Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

Doop Gift

டூப் கிஃப்ட்


அவள் விகடன் அக்டோபர் 10, 2003 இதழில் வெளியானது
ஏமாற்றுவதில் பலவகை உண்டு. அதில் ஒன்று வாக்கு சாதுர்யத்தால் நம்மை மயக்கி, நமக்குத் தேவையேயில்லாத ஒன்றை நம் தலையில் கட்டி, லாபம் அடைவது! இது எந்னுடைய ஏமாந்த அனுபவம்.


ஒரு நாள் போனில் பேசிய ஒரு பெண்மணி, நான் ஸ்டிக் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி, தான் கேட்கும் இரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னால் பரிசு உண்டு என்று ஆசை காட்டினார். அவர் கேட்ட சுலபமான இரு கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்ல, அவரும் அன்று மாலை பரிசு வாங்க வரும்படி அழைத்தார். ஒரு ஓட்டலின் பெயர் சொல்லி அங்கு பரிசளிப்பு விழா நடப்பதாகச் சொல்லி, வருபவர்களின் எண்ணிக்கைக்கு இருக்கை எண்களையும் சொன்னார். எனக்கோ ஒரே ஆச்சரியம்! மகிழ்ச்சி பிடிபடவில்லை! உடனே அலுவலகத்திலிருக்கும் என் கணவருக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கும் போன் செய்து சீக்கிரம் வரச் சொன்னேன்! அவர்கள் சொன்ன நேரத்துக்கு அந்த ஓட்டலில் நாங்கள் ஆஜர்! ஆனால் மேடையும் இல்லை! பரிசுகளும் இல்லை! பரிசளிப்பு விழா, இருக்கை எண் அத்தனையும் பச்சைப் பொய்! எங்களை அழைத்துச் சென்ற பெண், அந்நிறுவன தயாரிப்புகள் பற்றிக் கூறி, 4000 ரூபாய்க்கு சாமான்கள் வாங்கிக் கொண்டு, 30 பேர் விலாசம் தரும்படியும் அதில் ஒவ்வொருவர் உறுப்பினராகச் சேரும்போதும் 400 ரூபாய் எங்களுக்குக் கிடைக்கும் என்றூ சொல்லி அவளின் மார்க்கெட்டிங் திறமையைக் காட்ட, நான் தடுத்தும் கேட்காத என் கணவர் உறுப்பினராக சேர்வதாகக் கூறி விட்டார். நாங்கள் பணமோ, செக்கோ எடுத்துச் செல்லாததால், அவர்கள் கூடவே எங்கள் வீட்டுக்கு வந்து பணம் வாங்கிச் சென்றனர். நாங்கள் குறித்துக் கொடுத்த சாமான்கள் மறு நாள் டெலிவரி செய்வதாகக் கூறினார்கள். ஆயிற்று! ஒரு வாரம் ஆகியும் சாமான்கள் கிடைக்கவில்லை. நான் என் கணவரைக் கோபிக்க, அவர் அந்த கம்பெனிக்கு போன் செய்து விசாரிக்க, எங்களையே வந்து வாங்கிச் செல்லும்படி சொன்னார்கள். அங்கு போய்ப் பார்த்தால், நாங்கள் கேட்ட சாமான் எதுவும் இல்லாமல், தேவையில்லாத சாமான்களை வாங்கி வந்தோம். அவற்றின் தரமோ படு மட்டம்! சரி! நாம் கொடுத்த 30 விலாசதார்களில் யாராவது 4 பேர் கூட ஏமாந்திருக்க மாட்டார்களா? ரூபாய் வரும் என்று எதிர்பார்த்ததுதான் மிச்சம்! இதே போன்று மீண்டும் ஒரு நிறுவனத்திடமிருந்து போன் வர, இம்முறை வயதான என் மாமியார் முதற்கொண்டு அழைத்துச் சென்றோம். (இவர்கள் டிஃபன், காபியெல்லாம் கூட கொடுப்பதாகச் சொன்னார்கள்). அதே போன்று இது ‘ஹாலிடே ஹோமுக்கு’ 20,000 ரூபாய் பணம் கட்டும்படி சொல்லி மெஸ்மரைஸ்! தப்பித்தோம், பிழைத்தோமென்று (ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் கூட கொடுக்கவில்லை) அவர்கள் கொடுத்த (25 ரூபாய் கூட பெறாத) ஒரு கண்ணாடி பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டோம்! இந்நகரில் பகற் கொள்ளை போலும் இது! இப்பவும் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு கம்பெனி போங்கால் வருவதுண்டு. ‘போதும் உங்கள் ஏமாற்று வேலை’ என்று சொல்லி ‘பட்’டென்று போனை வைத்து விடுவேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக