Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

பிஸிபேளாபாத்

தினமலர்-மங்கையர் மலர் 1993 இதழில் வெளியானது



பெயரைப் பார்த்ததும் பயந்து விடாதீர்கள். இது சாம்பார் சாதம்தான்.
அரைப்படி பச்சை அரிசியை நிறைய தண்ணீர் சேர்த்து நன்கு குழைய குக்கரில் வேகவிடவும். கால்படி துவரம் பருப்பை தனியாக வேகவிடவும்.
தேவையான அளவு காலிப்ளவர், பீன்ஸ், கோஸ், கேரட், பெரிய வெங்காயம் இவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, பட்டாணியை உரித்துப் போட்டு எல்லாவற்றையும் 5 ஸ்பூன் டால்டாவில் சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிது வதக்கவும். (காய்கறித் துண்டுகள் அரைப்படி அளவு தேவை).
ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை வெந்நீரில் நனைத்து வைக்கவும்.
குக்கரிலிருந்து சாதத்தை எடுத்து அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, வதக்கிய காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, வெந்த துவரம் பருப்பையும் கொட்டி நன்கு கொதிக்கவிடவும்.
சிறு துண்டு பெருங்காயம், 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 4 ஸ்பூன் கடலைப் பருப்பு, 4 ஸ்பூன் தனியா, 15 மிளகாய் வற்றல் இவற்றை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்து பொடி செய்யவும்.
ஒரு மூடி தேங்காயை பூப்போல துருவி, நன்கு சிவக்க வறுக்கவும்.
சாதம் புளி வாசனை போக நன்கு கொதித்ததும், மேலே செய்த பொடி, வறுத்த தேங்காயைப் போட்டு சேர்த்து கொதிக்க விடவும்.
இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, சிறுதுண்டு பட்டை, சிறிது ஜாதிக்காய் இவற்றை எண்ணை விடாமல் சூடுவர வறுத்து பொடி செய்து போடவும்.
5 அல்லது 6 முந்திரிப் பருப்புகளை சிறு துண்டாக்கி, நெய்யில் சிவக்க வறுத்துப் போடவும்.
நான்கு ஸ்பூன் டால்டா, நான்கு ஸ்பூன் நெய்யில் இரண்டு ஸ்பூன் கடுகு, 4, 5 பச்சை மிளகாய்களை தாளிக்கவும்.
 கொத்துமல்லி, கருவேப்பிலையை கிள்ளிப் போட்டு நன்கு கலக்கவும்.
பிஸிபேளாபாத் நன்கு தளர இருக்கவேண்டும். ஆறினால் கெட்டியாகி விடும்.
இதனை வெங்காயம் சேர்க்காமலும் செய்யலாம். தினம் ஒரே மாதிரியான சாம்பார் சாதத்திற்கு பதில் இந்த ‘பிஸிபேளாபாத்’ வித்தியாசமான சுவையுள்ள சாம்பார் சாதம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக