Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

சென்னையில் வடதிருநள்ளாறு

ஞான ஆலயம் மார்ச் 2003 இதழில் வெளியானது



நவக்கிரஹ மண்டலத்தில் ஏழாவது கிரஹமாகவும் சூரியனுக்கு மேற்கில் அசுர கிரஹகமாகவும் விளங்கும் ஸ்ரீசனி பகவான் கெடுப்பவரும், தன்னை வழிபட்டோர்க்குக் கொடுப்பவருமாவார். சனி பகவானுக்கு விசேஷமான ஸ்தலம் தேற்கே திருநள்ளாறு என்பது நாம் அறிந்ததே. ஆனால், சென்னையில் ‘வட திருநள்ளாறு’ என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும் சனீஸ்வர பகவானின் ஆலயம் பற்றி அறிய வாய்ப்பில்லை.

மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அமைந்துள்ள ஆலயத்தில் சனீஸ்வர பகவானுடன், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் யக்ஞ விநாயகர் மூர்த்திகளும் அருள் தரிசனம் அளிப்பது மேலும் சிறப்பு. ஆலயம் 70 ஆண்டு பழமையானது. 60 ஆண்டுகட்கு முன் இவ்வாலயத்திற்கு வருகை தந்த காஞ்சி மாமுனிவர் ஸ்ரீசந்திர சேகர சரஸ்வதி சுவாமிகளே இதற்கு ‘வட திருநள்ளாறு’ என்ற பெயரை வழங்கினார். அன்று முதல் இது திருநள்ளாறு அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சனி தோஷம் நீங்கும் ஸ்தலமாகி விட்டது.

ஒருமுகம், நான்கு கைகளில் அம்பு, வில், வாள், வரதம் ஆகிய ஆயுதங்கள் ஏந்தி காக்கை வாகனத்தில் ஸ்ரீ நீலாம்பிகை சமேதராகக் காட்சி தரும் சனீஸ்வர மூர்த்தி சிவாம்சமாகவும், பஞ்சமுக ஆஞ்சநேயர் மகாவிஷ்ணு அம்சமாகவும், குமரி முதல் இமயம் வரை எங்குமே இல்லாது இங்கு எழுந்தருளியுள்ள யக்ஞ விநாயகர், பிரம்மனின் அம்சமாகவும் விளங்குவதால் இக்கோவில் மும்மூர்த்திகளின் தலமாகப் போற்றப்படுகிறது.

சனியின் பிடியில் சிக்காத ஸ்ரீகணநாதரையும், ஆஞ்சநேயரையும் ஒருங்கே வழிபடுவதால் சனி தசை, சனி புத்தி, ஏழரை, அஷ்டமச் சனி இவற்றால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், மன நிம்மதி, காரிய சித்தி, க்ஷேமம் கிடைக்கும்.

கோயில் மிக பழுது பட்டு விட்டதால், இதற்கு கும்பாபிஷேகத் திருப்பணி 1994ம் ஆண்டு முதல் நிர்வகித்து வரும் ‘சனஞ்சயா அறக்கட்டளை’யினரால் நடை பெற்று வருகிறது. இதற்கான தொகை ரூ. 12 லட்சம் ஆகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் ஆலய மூல விக்கிரகங்கள் வேறிடத்தில் பூஜிக்கப்பட்டு, சனிக்கிழமைகளில் மட்டுமே பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வர மூர்த்தியின் உற்சவ விக்கிரகங்கள் ஆலயத்தில் தரிசனத்திற்கு வைக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என, நிர்வாகத்தார் தெரிவித்தனர். சனி பகவானுக்கு கடுகளவு திரவியம் அர்ப்பணித்தாலும், அவர் மனமகிழ்ந்து 21 தலை முறைகளுக்கு புண்ணியம் தர வல்லவர்.

முகவரி:
சனஞ்சயா ஆலய டிரஸ்ட்,
புதிய எண் – 33 (பழைய எண் – 12ஏ)
வெங்கடாசலம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600 033.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக