Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

மும்பையில் முருகனின் படை வீடு


ஞான ஆலயம் டிசம்பர், 2003 இதழில் வெளியானது
திருக்கார்த்திகை-டிசம்பர் 7, 2003




தமிழகத்தில் முருகன் அருளாட்சி செய்யும் அறுபடை வீடுகள் புராணாப் பெருமை பெற்றவை. அந்த வரிசையில் ஏழாவது படைவீடாக மும்பையில் அமைந்துள்ளது திருச்செம்பூர் திருமுருகன் ஆலயம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மட்டுங்காவில் வாழ்ந்த தமிழன்பர்கள் ஒன்றுகூடி, சுப்ரமண்ய சமாஜம் ஏற்படுத்தப்பட்டது. சிறிய முருகப் பெருமானின் திருவுருவப் படம் வைத்துப் பூஜிக்கப்பட்டு கந்தசஷ்டி, தைப்பூசம் போன்ற விழாக்கள் நடத்தப்பட்டன. பொதுமக்களின் ஆர்வத்தாலும், ஆதரவாலும் தன்னுடைய கோயிலை அமைத்துக் கொண்டான் குமரப் பெருமான்.

செம்பூர் பகுதியில் ஓர் இடத்தை ஆலயம் நிர்மாணிக்கத் தேர்ந்தெடுத்தபோது கேரள தாந்திரிகர்களால் பிரஸ்னம் வைக்கப்பட்டுப் பார்த்தபோது, பூர்விகத்தில் அங்கு துர்க்கையின் வாசமும், முனிவர்களின் இருப்பிடங்களும் இருந்ததாகத் தெரிய வந்தது. அன்னை வாசம் செய்த இடம் பிள்ளைக்குப் பிரியமானதுதானே!

‘பம்பாய் செடா நகர் பார்புகழ் கந்தவேள்’ என்று வாரியார் வாக்கால் பாடப்பெற்ற முருகன் ஆலயத் திருப்பணிக்கு முதல் கட்டமாக வாரியார் சுவாமிகளே மும்பையின் பல இடங்களில் உபன்யாசம் செய்து நன்கொடை பெற்றுக் கொடுத்தார். சுமார் ஆயிரம் உண்டிகள் மும்பை நகர தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அதில் சேர்ந்த கணிசமான நிதி ஆலயத் திருப்பணிக்கு உதவியது.

இந்த விழாவில் கலந்து கொண்ட வாகீச கலாநிதி திரு கி. வா. ஜகன்னாதன் அவர்கள் அன்றே, ‘கீழைக் கடற்கரையிலோர் திருச்செந்தூர், மேலைக் கடற்கரையிலோர் திருச்செம்பூர்’ என்று உவந்து கூறினார். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் முதல் கும்பாபிஷேகமும், பின்னர் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்த பிரம்மாண்டமான ஆலயத்தின் கட்டிடக்கலை நிபுணர் கிறிஸ்தவரான திரு சி.எஸ்.கே.ராஜ், மற்றும் தமிழகத்தின் தலை சிறந்த சிற்பிகளின் கைவண்ணம், மும்பையின் புகழ் பெற்ற கட்டிட நிபுணரான ஜஸ்டன்வாலா என்ற முகமதியர் என்று பலராலும் மெருகேற்றப்பட்டது!

இக்கோயில் நிர்மாணம் புதுமையானது. 51 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆண்டவனை தரிசிக்க 108 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். சுவாமிமலை போல் செயற்கையாக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. படிகள் ஏறிச் செல்லும்போது சுவற்றின் இடு பக்கமும் முருகனின் வரலாறு, வள்ளி, தேவசேனா திருமணக் காட்சிகள் வண்ண ஓவியமாக, சுதை பிம்பங்களாக கண் கவர் அழகுடன் காட்சியளிக்கின்றன. படி ஏறிச் செல்லும்போது கர்ப்பக் கிரஹத்தை ஒரு வலம் வருவது போல் படிக்கட்டுக்கள் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இரண்டு தளங்கள் தாண்டி மூன்றாவது மாடியில் மூலவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் மேற்கு முகமாக மயில் வாகனனாய் வேலாயுத ரூபனாய் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

சிங்கார வேலனின் சிரிப்பு, சிந்தையை மயக்குகிறது. நகர மனமின்றி வலம் வரும்போது, ஐயப்பன் சந்நிதியும், எதிரில் குருவாயூரப்பன் சந்நிதியும் உள்ளது. முருகப் பெருமானின் அழகு உருவம் கண்களிலேயே நிற்க, அதை மீறி நம்மைக் கட்டியிழுக்கிறது, குழந்தை குருவாயூரப்பனின் குறும்புச் சிரிப்பு. அச்சந்நிதியில் ஒரு பாத்திரத்தில் குந்துமணி உள்ளது. குழந்தைகள் கையால் அதனை அளைந்தால் அவர்களின் புத்தி, கல்வி பெருகும் எனக் கூறப்படுகிறது.

இங்கு கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உற்சவம் பிரும்மோத்சவமாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஜனவரி 26 அன்று திருப்புகழ் படிவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பல பயனுள்ள பணிகளும் இந்த சமாஜத்தால் செய்யப்படுவது பாராட்டத் தக்கது. இங்கு கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. ‘ஷண்முகப் பிரியா’ என்ற பெயரில் இசை, வயலின், நடன வகுப்புகள் நடைபெறுகின்றன. செம்பூர் மற்றும் சுற்றுவட்டார ஏழை, மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கான உதவித் தொகை அளிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஒன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர பக்தியைப் பரவச் செய்யும் ஆன்மீகச் சொற்பொழிவுகள், கதா காலட்சேபங்கள் அடிக்கடி இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளில் இலவச ஜாதகப் பரிவர்த்தனைகளும் நடைபெறுகின்றன. வயதானவர்கள் ஏறிச் செல்ல இங்கு லிஃப்ட் வசதியும் உண்டு.

அறுபடை வீடுகளில் நாம் செலுத்தும் அத்தனை நேர்த்திக் கடன்களையும் இவ்வாலயத்திலும் நிறைவேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. தங்க ரதத்தில் அசைந்தாடி வரும் குமரனைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். வைரவேல் தாங்கி கம்பீரமாக ராஜ அலங்காரத்தில் காட்சி தரும் சரவணபவனை விசேஷ நாட்களில் தரிசிக்கலாம். காலை 5.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 9 வரையும் தரிசன நேரம். செம்பூர் செடா நகரில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு மும்பையின் எல்லா பகுதிகளிருந்தும் பஸ் வசதி உண்டு.


தமிழகத்தை விட்டு பல மைல்கள் தள்ளி வாழும் எங்களுக்குத் தமிழ் தெய்வத்தைத் தரிசிக்கும் ஏக்கம் ஏற்படும் போதெல்லாம் நாங்கள் செல்வது திருச்செம்பூர் ஆலயத்திற்கே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக