Thanjai

Thanjai

புதன், 24 பிப்ரவரி, 2016

மன நிம்மதி தரும் மகேசன்


தீபம் பிப்ரவரி 20, 2016 இதழில் வெளியானது

ஆலயங்களும், அதில் அருள் தரும் தெய்வங்களும்  நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும் அதற்குரிய சிறப்போடு காட்சி தந்து தம்மை வணங்குவோருக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து நம் வாழ்வை சிறப்புற வைப்பதை நாம் அறிவோம். அவ்வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஹோசூரில் மிகப் புகழ் பெற்றதும், மகிமை பொருந்தியதுமான மலைக் கோயில் எனப்படும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் ஆலயம் மிகச் சிறப்பு பெற்று விளங்குகிறது.

ஹோசூர் மலைக் கோவில்

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயம் ஈசன் தானே வந்து விரும்பி கோயில் கொண்ட இடமாகும். எப்படி என்று அறிய தல புராணத்தை காண்போம்.பிரம்மாண்ட புராணத்தில் பத்ரகிரி மஹாத்மியத்தில் இவ்வாலயமும், அதன் சிறப்புகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அந்த அழகான கதை இது! ஒரு நாள் கைலாயத்தில் சிவபெருமானும், பார்வதியும் மனம் மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு திருவிளையாடல் செய்ய எண்ணிய ஈசன், சட்டென்று தேவியின் கண்களிலிருந்து மறைந்து ஒரு நவரத்னங்களால் ஆன  வண்ண உடும்பாக மாறி விட்டார். அந்த உடும்பின் அழகில் மனம் மயங்கிய பார்வதி  அந்த உடும்பைத் தொடும் ஆவல் கொண்டு அதன் பின்னே சென்றாள்.


அந்த உடும்போ மரங்களில்  ஏறியும், இறங்கியும் தேவியை அலைக்கழித்தது.அன்னையும் அதைத் தொடும் ஆவலுடன் அதன் பின்னே செல்ல, அந்த உடும்பு மரத்திலிருந்து இறங்கி காடு, மலைகளில் ஓடத் தொடங்கியது. தன் தோழிகளுடன் அதைத் துரத்திச் சென்ற அம்பிகை அயர்ந்து நிற்கும்போது அந்த உடும்பும் நின்றது! அவள் அதனைப் பிடித்துவிட முயலும்போது அது ஓடியது! ஒரு இடத்தில் அதன் வாலை அம்பிகை தொட அவள் உடல் பச்சை நிறமாகியது. அன்னை நீராட குளம் தேட, எதுவும் தென்படாததால் அலகநந்தாவை ஒரு  குள வடிவில் உருவாகச் செய்து அதில்  நீராட, பார்வதி குளித்தவுடன் அந்த நீரும் பச்சை வண்ணமாக மாறியது. அதன் பெயர் மரகதசரோவர் ஆயிற்று.

மீண்டும் அந்த உடும்பைப் பின் தொடர்ந்தாள் தேவி. அது அருகிலிருந்த பத்ரகிரி மலை மீது ஏறி, அங்கிருந்த செண்பக மரத்தின் பூக்களுக்கிடையில் மறைந்தும், தெரிந்தும் விளையாட ஆரம்பித்தது. அச்சமயம் முத்கலர், உச்சயனர் என்ற இரண்டு முனிவர்கள் அம்மலையில் தவம் செய்து கொண்டிருந்தனர். இந்தப் பெண்களின் சத்தத்தில்  தவத்திலிருந்து கலைந்த அவர்கள், அந்த உடும்பின் அழகில் மனம் மயங்கி சத்தம் போட்டவாறு அதன் பின் சென்றனர். அந்த சத்தத்தில் உடும்பும் அங்கிருந்து மறைந்துவிட, கோபமுற்ற தேவி அவர்களை வேடர்களாகி செவிடாகவும், குருடாகும் போகும்படி சாபம் கொடுத்துவிட்டாள். அவளை சக்தி என்று உணர்ந்த முனிவர்கள் தம் தவறை மன்னிக்கும்படி வேண்டினர். சிவ பக்தர்களை தான் அறியாமல் சாபம் கொடுத்து விட்டதை அறிந்த கௌரி, கோமுகத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி தவம் செய்ய  அங்கு லிங்க வடிவில் தோன்றினார் பரமசிவனார். தேவியும் அக்காட்டில் மலர்ந்த பூக்களால் இறைவனை பூஜித்து வர, அவளுக்கு இரங்கிய பரமன் நேரில் காட்சி தந்தார்.முனிவர்களின் சாபம் போக்க அவர்கள் வேடனாக இருந்து, அந்த நவரத்ன உடும்பைக் காணும்போது சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். 

'ஏன் இந்தத் திருவிளையாடல்?' என்று கேட்ட உமையிடம் இறைவனார் சொல்கிறார். ஒருமுறை நீதி தேவன் அரக்கர்களாலும், அசுரர்களாலும் வெகுவாகத் துன்பப்பட்டார்.தன்னைக் காப்பாற்ற ஈசனால் மட்டுமே முடியும் என்றெண்ணி மனம் கலங்கிய சமயம் இறைவர் அசரீரியாக தக்ஷிணபினாகினி (தென்பெண்ணையின் மேற்குப் புறம்) என்ற இடத்தில் தவம் செய். நான் உன் இன்னலைத் தீர்க்கிறேன் என்றார். அவரும் அங்கு சென்று கடும் தவம் செய்ய மனமிரங்கிய பரமேஸ்வரர் அவரை காளையாக மாற்றித்  தனது வாகனமாகக் கொண்டார்.அவர் தவம் செய்த அந்த மலை மிகவும் புனிதமானது என்பதுடன், அங்குள்ள ரிஷப தீர்த்தத்தில் ரிஷப மாதம் (வைகாசி) மாதம் நீராடுவோர் எல்லா நற்பலனும் பெறுவார் என்று அருளினார். தான் இருக்குமிடத்திற்கு பார்வதியையும் அழைத்துவர ஈசன் நடத்தியதே இந்த உடும்பு நாடகம். 

ஹொய்சளர்களால் ஆளப்பட்ட இவ்வூர் ஹோசூர் என்ற பெயர் பெற்றது. இவ்வாலயம் ஹொய்சள அரசரான திருப்புவனமல்ல பர்வதராஜ அந்தியாழ்வார் என்ரபவரால் 1260ம் ஆண்டு கட்டப்பட்து, அழகியபெருமாள் ஆதிமூலம் என்பவரால் புனருத்தாரணம் செய்யப் பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இத்தலம் ரிஷபாசலம், செண்பகாசலம், கௌடேய பர்வதம்,பத்ராசலம் என்ற பெயர்களையும் கொண்டது. இம்மலையின் வடக்கு பக்கம் மகாவிஷ்ணு மலையும், தெற்கில் பிரம்மாவின் பாதம் தாங்கிய மலையும் ஒரே நேர்க் கோட்டில் அமைந்துள்ளது மும்மூர்த்தியரும் காட்சி தரும் சிறப்பு பெற்றதாகும்.

இனி ஆலயம் செல்வோம். ஆயிரம் வருடங்களுக்கு மேலான ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுறக் காட்சி தருகிறது. பத்ரகிரி என்ற சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. அந்தக் குன்று காளை  படுத்திருப்பது போலக் காட்சி தருவதால் ரிஷபாசலம் எனப்படுகிறது. 

சந்த்ர சூடேஸ்வரர் கோவில்-1

சந்த்ர சூடேஸ்வரர் கோவில்-2


ராஜ கணபதி என்ற பெயரில் காட்சி தரும் விநாயகரை  வணங்கி உள் செல்வோம்.கருவறையில் சிரசில் பிறைநிலவுடன் காட்சி தரும் சிவ பெருமான் சந்திரசூடேஸ்வரர் என்ற பெயரில் மிக அழகாகக் காட்சி தருகிறார். சுயம்புவாக உருவானவர். பக்தி மற்றும் நம்பிக்கையுடன் வணங்குவோரின் குறைகளை நிமிடத்தில் களைபவர் இத்தல ஈசன். பாண்டவர்கள் இவ்விறைவனை வணங்கி அர்ச்சுனன் இவ்விறைவன் மேல் அஷ்டகம் எழுதி பூஜித்ததாகக் கூறப்படுகிறது. உடும்பாய் வந்து விளையாடல் புரிந்த ஈசனை நாமும் உடும்புப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டால் நம்மைக் கைவிட மாட்டார் ஈசன்!
சந்த்ரசூடேஸ்வரர்

மரகாதாம்பிகை


மரகதாம்பிகை என்ற பெயரில் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் காட்சி தரும் அன்னையின் மூக்கில் மூக்குத்தி போடுவதற்கான துளை அமைந்துள்ளதும், பின்னல் ஜடை குஞ்சத்துடன் அமைந்துள்ளதும் அதிசயமான காட்சியாகும். மரகதப் பச்சை வண்ணத்தில் அம்மன் சிலைகாட்சி தருகிறது. அம்பிகைக்கு முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அழகு மிளிரும் திருமுகத்துடன் காட்சி தரும் அம்பிகை பெண்களுக்கு குழந்தை செல்வம், குடும்ப ஐஸ்வர்யம் அளிப்பதில் வல்லவளாம். ஸ்ரீசக்ரத்தின் முன் ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம் நடைபெறும்.
நந்தி

அஷ்டதிக்பாலர்கள் ஆலயத்தின் எட்டு திசைகளிலும் அவரவர் உருவத்தோடும், வாகனத்துடன் அற்புத  தரிசனம் தருகின்றனர், கஜலக்ஷ்மி, ஆறுமுகப் பெருமான், சூர்யன், சந்திரன்,பஞ்சலிங்க சந்நிதிகளும் உள்ளன. 
ஜலகண்டேஸ்வரர்

பிரகாரத்திலுள்ள ஜலகண்டேஸ்வரர் சந்நிதி  இவ்வாலய அதிசயமும், மிக விசேஷமானதுமாகும். தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. மழை இல்லாதபோது இத்தொட்டியில் பதினாறு நாட்களுக்கு தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர். பின் தீபாராதனை செய்துவிட்டு வந்து விடுவர். அந்தத் தண்ணீர் சிலமணி நேரத்தில் வற்றிவிட்டால் மழை வராது. அது வற்றாது தெப்பம் போல் இருந்தால் கண்டிப்பாக மழை வருமாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வற்றாமல் இருந்து மழை பெய்தஅதிசயம் நடந்ததாகக் கூறுகின்றனர்.

பச்சைக் குளம்

இங்கு எட்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளது. தேவியால் உருவாக்கப்பட்ட பச்சைக்குளம் எனும் மரகதசரோவர் மிக விசேஷமானது. மனநிம்மதி மற்றும் உடல்நலக் கோளாறுகளைக் களைய வல்லது இத்தீர்த்தம் என்கின்றனர். பார்வதி, வசிஷ்டர், வியாசர்,கௌதமர், காச்யபர், ஜைமினி, விஸ்வாமித்திரர்,ஆங்கீரசர், அத்திரி, சனகாதி முனிவர்கள், ஜாம்பவான், பாண்டவர்கள் முதலிய பல ரிஷிகளும் வணங்கி அருள் பெற்ற புனிதத்தலம் இது. தல மரமான வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டு பிள்ளை வரம் பெறுகின்றனர் பக்தர்கள்.  ருத்ரஹோமம் இத்தலத்தில்  செய்வதால் எண்ணிய காரியம் உடன் நிறைவேறும். உடல் நலம், வேலை வாய்ப்பு, மகப்பேறு, கடன் தொல்லையிலிருந்து மீள ருத்ர அபிஷேகம் செய்வது மிக விசேஷமான பிரார்த்தனையாக சொல்லப்படுகிறது. இங்கு  பௌர்ணமி கிரி வலம், அங்கப் பிரதட்சிணம் செய்வது  மிக அதிகமான வேண்டுதலாகும். 


மாசிமாதம் 13 நாட்கள் தேர்த் திருவிழா, கார்த்திகை சோமவாரம், திருவாதிரை, சிவராத்திரி, நவராத்திரி, தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடக பக்தர்களும் இங்கு அதிக அளவில் வந்து வழிபடுவர். பிரதோஷ நாட்கள் மிக பெரிய அளவில் கொண்டாடப் படும்.

ஆலயம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஹோசூரின் மத்தியில் அமைந்துள்ளது.
ஆலய தரிசன நேரம்....காலை 6 - 12...மாலை  5 - 9
தொலைபேசி... 04344-292870, 9894471638




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக