சிறு வயது முதலே சினிமாக்களிலும், புகைப்படங்களிலும் ஸ்விட்சர்லாந்தின் அழகைப் பார்த்து மயங்கி, 'நாம் ஒருநாள் அங்கு செல்ல முடியுமா? அந்த இயற்கை அழகில் ஆழ அமிழ்ந்து நம்மை மறக்க
முடியுமா? ' என்று யோசித்து, 'நடுத்தர குடும்பத்தினரான நம்மால் அங்கு செல்வது நடக்காத செயல்' என்று கனவு மட்டுமே கண்டு கொண்டிருந்த அனக்கு, என் மகனால் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.
ஜெர்மனியிலுள்ள ஸ்டுட்கார்ட்டில் உலகப் புகழ்
பெற்ற மாக்ஸ் பிளான்க் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சித் துறைப் பிரிவில்
பணியாற்றும் என் மகனுடன் தங்கியிருக்கச் சென்ற எனக்கு, ஸ்விட்சர்லாந்து செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. என் கனவும் நனவானது!
ஸ்டுட்கார்ட்டிலிருந்து ஸ்விட்சர்லாந்தின் மிக
முக்கிய நகரமான சூரிச்சிற்கு காரில் சென்றோம். வெள்ளிப் பனிமலையாய் தோன்றிய
ஆல்ப்ஸ் மலைத் தொடர்களை காரை அங்கங்கு நிறுத்தி ரசித்தபடியே சென்றோம். அழகான
சாலைகளும், நெரிசலில்லாத போக்கு வரத்தும், அங்கங்கு வைக்கப் பட்டிருக்கும் வழிகாட்டிகளும், சிரமமில்லாத சாலைப் பயணத்துக்கு துணை செய்கின்றன. சாலை விதிகளை மீறக்கூடாது
என்று எச்சரிக்க அங்கங்கு காமிராக்கள் உள்ளன. மீறியவர்களைப் பற்றிய தகவல் (கார்
எண்) காவலருக்குத் தெரிந்து, அபராதம் வசூலிக்கப்படுமாம்.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஏரிகளுக்கும், அருவிகளுக்கும் பஞ்சமே இல்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான். அந்த அளவில்லாத
தண்ணீரைப் பார்த்தபோது, எனக்கு சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடுதான்
நினைவுக்கு வந்தது.
சுவிஸ்ஸின் மிகப்பெரிய, அகலமான ரீன் அருவி, 'ஹோ'வென்ற சத்தத்துடன், பயங்கர வேகத்துடன் வந்துவிழுவது கண்கொள்ளாக் காட்சி. அருவியை மிக அருகில்
சென்று ரசிக்க பாதுகாப்பாக வழி செய்திருக்கிறார்கள். எந்த அருவியிலும் யாரும்
குளிப்பதற்கு நம் நாடு போல் அனுமதிப்பதில்லை. அதனாலேயே அருவியில் வந்து ஆறாக ஓடும்
நீர் படுசுத்தமாக, பளிங்குபோல் உள்ளது.
மலைகளுக்குச் செல்ல அழகான, விதவிதமான ரயில்கள் உள்ளன. இவற்றில் கண்ணாடியால் சுற்றிலும்
மூடப்பட்டிருப்பதால், வெளியிலுள்ள இயற்கைக் காட்சிகளை நன்கு ரசிக்க
முடிகிறது. இங்குள்ள ரயில் நிலையம் ஐரோப்பாவிலேயே உயரமானது. நாங்கள் கேபிள் கார்
மூலம் மலை உச்சிக்குச் சென்றோம். அப்பா! என்ன அற்புதமான மனதை மயக்கும் அழகு.
கண்கள் இமைக்க மறந்து அந்த இயற்கை அழகை ரசித்தோம்.
எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேரென்ற பனி மேடு, பள்ளம் தெரியாத பளிங்குப் பாதை. 'கிளேசியர்' எனப்படும் ஐஸ் பாறைகள். நமக்கு சற்று பயமாக இருந்தாலும், அந்நாட்டு மக்கள் அந்த ஐஸில் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள்.
சிறுவர் முதல் முதியோர் வரை இரு கைகளில் கழிகளுடன் டிரெக்கிங் செல்கிறார்கள்!
கேபிள் காரில் செல்லும்போது கீழே பார்த்தால் கதி கலங்குகிறது. வித்தியாசமான
அனுபவம். இங்குள்ள ஐஸிலான அரண்மனையில், ஐஸால் விதவிதமான உருவங்களை செதுக்கி
வைத்துள்ளனர். இந்த ஐஸ் பேலஸ் ஒரு குறிப்பிட்ட உறை நிலையில் உள்ளதால், வருடம் முழுவதும் இவை உருகுவதில்லையாம்.
லூசர்ன் (Luzern) - இது ஸ்விஸ்ஸின் மிக அழகான, பழமையும், பாரம்பரியமும், இன்றைய நாகரிகமும் கலந்த மிக அழகிய நகரம். இங்குள்ள மிகப் பெரிய ஏரியும், அதில் அமைந்துள்ள வாட்டர் டவர் மற்றும் சேப்பல் பிரிட்ஜ் ஆகியவை ஐரோப்பிய
புகழ் பெற்ற பழங்காலச் சின்னங்கள். இந்தப் பாலம் முழுதும் மரத்தால் செய்யப்பட்டது.
இங்கு 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட வண்ண ஓவியங்கள்
இப்பாலத்தின் மேல் பகுதியில் இன்றும் புது மெருகழியாமல் காணப்படுகின்றன.
இந்நகரிலுள்ள மியூஸெக் சுவர்,
1400ம்
ஆண்டு கட்டப்பட்டது. முறையாகப் பராமரிக்கப்படும் இச்சுவர் மிக நீளமான சீன், பெர்லின் சுவர்களுக்கு இணையான புகழ் பெற்றது. இந்நகருக்கு மேலும் சிறப்பு
சேர்ப்பது 1792ல் உருவாக்கப்பட்ட 'தி டையிங் லயன் மோனுமென்ட்'
(Dying Lion Monument) ஃப்ரென்ச் முடியாட்சியைக் காப்பாற்றப் போராடி படுகொலையான
ஸ்விஸ் வீரர்களின் நினைவாக தோர் வால்ட்சன் என்ற சிற்பியால் பல மில்லியன்
ஆண்டுகட்கு முந்தைய கடல் மணலால் உருவாக்கப்பட்டது.
ஸ்விஸ்ஸில் மிகப் பிரபலமான ஸ்விஸ் வாட்சுகளும், நாவில் கரையும் விதவிதமான சாக்லேட்டுகளும் வாங்க, லூசர்ன் சிறந்த இடமாக உள்ளது. ஒன்றா,
இரண்டா? பல நூறு வெரைட்டிகளில் உள்ள சாக்லேட்களை பொறுக்கி வாங்குவதே பெரிய வேதனைதான்!
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. லூசர்ன் தவிர ஜெனிவா, சூரிச், இன்டர் லேகன், இங்கல்பர்க் என்று ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அழகு!
பனி மூடிய மலைகள், வெள்ளை வெளேரென்று சில்லிடும் பனித்தூவல், உடலை உறைய வைக்கும் குளிர், பச்சை பசேல் புல் வெளிகள், ஆழமான திகிலூட்டும் பள்ளத்தாக்குகள்,
ஏரிகள், ஹோவென்று கொட்டும் அருவிகள் என்று அத்தனை அழகையும் தன்னுள் கொண்டு, உலகச் சுற்றுலா தலங்களில் முதலாவதாக விளங்கும் ஸ்விட்சர்லாந்தைவிட்டு வரவே
மனம் வரவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக