Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

சமையல் மேஜை



பெண்மணி செப்டம்பர் 2004 இதழில் வெளியான
ஒரு குறிப்பு







வங்கி அதிகாரியின் மனைவியான ராதா பாலு இயற்கையிலேயே எழுத்தாற்றலும் ஆர்வமும் கொண்டவர். பத்திரிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள் என்று எழுதி வந்த இவர், கணவரின் பணி காரணமாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வசிக்க வேண்டியிருந்ததால் அங்குள்ள சமையல்களையும் கற்றுத் தேர்ந்து வல்லவராகி எழுத்திலும் காட்டத் தொடங்கினார். பரிசுகளையும் வாங்கிக் குவித்தார்.

இவரது கணவர் பொறூப்புமிக்க குடும்பத் தலைவர் என்பதுடன் மனைவி மீது அளவற்ற பாசமும் கொண்டவர் என்பதால் அவர் அளித்த ஊக்கம் காரணமாக சமையல் குறிப்பு, கோலம் கதை, கட்டுரை என்று தொடர்ந்து எழுதி வருகிறார், இவரது ஆன்மீகக் கட்டுரைகளும் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்போது மும்பை வாசியாகிவிட்ட ராதா பாலுக்கு 3 மகன்கள், ஒரு மகள். இடைவிடாத குடும்பப் பணிகளுக்கு இடையேயும் ‘பெண்மணி வாசகர்கள்’ செய்து பார்த்து சுவைத்து மகிழ வேண்டும் என்பதற்காக அவர் வழங்கியுள்ள சமையல் குறிப்புகளை இங்கே காணலாம்.

ஜவ்வரிசி வடை

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 150 கிராம்
உருளைக் கிழங்கு (வேக வைத்தது) – 1
அரிசி மாவு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறுதுண்டு
உப்பு – தேவையான அளவு
மோர் - ½ கப்

செய்முறை:

ஜவ்வரிசியை மோரில் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை நைஸாக அரைக்கவும். ஜவ்வரிசி 2 மணி நேரம் ஊறியதும், அத்துடன் மற்ற சாமான்கள் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும், சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது சாஸூடன் சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

மல்டி கலர் ஊத்தப்பம்

தேவையான பொருட்கள்:

மைதா – 2 கப்
அரிசிமாவு – 1 கப்
கடலை மாவு - ¼ கப்
தக்காளி சாறு – 1 கப்
துருவிய காரட் - ½ கப்
துருவிய பீட்ரூட் - ½ கப்
துருவிய முட்டைக்கோஸ் - ¼ கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 3
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

மேலே கூறிய சமான்களை நன்கு கலக்கவும். தக்காளி சாறு போதாதெனில் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சற்று தடிமனாக ஊத்தப்பம் வார்க்கவும். சுற்றிலும் மேலும் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு மூடியால் மூடவும். உள்ளே நன்கு வெந்து மொறு மொறுப்பானதும், திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். வெங்காயச் சட்னி தொட்டுச் சாப்பிடவும்.

குல் பப்டி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
கசகசா – 2 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் நெய்யை உருக வைத்து, கோதுமை மாவு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும். பிறகு அதில் தூளாக்கிய வெல்லம், ஏலப்பொடி, வறுத்தமாவு, தேங்காய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். வெல்லம் கரைந்து எல்லாம் நன்கு சேர்ந்து கொண்டதும், ஒரு தட்டில் கசகசா தூவி, அதில் கிளறிய கலவையைக் கொட்டவும். சூடாக இருக்கும்போதே துண்டம் போடவும். நன்கு ஆறியதும் எடுத்து வைக்கவும். இது மராட்டிய இனிப்பு. ‘குல்’ என்பது வெல்லத்தைக் குறிக்கும் மராட்டி வார்த்தை. செய்வதற்கு எளிய, செலவு குறைவான இனிப்பு இது!

தட்டை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 2 கப்
பொட்டுக் கடலை மாவு – 1 கப்
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
காரப்பொடி – 6 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
பெருங்காயப் பொடி - ½ டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை 2 மணி நேரம் நீரில் ஊறவைத்து நன்கு கெட்டியாக அரைக்கவும். கடலைப் பருப்பை ஊற வைக்கவும். பொட்டுக் கடலையை சற்று வறுத்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும். அரிசிமாவுடன் பொட்டுக் கடலை மாவு, பெருங்காயப் பொடி, உப்பு, காரப்பொடி, ஊறிய கடலைப் பருப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, தட்டைகளைத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, வேகவிட்டு எடுக்கவும். இந்தத் தட்டை வாயில் போட்டால் கரையும்.

ஆலு பரோட்டா

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
உப்பு - ¼ டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உருளைக் கிழங்கு - ½ கிலோ
ஓமம் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
காரப்பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை, வெண்ணை

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். உருளைக் கிழங்கை வேகவிட்டு, தோல் உரித்து நன்கு மசிக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெயில் ஓமத்தை தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெந்து மசித்த உருளைக் கிழங்கை சேர்த்து, உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கி கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிப் போட்டு கலக்கவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இரு உருண்டைகளை சிறிய பூரிகளாக இட்டுக் கொள்ளவும். ஒரு பூரியின் மேல் சிறு எலுமிச்சை அளவு உருளைக் கிழங்கு கலவையை பரவலாக வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி விடவும். மாவைத் தொட்டுக் கொண்டு தடிமனான பரோட்டாக்களாக இடவும்.

தோசைக் கல்லில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பரோட்டாவைப் போட்டு, மேலே 2 டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விடவும். கீழ்ப்பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும். சுடச்சுட மேலே வெண்ணை தடவி ஊறுகாய் மற்றும் தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடவும்.

இது பஞ்சாபி முறை. இதில் ஓமம் சேர்ந்திருப்பதால் கெடுதல் செய்யாது. பஞ்சாபியர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமைக்கு இந்த ‘பட்டர் பரோட்டாக்களே’ ஆதாரம்!

தால் பஞ்சரத்னா

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - ½ கப்
துவரம் பருப்பு  - ½ கப்
பயத்தம் பருப்பு - ½ கப்
உளுத்தம் பருப்பு - ¼ கப்
மைசூர் பருப்பு - ½ கப்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
காரப்பொடி - ½ டீஸ்பூன்
தனியா பொடி - ¾ டீஸ்பூன்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 3
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:

பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
தேங்காய்த் துருவல் – 5 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பல்

தாளிக்க:

நெய் – 5 டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
கொத்துமல்லி, கருவேப்பிலை

செய்முறை:

பருப்புகளை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் நன்கு வேகவிடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். நெய்யில் வெங்காயத்தை நன்கு வதக்கி, அதில் தக்காளி துண்டுகளைச் சேர்த்து நன்கு வதங்கியதும், வெந்த பருப்பு, காரப்பொடி, தனியா பொடி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நெய்யில் சீரகம், கரம் மசாலா சேர்த்து வறுத்து பருப்பில் கொட்டவும். மேலே கொத்தமல்லி, கருவேப்பிலையைப் போடவும்.

ரொட்டி, சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள இது நல்ல சுவையான சப்ஜி!


கமகம சமையல்
பெண்மணி முத்துச் சிதறல் பகுதியில் அக்டோபர் 2004 இதழில் வெளியான நேயர் கடிதம்



சமையல் மேஜை ‘கமகம’ வென்றிருந்தது. காரணம் இடம் பெற்றிருந்த பெரும்பாலான சமையற் குறிப்புகள். குறிப்பாக குல்ப்ப்டி, தால் பஞ்சரத்னா ஆகியன இதுவரை கேள்விப்படாத புத்தம் புதியவைகளாக இருந்ததுதான்.


ஆர்.சியாமளா, ராயபுரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக