Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

என்னுயிர் தோழி.... கேளொரு சேதி!

அவள் விகடன்–செப்டம்பர் 29, 2000 இதழில் வெளியானது
                                                                                                      
                           

                  
‘ரொமான்ஸ் ரகசியங்கள்’ நானும் என் கணவரும் இணைந்து, விரும்பிப் படிக்கும் தொடர்! வாழ்வில் ரொமான்ஸ் எவ்வளவு அத்யாவசியம் என்பதை விரசமின்றி புரிய வைக்கிறது. நானும் என் கணவரும் திருமண வாழ்வில் கால் சதமும், வயதில் அரை சதமும் முடித்து விட்டோம். ஆனாலும் ‘இன்று புதிதாய் மணந்தோம்’ என்ற ரீதியில்தான் வாழ்கிறோம். காரணங்களை சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஊடல்...கோபம் இல்லாத வாழ்க்கை யாருக்கேனும் உண்டா என்ன? இதைக் கேளுங்கள்! ஒரு நாள் அவர் ‘பாண்ட்’டுக்கு பட்டன் தைக்கச் சொன்னார். நான் மறந்துவிட்டேன். மறு நாள் காலை நேர அமளியில், ‘என் பாண்டில் பட்டன் கூட தைக்காமல் நாள் முழுக்க அப்படி என்னதான் செய்கிறாய்?’ என்று சத்தம் போட்டார். சமையல் டென்ஷனிலிருந்த எனக்கும் ‘ஈகோ’ கிளம்பியது. ‘சே, நானென்ன சும்மாவா இருக்கிறேன்?’ என்று கேட்க வாயெடுத்தேன். அப்படிக் கேட்டால் கோபம் இன்னும் அதிகமாகும்.

‘அட்டா, நேற்று பட்டன் தைக்க எடுத்தேனா, சட்டையைத் தொட்டதும் உங்கள் ஞாபகம் வந்து, எதோ பழைய நினைவுகளில் மூழ்கி பட்டன் தைக்கவே மறந்து போச்சு, சாரி, இதோ இப்ப தைத்துவிடுகிறேன்’ என்று கூலாக சொன்னேன். அதற்கு மேலும் சத்தம் போடுவாரா என்ன? பிறகு நான் அவரை ‘தாஜா’ செய்ய... (தவறு என்னுடையதாயிற்றே) அவர் என்னைக் கொஞ்ச... இது போன்ற சந்தர்ப்பவாத சமாளிப்புகள் தாம்பத்யத்துக்கு மெருகூட்டும் ரகசியங்கள்!

ஒருவர் செய்த தவறுகளை திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டாமல், சரியான சமயத்தில் சொல்லிப் புரியவைப்பது, ஒருவர் அழகை மற்றவர் தாராளமாகப் புகழ்வது, விட்டுக் கொடுப்பது... இவற்றால் தாம்பத்ய சுவை கூடுமென்பது என் அனுபவம்!

வெளியில் அலுவலகத்தில் ஆயிரம் கவலை, டென்ஷன் என்று வேலை முடித்து ஓய்ந்து வீட்டுக்கு வரும் கணவன் அன்பும், ஆதரவும் தேடுவது படுக்கையறையில் மனைவியின் மடியில்தான்! அதைப் போர்க்களமாக்காமல், பூஞ்சோலையாக்கினால் மனைவியின் அன்பில் கட்டுப்பட்ட கன்றுக்குட்டியாகி விடுவான் கணவன். இருவர் உடலும், மனமும் இசைந்த தாம்பத்ய வடிகால் என்பது எங்கள் அனுபவம்!

என் கணவரின் ஆசையை நானும், என்னுடையதை அவரும் மதிக்கும்போது, நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு வரைமுறை ஏது?

எத்தனை கோபம், சண்டை இருந்தாலும் நாங்கள் இதுவரை தனியாகப் படுத்ததில்லை!

எங்கள் தாம்பத்யத்தில் நேற்று கூட சுவாரஸ்யம்தான்! ‘லைட்டை அணை’ என்று என் கணவர் சொல்ல, நானோ லேசாக அவரை அணைக்க முயன்றேன். ‘ஏய்! என்ன இது?’ என்றார் அவர். ‘நீங்கதான் லைட்டா அணைக்கச் சொன்னீங்க?’ என்று நான் ‘கடி’க்க ‘என்ன ரொமான்ஸா?’ என்றார் குரல் குழைய. சேச்சே! இது ரொ’விமன்’ஸ் என்று நான் திரும்பவும் கடிக்க... அதற்குப் பின் அங்கு பேச்சுக்கு இடமேது!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக