Thanjai

Thanjai

செவ்வாய், 9 ஜூன், 2015

பஞ்ச வரதர்



20.6 2015 தீபம் இதழில் 'காஞ்சிபுரம் மாவட்ட ஆலயங்கள்' பகுதியில் பிரசுரமான உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலய தரிசனக் கட்டுரை..


அலங்காரப் பிரியரான பெருமாள் சுந்தர வரதனாக நின்றும், இருந்தும், கிடந்தும் கோயில் கொண்ட தலம் உத்திரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள் ஆலயம். இங்கு மூன்று தளங்களில் பெருமாள் காட்சி அளிக்கிறார். பஞ்ச பாண்டவர்களுக்கு தனித் தனியாகக் காட்சி தந்த பெருமாள் இங்கு 'பஞ்சவரதர்' என்று போற்றப்படுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அரசாண்ட நந்திவர்ம பல்லவனால் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் பல்லவர்களின் சிற்பத் திறனுக்கும், கலைத்திறனுக்கும்  ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இவ்வாலயம் கருங்கற்களும், செங்கற்களும், சுண்ணாம்புக் கற்களும் கலந்து கட்டப்பட்டுள்ளது.



Displaying uthmer.jpg

இவ்வூரின் பெயர் சதுர்வேதி மங்கலம் எனப்பட்டதாக வரலாறு கூறுகிறது. நந்திவர்ம பல்லவன் 1200 வைணவ வேத பண்டிதர்களுக்கு இவ்வூரை தானமாகக் கொடுத்ததாகவும்இங்கு அவர்களால் நான்கு வேதமும் சதா காலமும் ஓதப்பட்டு வந்ததாலும் இப்பெயர் ஏற்பட்டதாம். இவ்வாலயத்தில் பரந்தாமனின் ஒன்பது உருவங்கள் இருப்பதால் இது 'நவமூர்த்த்தி ஸ்தலம்' என்றும் போற்றப்படுகிறது. மூன்று நிலைகளில் மகாவிஷ்ணு காட்சி தரும் சிறப்பு பெற்ற திவ்ய ஸ்தலங்களுடன், திவ்ய தேசத்தில் இடம் பெறாத இவ்வாலயமும் ஒன்றாகும். மற்றவை திருக்கோஷ்டியூர், காஞ்சி பரமேஸ்வர விண்ணகரம் மற்றும் மதுரை கூடல் அழகர் ஆலயம். மற்ற ஆலயங்களில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு மூர்த்தி மட்டுமே காட்சியளிக்க, இக்கோயிலில் கீழிரண்டு நிலைகளில் நான்கு, நான்கு  மூர்த்திகளும், மேல்நிலையில் ஒரு மூர்த்தியுமாக ஒன்பது உருவங்கள் கொண்ட சிறப்பை பெற்றது.ஒன்பது திருவுருவங்களும் சிறந்த வரப்பிரசாதிகளாகப் போற்றப்படுகின்றனர்.


Displaying umerure.jpg


இனி ஆலயம் சென்று இறைவனை தரிசிப்போம். ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.கீழ் நிலையில் நின்ற பெருமாளாகக் காட்சி தருகிறார் சுந்தர வரதர். பெயருக்கேற்றவாறு அழகு மிளிரும் முகத்துடன், நான்கு கரங்களுடன், இரு பக்கமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் இறைவனின் முன் நிற்கும்போது மனம்  ஒன்றுபட்டு நிச்சலனமடைவதை உணர முடிகிறது.

Displaying Sundaravaradar.jpg                          

       Displaying sundaravaradar.jpg 

ஆனந்தவல்லி தாயார் அமர்ந்த அழகுத் திருக் கோலத்தில் தனி சந்நிதியில் அருள் புரிகிறாள். அவளை தரிசித்த மாத்திரத்திலேயே ஆனந்தம்  நம்முள் ஏற்படுவதை உணரமுடிகிறது. கர்ப்பக்கிரகத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் பிரதானமாகக் காட்சி தரும் சுந்தர வரதரைச் சுற்றிலும் வெளிப் பிரகாரத்தில் தெற்கில் அச்சுத வரதரும், மேற்கில் அனிருத்த வரதரும். வடக்கில் கல்யாண வரதரும் இணை தெய்வங்களாக அற்புதக் காட்சி தருகின்றனர்.



Displaying Thayar.jpg 
திருமணம் ஆகாதவர்கள் தம் ஜாதகத்துடன் ஐந்து  புதன்கிழமைகள் தொடர்ந்து வந்து கல்யாண வரதரை அர்ச்சித்து வழிபட விரைவில் மணமாலை கிட்டும்.வேலை வேண்டுவோர் அச்சுத வரதரை செவ்வாய்க் கிழமைகளில் வழிபட வேண்டும். விரும்பிய வேலை விரைவில் கிடைக்கும்.


இரண்டாம் தளத்தில் கருவறையில் அமர்ந்த நிலையில் காட்சி தருபவர் வைகுண்ட வரதப் பெருமாள். சுற்றுச் சுவர்களில் அர்ச்சுனனுக்கு கண்ணபரமாத்மா உபதேசம் செய்யும்  கீதோபதேசக் காட்சி கண்கவர் கலைவண்ணம். அத்துடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள தட்சிணா மூர்த்தியின் சிற்பம் எந்த வைணவக் கோயிலிலும் காணக்  கிடைக்காத காட்சி.  இங்குள்ள நர நாராயணரின் உருவங்கள் சிறப்பானவை. பத்ரிநாத்துக்கு  செல்ல முடியாதவர்கள் இந்த நர நாராயணரை வணங்கித் தொழுதால், அவர்களின் எந்த வேண்டுதலும் நிறைவேறுமாம்.
 Displaying Yokanarasimmar.jpg                            


  Displaying lakshmivarahar.jpg

மகாவிஷ்ணுவின் அவதார ரூபங்களான யோக நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் லக்ஷ்மி வராகப் பெருமானும் இத்தளத்தில் அழகாகக் காட்சி தருகின்றனர். சோளிங்கபுரம் சென்று பல படிகள் ஏறி நரசிம்மரை  தரிசிக்க முடியாதோர் இந்த யோக   நரசிம்மரை வணங்கி வளம் பல பெறலாம். திருவிடந்தையில் நின்ற நிலையில் அருள் புரியும் வராகப் பெருமாளுக்கு இணையானவர் இந்த லக்ஷ்மி வராக சுவாமி.

Displaying Anjaneya.jpg

பரந்தாமனுக்கு எதிரில் காட்சி தரும் ஆஞ்சநேயர் கையில் கதையும், இடக்காலை முன் வைத்தும்  செல்வது போல அமைக்கப் பட்டுள்ளது. சீதையைக் கண்டுபிடிக்க கிளம்பிச்  செல்லும்போது பகைவர்களின் தோல்வியை எண்ணி ஆஞ்சநேயர் இடக்காலை முன் வைத்து செல்வதாகக் கூறப்படுகிறது.


Displaying anantha pad.jpg

மேலும் சில படிகள் ஏறிச்  சென்றால் நாம் தரிசிப்பது கிடந்த நிலையில் காட்சி தரும் அனந்தபத்மநாபப் பெருமான். இவர் ரங்கநாதரின் திருவுருவம் போல காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இந்த சந்நிதியில் மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து  பிரம்மாவும், பாதத்தின்  அருகில் மானும், மழுவும் ஏந்திய சிவனும் காணப் படுவது விசே ஷமான அமைப்பாகும். கங்கையும், யமுனையும் இந்த கர்ப்பக்கிரகத்தின் இருபுறமும் துவாரபாலகர்களாகக் காட்சி தருவது எந்த வைணவக் கோயிலிலும் காண முடியாத காட்சி.


Displaying Temple.jpg

மேலும் சில படிகள் ஏறிச்  சென்றால் நாம் தரிசிப்பது கிடந்த நிலையில் காட்சி தரும் அனந்தபத்மநாபப் பெருமான். இவர் ரங்கநாதரின் திருவுருவம் போல காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இந்த சந்நிதியில் மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து  பிரம்மாவும், பாதத்தின்  அருகில் மானும், மழுவும் ஏந்திய சிவனும் காணப் படுவது விசே ஷமான அமைப்பாகும். கங்கையும், யமுனையும் இந்த கர்ப்பக்கிரகத்தின் இருபுறமும் துவாரபாலகர்களாகக் காட்சி தருவது எந்த வைணவக் கோயிலிலும் காண முடியாத காட்சி.




பஞ்ச பாண்டவர்கள் ஒருவருடம் அஞ்ஞாத வாசம் செய்த சமயம் காடுகளில் மறைந்து கிடந்த இவ்வாலயத்தை வழிபட்டு ஆட்சியை மீண்டும் பெற்றனராம். ஐந்து பாண்டவர்களும் ஒவ்வொரு வரதரை வணங்கி அருள் பெற்றனராம். தர்மர், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் முறையே வைகுண்ட வரதர், அச்சுத வரதர், சுந்தர வரதர், அனிருத்த வரதர், கல்யாண வரதரையும், திரௌபதி ஆனந்தவல்லி அம்மையையும்   வணங்கியதாகக் கூறுகிறது தலபுராணம். அவர்கள் இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக இங்கு சுற்றுப்புற ஊர்கள் அவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனாலேயே இத்தலம்  'பஞ்சவரதத் தலம்' எனப்படுகிறது.

1013 ராஜேந்திர சோழனும், 1520ல் கிருஷ்ணதேவ ராயரும் இவ்வாலயத்தை புனருத்தாரணம் செய்ததாக கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வாலயம் 'துலாபாரக் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு துலாபாரம் ஒரு முக்கியமான பிரார்த்தனையாகும். இவ்வாலயத்தை ஒருவர் 48 நாட்கள் பிரதட்சிணம் செய்து எதை வேண்டிக் கொண்டாலும் இத்தல வரதர் அவற்றை நொடியில் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. ஒன்றல்ல...ஒன்பது பெருமாள்கள் இணைந்திருக்கும்போது கேட்டதும், நினைத்ததும் கிடைக்காதா என்ன?

இவ்வாலய இறைவனை திருமங்கை  ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், பொய்கை ஆழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர். பல சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்ட இத்தல இறைவனை ஒருமுறை தரிசித்தாலே இம்மைக்கும், மறுமைக்கும் பேறு பல பெறலாம்.
சித்திரையில் பிரம்மோத்சவம், புரட்டாசியில் சுதர்சன ஹோமம், ஆடி பவித்ரோத்சவம் ஆகியவை இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. 

உத்திரமேரூருக்கு சரித்திரப் பின்னணியும்,வரலாற்றுச் சிறப்பும், அரசியல் முக்கியத்துவமும் உண்டு.ஜனநாயகத்தின் பிறப்பிடம் இவ்வூர். கி.பி.10ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் இங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தும் விதம், உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுக்கும் முறை,உறுப்பினர் ஆவதற்கான தகுதி, தலைவரைத் தேர்வு செய்வது என்ற குறிப்புகளை இங்குள்ள கல்வெட்டுகள் அழகாக எடுத்துரைக்கின்றன. அரசியலுக்கு வருவோர் எவ்வளவு நேர்மையாகவும், நீதியுடனும் இருக்க வேண்டும் என்பது அவற்றில் வலியுறுத்தப் பட்டுள்ளன. அந்நாளைய 'குடவோலை' என்ற தேர்தல் முறையே இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. 

இவ்வாலயம் சென்னையிலிருந்து 85 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.உத்திரமேரூருக்கு நேரடி பேருந்து வசதி உண்டு. 

ஆலய நேரம்...காலை 7-12...மாலை..4-8


தொலைபேசி...94430 68382


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக