Thanjai

Thanjai

வியாழன், 15 ஜனவரி, 2015

ஆஹா...தகவல் 50...




ஜனவரி 15,  2015  மங்கையர் மலர் இதழில் வெளியான என் குறிப்பு....




மங்கையர் மலர் 16-31, 2015 இதழில் வெளியானது

நம் நாட்டு பணத்திற்கு ‘ரூபாய்’ என்று பெயர் வந்ததற்கு அழகான காரணம் ஒன்று உள்ளது. ‘ரூபையா’ என்பதற்கு ‘அழகு’ என்று பொருள். 1542ம் ஆண்டு டெல்லியின் சுல்தானாகிய ஷேர்ஷா சூரி (Shersha Suri) 178 கிராமில் வெள்ளியில் ஒரு நாணயம் செய்யச் சொன்னார். அதைக் கையில் வாண்கியவர் அதன் அழகில் மயங்கி ‘ரூபையா’ என்றார். அதுவே நம் நாட்டு நாணயங்களின் பெயராக ‘ரூபாய்’ ஆயிற்று.


வியாழன், 8 ஜனவரி, 2015

கெய்லாங் சிவன்

தீபம் ஜனவரி 20, 2015 இதழில் வெளியானது










சிங்கப்பூர் ஒரு அழகிய நகரம். தமிழ், ஆட்சி மொழியில் ஒன்றாக இருப்பதால் இங்கு தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். 1800 களில் இங்கு வாழ்க்கை தேடிச் சென்ற மக்கள் உருவாக்கியவையே இங்குள்ள இந்து தெய்வங்களுக்கான ஆலயங்கள். சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில்களில் சிறந்த உற்சவங்களும், திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.




இந்தியக் கட்டடக் கலைஞர்களால் தென், வட இந்திய ஆலய அமைப்புகளை இணைத்து வித்தியாசமாக, தனித்துவமிக்கதாக இவ்வாலயம் எழுப்பப் பட்டுள்ளது. இளஞ்சிவப்பும், வெளிறிய பழுப்பு நிறமும் இணைந்த வண்ணத்தில், மூன்று கோபுரங்களுடன், எண்கோண வடிவ கலையழகுடன் பத்து அடிக்கு மேற்பட்ட உயரத்தில் காட்சி தருகிறார் சிவபெருமான்.




           அலங்கார வளைவுடன் காணப்படும் நுழை வாயிலில் இருந்து 21 படிகள் ஏறிச் சென்றால் விஸ்தாரமான பெரிய மண்டபம். அழகிய தெய்வீக சிற்பங்க்களைக் கொண்ட பெரிய தூண்கள். மேல் விதானக் கோலங்கள் கண்கவர் காட்சி. தகதகவெனப் பிரகாசிக்கும் கொடி மரத்துக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்திகேஸ்வரரைத் தொழுது, முன்னே சென்றால் ஸ்ரீ விஸ்வநாதரின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கி, சிவபெருமானைத் தொழுவோம். 





சற்று மேலே பார்வையைச் செலுத்த, ஆஹா... எல்லா ஆலயங்களிலும் சுற்றுப் பிரகாரத்தில் காட்சி தரும் 63 நாயன்மார்களும் எண்கோண மண்டப விமானத்தில், வண்ணமயமாய்க் கைகூப்பித் தொழுதபடி நின்று இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஈசனின் சன்னதிக்கு நேர் மேலே நடராஜ தரிசனம்.


 
விஸ்வநாதப்பெருமான் வெள்ளித் திருவாசியுடன் காட்சி தருகிறார். ஐயனின் இடப்பக்கம் காட்சி தரும் குமரப் பெருமானை வணங்கி, சன்னிதியை சுற்றி வரும்போது மோனத்துடன் தரிசனம் தரும் தட்சிணா மூர்த்தியையும், சுற்றுத் தெய்வங்களையும் வணங்கி அம்மனின் சன்னிதிக்கு வருவோம். இரண்டடி உயர விசாலாட்சி அன்னை சிந்தையைக் கவரும் வண்ணம் தரிசனம் தருகிறாள்.



 ஆலயத்தின் தூய்மையும், தெய்வங்களின் சாந்நித்தியமும் தெய்வீகமான அமைதியும், மனதுக்கு புத்துணர்வைக் கொடுக்கின்றன. நவக்கிரக சன்னிதியையும், நடராஜ சபையையும் வணங்கி கீழே வருவோம்.




கீழே வலப்பக்கம் உள்ள நர்மதேஸ்வரர் என்ற பாணலிங்கம், ஆத்ம லிங்கமாகப் போற்றப்படுகிறது. இந்த லிங்கத்துக்கு ஜாதி, மத பேதமின்றி யாரும் அபிஷேகம், வஸ்திரம், புஷ்பம் சாத்தி அலங்காரம், தீபாராதனை செய்யலாம். செய்யும் முறை அங்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கான பால், சந்தனம், விபூதி, கங்கை நீர், வில்வம் போன்றவை ஆலயத்தில் கிடைக்கிறது. நாமே நம் கையால் அபிஷேகம் செய்வது மன சாந்தியைத் தருகிறது. திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு நீண்ட வரிசையில் நின்றே அபிஷேகம் செய்ய முடியுமாம்.




கீழுள்ள சுற்றுச் சுவர்களில் ஈசனின் தாண்டவக் கோலங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. கீழ்ப் பிரகாரத்தின் இடப்பக்கம் சூரிய பகவான், சந்திரன், சனீஸ்வரர், காலபைரவரின் சன்னிதிகள் உள்ளன.



           இங்கு நவராத்திரி, வசந்த நவராத்திரி, சிவராத்திரி, ஸ்கந்த ச்ஷ்டி, திருவாதிரை போன்ற உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோத்சவம் நடத்தப்படுகிறது.       மேலே ஏறிச் செல்ல முடியாதவர்களுக்காக லிஃப்ட் வசதி உள்ளது. 

இவ்வாலயத்தில் இலவச தேவார வகுப்புகளும், இலவச ஹோமியோபதி மருத்துவமும் செய்யப்படுகிறது. கல்யாணம், காது குத்து, அன்னபிராசனம், சிரார்த்தம் போன்றவைகளும் செய்து வைக்கப் படுகின்றன. ஊழியர்களுக்கான வீடுகளும் ஆலயத்தினுள்ளேயே அமைந்துள்ளது.

ஆலயம் கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2-ல் உள்ளது. பாயா லேபர் ஸ்டே ஷனில் (Paya Laber MRT) இருந்து நடந்து செல்லலாம். சிங்கப்பூர் செல்பவர்கள் அவ்சியம் கண்டு தரிசிக்க வேண்டிய ஆலயம்.


தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை, மாலை 6 மணி முதல் 9 வரை.
ஆத்மலிங்க பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11-45 வரை. மாலை 6.30மணி முதல்8.45 வரை

தொடர்புக்கு: 67434566









திங்கள், 5 ஜனவரி, 2015

ஹேப்பி ஸ்கூலிங்

 











 Displaying என் மகன் மருமகள் பேத்தியுடன் நாங்கள்....jpg
































மங்கையர் மலர் ஜூலை 2012 இதழில் வெளியான என் அனுபவம்...


சென்ற  ஆண்டு  ஜெர்மனியிலுள்ள   என்  மகன்  வீட்டுக்கு சென்றிருந்தேன். அச்சமயம்  என்  பேத்தியைப்  பள்ளியில் முதல் வகுப்பில்  சேர்த்திருந்தார்கள். அது  பற்றி  என் பேத்தியிடம்  பள்ளிக்கு  சென்று  என்ன  செய்ய  வேண்டும், எப்படி  ஆசிரியர்களிடமெல்லாம்  பழக  வேண்டும்  என்று  என் மருமகள்  சொல்லிக்  கொடுத்துக்  கொண்டிருந்தாள்.  


என்  பேத்தியோ  கடந்த  மூன்று  ஆண்டுகளாக  பள்ளி  சென்று வருகிறாள்.  நான்  'அவளுக்குத்தான்  எல்லாம் தெரியுமே.ஏற்கெனவே  பள்ளி  செல்கிறாளே'  என்று கேட்டேன்.  அதற்கு  என்  மகன் 'இங்கல்லாம்  முதல் வகுப்பில் இருந்துதான்   ஸ்கூல்   என்பார்கள்.  அதுவரை  வெறும் கிண்டர்கார்டன்தான்.  அதனால்  அந்த  முதல்  பள்ளி  நாளை திருவிழா  மாதிரி  கொண்டாடுவார்கள்.  நீயும்  பார்க்கலாம் வா.  நம்ம  நாட்டில  எங்களை  அழ  அழ  ஸ்கூல்ல  விட்டுட்டு திரும்பிப்  பார்க்காம  போற  மாதிரி  இங்கல்லாம்  கிடையாது!' என்றான்  வேடிக்கையாக!  


ஆம்!  கிண்டர்கார்டனில் குழந்தையை  சேர்த்துவிட்டு  அந்தக் குழந்தை  பழகி,   அழாமல்  இருக்கும்வரை  எத்தனை  நாட்கள் ஆனாலும்  அம்மாவும்  கூடவே  இருக்கலாமாம்! நிறைமாதமாக  இருந்த  என்  மருமகளோ 'அந்த  ஃ பங்க்ஷன் நடக்கும்வரைக்கும்  எனக்கு  வலி  எடுக்காம  இருக்கணுமே' என்று  கடவுளிடம்  வேண்டிக்  கொண்டாள்!


ஒரு  மாதம்  முன்பிலிருந்தே  அந்தக்  குழந்தையை   புதிய பள்ளி  செல்ல  தயார்படுத்துகிறார்கள்..  கிண்டர்கார்டனில் கட்டுப்பாடு  அதிகம்  இல்லை.  விளையாட்டுதான்  அதிகம். ஆனால்  பள்ளி  அப்படி  இல்லை  என்பதை  எடுத்துச் சொல்லிப்  புரிய  வைக்கிறார்கள். அந்தக்  குழந்தையை முன்பே  அவர்களின்  வகுப்புக்கு  அழைத்துச்  சென்று   ஒரு ஆர்வத்தையும்,  பிடிப்பையும்  உண்டாக்குகிறார்கள். புதிய பள்ளிக்கென  அழகான  பை,  பேனா.  பென்சில்,  நோட்டு, புத்தகங்கள்  அனைத்தும்  பள்ளியின்  அறிவுரைப்படியே வாங்க  வேண்டுமாம்.   பெரும்பாலும்  அரசுப் பள்ளிகளில்தான்  நல்ல  கல்வித்தரம்  இருக்கும்  என்பதால் பணக்காரர்கள்  கூட  அவற்றில்தான்  சேர்ப்பார்களாம். (நம்ம நாட்டில்  அதற்கு  நேர்மாறாச்சே!)

பள்ளி  ஆரம்பிக்கும்  நாளுக்கு  15   நாட்கள்  முன்பாகவே அந்தக்  குழந்தைகளுக்கு  வாழ்த்து  சொல்லும்விதமாக   ஒரு பெரிய  கூம்பு   வடிவ   கி ஃ ப்ட்   பேக்கில்    (இவை கடைகளில்  ரெடிமேடாக  கிடைக்கிறது)  நிறைய  பரிசுப் பொருள்களைப்    (பேனா,  பென்சில் , ஸ்டிக்கர், கலர்பென்சில்கள்)  போட்டு   மூடி  பெயர்  எழுதி குழந்தைகளுக்குத்  தெரியாமல்   பள்ளிகளில்  கொடுத்துவிட வேண்டுமாம்.  இவற்றை  பள்ளி  முதல்  நாளன்று குழந்தைகளுக்குக்  கொடுப்பார்களாம்.  பள்ளி  வாழ்க்கையை இனிதே  தொடங்க  ஒரு  உற்சாகப்  பரிசு  இது.  அத்துடன் இந்த விழாவில்  கலந்து  கொள்ள  பெற்றோரால்   அழைக்கப்படும் உறவினர்களும்,  நண்பர்களும்  பரிசளித்து  குழந்தையை வாழ்த்துகிறார்கள்! 


 Displaying பரிசுகளின் அணிவகுப்பு!.JPG


என்  மருமகள்   தனக்கு  டெலிவரி  ஆகிவிட்டால் வரமுடியாதே  என்று  என்னையும்,  என்  கணவரையும் அழைத்துச்  சென்று  பள்ளியையும்,  என்  பேத்தியின் ஆசிரியரையும்  அறிமுகப்  படுத்தி   விழா  எங்கு  நடக்கும், என்ன  முறை  என்பதெல்லாம்  சொல்லிக்  கொடுத்தாள். நானும்  மிக  ஆவலாக  அந்த  விழாவை  எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!

அந்த  ஸ்பெஷல்  நாளன்று   எல்லாரும்  காலை  எட்டு மணிக்கு  பள்ளிக்கு  சென்றோம்.  என்  மருமகளுக்கு அதுவரை வலி  எடுக்காதது  அவளுக்கு  பரம  சந்தோஷம்! நம் நாட்டுப்  புடவையில்  சென்ற  என்னை  அத்தனை  பேரும் அதிசயமாய்ப்  பார்த்தார்கள்!  குழந்தைகளை  அந்தந்த  வகுப்பு ஆசிரியர்கள்  வரிசையாக  அழைத்துச்  சென்றனர். பெற்றோர்களுக்கான  இருக்கைகளில்  நாங்கள் அமர்ந்தோம்.

 Displaying குழந்தைகளின் கலைநிகழ்ச்சி...JPG


முதலில்  அப்பள்ளியில்  இரண்டாம்,  மூன்றாம்  வகுப்பு படிக்கும் குழந்தைகளால் புதிய குழந்தைகளை வரவேற்குமுகமாக   பாடல்,  நாடகம்,  நடனம்   இவை அழகாக  நடத்தப்  பட்டன.  பின்  முதல்  வகுப்பின்  மூன்று  பிரிவுகளின்  ஆசிரியர்களும்  அந்தந்த  பிரிவு  குழந்தைகளை   மேடையில்  அழைத்து   பெயரைக்  கூறி  அறிமுகப்  படுத்தினார்.  என்  பேத்தி  பெயரை 'ஸோ ஃ பியா   பாலசுப்ரமணியன்'  என்று  (பாலசுப்ரமணியன்  என்  கணவரின்  பெயர்...என்  மகனின் ஸர்நேம்)  நிதானமாக  உச்சரித்தபோது  என்  கணவர்  முகத்தில்  மகிழ்ச்ச்யைப்  பார்க்கணுமே!  

என்  மருமகளோ  அழுதுவிட்டாள். 'நம்  நாட்டில்  பெண்ணை புகுந்த  வீட்டுக்கு  அனுப்பும்போதுதான்  இப்படி  அழுவார்கள். இங்க  பள்ளிக்கு  அனுப்பவே  அழுகையா?'   என்றேன்  நான். என்  மகன்  விளையாட்டாக  'இங்கல்லாம்  குழந்தைகளை முதலில் பள்ளிக்கு  அனுப்பும்போது  அம்மாக்களெல்லாம் அப்படித்தான்  சென்டிமெண்ட்   ஆகிவிடுவார்கள்'  என்றான். (என்  மருமகள்  ரஷ்யப்  பெண்.)  பிறகுதான்  பார்த்தேன்.  பல பெண்களின்  கண்ணில்  கண்ணீர்!  
 
பிறகு  அந்தக்  குழந்தைகளை  வகுப்புக்கு  அழைத்துச்  சென்று சிற்றுணவு  அளித்து  வெளியே  மைதானத்துக்கு  அழைத்து வந்தார்கள்.  அங்கு  ஒவ்வொரு  பிரிவிலும்  பெற்றோர் ஏற்கெனவே  கொடுத்திருந்த  பரிசுப்  பொருளை  அழகாக வைத்திருந்தார்கள்.  குழந்தைகள்  தன்னுடையதை  எடுத்துக் கொள்ள  வேண்டும்.  மறுநாள்  முதல்  பள்ளி  ஆரம்பம்.   

அதன்பின்  இரண்டு  நாளில்  எனக்கு  அழகிய  சின்னப்  பூவாய் ' அனிதா ' என்ற   இன்னொரு  பேத்தி  பிறந்தாள்.  ஒரு  புதிய, நாம்  அறியாத  ஒரு  நிகழ்ச்சியைக்  கண்டு  களித்த சந்தோஷம்  எங்களுக்கு!  ஒவ்வொரு சின்ன  விஷயத்தையும் எவ்வளவு  ரசித்து  அனுபவிக்கிறார்கள்  அந்த  நாட்டில்  !

Displaying சந்தோஷ  ஸோ ஃ பியா!.JPG Displaying என் பேத்தியுடன் நான்.JPG