியவர் சுவாமியின் உருவ அமைப்பைப் பற்றி விசாரித்துள்ளார். இடது கையில் கதையுடன் சிலா ரூபத்தில் காட்சி தருவதால்... இது உக்ர தெய்வமான மதுரை வீரன் அல்ல. மதுர வீரன் (மதுர என்றல் இனிய) என்றூ அவர் விளக்கமளித்துள்ளார். மதுரை வீரன் கையில் வீச்சரிவாளுடனும், சுதை ரூபத்திலுமே காட்சி தருவார். அந்த தெய்வத்துக்கு பலி கொடுப்பது அவசியம். ஆனால் சாத்வீக ரூபமான இது போன்ற தெய்வங்களுக்குப் பலி கொடுப்பது கூடாது என்று பெரியவர் சொன்னபடி, அதுவரை நடந்து வந்த பலி கொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு, என் பெரிய மாமனார் விக்கிரகத்தை முறைப்படி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தார்.

இரண்டடிக்கும் குறைந்த உயரம்; கனிவு ததும்பும் முகம்; வலக்கையை இடுப்பில் வைத்து, இடக்கையில் கதையுடன் காட்சி தரும் ஐயன், சந்தன, விபூதி அபிஷேகங்களின் போது பாலமுருகணைப் போன்றே தோற்றம் தருவார். மதுர வீரன் சன்னிதியே பிரதானமானது. வெளியே அவரது மானசீகத் தாயான காமாட்சி அம்மனுக்கு சன்னிதி உள்ளது. எங்கள் குடும்ப விசேஷங்களை மதுர வீரனைப் பிரார்த்தித்தே ஆரம்பிப்போம். நன்கு முடிந்ததும் மதுர வீரனுக்கு நன்றி கூறி அபிஷேக, ஆராதனைகள் செய்வோம். எங்கிருந்தாலும் வருடம் ஒருமுறை குலதெய்வ தரிசனம் செய்யத் தவறுவதில்லை.

இக்கடவுள் அவ்வூரின் காவல் தெய்வமாயும் விளங்குவதால், இரவில் குதிரை மீது ஏறி ஊரைச் சுற்றி வருவதாயும், குதிரையின் குளம்பொலி இரவில் துல்லியமாகக் கேட்கும் என்று என் கணவரின் தாத்தா, பாட்டிகள் சொல்வார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை என் பெரிய மாமனாரால் மட்டுமே பராமரிக்கப்பட்டு சாதாரண நிலையில் இருந்த ஆலயம், சமீப காலமாக பிரமிக்கப்படும் விதத்தில் பிரபலமானது. வெளி நாடுகளில் வாழ்பவர்கள் கூட ‘இது எங்கள் குல தெய்வம்!’ என்று, உரிமையுடன் கொடுத்த நன்கொடைகளால், கோவில் சன்னிதிகள், பிரகாரம், சுற்றிலும் தோட்டம், காம்பவுண்டு சுவர் என்று விரிவடைந்து, கடந்த 94ம் ஆண்டு விரிவான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றன.


வாழ்வில் எத்தனையோ இன்னல்கள், இடர்ப்பாடுகள், சரிவுகள் ஏற்பட்டபோதும், அதிலிருந்து எங்களை எளிதாக மீட்டு, இன்று நாங்களும், எங்கள் குழந்தைகளும் சிறப்பான நிலையில் விளங்கவும் காரணம் எங்கள் குல தெய்வமும், கண்கண்ட தெய்வமுமான மதுர வீரன்தான்! அவரை மனதில் தியானித்தாலே கடல் போன்ற பிரச்சனைகளூம் கடுகாகி காணாமலே போய்விடும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக