Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

மார்கழியில் ஆனந்த நடனமாடுவார்

ஞான ஆலயம் டிசம்பர் 2000 இதழில் வெளியானது







மாதங்களில் சிறந்தது மார்கழி. மார்கழி பிறந்தாலே மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். விடியற்காலை முதலே ஒரு தெய்வீகச் சூழ்நிலை காணப்படுவது தனுர் மாதம் என்ற இம்மாதத்தில் மட்டுமே.

எல்லாக் கோயில்களிலும் அதிகாலை விசேஷ வழிபாடு, பூஜை, சின்ன ஆலயங்களில் கூட திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பக்திப் பாடல்களின் இனிய இசை, வீட்டு வாசல்களில் விதவிதமாகப் போடப்பட்டு கண்ணைப் பறிக்கும் அழகிய கோலங்கள், விடியற்காலை பஜனை, அதோடு வாய்க்கு விருந்தாக சூடான பொங்கல்! அதனால்தான் கீதையில் கண்ணன் சொல்கிறான், ‘நான் மாதங்களில் மார்கழி’ என்று.

இம்மார்கழியில்தான் திருமாலின் பாஞ்சஜன்யம் முழங்குவதாக ஐதீகம். அதிகாலையில் அடிக்கும் காற்றில் ஓசோன் அதிகமாக உள்ளதால் ஏற்படும் ஒருவித காந்த சக்தி உடலுக்கு ஆரோக்கியம் தருவதாலேயே, அதிகாலையில் ஸ்நானம் செய்வது சிறப்பாகக் கூறப்படுகிறது.

இம்மார்கழியில்தான் நாராயணனுக்குகந்த வைகுண்ட ஏகாதசியும், நடராஜனுக்குகந்த திருவாதிரையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு கடவுள் நிம்மதியாகத் தூங்குகிறார். மற்றொரு தெய்வம் ஆனந்தமாய் ஆடுகிறார்!

நட்சத்திரங்களுள் சிறந்தது திருவாதிரை. தமிழகக் கோயில்களுள் சிறந்தது தில்லை சிற்றம்பலம் என்னும் சிதம்பரம். அதுவே ‘கனக சபை’ எனப்படுகிறது. தில்லையில் சிவபெருமான் இடதுகாலைத் தூக்கி திரு நடனம் புரியும் நடராஜப் பெருமானாகத் திகழ்கிறார்.

புலித்தோல்
ஆணவ அகங்காரம் என்னும் புலியைக் கொன்று அதன் தோலை சிவபெருமான் அணிந்தார். இது அகங்காரத்தை அடக்குவதன் பொருள்.

தூக்கிய பாதம்
சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண மாயையாகிய முயலகனை மிதிக்கின்ற பாங்கில் ஒரு காலைத் தூக்கிய வண்ணம் பெருமான் ஆடுகிறார். மாயையை மிதித்து அழித்தலொழிய ஞானம் கிடைக்காது என்பதே இதன் தத்துவம்.

மான்
மனிதமனம் மானைப் போல் துள்ளிக் குதித்து அங்குமிங்கும் ஓடும். ஆடவல்லாரின் கையிலுள்ள மான் அவரையே பார்த்திருப்பது போல் ஜீவர்களும் மனதைத் தீயவழியில் செலுத்தாமல் ஈசன் வசத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

உடுக்கை, டமருகம்
விதையினால் ஒரு மரத்தையே உண்டாக்கலாம். அதுபோல் நாதம் என்ற விந்துதான் உலகையே உண்டாக்கியது. ‘ஓம்’ என்கிற ஓசையே பிரணவ நாதம். அதன் மூலம் ஒரு மனிதன் தன்னை தெய்வ நிலைக்குப் போக வல்லவனாக முடியும் என்ற தத்துவமே உடுக்கை.

கனல்
எந்தப் பொருளையும் அக்னி எளிதில் சாம்பலாக்கும். எரிந்த பின் மிஞ்சுவது நீறு. சிவ ஞானம் என்ற அக்னி கர்மத்தை எரித்து, சாந்தமும் இனிமையும் நிறைந்த வாழ்வைத் தரும். திருநீறு சகல பாவங்களையும் போக்குமென்பது இதன் பொருள்.

சந்திரன்
தூய்மைக்கு இருப்பிடம் பரமாத்வாகிய நடராஜன் என்பதைக் குறிக்கிறது.

ஊர்த்துவ தாண்டவம்
பிரபஞ்சத்தை அமைப்பதிலும், அதை முறையாக நடத்துவதிலும் சிவமும், சக்தியும் சேர்ந்தே பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த ஆனந்தத்தால் இருவரும் விதவிதமாகத் தாண்டவமாடியதில் சிவமும், சக்தியும் ஒருவருக்கொருவர் நிகராயினர். தாண்டவத்தின் இறுதியில் வெற்றி சிவனுக்கே.

பஞ்சாட்சரம்
ஸ்ரீ நடராஜ வடிவமே பஞ்சாட்சரமாகும். நடராஜரின் திருவடி ‘ந’காரமாகவும், திருவுந்தி ‘ம’காரமாகவும், திருத்தோள் ‘சி’காரமாகவும், திருமுகம் ‘வ’காரமாயும் கொண்டு சிவபெருமான் திருநடனம் செய்கிறார்.

பஞ்ச நடன சபைகள்
திருவாலங்காடு – ரத்ன சபை
சிதம்பரம் – பொற்சபை
மதுரை – ரஜத சபை (வெள்ளி)
திருநெல்வேலி – சித்ர சபை
மதுரையில் பஞ்ச சபைகளும் உள்ளன. வெள்ளியம்பலத்தில் உள்ள ரஜத சபை, நூற்றுக்கால் மண்டபத்திலுள்ள தேவசபை, மற்றும் ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள சித்ர சபை இவற்றிலுள்ள மூர்த்திகள் சாந்தாகாரச் சிலைகள். முதல் பிரகாரத்திலுள்ள கனக சபை, ரத்தின சபை இவற்றிலுள்ளவை உற்சவ மூர்த்திகள். கம்பத்தடி மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் பெருவடிவமுள்ளது. இங்குள்ள ரஜத சபை என்னும் வெள்ளியம்பலத்தில் ஆடவல்லார் இராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்கி இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி, கால் மாற்றியாடியதால் இதற்கு ‘சொர்க்க தாண்டவம்’ என்று பெயர்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்திர கோச மங்கை ஆலயத்தில் மரகதம் எங்கிற பச்சைக் கல்லினாலான ஸ்ரீ நடராஜ விக்ரகம் உள்ளது.

தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரகாரம் அருகிலுள்ள வடகுரங்காடுதுறை என்னும் ஆடுதுறை பெருமாள் கோயிலில் கற்சிலையில் நடராசர், சிவகாமி அம்மையுடன் மூலவராகக் காட்சியளிப்பது சிறப்பானது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக