Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

கன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்

குமுதம் பக்தி செப்டம்பர் 2003 இதழில் வெளியானது
ஊழிக் காலத்தில் உலகே அழிந்து ஜலமயமான சமயம், பிரம்மாவின் வேண்டுகோளின்படி ஈசன் அமிர்த கலசம் தங்கிய தலமே கும்பகோணம்.

கலசத்திலிருந்து வழிந்தோடிய அமுதம் தங்கிய இடமே ‘அமுத சரோருகம்’ அன்றழைக்கப்படும் இன்றைய மகாமகக் குளம்.

குரு சிம்ம ராசியிலிருக்க, சந்திரன் கும்ப ராசியிலிருக்கும் மாசி மாத மக நட்சத்திரப் பௌர்ணமி நாளன்று ‘மகாமகம்’ நடைபெறுகிறது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், மிகப் பெரிய புகழ் பெற்ற திருவிழாவாகும்.

இக்குளத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நவகன்னியர், இக்குளத்தின் வடகரையில் உள்ள ஸ்ரீ காசி விசுவநாதர் ஆலயத்தில் அருள் புரிகின்றனர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, கோதாவரி, துங்கபத்திரை, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது தீர்த்த தேவதைகளும் தங்களில் சேர்ந்துவிட்ட பாபங்களின் சுமை தாங்கமுடியாது திணறினர். கைலாசபதியிடம் சென்று ‘பூவுலக மக்கள் தம் பாவங்கள் நீங்க எங்களிடம் நீராடுகின்றனர். நாங்கள் அப்பாபங்களைப் போக்கிக் கொள்வது எப்படி?’ என்று கேட்டனர். ஈசன், ‘மகாமகக் குளம் சென்று நீராடி உங்கள் பாபங்களைப் போக்கிக் கொள்வீர்’ என்றார். அதோடு, அவர்களைத் தன்னுடன் காசிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த பார்வதி தேவியோடு பிரதம கணங்களையும் அழைத்துக் கொண்டு, குடந்தை வந்தடைந்தார். ஈஸ்வரன் மேற்கு முகமாக அமர்ந்து, ஒன்பது கன்னிகைகளையும் மகாமக தீர்த்தத்தில் மூழ்கச் செய்து அவர்களின் பாபம் போக்கியதாக புராண வரலாறு. பின் நவ கன்னியரும் அவ்விடத்திலேயே இருக்க ஆசைப்பட்டு, இறைவனுடன் அவ்வாலயத்திலேயே இடம் பெற்றனர்.

காசியிலிருந்து வந்ததால் இறைவன் காசி விசுவநாதராகவும், தேவி விசாலாட்சியாகவும் போற்றப்படுகின்றனர். நவகன்னியர் நீராடி புனிதம் பெற்ற இத் தீர்த்தம், ‘கன்னிகா தீர்த்தம்’ என்றும் வழங்கப்படுகிறது.

இத் தீர்த்தத்தை ஒரு முறை வணங்கினால், தேவர்கள் அனைவரையும் வணங்கிய பலன் கிட்டும். ஒரு முறை வலம் வந்தால், பூமியை நூறுமுறை வலம் வந்த புண்ணியம் ஏற்படும். ஒரு முறை நீராடினால், காசியில் நூறு வருடங்கள் வாழ்ந்த பலன் கிட்டும். மகாமகத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுவதால் ஏழு தலைமுறையினரின் பாவம் நீங்கும்.

ராவண சம்ஹார சமயம், ராமர், ருத்ராம்சம் வேண்டித் தவமிருந்தபோது, ஈசன் தன் அம்சத்தை அவருக்கு அளித்ததால் ‘காயாரோகண நாதர்’ எனப் பெயர் பெற்றார்.

அழகான தோற்றத்துடன், வழிபடும் அன்பர்க்கு அமைதியும், அருளும் அளவின்றி அருளும் அப்பன் காசி விசுவநாதன், அன்னை விசாலாட்சி சந்நிதிகளை தரிசித்த பின், நவ கன்னியரைத் தரிசிக்கலாம். அழகிய உருவத்துடன் காவேரியை மையமாகக் கொண்டு வலப்பக்கம் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதியும், இடப்பக்கம் கோதாவரி, துங்கபத்திரை, கிருஷ்ணா, சரயு நதிகளும், தங்களை வேண்டி வரும் மங்கையர்க்கு அருளைத் தர, நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். பூப்பெய்தாத பெண்கள் இந்த நவ கன்னியரை பக்தியுடன் வணங்கி, வழிபட்டு பன்னிரண்டு வெள்ளிக் கிழமைகள் விரதம் இருந்தால், விரைவில் பலன் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.

திருமணம் ஆகாத பெண்கள் பன்னிரு வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து நவகன்னியருக்கு அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்றும், குழந்தை பேறு இல்லாதோர் மக நட்சத்திர நாளில் பொங்கல் செய்து நிவேதித்து, பின் வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்தால் கைமேல் பலன் கிடைக்கும் எனவும் சொல்கின்றனர். மாதம் தோறும் மக நட்சத்திரத்தன்று மகாமகத் திருக்குளத்தை மாலையில் ஒன்பது முறை வலம் வந்து, நவ கன்னியருக்கு பாலாபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்தால், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.


கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் நவதீர்த்தக் கன்னிகைகள் கோயில் கொண்டிருக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக