Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

நமது சமூகம்

குமுதம் பக்தி ஸ்பெஷல் – ஏப்ரல் 2001 இதழில் வெளியானது




காஞ்சி மாமுனிவர் அருளியவை:


மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்கள் மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதீக மதமும் ‘ஸாமான்ய தர்மங்கள்’ என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் விதித்திருக்கிறது. அஹிம்சை, சத்யம், தூய்மை, புலனடக்கம், தன் தேவைக்கு அதிகமாக ஒரு புல்லைக் கூடத் தனக்கென வைத்துக் கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதாபிதாவிடம் விசுவாசம், சகல உயிர்களிடத்தும் சமமான அன்பு, இவை எல்லாம் எல்லோருக்கும் நம் இந்து மதத்தில் விதிக்கப்பட்ட சாமான்ய தர்மங்கள். அது தவிர சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப் பட்டிருக்கின்றன. இந்த விசேஷ தர்மங்களையும் சாமான்யமாக்கியிருந்தால் அவற்றை யாருமே அனுஷ்டிக்காத நிலைதான் உண்டாகியிருக்கும். இதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன். புத்த மதத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பதை பொது தர்மமாக வைத்தார்கள். ஆனால் இன்று பௌத்த தேசங்களில் என்ன பார்க்கிறோம்? எல்லோரும் மாமிசம் உண்பவர்களாக இருக்கிறார்கள். நம் ரிஷிகளுக்கும், தர்ம சாஸ்திரக் காரர்களுக்கும் மனுஷ்ய சுபாவம் நன்றாகத் தெரியும். அதனால் புலால் உண்ணாமையைச் சிலருக்கு மட்டுமே விசேஷ தர்மமாக வைத்தார்கள். இதைப் பார்த்து மற்றவர்களும் விரதங்கள், நோன்பு நாட்கள், மூதாதையர் திதி ஆகிய தினங்களில் மாமிச உணவை நீக்கி விடுகிறார்கள்.

பலவித தின்பண்டங்கள் உள்ளன. பல ராகங்கள் உள்ளன. அதுபோல் சமூகத்தில் பல காரியங்கள் நடக்க வேண்டும். ரசத்தில் உப்பு போட்டிருக்கிறதே என்று பானகத்தில் உப்பு போட்டால் அது ரசாபாசம். ஒரு ராகத்தில் இன்னொரு ஸ்வர வரிசையைச் சேர்த்தால் அது ரசாபாசம். இப்போது ஜனங்களுக்கு ரசங்களைப் பற்றிய ருசியே போய் விட்டது, உருக்கமான புராணக் கதை நடுவே பாகவதர்கள் கேலிப் பேச்சுக்கு வருகிறார்கள். அதை ஜனங்களும் ரசிக்கிறார்கள். எத்தனையோ நல்ல போஜன வகைகள் இருக்கும்போது ருசியும் இல்லாமல், ஆரோக்கியத்துக்கும் உதவாமலிருக்கிற புகையிலையைப் புகைக்கிறார்கள். இவை சின்ன ரசாபாசங்கள். பெரிய ரசாபாசம் பொது தர்மத்துக்கு அநுகூலமான பல தர்மங்களைப் போட்டுக் குழப்புவதே!

சமுதாய வாழ்வுக்கு பல காரியங்கள் நடந்தாக வேண்டியுள்ளது. புத்தியினால் செய்கிற காரியங்கள், சரீரத்தால் செய்கிற காரியங்கள் இவற்றில் பலப்பல தினுசுகள். இத்தனையும் ஜன சமூகம் சுபிட்சமாக இருப்பதற்கு அவசியமாய் இருக்கின்றன. இதில் ஒரு தொழில் உயர்வு, ஒரு தொழில் தாழ்வு என்று நினைத்தால் அது சுத்த தப்பு.
காஞ்சி மாமுனிவர் அருளியவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக