Thanjai

Thanjai

வெள்ளி, 26 ஜூலை, 2013

தஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்

(குமுதம் சிநேகிதி ஜூலை 1-15 இதழில் வெளியானது)



தஞ்சைப் பெரிய கோயிலின் நெடிதுயர்ந்த அந்தக் கோபுரத்தையும், நந்தியையும் அற்புதமான சிற்பக் கலையையும் ஆயிரம் முறை கண்டாலும் அலுக்குமா என்ன? தஞ்சை செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த ஆலயத்தைக் கண்டு சற்று நேரம் ராஜரஜனின் காலத்திற்கே சென்று விடுவேன் நான்!

சமீபத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தோம். சரித்திரப் புகழ் மிக்க அந்த ஆலயத்தின் நுழைவாயில் அருகிலேயே காணப்படும் அந்தக் கட்டணக் கழிப்பிடம், ஐய்யகோ…! ராஜராஜ சோழன் மட்டும் இதைப் பார்த்தால் கண்ணீர் விட்டுக் கதறியிருப்பான். அகழி தாண்டி ஆலயத்திற்குள் மூக்கை மூடிக் கொண்டுதான் நுழைய வேண்டியுள்ளது. திரும்ப வெளியே வரும்போதும் அதே நிலைதான்! இதைவிடக் கொடுமை, தட்டியால் கட்டப்பட்ட கொட்டகைதான் கழிவறையாம். அந்தத் தட்டியிலும் அங்கங்கே இருக்கும் இடைவெளிகளில் உள்ளே பெண்கள் சிறுநீர் கழிப்பது வெளியிலிருந்து பார்த்தால் அப்படியே தெரிகிறது. தவிர, ஒருவர் உள்ளே போனால் அவர் வெளியே வரும்வரை அடுத்தவர் காத்திருக்க வேண்டும். இதற்குக் கட்டணமோ ஐந்து ரூபாய்.


வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் என்று பலரும் வருகை தரும் நம் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் இப்படி இருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா? தஞ்சை கலெக்டர் பொதுமக்களுக்கு ஒரு சுத்தமான கழிவறையைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.




வியாழன், 25 ஜூலை, 2013

பாங்காக்











  சுற்றுலா தலம்


பழமையும் புதுமையும் கலந்து ஜொலிக்கும் பாங்காக்

(பெண்மணி-நவம்பர் 2012 இதழில் வெளியானது)

          சுற்றுலா பயணங்கள் நம் மனதிற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரே மாதிரியான வேலை, அன்றாட மாற்றமில்லாத வாழ்க்கை முறை இவை நம்மை சோர்வடையச் செய்யும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சியையும், வாழ்வில் ஒரு வேகத்தையும் ஏற்படுத்துபவை உல்லாசப் பயணங்கள்! வேற்று நாட்டு மக்கள், மொழி, பழக்க வழக்கங்கள், உணவுமுறை இவை நமக்கு உற்சாகத்தையும், புதிய அனுபவத்தையும் கொடுப்பது உண்மை. அவ்வகையில் நாம் செல்லக் கூடிய நாடு பாங்காக்.


          ஆசியாவின் முன்னேறிய, வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான தாய்லாந்தின் தலை நகரமான பாங்காக் பழமையும், புதுமையும் கலந்து பளபளவென ஜொலிக்கிறது. அற்புதமான உயர்ந்த புத்த ஆலயங்கள், மனதை மயக்கும், ஷாப்பிங் மால்கள், அந்நாட்டைப் பற்றி நாம் அறிய உதவும் அருங்காட்சியகங்கள், வானளாவ உயர்ந்து நிற்கும் 50, 60 மாடிகளைக் கொண்ட உயரமான கட்டிடங்கள், வித்தியாசமான உணவு முறை, வேறுபட்ட வாழ்க்கை முறை, வளமையான கிராமங்கள், அழியாத வனப்பிரதேசங்கள், நாகரீக இரவு விடுதிகள் என்று நம்மை வியக்க வைக்கிறது பாங்காக் நகரம்!


          1782-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாங்காக், அதற்கு முன் அயுத்தயாஎன்ற பெயரில் அழைக்கப்பட்ட தலைநகரின் ஒரு சிறிய கிராமமாக விளங்கி வந்தது. தாய்லாந்து மொழியில் பாங்க்என்றால் கிராமம். கோக்என்றால் ஆலிவ். ஆலிவ் தோட்டங்கள் நிறைந்து இருந்ததால் இவ்வூர் பாங்காக்எனப்பட்டது.  மீன் பிடித்தலே இவர்களின் முக்கிய தொழில். இன்றும் விதவிதமான வண்ண மீன் உணவுகள் இங்கு பிரபலமாகும். 17-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் பர்மாவின் தாக்குதலில் சின்னா பின்னமான தாய்லாந்து அவர்கள் கீழ் அடிமை நாடாக இருந்தது.


          அச்சமயம் டாக்சின் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் உந்துதலால், மக்கள் போராட்டம் நடத்தி தாய்லாந்து தனி நாடாக மாறியது. டாக்சின் காலத்தில் அயுத்தயா நகரம் தலைநகராக விளங்கியது. அவருக்குப் பின் மன்னரான ராமா I’ என்ற அரசரால் பாங்காக்கிற்கு தலை நகரம் மாற்றப் பட்டது. அழகிய பெரிய மாளிகை உருவாக்கப்பட்டது. அதுவே இன்றைய கிராண்ட் பேலஸ்ஆகும். பாங்காக்கில் பல நீர்வழிக் கால்வாய்கள் இருந்ததால் இது கிழக்கு நாடுகளின் வெனிஸ்என அழைக்கப்பட்டது. ராமா I’ என்ற அரசரே அவற்றை மாற்றியமைத்து ஒரு அழகிய, இன்றைய நாகரீக பாங்காக்கை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.


          இங்கு மன்னரையே மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள். ஊர் முழுவதும் மன்னரின் விதவிதமான உருவ பேனர்கள் சுவற்றில் ஒட்டியிருக்கும். அவரது பட்த்தைக்கூட கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளுமளவு பக்தி. தற்போது ராமா-9’ அரசரின் ஆட்சி நடைபெறுகிறது. முன்னாள் அரசர்களான ராமா 1, 4, 5 ஆகியோருக்கு ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். அவர்களை முறையாக வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் பெறலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாம்!


          மென்மையான குணமும், அமைதியான முகத் தோற்றமும் கொண்ட தாய்லாந்து மக்கள் பழகுவதற்கு மிக இனியவர்களாக இருக்கிறார்கள். பாங்காக் நகரின் பெயரே உலகின் மிக நீளமான பெயராக கின்னஸில் இடம் பெற்றுள்ளது. 169 எழுத்துக்களைக் கொண்டு சமஸ்கிருதத்திலுள்ள, எளிதில் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத பெயரின் சுருக்கமே பாங்காக்என்பது! பாரம்பரிய, கலாசார, பண்பாட்டு முறையைப் பின்பற்றி வாழும் இம்மக்களுக்கு 9 மிக அதிர்ஷ்டமான எண். இந்நாட்டில் புத்தமதமே பெரும்பான்மையாக எல்லோராலும் பின்பற்றப்பட்டாலும், மற்ற மதக் கோயில்களும் உள்ளன. இங்குள்ள பல புத்த விகாரங்கள் தனிச்சிறப்பு பெற்று திகழ்கின்றன.





          பாங்காக்கின் அடையாளச் சின்னமாகவும், மிக உயர்ந்த கோபுரமும் மொண்டு, கட்டிடக் கலையும், கண்ணைக் கவரும் சிற்பக் கலையும் மிளிர அழகுறக் காட்சி தரும் ஆலயம் வாட் அருண்’. கேயோ ப்ராயா நதிக்கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு அஸ்தமனக் கோயில்என்று பெயர். 81 மீட்டர் உயரத்தில் க்மேர்கட்டிட முறைப்படி, அங்கோர்வாட் ஆலயம் போன்று நான்குபுறமும் மண்டபங்களும், குறுகிய படிகளும் கொண்டு நெடிது உயர்ந்து கம்பீரமாகத் தோற்றம் தருகிறது. முதல் நிலையில் மனிதனும், மிருகமும் இணைந்த சீன உருவங்கள், அடுத்து கின்னரர், வானரங்கள், மனிதனும் பறவையும் இணைந்த உருவங்கள் மேல்நிலை வரை இதனைத் தாங்கி நிற்பது போல் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.


          இரண்டாம் நிலையில் உள்ள நான்கு மண்டபங்களில் நான்குவித புத்தர் உருவங்களும், உச்சியில் நான்கு பக்கம் இந்திரன் யானை வாகனத்தில் அமர்ந்தது போன்றும் உருவாக்கப்பட்டுள்ள இக்கோபுரம் வண்ண கண்ணாடித் துண்டுகள், சிறிய சீனத்து பீங்கான் தட்டுகளைப் பல ஆயிரத்துக்கு மேல் வைத்து கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு, மாலை சூரிய வெளிச்சத்தில் தகதகவென மின்னுகிறது.




          ’வாட் கலயானமிட்’ (வாட் என்றால் கோவில்) என்ற ஆலயம் 1825-ம் ஆண்டில் சீனப்பிரபுக்களால் கட்டப்பட்டது. ராமா-3’ அரசரால் சீர்படுத்தி விரிவுபடுத்தப்பட்ட இவ்வாலயத்தின் உயர்ந்த மேல் விதானம், மிகப் பெரிய புத்தர் சிலை ஆகியவை தாய்லாந்திலேயே மிகப் பெரியவை என்ற பெருமை பெற்றது. மோன நிலையில், சப்பணமிட்டு பொன் வண்ணத் தகட்டால் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கும் புத்த பகவானை காணும்போதே நம் மனம் நிச்சலனமடைகிறது.


 


          

















இவரை மனம் ஒன்றி வணங்கி, வேண்டி மலர்களையும், மெழுகுவர்த்திகளையும் சம்ர்ப்பித்தால், வியாபாரம் வளம் பெரும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. இங்குள்ள பெரிய பித்தளையினாலான மணியும் தாய்லாந்திலேயே மிகப் பெரியது எனப்படுகிறது. இவ்வாலயத்தில் நிறைய சின்ன சந்நிதிகள்; எல்லாவற்றிலும் விதவிதமான புத்தர் சிலைகள்.




         அடுத்து நாம் காண வேண்டிய முக்கியமான ஆலயம் வாட் போ’. இது தாய்லாந்தின் முதல் பல்கலைக் கழகம்என்ற சிறப்புடையது. 1360 சலவைக் கற்களில் வாழ்க்கை த்த்துவங்களும், பல அரிய விஷயங்களும் எழுதப்பட்டுள்ளது. இங்குள்ள சயன புத்தரின் சிலை உலகின் மிக அழகிய கலைநயமிக்க சிலைகளில் ஒன்றாகும். கைகளில் தலையைத் தாங்கி ஒருக்களித்தவாறு படுத்தபடி காட்சி தரும் 46 மீட்டர் நீளமான சிலை, புத்த பிரான் நிர்வாண நிலையை அடைந்ததைக் குறிப்பிடுகிறது.




         அவருடைய சாந்தமும், சாத்வீகமும், கருணையும், காருண்யமும் கொண்ட முகம் மட்டும் 15 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. முழுவதும் தங்கக் காப்பிட்டு தகதகக்கிறது. அவரது இணைந்த இரு பாதங்கள் 3 மீட்டர் உய்ரத்தில் மதர் ஆப் பேர்ல்எனப்படும். புத்தரின் 108 விதமான வித்தியாசமான தவக் கோலங்களை சித்தரிக்கிறது. அந்த பிரம்மாண்ட புத்தர் சிலை நம்மை பிரமிக்க வைக்கிறது.





        இவ்வாலயத்தில் மொத்தம் 99 ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் அதிகபட்ச ஸ்தூபிகள் கொண்ட ஆலயம் இது. இங்குள்ள ஆலயத்தில் உயரத்தில் அமர்ந்தாற்போல் காட்சி தரும் புத்தர் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது. இவ்வாலய வெளிப் பிரகாரத்தில் 10 அடிக்கு மேல் உயரமான 400 புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் அற்புதக் காட்சி தருகின்றன.




          இதுபோன்ற அதிர்ஷ்ட புத்தர் ஆலயம், சலவைக்கல் புத்தர் ஆலயம், நின்ற புத்தர் ஆலயம் என்று ஏகப்பட்ட புத்தர் ஆல்யங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றவை. தமிழர்களால் உருவாக்கப்பட்ட மாரியம்மன் ஆலயம் மிக அருமையாக உள்ளது. மாரியம்மனை வழிபடுவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கையாம்!






          நம் நாட்டில் பிரம்மாவிற்கு ஆலயம் கிடையாது. ஆனால் இங்கு பிரம்மா எரவான்என்ற பெயரில் கோவில் கொண்டு, பக்தர்களின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றி வைக்கிறார். இந்நாட்டினர் இவரை நான்குதலை புத்தர்என்று கூறி, வாசனைப் பூக்களையும், பத்திகளையும் ஏற்றி வைத்து வணங்குகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் இவர் எதிரில் நடனமாடி, தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வார்களாம்.


          இது மட்டுமா? காதல் கடவுளாக நின்று காட்சி தருகிறார் திருமூர்த்தி பகவான்.’  சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இணைந்த இவரை வணங்கி வழிபட்டோரின் காதல் தங்கு தடையின்றி நிறைவேறி, காதலித்தவரையே கைப்பிடிக்கலாமாம்! இங்கு இளம் வயது ஆண்களும் பெண்களும் அதிகம் காணப்படுகின்றனர். வியாழக்கிழமை இரவுகளில் இந்தக் கடவுள் சொர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வருகிறார் என்பதால் அந்த நாளில் இவ்வாலயம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது!. சிவப்பு வண்ணப்பூக்கள், சிவப்பு பழம், சிவந்த மெழுகுவர்த்திகளே இவ்விறைவனுக்கு காணிக்கை!





         பாங்காக்கில் அரசமாளிகையாக விளங்கும் கிராண்ட் பாலஸ்மிக அருமையாக பராமரிக்கப்படுகிறது. இந்நாட்டு தற்போதைய மன்னர் குடும்பம் இங்குதான் வசிக்கிறார்கள். இங்கு அமைந்துள்ள மரகத புத்தர் ஆலயம் அரச குடும்பத்தவரின் பிரத்தியேக ஆலயம். 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தியான நிலையில் சிறு உருவமாக காட்சி தரும் புத்தர், வண்ண அலங்காரத்தில் ஜொலிக்கிறார். இங்குள்ள அரண்மனை வாயிற்காப்போர்களான 5 அடி உயர யட்சர்கள் சிலை தத்ரூபமாக உள்ளது. உள்ளே ராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்போது புத்தமதமே இங்கு பின்பற்றப்பட்டாலும், இந்து மதத்தின் சுவடுகள் நிறையவே காணப்படுகின்றன.




          இங்குள்ள மிதக்கும் சந்தைகள் காணவேண்டிய ஒன்று. அவரவர் கிராமங்களில் இருந்து காய்கறி, பழங்களை படகுகளில் வைத்துக் கொண்டு வந்து விற்பது இங்கு மிக பிரபலம். இங்கு யானைகள் அதிகம். நேஷனல் பார்க், யானை பார்க் போன்ற இடங்களில் யானைகளில் ஏறி காடுகளைச் சுற்றிப் பார்க்கலாம். காடுகளிலும், நதிகளிலும் யானைகள் மீது அமர்ந்து செல்வது ஒரு திகிலான, த்ரில்லான அனுபவம்!




          இங்குள்ள தாய்-பர்மா டெத் ரெயில்வே பார்க்கவேண்டிய ஒன்று. இரண்டாம் உலகப் போரின்போது (1942), ஜப்பான் அரசர் இதைக் கட்டினார். இதனைக் கட்ட ஆசியத் தொழிலாளிகளையும், சிறையிலிருந்த பல நாடுகளைச் சேர்ந்த கைதிகளையும் உபயோகப்படுத்தினர். உணவு, சூழ்நிலை, தட்பவெப்ப நிலை காரணமாக இதற்கென வேலை செய்த பல உழைப்பாளி மக்கள் உயிரை இழந்தனராம். அதன் நினைவாக இப்பாலத்திற்கு டெத் ரெயில்வேஎனப் பெயரிடப்பட்டது. இப்பாலம் க்வாய்என்ற நதி மேல் கட்டப்பட்டுள்ளது. இதனை விளக்கும் ஒரு அருங்காட்சியகமும் அருகிலேயே உள்ளது. அந்தத் தொழிலாளர்களை நினைக்கும்போது மனம் உருகுகிறது.


          பாங்காக்கில் இரவுநேரக் காட்சிகள் நிறைய நடக்கின்றன. தாய்லாந்தின் கலாசாரம், பாரம்பரியத்தை விளக்கும் இசை, நடனம், நாட்டியம், பொம்மலாட்டம், இதிகாசங்களி விளக்கும் வண்ணக் காட்சிகள், நாடகங்கள் ஏராளம்! இவற்றிற்கு முன்பதிவு செய்து கொண்டு செல்வது அவசியம்.




          இரவுநேர சந்தைகளும் இங்கு மிக அதிகம். எல்லாப் பொருட்களையும் பேரம் பேசி வாங்கலாம். விதவிதமான நாகரீக உடைகள், தாய்லாந்தின், கைவினைப் பொருட்கள் என்று அனைத்தும் கண்ணை நிறைக்கின்றன. சட்டுசாட்என்ற மிகப்பெரிய மார்க்கெட்டில் மொத்தம் 15,000 கடைகளுக்கு மேல் உள்ளது. இவை தவிர ஷாப்பிங் மால்கள் எக்கச்சக்கம். சியாம் பாரகன், செண்ட்ரல் வேர்ல்ட், சியாம் டிஸ்கவரி என்று பெரிய மால்களில் உலகத்த்ரம் வாய்ந்த அத்தனைப் பொருட்களும் கிடைக்கின்றன.




          சயாம் ஓஷன் வோல்ட்தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கடல் உலகம் எனப்படுகிறது. இங்கு கண்ணாடியாலான கடல் குகையில் நடந்து செல்லும்போது நம்மைச் சுற்றி மிகப்பெரிய சுறாக்களையும், விதவிதமான மீன்களையும் பார்ப்பது கண்ணுக்கு பரவசம். இங்குள்ள 4டி தியேட்டரில் சினிமா பார்ப்பதும், மீன்களுடன் நீந்துவதும் குழந்தைகளோடு பெரியவர்களையும் கவரும் விஷயங்கள்.


          இங்குள்ள மேடம் துஸாட்ஸ்வேக்ஸ் மியூசியம் சென்று நூற்றுக்கும் பேற்பட்ட உலகப் பிரமுகர்களுடன் கைகோர்த்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 200-க்கும் மேற்பட்ட உணவகங்களில் எந்த நாட்டு உணவையும் ருசிக்கலாம். தாய்லாந்தின் நீர்வாழ் உணவுகள் உலகெங்கும் பிரசித்தம். தாய்லாந்தின் பைனாப்பிள் ப்ரைடு ரைசும், ரெட் கறியும் உண்மையிலேயே நல்ல ருசி.


          தாய்லாந்தின் பிரத்தியேக கைவினைப் பொருட்களை நைட் மார்க்கெட்டுகளிலும், பெரிய ஆலயங்களுக்கு அருகிலுள்ள கடைகளிலும் பேரம் பேசி வாங்கலாம். இங்கு பாட்என்பதே நாணயமாகும். நம் ஒரு ரூபாய் என்பது தாய்லாந்தில் 1½ பாட் ஆகும். பாங்காக்கைச் சுற்றிப் பார்க்க ஐந்து நாட்கள் தேவை.



          நம் நாட்டின் மெட்ரோ நகரங்களில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்து உண்டு. வித்தியாசமான அனுபவங்களைப் பெற நீங்களும் ஒரு முறை பாங்காக் சுற்றுலா பயணம் சென்று வரலாம்.



புதன், 24 ஜூலை, 2013

ஈகோவைத் தள்ளி வைப்பது நல்லது




(குமுதம் சிநேகிதி நவம்பர் 26-30, 2012 இதழில் வெளியானது)

சொல்கிறார் சென்னை வாசகி ராதா பாலு

















எனக்கு அலெனா, ஆர்த்தி என்று இரண்டு மருமகள்கள். அவர்கள் இருவரும் அன்பு, பண்பு, பாசம், மரியாதை, அறிவு என எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.

தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் என் மூத்த மருமகள் அலெனா ரஷ்யப் பெண். அவள் இங்குள்ள மனிதர்களிடம் எப்படி பழகுவாளோ என்று நாங்கள் பயந்திருந்தோம். யாரை எப்படிக் கூப்பிட வேண்டும்? யாரிடம் எப்படிப் பழக வேண்டும்? சமையல் என நம் கலாசாரத்தை என்னிடம் ஆசையாகக் கற்றுக் கொண்டாள். எங்கள் உறவினர்களிடம் ஒட்டுதலாகப் பழகினாள். நான் ஜெர்மனி சென்றிருந்தபோது அவள் என்னை ஒரு வேலையைக் கூட செய்ய விடவில்லை. அவளாகவே அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தது என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.


என் இரண்டாவது மருமகள் ஆர்த்தியும் மூத்தவ்ளைப் போல் எங்கள் உறவினர்களிடம் பாசத்துடன் பழகுவாள். விட்டுக் கொடுத்துப் போவது, தவறுகளைப் பெரிது படுத்தாமல் இருப்பது, யார் நல்ல விஷயங்களைச் செய்தாலும் தயங்காமல் பாராட்டுவது என சிறந்த குணங்கள் அவளிடம் இருப்பதால் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இதுவரை வந்ததில்லை. எங்களைப் போல ஈகோவை கொஞ்சம் தள்ளி வைத்துப் பழகினாலே போதும். மாமியார், மருமகள் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்