Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

சாட்சி நாத சுவாமி ஆலயம்

தெய்வீகப் பொருட் பக்கங்கள் – நவம்பர் 2001 இதழில் வெளியானது






காவிரிப் பூம்பட்டினத்தினின்றும், தன் மாமன் மகள் ரத்னாவளியுடன் மதுரையைச் சேர்ந்த அரதன குப்தன் எனும் வணிகன் மதுரை நோக்கிப் பயணம் செய்யுங்கால், பல தலங்களையும் தரிசித்தபின், திருப்புறம்பயம் வந்து, இரவு மடப்பள்ளி அருகிலுள்ள வன்னி மரத்தடியில் உறங்கிய சமயம், வணிகணை அரவம் தீண்ட இறந்து விட்டான். ரத்னாவளி ஈசனிடம் புலம்பியழுது வேண்டினாள். அந்த நேரம் தல யாத்திரை செய்யும் வழியில் திருப்புறம்பியம் ஈசனை வணங்க வந்த திருஞான சம்பந்தர் அவளது இறைஞ்சுதல் கேட்டு மனமிரங்கி பரமனைத் துதித்து பதிகம் பாடி, வணிகனுக்கு உயிர் கொடுத்து, அங்கேயே அவ்விருவரையும் மணம் செய்து கொள்ளச் செய்தார். மதுரை சென்றடைந்த அவ்விருவரையும், அவனது வீட்டில் இருந்த முதல் மனைவி ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் மணம் புரிந்து கொண்டதற்கு சாட்சிகள் கொண்டு வருமாறு ஊர்ப் பஞ்சாயத்தில் வழக்குத் தொடர்ந்தாள். திருப்புறம்பயம் ஈசனை வேண்டி ரத்னாவளி முறையிட்டாள். ஈசனும் வன்னி மரம், கிணறு, மடப்பள்ளி ஆகியவற்றுடன் மதுரைக்குச் சென்று காட்சி அளித்து அவர்கள் திருமணத்திற்கு சாட்சி பகன்றார். அந்த நிகழ்ச்சியை விவரிக்கும் சாட்சிக் கிணறை இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உட் பிரகாரத்தில் காணலாம். சிலப்பதிகாரத்திலும் இதற்கு சான்று உள்ளது. கண்ணகி தன்னை கற்புடைய மாதர் வழி வந்தவள் என உரைக்குங்கால், ‘வன்னியும், மடைப்பள்ளியும் சான்றாக முன்னிறுத்திக் கொட்டிய மெய் குழலாள்’ என்று ரத்னாவளியைப் புகழ்கின்றாள்.

ரத்னாவளிக்கு சாட்சி சொன்னதால் ஸ்ரீசாட்சிநாத ஸ்வாமி என்ற பெயர் கொண்ட ஈசன் அருள் புரியும் திருப்புறம்பயம் தஞ்சை மாவட்டம், குடந்தை நகரின் வடமேற்கு திசையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பல்லவ வம்சத்து கடைசி அரசன் அபராஜித வர்மனுக்கும், பாண்டிய மன்னனுக்கும், இங்கு நடந்த போரில், பல்லவனுக்கு உதவியாக பாண்டியனை முறியடித்து சோழ நாட்டைப் பெற்ற விஜயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்தன் தன் வெற்றியின் நினைவாக இவ்வாலயத்தைக் கட்டுவித்தான்.

‘புன்னாக வனம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூருக்கு திருப்புறம்பயம் என பெயர் மாறியதற்கான காரணம் ப்ரஹ்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கிருதயுக முடிவில் உண்டான வெள்ளப் பெருக்கிலிருந்து இத்தலத்தை அழியாது காப்பாற்ற இறைவன் விநாயகப் பெருமானை அனுப்பி வைத்தார். ஸ்ரீவிநாயகப் பெருமானும், ஓம்காரத்தைப் பிரயோகம் செய்து பொங்கிவந்த ஏழு கடல்களையும் திருக்குளத்தின் கீழாக கரையில் அமைந்துள்ள 'ஏழுகடல் கிணறு' என்ற ஒரு கிணற்றினுள் அடக்கினார். இன்றும் அக்கிணறு ‘ஸப்தஸாகர கூபம்’ என்ற பெயருடன் அமைந்துள்ளது. அச்சமயம் வருணபகவான் நத்தான்கூடு, கடல்நுரை, கிளிஞ்சல் போன்ற கடல்படு பொருட்களால் விநாயகப் பெருமானின் திருமேனியை உருவாக்கி    இவருக்கு ‘ஸ்ரீபிரளயங்காத்த விநாயகர்’ எனவும் பெயரிட்டார். பிரளயத்திலிருந்து இவ்வூர் அழியாமல் பாதுகாக்க வெள்ள நீர் ஒரு புறமாய் ஒதுங்கி நின்றதால் ‘திருப்புறம்பயம்’ எனப் பெயராயிற்று.

இப்பிரளயங்காத்த விநாயகப் பெருமானுக்கு வருடத்தில் ஒரு நாள் விநாயக சதுர்த்தி அன்று இரவு தேன் அபிஷேகம் செய்யப்படும். அவ்வளவு தேனும் விநாயகர் திருமேணியில் உறிஞ்சப் பெறுவது மிக அதிசயமான, அற்புதக் கண்கொள்ளாக் காட்சியாகும். சந்தன நிற விநாயகர் அபிஷேக சமயம் செம்பவள நிறமாய்க் காட்சி தருவார். மற்ற நாட்களில் இப்பெருமானுக்கு எந்த அபிஷேகமும் கிடையாது. இத்தேனபிஷேகக் காட்சியைக் கண்டவர், கோரிய பலன்கள் மறு ஆண்டு தேனபிஷேக விழாவிற்குள் ஈடேறுவது நிச்சயம்.

இத்தலத்து இறைவியின் திரு நாமம் இக்ஷூரஸவாணி (கரும்பொடு சொல்லம்மை) – கரும்பு போல் இனிய சொல்லுடையவள் என்று பொருள். ஆலயத்தின் உட் பிரகாரத்தில் வடதிசை நோக்கி வீற்றிருந்து அருள் புரியும் ஸ்ரீதுர்காம்பிகையின் பேரழகும், அருள் நோக்கும் தரிசிப்போரை மெய் மறக்கச் செய்யும். சுதையுருவில் கையில் குமரனைத் தூக்கியவாறு  காட்சி தரும் ஸ்ரீகுகாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி தைலக் காப்பு மட்டுமே உண்டு. திருமணத் தடை நீங்கவும், சுகப் பிரசவத்திற்கும் அருள் பாலிக்கும் அம்மனாகவும்  இவள் வழிபடப்படுகிறாள்.

இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். ஆலயத்திற்கு வெளியே ஸ்ரீதட்சிணாமூர்த்தி தனி சந்நிதியுடன் விளங்குகிறார்.

விண்ணுயர வளர்ந்து அகத்தியருக்கு வழிவிட மறுத்து சாபம் பெற்ற விந்தியன் (மலை) இங்கு சாப விமோசனம் பெற்றான்.


சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற பெருமையுள்ள இத்தலத்தில் மாசி மகம் பிரம்மோத்ஸவமாக கொண்டாடப்படுகிறது. இத்  தல  விருட்சம்-புன்னை மரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக