நம் பாரத நாட்டில் வாழ்ந்து
மறைந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்கள் பலர். அவர்களுள் இறைவன்
முருகனையே பாடி, பேசி, சுவாசித்து முருகனருளை தன் உயிர் ஓயுமட்டும் உலக மக்களும்
அறியும்படி, எளிய சுவையான கதைகளாகச் சொல்லி ஆன்மீக அன்பர்களின் நெஞ்சங்களில்
நீங்கா இடம் பெற்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவர் ஒரு
முத்தமிழ்க் காவலர். ‘முருகா முருகா’ என்றே மூச்சு விட்டவர். திருப்புகழ் அமிர்தம்
தந்த தீந்தமிழ்க் காவலர்.
கிருபானந்த வாரியார் தொண்டை
நாட்டில் பாலாற்றின் கரையோரம் முருகனின் ஆலயம் அமைந்துள்ள காங்கேய நல்லூரில்
25.08.1906-ல் தோன்றினார். தந்தையார் மல்லயதாசர், தாயார் கனகவல்லி. வீரசைவர் குலத்தில்
பிறந்த வாரியார் அவரது பெற்றோரின் பதினோரு குழந்தைகளில் நான்காமவர். வாரியாரின்
தந்தையார் சிறந்த பண்டிதர். ஆன்மீகச் சொற்பொழிவுகளை நடத்துபவர்.
வாரியார் சுவாமிகள், மூன்று
வயதிலிருந்தே தன் தந்தையிடமிருந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பள்ளிக் கூடம்
செல்லாமலேயே, தந்தையையே குருவாகக் கொண்டு சகலமும் கற்றுத் தேர்ந்தார்.
கர்நூல் என்ற ஊரில் வாரியார்
சுவாமிகளின் தாய் வழிப் பாட்டி இருந்தார். அவ்வூரில் ‘குருபலம்’ என்ற மகான்
அஷ்டமாசித்திகள் பெற்றவர். சூடத்தை தங்கமாக்குவது போன்ற சித்துகளை செய்வார்.
ஒருமுறை வாரியாரின் பாட்டி தன் மருமகனுக்கு (வாரியாரின் தந்தைக்கு) ஒரு தங்கக்
கட்டி உண்டாக்கித் தரும்படி கூறினாராம். அவரோ, ‘உன் மகள் வயிற்றில் பிறக்கப்
போகும் குழந்தையால் வீடே தங்கமாகும்’ என்றாராம். அவர்களின் குல வழக்கப்படி
வாரியார் சுவாமிகள் ஐந்தாம் வயதில் திருவண்ணாமலையில் பாணிபத்ர மடத்தில்
லிங்கதாரணம் செய்யப்பட்டு சிவதீட்சை பெற்றார். அவரது தந்தையிடம் சடாக்ஷர
மந்த்ரோபதேசம் பெற்றார். பழனி சிவத்திரு ஈசான சிவாச்சாரிய சுவாமிகளால் நிர்வாண
தீட்சை பெற்று ‘வாமதேவ சிவம்’ என்ற தீக்ஷா நாமம் பெற்றார்.
சுவாமிகளுக்கு இறையருளால் சகல
கலைகளும் தானாகவே கைவரப் பெற்றன. எட்டு வயதில் வெண்பா பாடும் திறன் பெற்றார்.
பனிரெண்டு வயதில் அஷ்ட நாக பந்தம், மயில், வேல், சிவபந்தங்களை தவ்றின்றி
ஒப்புவிப்பார். ப்ரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை பயின்றார். இசையிலும்
தேர்ந்தார். வயலின் வாசிப்பார்.
ஒருமுறை அவரது தந்தையால் சொற்பொழிவு
ஆற்ற முடியாமல் போக, அச்சமயம் வாரியார் சுவாமிகள் சென்று சொற்பொழிவு நடத்தி,
அனைவரின் பாராட்டையும் பெற்றார். பாம்பன் சுவாமிகளை தரிசித்து கனவில் அவரிடம் ‘சடாக்ஷர’
உபதேசம் பெற்றார். திருப்புகழ் சுவாமிகளிடம் திருப்புகழ் கற்றுத் தேர்ந்தார். தன்
குருவின் குடும்பத்தை 25 வருடங்கள் கவனித்துக் கொண்டார்.
தமது 19 ஆம் வயதில் தாய் மாமன்
மகளான அமிர்தலட்சுமி அம்மையாரை மணந்தார். உலகம் முழுவதும் இறையருளை பரவச் செய்யும்
சுவாமிகளை ஒரு சிறு குடும்பம் என்ற கூட்டுக்குள் அடைக்க அவர் இஷ்ட தெய்வம் வயலூர்
முருகனுக்கு இஷ்டமில்லாததால், அவருக்குக் குழந்தை வரம் தரவில்லை போலும்!
முருகப் பெருமானை வள்ளல் என்றும்,
அவர் மனைவியை வள்ளி என்றும் சொற்பொழிவாற்றும் வாரியார், பெயருக்கேற்றபடி வாரி
வழங்கும் வள்ளலாக விளங்கினார். பல தர்ம காரியங்கள் செய்துள்ளார். அவர்
சொற்பொழிவாற்றி ந்ன்கொடை வசூலித்துக் கொடுத்ததால் கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் பலப்பல.
திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராம கிருஷ்ண குடில் கல்வி நிலையத்திற்கு பல லட்ச
ரூபாய் நன்கொடை திரட்டிக் கொடுத்தார். ‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்
கூடாது’ என்பதற்கேற்ப ஓசைப்படாமல் அவர் செய்த தான தர்மங்கள் எண்ணற்றவை. ஸ்ரீகாஞ்சி
மகா பெரியவரோ ‘கிள்ளிக் கொடுக்க கணக்கு பார்க்கும் இவ்வுலகில் அனுதினமும் அள்ளிக்
கொடுக்கிறாயே’ என்று இவரைப் பாராட்டியுள்ளார்.
மேடையில் சொற்பொழிவாற்ற பக்க வாத்தியங்கள்
சகிதம், பளிச்சென்ற திருநீறும் மத்தியில் குங்குமமும் துலங்க பரங்கிப் பழம் போன்று
அமர்ந்து, ‘கைத்தல நிறைகனி’ என கணீரென்று அவர் கதை சொல்ல ஆரம்பித்தால், கதை
முடியும்வரை பக்கத்தில் திரும்பக்கூட முடியாமல் நம்மை கட்டிப்போடும் திறமை கொண்டவர்.
படித்தவர் மட்டுமின்றி பாமரரும் அவர் கதையைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் பாணியில்
சொற்பொழிவாற்றுவதில் அவருக்கு இணையாக யாருமே கிடையாது. அவர் கூறும் அழகான உவமைகள்,
நகைச்சுவை எடுத்துக் காட்டுகள், துணைக் கதைகள் – இவற்றை ஒரு முறை கேட்டால் வாழ்நாள்
முழுதும் மறக்க முடியாது.
வாரியார் சுவாமிகள் நம் நாட்டில்
மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், ஸ்ரீலங்கா, மலேசியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல
வெளி நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றியுள்ளார். அவர் பெற்ற பட்டங்கள் பலப்பல.
அவற்றில் திருப்புகழ் ஜோதி, பிரவசன சாம்ராட், கலைமாமணி, இசைப் பேரரசர், அருள் மொழி
அரசு என்பவை முக்கியமானவை. அவரது சொற்பொழிவுகள் அத்தனையும் நூல்களாக வெளி
வந்துள்ளன. 1936ஆம் ஆண்டு முதல், ‘திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாத இதழை 37
வருடங்கள் தொடர்ந்து நடத்தினார். இவற்றோடு திரப்படத் துறையிலும் அவர் கால்
பதிக்கத் தவறவில்லை. தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த ‘சிவகவி’ படத்தின் வசன
கர்த்தா வாரியார் சுவாமிகளே! தேவரின் ஆசைக்கும், வற்புறுத்தலுக்கும் இணங்கிய
சுவாமிகள் தெய்வம், துணைவன் போன்ற சில படங்களிலும் நடித்தார்.
வாரியார் சுவாமிகள் வாழ்நாள்
முழுவதும் கோவில், பூஜை, சொற்பொழிவு என்று ஆன்மீகப் பாதையில் அருட் பவனி வந்தார்.
ஒரு நாள் கூட முருகனுக்குப் பூஜை செய்யத் தவறியதில்லை. சதா காலமும் ‘முருகா முருகா’
என்றே மூச்சு விட்டார். 19-10-93 அன்று சொற்பொழிவாற்ற லண்டன் சென்றார். அங்கு அவர்
உடல் நிலை பாதிக்கப்பட, தக்க சிகிச்சை பெற்றபின் தாயகம் திரும்பினார். 6.11.93
லண்டனில் புறப்பட்டு, 7ஆம் தேதி விடிகாலை மும்பை வந்து சேர்ந்தார்.
மும்பையிலிருந்து காலை 6 மணிக்கு விமானத்தில் கிளம்பிய சுவாமிகள், சென்னை வரும்
வழியிலேயே, விண்ணில் அவரது ஆன்மா சிவன்பால் சேர்ந்தது. வள்ளி மணவாளன் வாகாக அவரை
வானிலிருந்தே அழைத்துக் கொண்டான் போலும்! 8.11.93 அன்று காங்கேய நல்லூரில்
சுவாமிகள் சமாதி நிலை கண்டார்கள். மெய்யன்பர்கள் அவரை அறுபத்தி நான்காவது
நாயன்மாராகப் போற்றி வழிபடுகிறனர்.
காங்கேய நல்லூரில் அவர் வாழ்ந்த
வீடு நினைவிடமாக மாற்றப் பட்டுள்ளது. பாலாற்றின் கரையில் அவர் சமாதி உள்ள இடத்தில்
‘தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருக்கோயில்’ எழுப்பப்
பட்டுள்ளது. அமர்ந்த நிலையிலுள்ள அவர் உருவச்சிலை அங்கு மிக அழகாகக் காட்சி
தருகிறது. தம் வாழ் நாளில் இறுதி நிமிடம் வரை இறைவனையே எண்ணி அல்லும் பகலும்
அனவரதமும் அப்பன் முருகன் பெயரையே பாடி ஒரு ஆன்மீக ஆலயமாக பக்தி நெறி பரப்பும் சிவப் பழமாக சிவ நெறிச் செம்மலாக
தமிழ் நாட்டில் மட்டுமின்றி உலகெங்குமுள்ள தமிழ் அன்பர்களின் நெஞ்சத்தில் நீங்கா
இடம் பெற்ற வாரியார் சுவாமிகள் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த மகான்களுள் ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக