Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அழகின் சிகரம்...அஜந்தா!

மங்கையர் மலர் – மே 2002 இதழில் வெளியானது






மகாராஷ்டிராவில் எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களும், இயற்கை அழகு நிறந்த மலை வாசஸ்தலங்களும் ஏராளம். அவற்றிற்கெல்லாம் சிகரமாய் விளங்குவது உலகப் புகழ் பெற்ற அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும். இவை நம் வாழ் நாளில் ஒருமுறையேனும் கண்டு களிக்க வேண்டிய இடங்கள்.

இச் சுற்றுலாத் தலங்கள் அமைந்திருப்பது மகாராஷ்டிராவின் பெரிய, முக்கிய மாவட்டமாகிய ஔரங்காபாத்திற்கு வெகு அருகில். ஔரங்காபாத் என்றதும் நமக்கு முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் நினைவு வருகிறதில்லையா? ஆம். கி.பி. 1659 முதல் 1707 வரை ஆட்சி செய்த புகழ் பெற்ற முகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியாக ஆட்சி செய்த ஔரங்கசீப்பின் பெயரால் உருவானதே இந்நகரம்.

அஜந்தா, எல்லோரா தவிர இங்கு அமைந்துள்ள தௌலதாபாத் கோட்டை பீபீ கா முக்பாரா, குல்தாபாத் கோட்டை, க்ருஷ்ணேஸ்வர் ஆலயம் ஆகியவை பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள்.

ஔரங்காபாத்திலிருந்து 104 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அஜந்தா ஓவியங்களும், சிற்பங்களும் பெரும்பாலும் புத்த மதத்தைத் தழுவியே உள்ளன. ஏழாம் நூற்றாண்டில், உருவாக்கப்பட்ட இந்த அழகுப் பெட்டகம் பல்லாயிரம் வருடங்கள் யாராலும் கண்டு பிடிக்கப் படாமல் காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் புதைந்து கிடந்துள்ளன. கிட்டத் தட்ட அழியும் நிலையில் 1819ம் வருடம் இவை அதிர்ஷ்டவசமாகக் கண்டு பிடிக்கப்பட்டன.

250 அடி உயரமுள்ள வழுவழுப்பான பாறைகளில் செதுக்கி உருவாக்கப்பட்ட சிலைகளும், வண்ண ஓவியங்களும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இடையில் ஓடும் ஆற்றைச் சுற்றி அரை வட்டமாக அமைந்துள்ள சரியான பாறைகளுக்கு ஓரிட்த்தில் படிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் வழியாகவே அவர்கள் ஏறி வந்து இவற்றை உருவாக்கியிருக்க வேண்டும். எந்த வசதியுமில்லாத அந்நாளில்...

அடேயப்பா! என்ன கலையார்வம்! எத்தனை மன வலிமை! எப்படிப்பட்ட அருமையான, கடினமான முயற்சி! இங்குள்ள 30 குகைகளில், சில முற்றுப் பெறாமல் உள்ளன. இன்னும் அவர்கள் என்னவெல்லாம் செதுக்க எண்ணியிருந்தனரோ? இவற்றில் 16 குகைகளில் வண்ண ஓவியங்களும், மற்றவற்றில் சிற்ப வேலைப் பாடுகளும் நம் கண்களுக்கு அரிய விருந்து.

இவற்றில் சைத்ய அறை எனப்படும் பிரார்த்தனைக் கூடங்களும், விஹாரம் எனப்படும் புத்த பிட்சுக்கள் தங்குமிடங்களும் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் களிமண், சாணம், தவிடு, சுண்ணாம்பு இவற்றைக் கொண்டு, பாறைகள் பென்மையாக்கப்பட்டு, பின் இயற்கை வண்ணங்களின் சேர்க்கையால் தீட்டப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஓரளவு பளிச்சிடும் இனத் ஓவியங்கள் தீட்டிய புதிதில் எப்படி கண்களைப் பறித்திருக்குமோ?

இங்குள்ள சிலைகள் பெரும்பாலும் புத்தரின் மாறுபட்ட தோற்றங்களையும், அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளையும் காட்டுபவையாய் அமைந்துள்ளன. பெண்களின் அழகு, அவர்கள் உடலின் வளைவுகள், உயிர்த் துடிப்புள்ள கண்கள், ஆபரண அலங்காரங்கள் கண்டவரைக் கட்டி இழுக்கின்றன. புத்தரின் தெய்வீகத் தோற்றத்தையும் அதே நேரம் பெண்களின் உடலழகையும் ஒரே நேரத்தில் உருவாக்கிய பிட்சுக்களின் மன நிலை வேடிக்கையாக உள்ளது!

பாதி கண்கள் மூடிய தியான நிலையில், கையில் மலருடன் காட்சி தரும் புத்தரின் பத்மபாணி உருவமே, அஜந்தா ஓவியம் என்றது நம் நினைவிற்கு வரும் உலகப் புகழ் பெற்ற பிரபல ஓவியம். பௌத்த மதத்தின் ஹீனயானம், மஹாயானம் என்ற இரு பிரிவுகளை ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டுள்ள ஒவ்வொரு சித்டிரமும் ஒரு கதையைச் சொல்லி நம்மை அந்த நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கிறது.

குகைளிலுள்ள சுவர்ச் சித்திரங்களும், சிற்பங்களும் மிக உயர்ந்த வேலைப் பாடுகளைக் கொண்டவை. குரங்குகள், யானைகள், மயில்கள் இவற்றின் களியாட்டங்கள் காணும் நம் மனதையும் மகிழச் செய்கின்றன.

ஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள எல்லோரா குகைகளில் பௌத்தம், ஜைனம் மற்றும் இந்துமத சம்பந்தப்பட்ட சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள 34 குகைகளில், மூன்றில் ஒரு பங்கு குகைகளே பார்க்கத்தக்கவை.

இவற்றில் பௌத்தமத சம்பந்தப்பட்ட சிற்பங்கள் 1 முதல் 12 குகைகளிலும், 13 முதல் 30 வரை இந்துமத சம்பந்தப்பட்ட சிற்பங்களும், 31 முதல் 34 வரை ஜைன சிற்பங்களும் உள்ளன. 5, 10, 15, 16, 21, 29, 31 ம் குகைகள் முக்கியமானவை.

இங்குள்ள இந்துமத சம்பந்தப்பட்ட சிற்பங்களில் சிவ-பார்வதி, சிவதாண்டவம், சாந்தம் பொங்கும் சிவபெருமான், பார்வதியுடன் தாயம் விளையாடும் காட்சி என பல காட்சிகள் தத்ரூபமாக, ரசிக்கத் தக்கனவாக உள்ளன.

பதினாறாம் குகை இங்குள்ளவற்றில் மிக முக்கியமானது. இது துவஜஸ்தம்பத்துடன் கூடிய கைலாச நாதர் ஆலயம். இதில் நடு நாயமாக சிவலிங்கம், கைலாயத்தில் சிவன்  மகுடி கொண்டிருக்கும் காட்சிகள், ராவணன் கைலாயத்தைத் தூக்க முற்பட, சிவபெருமான் காலை அழுத்தி அவனை கர்வபங்கம் செய்த காட்சிகள் ஆகியவை அழியாத சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பது அற்புதமான காட்சி.

அஜந்தா, எல்லோராவின் அழகில் பிரமித்துள்ள நம்மை மேலும் பிரமிக்க வைக்கிறது பீபீகாமுக்பாரா என்ற ஔரங்கசீப் தனது மனைவி ரபியாவுக்காகக் கட்டியுள்ள நினைவுக் கட்டிடம். ஒரு நிமிடம் தூரத்திலிருந்து பார்க்கும்போது நாம் ஆக்ராவில் தாஜ்மஹாலில் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ஆம்!  1679ம் ஆண்டு பேரரசர் ஔரங்கசீப்பால் தன் தந்தை கட்டிய தாஜ்மஹால் போலவே தன் மனைவிக்காக எழுப்பப்பட்ட்தே இந்த பீபீகாமுக்பாரா. வெளித் தோற்றம் தாஜ்மஹாலைப் போலக் காணப்பட்டாலும், அதன் அழகு, பளபளப்பு, உள்ளமைப்பு, மற்ற எல்லாவற்றிலும் தாஜ்மஹாலுக்கு ஈடு சொல்ல முடியாது. எனினும் ஔரங்கசீப்பிற்கு தன் மனைவி மீதிருந்த அன்பை வெளிப்படுத்துகிறது.

அடுத்து ‘எப்பேர்பட்ட கோட்டை?’ என்று நம்மை வியப்பிலாழ்த்தி மூக்கில் விரல் வைக்கச் செய்வது இங்குள்ள தௌலதாபாத் கோட்டை. 12ம் நூற்றாண்டில் இந்து அரசர்களின் ஆட்சியின் போது தேவகிரி என்றழைக்கப்பட்ட இக்கோட்டை யாதவகுல மன்னரான ராஜா பில்லம்ராஜ் என்பவரால் கட்டப்பட்டது. பின் ஆண்ட மொகலாய மன்னர் முகமது-பின்-துக்ளக் டில்லியிலிருந்து தலை நகரை இங்கு மாற்றி ‘அதிர்ஷ்ட நகரம்’ என்ற பொருளில் ‘தௌலதாபாத்’ எனப் பெயரிட்டார். இது சரிவராமல் மீண்டும் தலை நகரை டில்லிக்கே மாற்றி மக்களை இன்னல்படுத்திய ‘முட்டாள் அரசன்’ பற்றி நாம் சரித்திரத்தில் படித்துள்ளோம்!

இக்கோட்டை எதிரிகளின் தாக்குதலைத் தடுக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு. அக்காலத்தில் இந்தியா வந்த ஐரோப்பிய யாத்திரிகர்கள் இக்கோட்டை ‘மிக பலமான பாதுகாப்பான கோட்டை’ என்று புகழ்ந்துள்ளனர்.

பிரமிடு வடிவிலான மலை மேல் காட்சியளிக்கும் கோட்டையில் நுழைவாயிலுக்கு அருகில் 150 தூண்களால் தாங்கப்படும் பாரத மாதா ஆலயம் உள்ளது. அதனை அடுத்து சந்த் மினார், சீனி மஹால் ஆகிய கட்டடங்களைத் தாண்டி 40  அடி ஆழமுள்ள அகழி கோட்டைக்குப் பாதுகாப்பாக உள்ளது. அதில் இழுவைப் பாலம் இருந்ததாம். இதனைத் தாண்டிச் சென்றால் காணப்படும் கோட்டையின் உயரம் 600 அடிகள். இதிலுள்ள சிறப்பான அமைப்பு என்னவெனில், கோட்டைக்கு நேரடியாக மலை வழியே ஏறிச் செல்ல முடியாது. சுரங்கப் பாதையின் வழியாகவே செல்ல வேண்டும். செங்குத்தான, குறுகலான படிகள் மிகவும் இருட்டாக இருப்பதால் கையில் டார்ச்சுடன் செல்வது நல்லது. பாறைகளில் ஒழுங்கின்றி செதுக்கப்பட்ட படிகளில் ஏறிச் செல்வது சற்று கடினமே. மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும்.

அக்காலத்தில் எதிரிகள் கோட்டைக்குள் நுழையாமலிருக்க, இச்சுரங்கத்தின் வெளிவாயிலில் இரும்பும், கரியும் கலந்த ஒருவகை கலவையைத் திணித்து, நெருப்பு பற்றவைத்து விடுவார்கள். அக்கலவை உருகி வழியை அடைத்துக்கொள்ளும். அச்சுரங்கப் பாதையின் நீளம் 150 அடி. மேலே சென்றால் கோட்டை இடிந்து மிகவும் சிதிலமான நிலையில் உள்ளது. கோட்டையின் உச்சியில் ஒரு  பீரங்கி வைக்கப்பட்டுள்லது. அங்கிருந்து ஔரங்காபாத் நகரின் முழு அழகும், அமைப்பும் பிரமிக்க வைக்கிறது. நேரில் சென்று பார்த்து அனுபவித்தாலே உணர முடியும்.

இக்கோட்டையிலிருந்து சில மைல் தூரத்திலுள்ளது ‘குல்தாபாத்’தில் ஔரங்கசீப்பின் சமாதி உள்ளது. ஒரு காலத்தில் வலிமையும், வீரமும், செல்வமும் கொண்டு மாமன்னனாக ஆட்சி செய்த ஔரங்கசீப் தன் சமாதி மிக மிக எளிமையாக இருக்க வேண்டுமென்றும், தானே தன் கையால் தைத்த துணித் தொப்பிகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் ஒரு ஏழையின் சமாதியைப் போன்று உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதைப் போன்றே மிக அமைதியாகவும், எளிமையாகவும் காட்சி தருகிறஹ்டு அவரது சமாதி.

எல்லோராவுக்கு அருகிலுள்ள கிருஷ்ணெஷ்வர் ஆலயம், பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களுள் ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் ராணி அகல்யா பாய் மற்றும் அவர் மாமியார் கௌதம் பாய் ஆகியோரால் கட்டப்பட்டது. இதன் அருகிலுள்ள ‘லக்க்ஷ விநாயகர்’ ஆலயம், மகாராஷ்டிராவின் மிக முக்கிய 27 விநாயகத் தலங்க்களுள் ஒன்று.

ஔரங்காபாத்தில் ‘ஹிம்ரூ’ என்ற முறையில் பருத்தியும், பட்டும் இணைந்து பலதரப்பட்ட வண்ணங்களிலும், டிசைங்களிலும் நெய்யப்படும் சால்வைகளும், ரவிக்கைத் துணிகளும் மிகப் பிரசித்தமானவை. அழகின் சிகரமான அஜந்தாவும், எழிலின் எல்லையான எல்லோராலும் கண்டிப்பாக ஒருமுறை காண வேண்டிய இடங்கள்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக