Thanjai

Thanjai

சனி, 20 டிசம்பர், 2014

நின்ற நாராயணன்
20 டிசம்பர் 2015 தீபம் இதழில் வெளியான என் ஆலய தரிசனக் கட்டுரை...நின்ற நாராயணன்....திருத்தங்கல்
 
ஸ்ரீமன் நாராயணனை பல திருத் தலங்களில் அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நாம் தரிசனம் செய்ததுண்டு. ஆனால் நின்ற கோலத்தில் தரிசிக்க, அதுவும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தேவியருடன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற வண்ணம்  கோலாகலமாகக் காட்சி தரும் அற்புதக் கோலம் காண விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல்  தலத்திற்கு செல்ல வேண்டும். 

புராணப் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டதுமான  இந்த திவ்யதேசம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையும் கொண்டது. 1300 ஆண்டுகள் பழமையான இத்தலம் 108 திவ்ய தேசத்தில் 48வதும், பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் ஐந்தாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது. இது குடவரைக் கோயிலாகும். இத்தலப் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் காணப்படுகிறது. 
ஆலமரத்தை தலமரமாகக் கொண்ட இவ்வாலயத்தில் , வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடை பெறுகின்றன.  'திருத்தங்கல் கண்டால் மறுத்தங்கல்  கிடையாது' என்ற பழமொழி  இத்தலத்தை தரிசிப்பவர்க்கு இனி மறு பிறப்பு கிடையாது என்பதைத் தெளிவாகச் சொல்லி இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.இத்தல இறைவன் இங்கு கோயில் கொண்டது எவ்வாறு? அதற்கான அழகான கதைஇது! பெருமாள் பாற்கடலில் யோக நித்திரையில் இருந்த சமயம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவருக்குள்ளும் 'யார் பெரியவர்?' என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள் ஸ்ரீதேவியே நாரணனின் அன்புக்குப் பாத்திரமானவள் என்றும், பூதேவியின் தோழியர் பூமியே உலகைத் தாங்குவதால் பூதேவியே உயர்ந்தவள் என்றும், நீளாதேவியின் தோழிகள் நீளாதேவி ஜல வடிவமானவள். அவள் மடியிலேயே பகவான் பள்ளி கொண்டிருக்கிறாள் என்றும் சண்டையிட, கோபித்த ஸ்ரீதேவி தங்கால்மலை என்ற இத்திருத்தங்கல் மலை அருகில் வந்து செங்கமல நாச்சியார் என்ற திருப் பெயருடன் நாராயண மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் இருந்தாள். யோகம் கலைந்து  எழுந்த பரந்தாமன் தேவியின் தவத்திற்கு மகிழ்ந்து கருடன்  மீது வீற்று ஸ்ரீதேவிக்கு காட்சி தந்தார். எம்பெருமானைக் கண்ட தேவி அவர் கால்களில் வீழ்ந்து வணங்கித் துதித்தாள். பெருமான் 'நீயே எனக்கு என்றும் பிரியமானவள். உன்னால்தான் நான் ஸ்ரீயம்பதியாக விளங்குகிறேன்.நீயே பெரிய பிராட்டி என்ற பெயருடன் விளங்குவாய்' என்று கூற, தேவியும் மனமகிழ்ந்து 'தாங்கள் இம்மலையில் பாற்கடல் போல சே ஷ சயனத்தில் என்னுடன் எப்போதும் எழுந்தருளி இருக்க வேண்டும்' என வேண்ட, நாரணரும் 'நீ தவம் இருந்த இவ்விடம் இனி ஸ்ரீக்ஷேத்திரம் என விளங்கும்'எனப் பணித்து அங்கேயே எழுந்தருளி விட்டார். 

கணவரின் பின்னால் வந்த பூதேவியும், நீளாதேவியும் மகாலக்ஷ்மியிடம் மன்னிப்பு வேண்ட தேவியும் அவர்களை தழுவி ஏற்றுக் கொண்டாள். திருவாகிய  லக்ஷ்மி தேவி இங்கு  தங்கியதால்  இத்தலம் திருத் தங்கல்  என்றாயிற்று.

மூன்று தேவிகளுடன்  ஜாம்பவதி இங்கு இணைந்த வரலாறு இது.ராமாவதாரத்தில் ஜாம்பவானாக இருந்தவன், கிருஷ்ணாவதாரத்தில்  சியமந்தக மணியை  திருடிக் கொண்டு செல்ல, கிருஷ்ண  பகவானால் மோட்சம் அடைந்தான். அச்சமயம் தன் மகளான ஜாம்பவதியை பரமன்  மணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்க, நாராயணரும் இவ்விடத்தில் மணம் செய்து கொண்டதாக புராணக் கூற்று. ஜாம்பவதி  பெருமானுடன் இணைந்து அருள் தரும் ஒரே திவ்யஸ்தலம் இது மட்டுமே.
ஒருமுறை ஆதிசே ஷனுக்கும், ஆலமரத்திற்கும் இடையே யார் பெரியவர் என்ற  ஏற்பட்டது.இருவரும் பிரம்மாவிடம் சென்று கேட்க அவர், 'ஆதிசே ஷன்   மீதுதான் பரமன் எப்பொழுதும் பள்ளி கொள்கிறார்.யுகம் அழியும்போது மட்டுமே ஆலிலையில் பள்ளி கொள்வதால் ஆதிசே ஷனே பெரியவர்' என்று சொல்ல, வருத்தமடைந்த ஆலமரம் கடும் தவம் செய்தது.  அதில் மகிழ்ந்த விஷ்ணு ஆலமரத்தின் விருப்பத்தைக் கேட்டார். 'தாம் எப்போதும் கீழே உதிரும் என்  இலைகளின் மேல் பள்ளி கொள்ள வேண்டும்' என வேண்ட, 'நீ ஸ்ரீதேவி தவம் செய்யும் திருத்தங்கலில் மலையாக இருப்பாய். நான் திருமகளை மணம் செய்ய வரும்போது அங்கு வந்து உன்னடியில் நின்றும், பள்ளி கொண்டும் அருள்வேன்' என்றார்.ஆலமரம் இங்கு மலை வடிவில் தங்கியதால், தாங்கும் ஆல மலை என்ற பெயர் நாளடைவில்  தங்காலமலை  என்றாயிற்றாம்.
ஒரு சமயம் கங்கை முதலான 61 நதி மங்கையர் இந்த மலையில் தங்கியிருக்கும் நாராயணரிடம் 'எங்களில் நீராடுவோரின் பாபங்கள் நிறைந்த எங்களை அப்பாபச் சுமையில் இருந்து விடுபட அருள வேண்டும்' எனக் கேட்டனர். பகவானும் 'இக்கோயிலின் வாயிலிலுள்ள பாபநாச தீர்த்தத்தில் நீராடினால் உங்கள் பாபங்கள் நீங்கும். இக்குளக் கரையில் செய்யும் தேவகாரியங்கள்  ஒரு கோடியாகப் பலன் பெறும். இதில் நீராடுவோர் முக்தி அடைவர்' என்று அருளினார். இங்குள்ள பாபநாச தீர்த்தம் மிக விசே ஷமானது.இங்குள்ளபாஸ்கர தீர்த்தம் ஒரு அந்தணரை அறியாமல் கொன்றதால் சூரிய தேவனுக்கு ஏற்பட்ட  பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய சிறப்பு பெற்றது. ஊருக்கு வடக்கே ஓடும் அர்ச்சுன நதியும் இவ்வாலய தீர்த்தமாகப் போற்றப் படுகிறது. பாண்டவர்கள் வனவாசத்தின் சமயம் இங்கு வந்தபோது அர்ச்சுனன் கங்கையை நினைத்து பூமியில் வருணாஸ்திரத்தை விட கங்காதேவி பெருக்கெடுத்து வந்தாள். இந்நதி மிகப் புனித நதியாகும்.இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றின் சிறப்புகளைக் கண்டோம்.
இனி  நம்பெருமானின் சந்நிதிக்கு செல்வோம். ஆலயத்திற்கு சில  படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணப் பதுமைகள் காட்சி தரும் முதல் கட்டில் அர்த்த மண்டபத்தில்  பெருமாள் போக சயனராக  தேவியருடன் பள்ளி கொண்ட பெருமாள் ஸ்ரீரங்கநாதராக ஆனந்தக் காட்சி தருகிறார். ஆண்டாளைத் திருமணம் செய்ய வந்த ஸ்ரீரங்கத்து அழகிய மணவாளரே இங்கு தங்கி பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றதாக வரலாறு. பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் மனத்தை மயக்குகிறார்!


 இரண்டாம் கட்டில் நான்குகால் மண்டபம், வாகன அறைகள் உள்ளன. தாயார் செங்கமல நாச்சியாரின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.இங்கு தேவி உயர்ந்து நின்ற திருக் கோலத்தில், வலக்கையில் அபய முத்திரையும், இடக் கையைத் தொங்க விட்டும் நின்ற நிலையில் தரிசனம் தருவது  எந்த ஆலயத்திலும் காணக்   கிடைக்காத காட்சி. தாயாரின் அழகும், அருகளும் பொங்கும் திருமுகத்திலிருந்து கண்களை விலக்க முடியவில்லை. நாம் வேண்டுவதை உடன் நிறைவேற்றித் தரும் வரப்பிரசாதியாம் இந்த அன்னை.தேவியிடம் எதையும் கேட்கத் தோன்றாது, மனம் அவளுடனேயே ஒடுங்கி விடும் நிலை ஏற்படுகிறது. திருமணம், பிள்ளைப்பேறு, வேலை என்று எதை வேண்டிக்கொண்டும் அம்மனுக்கு ஒன்பது கஜம் நூற்புடவை வாங்கிச்  சாத்துவதாக வேண்டிக் கொண்டால் அவை விரைவில் நிறைவேறுமாம்.இந்த நாச்சியாருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. தாயாருக்கு ஆராதனம் தொடங்கிய பின்பே பெருமாளுக்கு தொடங்கும்.இங்குள்ள துவஜஸ்தம்பம் தாண்டி சில படிகள் ஏறிச் சென்றால் பெருமானின் மகாமண்டபத்தில் இறைவன் சன்னிதிக்கு  எதிரில் கருட பகவான் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். மிக அரிதாகக் காணப்படும் நிலையில் கீழிரு கரங்கள் கூப்பியும்,மேலிரு கைகளில் அமுத கலசமும், சர்ப்பமும் வைத்துக் கொண்டிருக்கிறார். தன்  எதிரியாகிய பாம்பைக் கையில் நட்புடன் கருடன் வைத்துக் கொண்டிருப்பதால், இங்கு வழிபடுவோருக்கு  எதிரிகளால் துன்பம் நேராது என்பது நம்பிக்கை. 
சோமச்சந்திர விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் கருவறையில்  பதினோரு திருவுருவங்களுடன் நின்ற கோலத்தில் சுதையாலான வாசுதேவப் பெருமான் காட்சி தருவது எந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பு. தெய்வீக வாசுதேவப் பெருமான் தான் அருள் புரிந்த அத்தனை பேருடனும் கர்ப்பக்கிரகத்தில் காட்சி தருகிறார்! மூலவரின் வலப்பக்கம் அன்ன நாயகியாகிய ஸ்ரீதேவி, அம்ருத நாயகியாகிய பூதேவி, மார்க்கண்டேய ரிஷி, கருடன், அருணன் (சூரியனின் சாரதி) ஆகியோரும்,இடப்பக்கம் அனந்த நாயகி என்ற நீளாதேவி, ஜாம்பவதி, அநிருத்தன், உஷை மற்றும் பிருகு மகரிஷி ஆகியோருடன் நடுவே வலது திருக் கையால் தன் திருவடிகளைக் காட்டிக் கொண்டு 'என் பாதங்களைச் சரணடைவோரை நான் கைவிட மாட்டேன்' என்பது போலும், இடக்கையை ஒயிலாக இடுப்பில் வைத்துக் கொண்டும்,அற்புதமான தரிசனம் தரும் ஐயனை உள்ளம் உருகி, கண்ணீர் பெருக உன்மத்தமாகி நாராயணா...நாராயணா என்று சொல்வதைத் தவிர வேறு வேண்டுதல்கள் நம் மனதில் தோன்றுவதில்லை.உற்சவர் திருத்தங்கலப்பன் எனப் படுகிறார். அவரும் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார்.பெருமாளுக்கு விசே ஷ நாட்களில் தைலக் காப்பு நடைபெறும்.பிரகாரச் சுற்றில் ஆண்டாளும், தாண்டவக் கண்ணனும் எழுந்தருளியுள்ளனர்.இந்த ஆலயக் கருவறையில் உஷையும் அநிருத்தனும் எழுந்தருளியது எவ்வாறு என்று பார்ப்போம். 'உ ஷா பரிணயம்' என்று நாம் கதாகாலட்சேபம் கேட்டிருப்போம். மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணன் என்ற அசுரன். அவன் மகள் உஷை. அவளது கனவில் ஒரு நாள் அழகிய வாலிபனைக் கண்டவள் அவனையே மணம் செய்ய விரும்பி அவளது  தோழி சித்ரலேகையிடம்  தான் கனவில் கண்ட ஆடவனின் அடையாளங்களைச் சொல்லி படம் வரையும்படிக் கூற, அவ்வாலிபன் ஸ்ரீக்ருஷ்ணனின் பேரன் அநிருத்தன் என்று அறிந்து கொண்டார்கள்.உஷையின் வற்புறுத்தலால் சித்ரலேகை அவனை துவாரகை சென்று கட்டிலுடன் தூக்கி வந்தாள். கண் விழித்துப் பார்த்த அநிருத்தன் நடந்ததை அறிந்து அவளைக் காந்தர்வ மணம் செய்து கொண்டு அந்தப்புரத்தில் வாழ்ந்து வந்தான்.இதை அறிந்த வாணன் கோபம் கொண்டு அவனை சிறையில் அடைத்தான். விபரம் தெரிந்ததும் கிருஷ்ணர் படையுடன் வந்து பாணனை வென்று அநிருத்தன், உஷையின் திருமணத்தை துவாரகையில் நடத்த அழைத்துச் சென்றார்.


அச்சமயம் திருத்தங்கலில் கடுமையான தவத்தில் இருந்த புத பகவானின் பிள்ளையான புரூரவ சக்கரவர்த்திக்கு கண்ணன் தரிசனம் கொடுத்து அருளினார். புரூரவன் ஆசைக்கிணங்க அநிருத்தன், உஷை திருமணத்தை திருத்தங்கலிலேயே நடத்திய கண்ண பிரான் தாமும் மனைவியருடன் திருக் கல்யாணக் காட்சி தந்தருளி அவ்விடத்திலேயே அனைவருடனும் ஆலயம் கொண்டார். தாம் விரும்பும் வாழ்க்கைத் துணையை மணக்க விரும்புவோரும், இனிய தாம்பத்திய வாழ்க்கையை விரும்புவோரும் வழிபட வேண்டிய இறைவன் இவர். இத்தனை சிறப்புகளோடு திகழும் இந்த ஆலயத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டியது அவசியம்.


அனுமனும், சக்கரத்தாழ்வாரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர்.இத்தலம் பூதத்தாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சித்ரா பௌர்ணமி, வைகாசியில் வசந்தோத்சவம்,ஆனியில் பிரம்மோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, சித்ரா பௌர்ணமி, பங்குனியில் திருக்கல்யாண உத்சவம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  


இவ்வாலயம் விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 
ஆலய நேரம். காலை 6--9  மாலை 4--8 
தொடர்புக்கு...9442665443, 9443570765


புதன், 10 டிசம்பர், 2014

தத்தாத்ரேயர் ஜயந்தி....தத்தகிரி


டிசம்பர் 20, 2014  தீபம் இதழில் வெளியான என் ஆலய தரிசனக் கட்டுரை.
மும்மூர்த்தி ஸ்வரூபமாக, அத்திரி, னுசூயா தம்பதியரின் மைந்தனானவர் ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூத சந்நியாசிகளின் ஆதி குரு இவர்தான். வட  இந்தியப் பகுதிகளில் ஸ்ரீதத்தரின் வழிபாடு மிகப் பிரசித்தம். தமிழகத்திலும் தத்தாத்ரேயருக்கென்று முதன் முதலில் கோயில் உருவான தலம் சேந்தமங்கலம்.ஒரு சிறிய குன்றின் மீது  சில படிகள் ஏறிச் சென்றால் மெல்லிய தென்றல் வீசும் அழகான, அமைதியான  சூழ்நிலையில் ஆலயம் அமைந்துள்ளது.

மேலே ஆலயத்துள் இரண்டு சந்நிதிகள் மட்டுமே உண்டு. முத்தேவர்களான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த தத்தப் பெருமான் உயர்ந்து நின்று அருள்காட்சி தருகின்றார். தரிசிப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. முருகப் பெருமானோ பெயருக்கேற்றார்போல அற்புத அழகில் கையில் வேலும், அபய ஹஸ்தமுமாக முறுவல் கொஞ்சும் இதழுடன் நம்மை நோக்கி 'என்னிடம் வந்தபின் உனக்கு கவலை ஏன்?' என ஆறுதல் அளிப்பதுபோல் காட்சி தருகிறார்.  

இந்த சிலைகள் பிரம்மாண்டமான உயரத்துடன், அழகிய தோற்றத்துடன் காட்சி தருகின்றன.இவ்வாலயம் அமையக் காரணமானவர் ஸ்ரீ ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத ஸ்வாமிகள். புதுகையில் அதிஷ்டானம் கொண்டுள்ள ஸ்ரீஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகளின் சீடர் அவர்.இவர் தனிமையை விரும்பி சேந்தமங்கலத்துக்கு அருகில் சந்யாசிகரடு என்ற குன்றில் தவம் புரிந்தார்.

இவர் இமயமலை சென்றபோது தத்த பெருமான் இவர் முன் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூற, அதன்படி உருவானதே இவ்வாலயம். தன்னுடைய ஜீவ சமாதி அமைவதற்கு ஏற்ற இடம் இது என்று உணர்ந்த ஸ்வாமிகள் இவ்விடத்தில் தத்த ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். எல்லா இடங்களையும் போல இந்த இறைவனின் மையத்தில் உள்ள முகம் விஷ்ணுவுடையது இல்லாமல், சிவ பெருமானுடையதாக அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும். 1931ம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் இவ்வாலயம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.1948ம் ஆண்டு டிசம்பர் 29 அன்று ஸ்ரீ ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள் ஜீவ  சமாதி அடைந்தார்.அவரது விருப்பத்தின்படி ஸ்ரீ தத்தருக்கு முன்பாக அவரது புனித சமாதி அமைந்துள்ளது. இவரது அதிஷ்டானமும் மலையடிவாரத்திலேயே மிக அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அவரது ஆராதனையில் விபூதி வாசனை ரூபத்தில் அவர் இன்றும் பலருக்கும் பிரத்யக்ஷமாவதாகக் கூறப்படுகிறது. 

1983ம் ஆண்டு ஜனவரி 20ம் நாள் ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளால் இன்னொரு சந்நிதியில் முருகப் பெருமானின் உருவம் அமைக்கப் பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

மலை ஏறிச் செல்லும் வழியில் அழகுற அமைந்துள்ள மண்டபத்தில் பிரம்மாண்டமான சிலா ரூபங்களைக் காண்கிறோம்.பஞ்சமுக கணபதி, வனதுர்க்கை, ஐயப்பன், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி....என எல்லா வடிவங்களுமே பிரம்மாண்டம். தற்காலத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்ட சிலை வடிப்பின் துவக்கம் இங்கிருந்தே தொடங்கியது என்று கூடச் சொல்லலாம்.இவற்றைத் தொடங்கி வைத்தவர் ஸ்ரீ ஸ்வயம்பிரகாசரின் சீடரான ஸ்ரீ சாந்தானந்தர்.சேலம் மாவட்டம் ஸ்கந்தகிரியில் உள்ள கந்தாஸ்ரமம், புதுக் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகளின் அதிஷ்டானம், சென்னையில் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் ஆகியவை இவர் திருப்பணிதான்.

அமைதியான ஆலய சூழல் தியானம் செய்ய ஏற்றதாக அமைந்துள்ளது. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்  இந்த கோவிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

குருவருள் திருவருளைச் சேர வைக்கும்.அவ்வகையில் ஸ்வயம்பிரகாசரின் அதிஷ்டானமும், ஆதிகுரு தத்தரின் சந்நிதியும் அமைந்துள்ள சேந்தமங்கலத்தை தரிசித்தால் வாழ்வில் மங்கலம் சேரும்.

ஆலயம் நாமக்கல்லில் இருந்து 10 கி.மீ.
தரிசன நேரம்...காலை 6 1/2-12;   மாலை....5-7 1/2

தொடர்புக்கு...9944848962
திங்கள், 1 டிசம்பர், 2014

தி இந்துவில் வெளியான என் கருத்து...

30 நவம்பர், 2014 தி இந்து தமிழ் செய்தித் தாளின் பெண்களுக்கான இணைப்பான  'பெண் இன்று' பதிப்பில் விவாதக் களம் பகுதியில் வெளியான என் கருத்து...தி இந்து தமிழ் தினத் தாள் 30-11-2014 ல் வெளியான என் கருத்து
அடக்கவும் வேண்டாம் எதிர்க்கவும் வேண்டாம்

நம் நாட்டு இளைஞர்கள் வாழ்வில் சாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இந்தப் போராட்டம் தேவையில்லாதது. தொலைக் காட்சிகளில் வரும் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொள்ளுவதைப் பார்க்கவே சகிக்கவில்லை. இதில் தெருத் தெருவாக முத்தமா? முத்தம் என்பதற்கான சிறப்புத் தன்மையே காணாமல் போய்விடும்.சனி, 12 ஜூலை, 2014

அம்பிகை மூவர்ஞாயிறு, 22 ஜூன், 2014

ஆலயம் கண்டேன்.....வீரபத்ரேஸ்வரர்