மங்கையர் மலர் ஏப்ரல், 1999 ஆண்டு வெளியானது
ஒரு ஆண் வாழ்வின் முதல் 25
வருடங்களை தாய், தமக்கை, தங்கை என்ற பெண்களுடன்தான் கடத்துகிறான். நாட்கள் ஆக ஆக
அந்தப் பெண்கள் சிறிது சிறிதாக அவன் வாழ்விலிருந்து ஒதுங்கிப் போகும் நேரம். அவன்
மனம் தனக்காகவே வாழ்ந்து, தன்னை மட்டுமே காதலித்து, தனக்காகவே வாழ்வின் ஒவ்வொரு
நாளையும் வாழப்போகும் மனைவியைப் பற்றி அநேக கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறது.
அந்த மனைவி அவனது எண்ணங்களைப்
புரிந்து கொண்டு, எதிலும் விட்டுக் கொடுத்து, அழகான வாரிசுகளைப் பெற்றுக்
கொடுத்து, அன்பு, பாசம், காதல், தாய்மை நிறைந்தவளாக இருந்து விட்டால் அந்த மனைவி
இறைவன் கொடுத்த வரம் மட்டுமா! அவள் வாழ்வே சொர்க்கம்தானே? நானும் அப்படிப்
புண்னியம் செய்ததன் பலன் தானோ, அப்படி ஒரு மனைவியைப் பெற்றிருக்கிறேன் என்று
பலமுறை இறைவனுக்கு நன்றி சொன்னதுண்டு.
கணவன், மனைவி என்றால் சண்டையும்
பிணக்கும் வராதா என்ன? ஊடல் இல்லாத வாழ்வில் உவகை ஏது? எங்களுக்குள்ளும் சண்டை
வந்ததுண்டு. ஆனால் என் மனைவியோ என்ன சண்டையானாலும் பேசாமல் இருந்ததோ, சமைக்காமல்
இருந்ததோ... ஊஹூம். என் 23 வருட மண வாழ்வில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததேயில்லை.
இதற்கு முக்கிய காரணம் அவளது விட்டுக் கொடுத்தல் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
என்னுடன் மிகச் சில மணி நேரம் கூட சண்டையினாலோ வேறு காரணங்களாலோ என் மனைவி பேசாமல்
இருந்ததில்லை. எனக்கு என்ன மனக் கவலை ஏற்பட்டாலும் அவளின் புன்சிரிப்பும், ஆறுதல்
தரும் வார்த்தைகளும் அவற்றை நொடியில் நீக்கிவிடும் டானிக்!
எத்தனையோ வருடமாக என்னிடமிருந்த
வெற்றிலை, சீவல் பழக்கத்தை மிகப் பொறுமையாக எடுத்துச் சொல்லி என்னை விட வைத்த
பெருமை என் மனைவியையே சாரும். எங்களுக்குள் ஈகோ இல்லை; இரண்டு எண்ணங்கள்
இருந்ததில்லை. இருவரும் எல்லா விஷயங்களையும் இணைந்து பேசியே முடிவெடுப்போம்.
இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என் மனைவியைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும்
சந்தோஷம் புதிதாகவே இருப்பது எனக்கு வியப்பளிக்கும் விஷயம்! என்னுடைய இந்த அன்பு,
உறவினர்களால் ‘பெண்டாட்டிதாசன்’ என்று சொல்லப்பட்டாலும் நான் கவலைப்படுவதில்லை!
அன்பிற்கு அரவம் கூட கட்டுப்படும்போது என் மனைவியில் தன்னலமற்ற அன்பில் நான்
கட்டிப்போடப்படுவதில் என்ன தவறு?
பெண்களுக்கு சந்தேகம் உடன் பிறந்த
ஒன்று. தாங்கள் பாராட்டப்பட வேண்டும், மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற எண்ணமும்
ஆண்களைவிட பெண்களிடம் அதிகம். ஆண்களுக்கு வீடு, மனைவி, குழந்தைகள் மட்டுமே
முக்கியமல்ல. அவர்களின் பணி, அதில் ஆற்ற வேண்டிய கடமைகள் குடும்பத்தைவிட முக்கியம்
என்பதை பெண்கள், அது தாயோ, தாரமோ, மகளோ யாரும் புரிந்து கொள்வதில்லை என்பது என்
வருத்தம்.
வெளியில் ஒரு ஆண் பலருடன் பழக
வேண்டியிருக்கிறது. இன்றைய வேகமான உலகில் பல பேருடன் தொடர்பு கொண்டு, பல விஷயங்களை
ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவன் குடும்பத்தின் சில கடமைகளை மறந்து
விடுவது சாத்தியமே. மேலும் மனைவி என்ற ஒருத்தி தன்னையும் குடும்பத்தையும் மிகச்
சரியாக நிர்வகிப்பாள் என்ற நம்பிக்கைதான் அந்த ஆணை வெளி உலகில் பல விஷயங்களைச்
சாதிக்க வைக்கிறது. ஆனால் மனைவியின் ஆசைகளும், ஏக்கங்களும் உதாசீனப்
படுத்தப்படும்போது அந்த ஆணுக்கு, வெளியில் பலராலும், பலவிதமாக புகழ்ந்து
பாராட்டுப் பெறும் மனிதனுக்கு பூஞ்சோலையாகவும், சொர்க்கமாயும் இருக்க வேண்டிய வீடு
சண்டைக் களமாகிறது. இது அவனது உடல், மனம் இரண்டையும் பாதிக்க, வாழ்க்கை திசை மாறி,
வழித்துணையுடன் ஏற்படும் சண்டையால் வாரிசுகளும் பாதிக்கப்பட்டு, அழகாக வாழ வேண்டிய
வாழ்க்கை அவலமாகிறது.
வாழ்க்கை இறுதிவரை இனிக்க
வேண்டுமானால் தன் கடமை, வேலை என்று வாழும் கணவர்கள் மனைவி பக்கமும் கொங்சம்
கண்ணையும், மனதையும் திருப்ப வேண்டியது அவசியம். ஒரு சின்ன பாராட்டு, பிறந்த நாள்,
மண நாளிற்கு பரிசு, அவ்வப்பொழுது தனிமையில் தம்பதியராகச் செல்லும் ஒரு சிறிய
பயணம், இவை போதுமே அந்தப் பெண்களை மகிழ்ச்சிப் படுத்த. கணவன், குழந்தைகள் என்று
‘அவர்களையே உலகமாக எண்ணி, தன் சுக துக்கங்களை மறந்து வாழும்’ மனைவிக்கு கணவன்
செய்யும் மிகச் சிறிய கடமைதானே இது?
பொதுவாகப் பெண்களிடம் இருக்கும்
மிகப் பெரிய குறை, தங்கள் உடல் நிலையில் ஏற்படும் குறைகளை, சுகவீனங்களை
பெரும்பாலும் வெளியில் சொல்வதில்லை. உடல் நிலை மோசமாகும் வரை விட்டு கடைசியில்
தானும் கஷ்டப்பட்டு, அடுத்தவர்களையும் துன்பப்பட வைப்பதில் அவர்களுக்கு என்ன ஒரு
சந்தோஷமோ? பல பிரச்சனைகளோடு போராடும் ஒரு கணவன், மனைவியின் குறையை சொன்னால்தானே
தீர்த்து வைக்க முடியும்? கணவனாகவே அறிந்து தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்,
சரி செய்ய வேண்டும் என்று பெண்கள் நினைப்பதை மாற்றிக் கொள்வார்களோ?
ஆண்களுக்கும் மனம் உண்டு; ஆசைகள்
உண்டு. ஆயிரம் ஊர்கள் சுற்றி வந்தாலும், மனதில் ஆயிரத்தெட்டு கவலைகள் இருந்தாலும்,
‘அப்பாடா’ என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவன் தேடுவது அன்பு நிறைந்த மனைவியின்
ஆதரவான வார்த்தைகளைத்தான். அதைப் புரிந்து கொண்டு அரவணைக்க வேண்டியது ஒரு நல்ல
மனைவியின் கடமை. அந்த அன்பில் கட்டுப்பட்ட எந்த ஆணும் மகுடிக்கு ஆடும் நாகம்தான்.