Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

பார்வதி மலையில் பரமேஸ்வரன்

குமுதம் பக்தி அக்டோபர் 2004 இதழில் வெளியானது





மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று புனே.

தொழில், வர்த்தகம், கணினி துறைகளில் முன்னிலை வகிப்பதுடன் பல புண்ணியத் தலங்களையும் தன்னுள் கொண்ட்து. இந்த ஆலயங்களுக்கு சமீபத்தில் ஒரு யாத்திரை சென்று வந்தோம்.

இவ்வூருக்குப் பெருமை சேர்க்கும் முதல் தெய்வமான விநாயகப் பெருமான், புனேயின் முக்கியக் கடைத் தெருவான லட்சுமி ரோடில் கோயில் கொண்டுள்ளார். விதவிதமான நகைகளுடன், சொக்க வைக்கும் அழகுடன், ஐந்தடிக்கு மேல் உயரமாக சப்பணமிட்ட கால்களுடன், வித்தியாசமான சுருண்ட தும்பிக்கையுடன் அருட்காட்சி தரும் சிவமைந்தனை வணங்கி எங்கள் யாத்திரையைத் தொடங்கினோம்.

இவருக்கு அடுத்தபடி எங்கள் கண்ணையும், மனதையும் கொள்ளை கொண்டவர், சரஸ்பாகில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக். சரஸ்பாக் ஓர் அழகிய தோட்டம். அங்குள்ள ஏரியை ஒட்டி, நானா சாகேப் பேஷ்வாவால் உருவாக்கப்பட்டது. 25,000 சதுர அடியில், 68 வளைவுகளையும், தூண்களையும் கொண்டு மனதை மயக்கும் அழகிய சுற்றுச் சூழலில் உருவாக்கப்பட்ட இம்மண்டபம், அந்நாளில் பேஷ்வாக்களின் ரகசியப் பேச்சிற்கு ஏற்ற இடமாக விளங்கியது. அந்த வெற்றிடத்தை தெய்வீகமாக ஆக்க விரும்பிய ஸவாய் மாதவ்ராவ் பேஷ்வா, தான் பூஜித்து வந்த சித்தி விநாயகர் சிலையை 1784ம் ஆண்டு, அம்மண்டப நடுவில் ஒரு கர்ப்பக் கிரஹத்தை அமைத்து அதில் பிரதிஷ்டை செய்தார்.

அடுத்து நாங்கள் சென்ற இடம் சதுஸ்ருங்கி மாதா ஆலயம். புனே நகரின் ஆஸ்தான, பிரத்யட்ச தெய்வமாக விளங்கும் இந்த தேவி மஹா காளி, மஹா சரஸ்வதி, மஹாலட்சுமி, அம்பரேஸ்வரி என்று தேவிகளின் உருவமாகப் போற்றப்படுகிறாள். மிக சக்தி வாய்ந்த தேவி. வரப்ரசாதி. தேவியின் ஆலயம், புனேயின் வட மேற்கில் மலைச் சரிவில் அமைந்துள்ளது. 90 அடி உயரமும், 125 அடி அகலமும் கொண்ட இவ்வாலயம் நன்கு பராமரிக்கப்படுகிறது. செல்லும் பாதையும் சிறப்பாக உள்ளது.

அடுத்த்தாக நாங்கள் தரிசித்த தலம் ‘வணி’.

புனேயில் வாழ்ந்து வந்த பேஷ்வாக்களின் தனாதிகாரியான துர்லப்தாஸ் சேட், நாசிக் அருகிலுள்ள ‘வணி’ என்ற ஊரில் கோயில் கொண்டிருந்த சதுஸ்ருங்கி தேவியின் பரம பக்தர். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பௌர்ணமி அன்று வணி சென்று தேவியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதானபின் போக முடியாததால் மனம் வருந்தி தேவியைத் துதிக்க, தேவி அவரது கனவில் தோன்றி, ‘நான் சதுஸ்ருங்கி தேவியாக வடமேற்கிலுள்ள மலையில் உனக்காகக் காத்திருக்கிறேன்’ என்று தன் ரூபத்தையும் காட்டினாள். உடன் துர்லப்தாஸ் தேடிச் சென்று அவ்விடத்தைப் பார்க்க, அங்கு தேவியின் சுயம்பு ரூபம் காணப் பெற்று பரவசமடைந்தார். பக்திப் பரவசத்தில் தன்னை மறந்த துர்லப்தாஸ், அவ்விடத்திலேயே அன்னைக்கு ஆலயம் நிர்மாணித்தார். அன்னையின் அருட் சக்தியால் கவரப்பட்டு இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். அன்னை, பலருக்கு குல தேவதையாக விளங்குகிறாள். இங்கு ஐப்பசி மாத நவராத்திரி விழா மிக விமரிசையாகக்  கொண்டாடப்ப்டுகிறது. ஒன்பது நாட்களும் அம்மனின் அலங்காரம் மெய்மறக்கச் செய்யும். பளபளவென்ற வெள்ளித் திருவாசி சுற்றிலும் அணி செய்ய, உருண்டையான முகத்துடன் அழகுற காட்சி தரும் அன்னையை விட்டு நகர  மனமின்றி, ஏக்கத்துடனேயே அந்தத் தலத்தை விட்டுப் புறப்பட்டோம்.

புனேயில் அமைந்துள்ள ‘பர்வதி’ எனப்படும், பார்வதி மலையில் அற்புதமான ஓர் ஆலயம் உள்ளது. எங்களுடைய அடுத்த தரிசனத் தலம் இதுதான். இறைவன் தேவதேவேசுவரர்; தேவி பார்வதி, இவர்களோடு, கணபதி, கார்த்திக் சுவாமி, மஹாவிஷ்ணு என அனைத்து தெய்வங்களும் ஆரோகணித்து காட்சி தரும் இம்மலை, புனேயின் தெற்கே அமைந்துள்ளது. இங்குள்ள பார்வதி தேவி ஆலயம், 1749ல் நானாசாகேப் பேஷ்வாவினால் கட்டப்பட்டது. அவரது அன்னை காசிபாய் வலக்கால் சுகவீனம் அடைந்து கஷ்டப்பட்டபோது, இங்குள்ள பர்வதி தேவியைத் தரிசிக்குமாறு உத்தரவு கிடைத்ததாம். அதன்படி அவர் ஆலயம் சென்று வழிபட கால் சரியாகி விட்டது. உடனே பேஷ்வா ஆலயம் கட்டி வழிபட்டார்.

இம்மலை 2,100 அடி உயரம், 103 படிகள் கொண்டது. மகாராஷ்டிராவில் கரு நிறக் கல்லால் கட்டப்பட்ட ஒரே மலைக் கோயில் இது. சிறியதாயிருந்த இதன் வாயில் 1984ல் பெரிய அழகிய வாயிலாகக் கட்டப்பட்டது. உள்ளே நுழைந்ததும், பிரமிப்பு எங்கள் மனதைக் கட்டிப் போட்டது. மொகலாய, ராஜஸ்தானிய கட்டட அமைப்புகளின் கலவையாக மராட்டிய முறையில் கட்டப்பட்டது. ஒரே கல்லினாலான அழகிய நந்திதேவர், சிற்பக் கலையின் எடுத்துக் காட்டாக விளங்குகிறார். மார்ச் 22, மற்றும் செப்டம்பர் 23 தேதிகளில் இரவும், பகலும் சரியாக 12 மணி நேரம் இருக்கும். இந்த நாட்களில் சூரிய ஒளி நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே புகுந்து சிவலிங்கத்தின் மேல் விழுந்து பிரகாசிக்கும். ஜோதிட, கணித, சில்ப சாஸ்திரப்படி கட்டப்பட்ட அதிசயக் கோயில்.

நுழைவாயில், பேஷ்வா ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வந்த வெண்ணிற பளிங்குக் கல்லால் ஆன ‘சதரேதில் கணபதி’ அழகுற காட்சி தருகிறார். கரு நிறக் கல்லினால் கட்டப்பட்ட கர்ப்பக் கிரகத்தில் ‘கிருஷ்ண ரக்த’ வர்ணத்தினாலான சிவலிங்கம் காட்சி தருகிறது. சிவபெருமான் உருவச் சிலையின் மடியில் இருபக்கமும் பஞ்சலோகத்தாலான கணபதியும், பார்வதியும் அமர்ந்துள்ள காட்சி மிக அழகாக உள்ளது. இந்த மகாதேவன், சதுர்புஜதாரியாகக் காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் பஞ்சாயதன பூஜை தினசரி உண்டு. இந்த தெய்வம் பலரின் குல தெய்வமாகப் போற்றப்படுகிறது.

இம்மலையில் உள்ள கரு நிறக் கல்லினாலான கார்த்திகேயர் சிலை, கண்ணைக் கவருகிறது. மயிலின் இரு புறமும் கால்களைத் தொங்கவிட்டபடி தம் பக்தர்களின் துயர்களை வேல் கொண்டு அழிக்கத் தயாரான நிலையில் முருகன் அமைந்துள்ளது மிக அற்புதக் காட்சியாகும். மனம் சிலிர்க்க, கண்களில் நீர் பனிக்க, கார்த்திகேயரின் திவ்ய தரிசனத்தைக் கண்டு களித்தோம். மகாராஷ்டிராவில் முருகன் பிரம்மசாரியாகப் போற்றப்படுவதால், பெண்கள் கார்த்திகை மாத பௌர்ணமி அன்று மட்டுமே கார்த்திகேய சுவாமியை தரிசிக்க முடியும்.

கார்த்திகேயர் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள விஷ்ணு நாராயண சன்னதி மிக விசேஷமானது. கழுத்தில் வைஜயந்தி மாலை, பூணூல் அணிந்து சங்கு, சக்ர, கதாதாரியாக லக்ஷ்மி யந்திரத்தின் மேல் நின்று கருணையுடன் காட்சி தரும் திருமால், எங்களை நகர விடாமல் தடுத்தாட் கொண்டார்; மனதைக் கொள்ளை கொண்டார்.

எங்களுடைய அடுத்த தரிசனத் தலம் சிவாஜி நகர். அங்கே உள்ள பாதாளேசுவரர் குகைக் கோயில். பாறையைக் குடைந்து வடிவமைக்கப் பட்டது. இது கி.பி. 800ல், ராஷ்ட்ரகூடர்களால் கட்டப்பட்டது. வட்ட வடிவத் தூண்கள் தாங்கிய நந்தி மண்டபத்தினுள், குகை போன்ற அமைப்பில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருவது அற்புதமாக உள்ளது. ஒரே பாறையில் செதுக்கப்பட்டு, தூண்களுடன் காட்சி அளிக்கும் நந்தி மண்டபம் காணற்கரிய காட்சி.


இவை தவிர இங்கு லக்ஷ்மி ரோடில் அமைந்துள்ள தத்தர் ஆலயம் வடக்கு பார்த்த நிலையில் காட்சி அளிக்கிறது. வடக்கு, குபேரனுக்குரிய திசை என்பதால், இவரை வணங்குவோருக்கு செல்வம் பெருகும் எனக் கூறப்படுகிறது. புனேயின் புகழ் பெற்ற, சக்தி மிக்க, இவ்வாலயங்களை தரிசிக்க குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தேவை. ஆனால், அந்த இரண்டு  நாட்களும் எங்களுக்கு இரண்டு விநாடிகளாகக் கடந்து விட்டதுதான் நிறைவான உண்மை. ஆனாலும் மீண்டும் மீண்டும் இக்கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அடிக்கடி எழுவதை எங்களால் தவிர்க்கவே முடியவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக