Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

என்னை சபாஷ் போட வைத்த என் வெளிநாட்டு மருமகள்!


குமுதம் சிநேகிதி 2006 செப்டம்பர் 15 இதழில் வெளியானது.

வாசகி அனுபவம் என்ற பகுதியில் வெளியானது.

தன் ஜெர்மனி மருமகள் நாள் கிழமைக்கு மடிசார் கட்டிக் கொள்ளும் அழகையும், ரசம் சாதம், இட்லி, தோசை சாப்பிடும் பாந்தத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறார் நம் மும்பை வாசகி ராதா பாலு..என் மகன் ஐர்மனியில் கணினித் துறையில் பணி புரிந்து வருகிறான். அவனுக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது, ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணை தான் காதலிப்பதாகச் சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி. 'அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று நான் மறுத்தேன். ஆனால், என் கணவரும் மற்ற பிள்ளைகளும் அவனுக்கு முழு சப்போர்ட்.

'நீ அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் மாறி விடுவாய். உன்னுடைய குணங்கள், செயல் முறைகள் எல்லாம் அவளிடமும் இருக்கிறது அம்மா! உனக்கு அவளை ரொம்பப் பிடித்துவிடும்' என்று எனக்கு டன் டன்னாக ஐஸ் வைத்தான். அதோடு விடாமல் வெப்காமில் அவளைக் காட்டினான். பளிச்சென்று இருந்தாள். 'ஹலோ அம்மா! செளக்கியமா?' என்று அழகாகத் தமிழில் கேட்டாள்.


மறுத்துச் சொன்ன நானே என் கணவருடன் தாலி, புடவை சகிதம் ஜெர்மனி சென்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.
அவளுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது. அதனால் என் பிள்ளை மூலம்தான் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம்!
சென்ற வருடம் என் இரண்டாவது மகனின் திருமணத்திற்கு வந்திருந்தபோது அவள் எங்களிடம் பழகிய விதமும், அவளுடைய பண்பும், அன்பும் நல்ல பெண்தான் மருமகளாக வந்திருக்கிறாள் என்று மகிழ்ந்தோம்.

அவளுக்காக நான் வாங்கி வைத்திருந்த நூடுல்ஸூம், ப்ரெட்டும், பட்டரும் ஒதுக்கி விட்டு, ரசம் சாம்பார், தயிர்சாதம், இட்லி, தோசையை எங்களோடு தரையில் அமர்ந்து கையால் சாப்பிட்டாள்.

என் மகனிடம் அவள் காட்டும் பிரியமும், மரியாதையும் அவன் என்ன சொன்னாலும் உடனே செய்யும் பாங்கும், அவளை வேற்று நாட்டவளாக எண்ணவே தோன்றவில்லை.

சின்னவனின் திருமணத்தின்போது, வேளைக்கு ஒரு புடவை கட்டி, தலை நிறைய பூ, கை நிறைய வளையல், விதவிதமாய் நகைகள் போட்டு அவள் அசத்தியதைப் பார்த்து திருமண வீடே அதிசயப்பட்டுப் போனது.

அவள் என் பேத்தியை வளர்க்கும் விதமும் மிக அருமை? குழந்தை கொஞ்சம் சிணுங்கினால் கூட பொறுத்துக் கொள்ள மாட்டாள். குழ்ந்தைக்கு அன்னபிராசனம், காதுகுத்தல் செய்தபோது, தானும் எங்களைப் போல் மடிசார் கட்டிக் கொண்டு கிட்டத்தட்ட நாலு மணிநேரம் ஓடியாடி வேலை செய்தவளைப் பார்த்து நான் அசந்து போனேன்.

நான் பார்த்திருந்தால் கூட இவ்வளவு நல்ல பெண் எனக்கு மருமகளாக கிடைத்திருக்க மாட்டாள் என்பதை என் மனம் ஒப்புக் கொண்டது.
எனக்கு உதவியாக வீட்டு வேலைகளை அழகாகப் புரிந்து கொண்டு என்னோடு செய்வது, வேலைக்காரியிடம் கூட அன்பாகச் சிரித்துப் பேசுவது, என் பெண்னிடமும் மற்ற பிள்ளைகளிடமும் பாசமாக நடந்து கொள்வது என எல்லாவற்றையும் பார்த்துப் பூரித்துப் போனேன்.

என் மகனிடமும் அதைச் சொல்லி மனமார அவளைப் பாராட்டினேன். "அப்படின்னா என் செலக் ஷன் ஓ.கே. தானேம்மா" என்று கேட்டுச் சிரித்தான்.

தினமும் இரவு அவர்களுடன் வெப்காம் மூலம் பேசுவதும், என் பேத்தியின் விஷமங்களையும், பேச்சையும் ரசிப்பதும் எங்களது அன்றாட வேலைகளில் ஒன்று! 'அம்மா, டிசம்பர் மாதம் நாங்கள் முவரும் மும்பை வருகிறோம்!" என்று என் மருமகள் சொன்னது முதல் நான் நாட்களை எண்ண ஆரம்பித்து விட்டேன்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக