Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

நண்பரின் குழந்தை


மங்கையர் மலர் 1995 இதழில் வெளியானது




அன்று ஞாயிற்றுக் கிழமை, மாலை ஆறு மணி. அதிசயமாகத் தொலைக் காட்சி அன்று ஒளிபரப்பிய ஒரு நல்ல திரைப் படத்தில் ஆழ்ந்து, ரசித்துக் கொண்டிருந்த எங்களை, என் கணவரின் அலுவலக நண்பர் குடும்பத்தின் வருகை சற்று எரிச்சல் படுத்தினாலும், புன் சிரிப்போடு வரவேற்றோம். சாதாரணமாகப் பலர் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில்தான் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றும் நாங்கள் திரைப்படத்தில் ஒரு கண்ணும், நண்பரின் பேச்சில் ஒரு காதுமாக இருந்தோம். அவருடைய ஆறு வயதுக் குழந்தை ரொம்ப விஷமம் போலும். அந்தக் குழந்தை மெதுவாக என் மகனின் படிக்கும் அறைக்குள் செல்ல அதன் கண்ணில் பட்டது அவனது ரிகார்ட் நோட்டும், ஸ்கெட்ச் பேனாவும்! ரொம்ப குஷியாக, “ஐ! நான் படம் வரையப் போகிறேனே!” என்றபடி வெளியில் வந்த குழந்தையின் கைகளில் தன் நோட்டையும், ஸ்கெட்ச் பேனாவையும் பார்த்த என் 11-ம் வகுப்பு படிக்கும் மகனின் முகத்தில் வந்ததே கோபம். அதனைக் கவனித்த நான் சட்டென்று நோட்டை வாங்கி விட்டேன். ஸ்கெட்ச் பேனாவை கொடுக்க மறுத்து விட்டது. அவரோ,”அண்ணாவிடம் பேப்பர் வாங்கி படம் வரை!” என்கிறார். சாதாரணமாக என் மகன் வீட்டிற்குள்ளேயே தன் பொருட்களை யாரும் தொட விடமாட்டான். அவன் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. என் கணவர் வேறு நேரம் தெரியாமல், ‘இந்தா பேப்பர்; எங்கே படம் போடு பார்க்கலாம்’ என்று சொல்ல, அந்தக் குழந்தை ஒவ்வொரு பேனாவாக எடுத்து, தன் பலம் முழுக்க வைத்து அழுத்தி எழுத, பேப்பர் கிழிந்து தரையெல்லாம் கலர்க் கோடு!

என் மகனோ பின்னால் நின்றவாறு, ‘அந்தப் பேனாவை நீ வாங்கித் தருகிறாயா? நான் போய்ப் பிடுங்கட்டுமா? என்று என்னைப் பிளாக் மெயில் செய்ய, நான் மெதுவாக, ‘இங்கே பார், அண்ணாவுக்கு டிராயிங் போடணுமாம், கொடுப்பா’ என்று கேட்க, என்னை ஒரு விரோதப் பார்வை பார்த்துக் கொண்டே பேனாவைக் கொடுத்தது!

அடுத்து சுற்றிலும் நோட்டம் விட்ட குழந்தையின் கண்ணில் பட்ட்து ஷோ கேஸ்! ஒரு ஸ்டூலில் ஏறி, ஒவ்வொரு பொம்மையாகக் கீழே எடுத்து அடுக்க ஆரம்பித்து விட்ட்து. நண்பரோ, ‘அதெல்லாம் தொடாதே’ என்று சொல்லாமல், ‘உடைக்காமல் விளையாடு’ என்கிறார். எங்கள் வீட்டு ஷோ கேஸில் பாதி பொம்மைகள் தம் கையாலேயே செய்த பேப்பர், அட்டை பொம்மைகள். என் பெண்ணிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. எல்லாவற்றையும் கிடுகிடுவென்று எடுத்துத் திரும்ப ஷோகேஸிலேயே வைத்து கதவை மூடியவள் திரும்பு முன், அந்தக் குழந்தை அவளுடைய டிரெஸ்ஸிங் டேபிள் முன்! தானாகவே கண்ணாடி முன் நின்று பவுடர், லிப்ஸ்டிக் எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டு, என் பெண்ணின் பெரு முயற்சியால் வெளியில் வந்தது!

வீட்டைச் சுற்றிப் பார்த்தவர்களோடு கூட வந்த குழந்தை, அங்கு புதியதாக நட்டிருந்த செடிகளை எல்லாம் பிய்த்துப்போட, என் மகன் ‘உர்’ரென்ற முகத்துடன் பின்னால் எல்லாவற்றையும்  நட்டுக் கொண்டே வந்தான்!

நண்பரும் அவர் மனைவியும் ரொம்பப் பெருமையாக, ‘அவன் ரொம்ப விஷமம். வீட்டில் ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டான். சமாளிக்கவே முடியாது’ (பின்னாலிருந்து என் பிள்ளையின் கமெண்ட் – ‘இவர்களால் சமாளிக்க முடியாமல், நாமும் கொஞ்சம் கஷ்டப்பட இங்கு அழைத்து வந்து விட்டார்கள் போலிருக்கு!’). ஒரு வழியாக இரண்டு மணி நேரம் எங்கள் எல்லார் கவனத்தையும் தன் மேல் திருப்பிக் கொண்ட அந்த வி.ஐ.பி. கிளம்பினார்! எங்களுக்கு அப்பாடா என்று இருந்தது!


குழந்தைகள் சுட்டியாகவும், துறுதுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருக்க வேண்டியதுதான். அடுத்தவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும்போது அந்தக் குழந்தை விஷமம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர் கடமையன்றோ? பெற்றோர்கள் தம் குழந்தைகளை நண்பர், உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும்போதே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து அழைத்து வர வேண்டும். அது செய்யும் விஷமத்தில் மகிழ்ந்து, ‘எங்கள் குழந்தை அப்படித்தான்’ என்று பெருமையாக அந்தக் குழந்தைகள் எதிரிலேயே கூறுவது, அந்தக் குழந்தைகளின் விஷமத்திற்கு ‘லைசென்ஸ்’ கொடுத்தது போலல்லவா ஆகிறது? இக்காலக் குழந்தைகள் புத்திசாலிகள். நாம் சொன்னால் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். இத்தனை விஷமம் செய்த அந்தக் குழந்தை தன் பெயர், வகுப்பு, பள்ளி பெயர் எதுவும் சொல்ல மறுத்து விட்டது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக