கண்கண்ட தெய்வமாக விளங்கும் திருவேங்கடமுடையான்,
அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள ஆலயங்கள் பலப்பல.
அப்படி அமைந்து, மும்பை
பக்தர்களுக்கு திருப்பதியின் தரிசன பல்னைத் தருபவர் மும்பை ஃபனஸ்வாடியில்
எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள்.
ஸ்ரீமத் அநந்தாசாரியார், காஞ்சி
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சன்னதியிலிருந்து ஒரு மூர்த்தியும், திருநாங்கூர்
புருஷோத்தம பெருமாள் சன்னதியிலிருந்து சுதர்சன ஆழ்வாரையும் பல்லக்கில் சுமந்து,
நடைப் பயணமாகவே மும்பை கொண்டு வந்து எழுந்தருளச் செய்துள்ளார்.
கிழக்கு நோக்கி சிவப்புக் கற்களால்
கட்டப்பட்ட நுழைவு வாயிலைத் தாண்டியதும், அழகிய பதினாறு கால் மண்டபம் உள்ளது.
மண்டபத்தின் தூணில் காட்சி தரும் தும்பிக்கை ஆழ்வாரை வணங்கி உள்ளே சென்றால்,
நெடிதுயர்ந்த, தங்கக் கவசமிட்ட துவஜஸ்தம்பம் காட்சி தருகிறது. இதையடுத்து மஹா
மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக் கிரஹம் உள்ளன. துவாரபாலகர்கள் வாயிலில் காவல்
செய்ய, கர்ப்பக் கிரக இறைவன், திருமலை நாதனின் மறுபதிப்பாக இருக்கிறார்.
ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால
சுவாமியும், சீதா லக்ஷ்மண சமேத ராமபிரானும், ஸ்ரீதேவியுடன் வரதராஜர், லக்ஷ்மி
நரசிம்மர், சக்கரத்தாழ்வார் ஆகியோரும் எழிலே உருவாகத் தனித்தனி சன்னதிகளில் காட்சி
தருகின்றார்.
ஆலய வெளிப்பிரகாரத்தில் ரங்கநாதர்
சன்னதியும், அடுத்து பத்மாவதித் தாயாரும் உடன் ஆண்டாளும் அருட் காட்சி
அளிக்கிறார்கள்.
வெளிப் பிரதட்சிணத்தில், வேலைப்
பாடமைந்த கண்ணாடிகளால் அமைக்கப்பட்ட வெள்ளிக் கிழமை மண்டபம் உள்ளது. இதில் ஒவ்வொரு
வெள்ளிக் கிழமையும் தாயார் எழுந்தருளி சேவை சாதிப்பார். இங்கு சலவைக் கல்லில்
சீதையும், 108 திவ்ய தேச எம்பெருமான்களின் அழகிய சித்திரங்களும், அற்புதமாக
வரையப்பட்டுள்ளன. ராமானுஜர் சன்னதியில் ஆழ்வார்கள் எழுந்தருளியுள்ளனர். ஆலய
நுழைவாயிலின் வலப்புறம், இவ்வாலயத்தை நிர்மாணித்த ஸ்ரீஅநந்தாசாரியாரின் திருவுருவச்
சிலை உள்ளது.
ஸ்ரீராமநவமி. ஸ்ரீஜயந்தி,
நவராத்திரி, திருவேங்கடமுடையான் திரு அவதார உற்சவம், வைகுண்ட ஏகாதசி, தனுர் மாத
உற்சவங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆவணி மாத ஜூலா உற்சவத்தில்
(டோலோத்ஸவம்) இறைவனை ஆலிலை, வெண்ணெய்த்தாழி, அனந்த சயனக் காட்சிகளில் காணக்
கண்கோடி வேண்டும்.
திருப்பதி சென்று திருவேங்கடவனைக்
காணும் ஆவல் ஏற்படும் போதெல்லாம், இந்த சின்னத் திருப்பதியில் அதே அருட் கோலம்
காட்டி ஆட்கொள்ளும் பெருமாள், மும்பை தமிழர்களுக்கு மட்டுமன்றி இங்கு வாழும்
அனைத்து மாநில மக்களுக்கும் இஷ்ட தெய்வமாக விளங்குகிறான்.
ஃபனஸ்வாடி சின்ன திருப்பதிக்கு
மும்பை விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையத்திலிருந்து டாக்ஸியில் செல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக