Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

பஸ்சிம் திருப்பதி

ஞான ஆலயம் ஜனவரி 2003 இதழில் வெளியானது
‘கோவிந்தா கோவிந்தா’ என்று ஊனுருகி, உள்ளமுருகி அழைக்கும் பக்தர்களின் கூக்குரலுக்கு ஓடிவந்து அருள் செய்பவர், திருமலையாம் திருப்பதியில் கோயில் கொண்டுள்ள கலியுக வரதன், கண்கண்ட தெய்வம் ஸ்ரீவெங்கடாசலபதி. அந்த பாலாஜியை தரிசிக்க மும்பையிலிருந்து திருப்பதிக்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாதே? அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில், மும்பைவாழ் பக்தர்களுக்கு தரிசனம் தந்து, அவர்களின், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவரே டோம்பிவிலி கிழக்கில், கோக்ரஸ்வாடியில் உள்ள ‘பஸ்சிம் திருப்பதி’ – (பஸ்சிம் என்றால் இந்தியில் மேற்கு) ‘பிரார்த்தனா வெங்கடேசுவரர்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் பெரியாஸ்ரமத்தின் கீழ் இயங்கும் இந்த ஆலயம், திருக் குடந்தை ஆண்டவன் சுவாமிகளின் அருளாசியால் உருவாக்கப்பட்டது. எழுபதுகளில் மும்பைக்கு பாத யாத்திரை வந்த ஆண்டவன் சுவாமிகளை, டோம்பிவிலி பக்தர்கள் வரவேற்று அவரது ஆசிகளை வேண்டினர். அவர் மனதில் கோக்ரஸ்வாடி என்ற கோகுல க்ஷேத்திரத்தில் எம்பெருமான் ஸ்ரீநிவாசனுக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அவரது ஆசிகளுடன், அவர் தலைமை, வழிகாட்டலில் மும்பை பக்தர்களால் ஆலயம் உருவானது.

1979ல் அடிக்கல் நாட்டியபோது நூறுகளில் இருந்த தொகை, ஒரேவருடத்தில் கோடிகளை எட்டியது, அந்தச் செல்வச் சீமான் ஸ்ரீநிவாசனின் அருள் என்பதை உணர்ச்சி பூர்வமாகச் சொல்கிறார், கோயிலின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு. நாராயணாச்சாரி.

1983 ஜனவரியில் கும்பாபிஷேகம் ஆன பாலாஜி மந்திர் வெகு சீக்கிரமே பிரசித்தி பெற்று, மும்பை மற்றும் சுற்றுப்புறங்களிலுள்ள பக்தர்களின் வருகை அதிகமாக, ஆலயமும் படிப்படியாக முன்னேறி ராஜகோபுரம், ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், பத்மாவதித் தாயார், ஆண்டாள், ஹனுமான் சந்நிதிகள் என்று வளர்ந்து, கடந்த 2001 ஜனவரியில் ஆஸ்ரமத்தின் தற்போதைய குருவான ஸ்ரீமுஷ்ணம் தேசிகன் சுவாமிகளால் கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.

ஓங்கி உயர்ந்து நிற்கும் த்வஜஸ்தம்பத்தை தாண்டிச் சென்றதும், பெருமாளின் வலப்பக்கம் சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமர் சந்நிதிகளை அடுத்து பத்மாவதித் தாயாரின் சந்நிதி. தாயாரின் அழகு கண்களையும், மனதையும் நிறைக்கிறது. நம் வேண்டுதல்களை அன்னையிடம் விக்ஞாபித்தபின் ஐயன் வேங்கடவனின் தரிசனம். திருப்பதியில் காட்சி தரும் அதே நிலையில் காட்சி தரும் ஸ்ரீநிவாசனைத் தரிசிக்கும்போது, ஒரு நிமிடம் திருப்பதியில் நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.

‘ஜரகண்டி’ என்று நம்மைத் தள்ளுபவர்கள் யாருமில்லாததால், நிம்மதியாக நின்று ஐயனின் அழகை, அருளை கண்ணுக்குள்ளும், மனதுக்குள்ளும் நிறைத்தபடி, வெளியேறி, இடப்பக்கம் உள்ள ஆண்டாள் சந்நிதியை தரிசிக்கலாம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பூதேவி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறாள். அடுத்து, அனுமன் மற்றும் ஆழ்வார்கள் சந்நிதி.

ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் ஸ்ரீரங்கநாதர் பாதுகை சிலா ரூபத்திலும், அதன் முன்புறம் நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளது. வைணவக் கோயில்களில் காண முடியாத சிறப்பு.

ஆலயத்தில் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. நைவேத்தியம் ஆலய மடப்பள்ளியில் மிகுந்த ஆசாரத்துடன் தயாரிக்கப்படுகிறது. இருவேளையும் வேதம், திவ்வியப் பிரபந்தம் ஓதப்படுகிறது.

இங்கு திருமணம், பிள்ளைப்பேறு, வேலை வேண்டி நேர்ந்து கொள்பவர்களின் விருப்பம் வெகு விரைவில் பூர்த்தியடைகிறதாயும், அதற்கென அவர்கள் செலுத்தும் காணிக்கையால் கொடிமரத்திற்கு கவசம், திருமண மண்டபம், சுற்றுப் பிரகார தளம், வாகனங்கள் இவை உருவாக்கப்பட்டதாயும் கேட்டபோது இறைவனின் அருள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

இங்கு வேண்டிக்கொண்டு திருமணம் நிச்சயமானவர்கள் இறைவன் சந்நிதியிலேயே திருமணம் நடத்த விரும்பவே, ஒரு பெரிய திருமண மண்டபம் கட்டப்பட்டு, குறைவான கட்டணத்தில் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடத்தப்படுகின்றன.

இந்து மதத்தில், காலமான மூதாதையருக்கு செய்ய வேண்டிய சிரார்த்த காரியங்கள், இறை வழிபாட்டுக்கு அடுத்தபடியாகக் கூறப்பட்டுள்ளன. மும்பையில் அவசர கதியில், குறைந்த இடவசதி, ஆசாரக் குறைவு, நேரமின்மையால் இவற்றைச் செய்ய முடியாமல் மனம் வருந்துவோர், அவற்றை முறையாகச் செய்ய எல்லா வசதிகளும் குறந்த கட்டணத்தில், ஆலயத்தில் செய்து தரப்படுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வைணவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் இவ்வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திரு. நாராயணாச்சாரி கூறினார். மேலு, ஜாதக பரிவர்த்தனை, பொருத்தம் முதலியவையும் அவர் பார்த்துச் சொல்கிறார்.

ஆலயத்தில் கல்யாண உற்சவம், சுதர்சன ஹோமம், ஸஹஸ்ர நாம அர்ச்சனை ஆகிய உற்சவங்களும், தை மாதம், பிரம்மோத்சவம் 10 நாட்களும், வருடம் தோறும் ஏழு நாட்கள் பவித்ரோத்சவமும், நவராத்திரி உற்சவம் மற்றும் மார்கழி ராப்பத்து, பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு ஆகியவையும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைணவ ஆசாரியர்களின் அவதார தினங்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன...

ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் இங்கு விஜயம் செய்யும்போது, ஆசிரமத்தில் ‘குரு பாதுகா பூஜை’ நடத்தப்படுகிறது.

மும்பையில், தானே – கல்யாணுக்கு இடையில் அமைந்துள்ள டோம்பிவிலி ரயில் நிலையத்தில் இறங்கி கோக்ரஸ்வாடி பாலாஜி மந்திரை அடையலாம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக