Thanjai

Thanjai
ஆலய தரிசனம்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலய தரிசனம்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 மே, 2017

கருணை புரிவாள் கனக மகாலக்ஷ்மி


தீபம் மே 05, 2017 இதழில் வெளியான கட்டுரை





ஆலயங்கள் நிறைந்த நகரம் ஆந்திரா. நரசிம்மர், சிவன், தேவி ஆலயங்கள் என்று எத்தனை ஆலயங்கள்! அவற்றினுள் நுழையும்போதே நமக்கு பக்தி உணர்வும், மெய்சிலிர்ப்பும் உருவாவதை உணரலாம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ கனகமகாலக்ஷ்மி ஆலயம் மிகச் சிறப்பும், சாந்நித்தியமும் வாய்ந்த வித்யாசமான ஆலயம். ஆலயத்துக்கு செல்லும் அனைத்து பெண்களும் அர்ச்சகர் துணையின்றி தாமே அன்னைக்கு அபிஷேகம் செய்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விசாகப்பட்டினத்தில் புருஜுபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். சாலையின் நடுவில் அமைந்துள்ள இவ்வாலயம் உருவான விதம் நம்மை வியக்க வைக்கிறது.

கோபுரம்

கோபுர முகப்பு


1912ம் ஆண்டில் விசாகப்பட்டினத்தை ஆண்ட ராஜாக்களின் குலதெய்வமாக விளங்கிய கனகமஹாலக்ஷ்மி தேவி சிலை மன்னர்களின் கோட்டை பகுதிக்கு அருகில். ஒரு கிணற்றுக்குள்ளிருந்து எடுக்கப்பட்டது. தேவியின் அழகில் மயங்கிய மக்கள், அதனை அந்த முனிசிபல் சாலையின் நடுவிலேயே ஸ்தாபித்து வணங்கி வந்தனர்.

1917ம் ஆண்டு சாலையை அகலப் படுத்தியபோது, அச் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைத்தனர். அந்நிகழ்வுக்குப் பின் வைசாக்கில் மிக்க கொடுமையான தொற்று நோயான பிளேக் நோய் படு வேகமாகப் பரவி, பலரை பலி வாங்கியது. இவ்வம்மனை அகற்றியதால் இந்த நோய் வருகிறது  என அஞ்சிய மக்கள், மீண்டும் தேவியை சாலை நடுவில் ஸ்தாபித்து பூஜைகளைத் தொடர்ந்தனர். என்ன அதிசயம்... சில நாட்களிலேயே நோய் மறைந்தது! ஊரும் செழித்தது! மக்களின் நம்பிக்கை அதிகமாக, அது முதல் 'கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தேவியின் பெருமை திக்கெட்டும் பரவியது. இன்றும் வைசாகின் செல்வ வளத்திற்கு காரணம் இந்த அன்னையே என்று கூறப் படுகிறது. தன்னை வணங்கியவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் தேவியின் பெருமை அளவற்றது. பெண்கள் தம் மாங்கல்யம் நிலைக்கவும், பிறந்த குழந்தைகளின் நோயற்ற வாழ்விற்கு அவள் காலடியில் விடுவதும் மிக முக்கிய வழிபாடாகும்.

தேவிக் கிணறு

அம்மவாரு


ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட தேவியின் ஆலயம் கடந்த நூறாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதாம்.இன்றைய வைசாக்கின் காவல் தெய்வமாகவும், தாயாகவும் விளங்கும் இத்தேவி சிலையின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட விசாக வர்மன் என்ற அரசன் காலத்ததாக இருக்கும் எனப்படுகிறது.ஒரு சிறிய சன்னதியுடன் இருந்த இவ்வாலயம் இன்று பலகோடி வருமானம் ஈட்டும் ஆந்திராவின் பணக்கார ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இனி தேவியை தரிசிப்போம். சாதாரணமாக அங்கம் பின்னமான தெய்வ ரூபங்களை நாம் பிரதானமாக வணங்குவதில்லை. ஆனால் இங்கு எந்த ஆலயத்திலும் இல்லாதவிதமாக, வடமேற்கு திசை நோக்கி வலது கையில் தாமரைமொட்டும், இடக்கை பின்னமாயும்  மார்புவரை உள்ள  அன்னையே அழகுருவாய் காட்சி அளிக்கின்றாள்.கண்களின் காருண்யம் நம்மை 'நீயே கதி அம்மா' என்று சரணடையவைக்கிறது.தேவி தனக்கு மேல் கூரை தேவையில்லையென்று ஆணையிட்டதால், சுற்றிலும் கோபுரங்கள் இருந்தாலும் அன்னையின் சிரம் வானம் பார்த்தே உள்ளது. ஜாதி, மத  பேதமின்றி எவரும் அம்பிகையைத் தன் கைகளால் அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கலாம். தன்னை வழிபட எந்த தடையும், யார் உதவியும் இருக்கக் கூடாது என்பது அன்னையின் ஆணையாம். அதனால் இங்கு நமக்காக பூஜிக்க அர்ச்சகர்கள் கிடையாது.  

பெண்கள் வரிசையில் சென்று தாமே பால், இளநீர், மஞ்சள், குங்குமம் இவற்றால் நிதானமாக அம்மனை அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். ஆலய அலுவலர்கள் உடனுக்குடன்  தேவியை சுத்தம் செய்கின்றனர். என் முறை வந்தபோது சற்று தயக்கமாக இருந்தாலும், அப்படிச் செய்யும்போது மெய்சிலிர்ப்பும், மனதிருப்தியும், தேவியை நெருங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் மனதில் ஏற்பட்டதை உணர முடிந்தது. அம்மனை நெருங்கி நம் மனக்குறைகளை சொல்லும்போதே, தேவி நம்மைக் கைவிட மாட்டாள் என்று உணர முடிகிறது. அடைக்கலம் என்று அவளை அண்டிச் செல்லும்போதே நம் மனம் நிச்சலனமடைகிறது. அன்னையை விட்டு அகலவே மனமில்லை. இந்த தனித்துவமான தானே வணங்கும் முறையில் ஈர்க்கப்பட்ட மக்கள் இங்கு பல வெளி மாநிலம் மற்றும் நாடுகளிலிருந்து வந்து தரிசிக்கின்றனராம்.மற்றும் பின்னால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி, சிவன், விஷ்ணுவிற்கும் சன்னதிகள் உள்ளன. அம்மன் கிடைத்த கிணற்றைச் சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள்  அமைக்கப் பட்டுள்ளது.

அபிஷேகம்





தினசரி காலை 5 மற்றும் 11.30,மாலை 6 மணிக்கு ஒரு மணி நேரத்திற்கு திரிகால அர்ச்சனை நடைபெறும்.வியாழக்கிழமைகளில் இத்தேவியை வழிபட வரிசையில் நிற்க வேண்டுமாம்.மார்கழி மாதம் முழுதும் நடைபெறு 'மார்கஸீரா மஹோத்சவம்' மிக பிரசித்தமான, பெரியதிருவிழா. தினமும் லலிதா, லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம், தேவி சப்தசதி பாராயணம், அஷ்டலக்ஷ்மி பூஜை,சிறப்பு அபிஷேகங்கள், கதாகாலட்சேபம், அன்னதானம் என்று ஆலயம் வண்ண விளக்கு அலங்காரத்தில் அற்புதக் காட்சி அளிக்குமாம்.நவராத்திரி 9 நாட்களும் தேவியின் விதவிதமான அலங்காரங்கள் கண்களைக் கவரும்.திரிகால அர்ச்சனை நேரம் தவிர, தினமும் 24 மணி நேரமும் ஆலயம் திறந்திருக்கும். பக்தர்களின் குறைகளைத் தீர்க்க அல்லும், பகலும் தேவி விழித்திருப்பதாக ஐதீகம்.

விசாகப்பட்டினம் செல்லும் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் அன்னை கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு ஆலயம். வைசாக் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையத்திலிருந்து ஆட்டோ, டேக்சிகளில் எளிதாகச் செல்லலாம்.
தொடர்புக்கு...

0891-2566515, 2568645, 2711725, 2566514 Mob:9491000651.


வியாழன், 23 மார்ச், 2017

ஆயுதம் ஏந்தா அழகன்


தீபம் ஏப்ரல் 5, 2017 இதழில் வெளியான கட்டுரை

காலாராம் ஆலயம்..
பஞ்சவடி...நாசிக்...மகாராஷ்டிரா





அம்பும், வில்லும் இல்லாத அழகிய ராமர்...


காலாராமர்

ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி’ என்று (ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்) போற்றப்பட்ட ஒரே கடவுள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஏனைய கடவுளர் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி தரும்போது, ஸ்ரீராமன் மட்டுமே, தன் தம்பி, தன் தொண்டன் ஹனுமான் என்று அனைவரையும் தன்னுடன் இணைத்து நிற்பவர்.

ஸ்ரீராமனை எண்ணும்போதே நமக்கு முதலில் நினைவு வருவது அவரது 14 ஆண்டு கால வனவாசம். அதில் பெரும்பகுதியை அவர்கள் நாசிக்கிலுள்ள பஞ்சவடியில்தான் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. கோதாவரியின் கரையில் அமைந்துள்ள நாசிக்கில் பல இடங்கள் ராமாயணத்தின் நிகழ்ச்சிகளை நம் கண் முன் கொண்டு வருகின்றன.

இங்குள்ள சீதா குகையில் சீதையின் சமையலறை உள்ளது. இங்கிருந்துதான் சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான். லக்ஷ்மணர் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் இவ்விடம் நாசிகா (மூக்கு) எனப்பட்டு 'நாசிக்'காக மாறியது.

கோதாவரி நதி மிகவும் புனிதமான நதியாகும். இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா  நடைபெறுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்நதியில் சில துளிகள் அமிர்தம் விழுந்ததாம். இதில் ஒருமுறை நீராடினால் கங்கையில் 60000 முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது. கோதாவரி நதிக்கரையிலுள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகு.

பஞ்சவடியில் முக்கியமான அழகும், கம்பீரமும் கலைத் திறனும் கொண்டு விளங்கும் 'காலாராம் ஆலயம்', 83 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 1788ம் ஆண்டு ரங்கராவ் ஓடேகர் என்பவரால்  கட்டப்பட்டது. அவரது கனவில் தோன்றிய ராமர் தன்னை கோதாவரி நதியிலிருந்து கொண்டு வந்து ஆலயம் கட்டுமாறு கூற, மூன்று சிலைகளும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டது. அருகிலுள்ள 'ராம்ஷேஜ்' என்ற மலைச் சுரங்கங்களிலிருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட உயர் ரக கருநிறக் கல்லால், 2000 பேர்கள் 12 ஆண்டுகள் உருவாக்கிய இவ்வாலயத்திற்கு 23 லட்சம் ரூபாய் செலவானதாம். கோபுர உச்சியிலுள்ள கலசம் 32 டன் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. சிறந்த கலையழகுடன் உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் 96 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.

காலாராம் கோவில் கோபுரம்

ஆலயத் தோற்றம்


கர்ப்பக் கிரஹம் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது. வெள்ளியாலான திருவாசியின் உச்சியில் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அழகிய வெள்ளிக் குடைகளின் கீழ் ராமன், லட்சுமணன், சீதை மூவரும் வித்தியாசமான நிலைகளில் காட்சி தருகின்றனர். ராமனின் வலக்கரம் அவரது இதயத்திலும், இடக்கரம் அவரது பாதத்தை நோக்கியும் உள்ளது. 'என் காலைப் பிடித்தவர்களை நான் கைவிட மாட்டேன்' என்று உணர்த்தும் இத்தோற்றம் மிக விசேஷமானது. சீதையாகிய மகாலட்சுமியின் இரு கைகளுமே கீழ் நோக்கி, 'என்னை சரணடைந்தால் எல்லாம் பெறலாம்' என்பது போலுள்ளது. ராம, லட்சுமணர்களிடம் அம்பும், வில்லும் இல்லாததுடன், ஹனுமனும் இல்லை! பஞ்சவடியிலிருந்து சென்றபின்தானே ஹனுமனின் நட்பு கிடைக்கிறது!  ராமருடன் இல்லையெனினும், நுழைவாயிலில்  கருநிறக் கல்லிலான ஹனுமான் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது.

காலாராமர்


இம்மூன்று விக்ரகங்களும் பஞ்சவடியில் கிடைத்ததாகவும், காலத்தால் மதிப்பிட முடியாத அளவு பழமையான சுயம்பு என்றும் ஆலயத்தார் கூறினர். வேண்டியோர்க்கு வேண்டுவன தரும் வரப்பிரசாதியாம் இம்மூவரும்! சொக்க வைக்கும் அழகில் தம்பியுடனும், தாரத்துடனும் காட்சி தரும் சுந்தரராமனின் சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை. இவ்வாலயத்தில் ராமநவமி, தசரா, சித்திரை  வருடப் பிறப்பு இவை மிகப் பெரிய விழாக்களாகக்  கொண்டாடப்படுகின்றன.

நம் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம் காலாராமர் ஆலயம்.

மும்பையிலிருந்து நாசிக்கிற்கு விமானம்,பேருந்து மற்றும் புகைவண்டியில் செல்லலாம்.

ஆலய நேரம் ...காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை
தொலைபேசி....0253 2621730








வியாழன், 9 மார்ச், 2017

மாங்கல்யம் காக்கும் குங்கும சுந்தரி

தீபம் மார்ச் 20, 2017 இதழில் ஆலயம் கண்டேன் பகுதியில் வெளியான கட்டுரை



ஓம் எனும் பிரணவ ரூபமாய் அ, உ, ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையால் உருவானது ‘உமா’ என்ற சொல். அதனாலேயே பார்வதி தேவியின் பல்வேறு நாமங்களில் தனித்துவமும், சிறப்பும், பெருமையும் பெற்று விளங்குகிறது. ‘உமா’ என்ற நாமம், ‘உமா, சிவன்’ என்ற இரு சொற்கள் இணைந்தே குழந்தைகள் கடவுளைக் குறித்துச் சொல்லும் ‘உம்மாச்சி’ ஆயிற்று என்பது மகா பெரியவரின் வாக்கு.

இந்த உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே ‘உமையாள்புரம்’. ஆயிரம் வருடங்கள் பழமையானது இவ்வாலயம். தஞ்சை மாவட்டத்தில் காவிரி வடகரையில், குடந்தையிலிருந்து பனிரெண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தின் பெருமைகள் அனேகம். ப்ரம்மாண்ட புராணத்தில் உமாபுர மஹாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீகுங்குமசுந்தரி சமேத ஸ்ரீகாசிவிசுவநாதரின் மகிமையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.
கோவில் முகப்பு

புர தரிசனம்

இவ்வாலயம் இங்கு உருவானது எப்படி? விஜயா என்ற கந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோயில் அமைக்க தகுதியான இடத்தை வேண்டி தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது. அவளது தவத்தில் மகிழ்ந்த ஈசனும், தேவியும் இங்கேயே எழுந்தருளியதாக கூறுகிறது புராணம்.

கந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடுந்தவம் புரிந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ‘குங்கும சுந்தரி’ என்ற அழகிய திரு நாமத்துடன் காட்சியளிக்கிறாள். கமலா என்கிற ஒரு பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத்தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால், இவ்வம்மனுக்கு ‘குங்கும சுந்தரி’ என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது. பெண்கள் தம் திருமாங்கல்ய பாக்கியத்திற்கென இந்த அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிக விசேஷமானது.கருவுற்ற பெண்களுக்கு குங்கும சுந்தரியின் சந்நிதியில் வளைகாப்பு நடத்தினால் சுகாப் பிரசவம் நடக்கும் என்பதும் ஐதீகம். 

பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் ‘தத்துவ உபதேசத்தை’ முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி, “எப்பொழுது உபதேசம் பெற வரலாம்?” என்று கேட்க, குமரனோ, “எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கமுடன் வருமாறு” கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே இவ்வூராகும்.

விநாயகர்

இனி தேவியை தரிசிப்போமா? கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மகா, அர்த்த மண்டபங்களைத் தாண்டி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் அருள் காட்சி அளிக்கின்றார். காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்து, காசியில் வழிபட்ட பலனை அருளியதாக வரலாறு. அதனால் இவ்வாலயம் காசியிலும் உயர்வாகக் கூறப் படுகிறது.
காசி விஸ்வநாதர்


தட்சிணாமூர்த்தி

நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டி, பிரதட்சிணமாக வரும்போது, தட்சிணாமூர்த்தி, வள்ளி, தேவயானி சமேத முருகப் பெருமானை வணங்கி வடமேற்கில் தனி சந்நிதியில் காட்சி தரும் குங்குமசுந்தரியை தரிசிப்போம். அழகும், கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறு நகையுடன் நம்மைப் பார்த்து ‘எதுவும் கேள் தருகிறேன்’ என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியைக் காணக் கண்ணிரண்டு போதாது! மகளிரின் குங்குமத்தை காக்கும் தேவியின் தரிசனம் கண்களோடு மனதையும் சிலிர்க்க செய்கிறது.

குங்குமசுந்தரி

நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! பெண்களுக்கு திருமணபாக்கியம், கணவரின் உடல்நலம் பெற  இத் தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். குழந்தை வரம் வேண்டுவோர் அம்மனுக்கு ஆடிப்பூரத்தில் வளையல் வாங்கி சார்த்தினால் விரைவில் பலன் கிடைக்கும். அம்பாள் சன்னதி எதிரில் ராஜமகாவல்லபா கணபதி அழகுறக் காட்சி தருகிறார். மாத சதுர்த்திகளில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. வடப்புறத்தில்  ஸ்ரீசண்டிகேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சந்நிதியிலும் உணர முடிகிறது. வில்வம் தலமரமாகும்.

இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோயில் கொண்டுள்ள ‘காவற்காரப் பிள்ளையாரே’ காரணம் என்பது இவ்வூர் மக்களின் திடமான நம்பிக்கை.

இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் திருக் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. அன்று இவ்வூர் பெருமாள் கோயிலில் காட்சி தரும் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் இவ்வாலயம் வந்து அம்பிகையை ஈசனுக்கு மணமுடித்து தருவார். ஆடி மாதம் முழுவதும் இச்சந்நிதியில் சௌந்தர்யலஹரி பாராயணம் செய்வதால் சகல நன்மையும் பெறலாம். ஆடி வெள்ளி, தைவெள்ளிகள், நவராத்திரி பத்து நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத்ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி, சிவராத்திரி, திருவாதிரை நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலம் திருவையாறு-குடந்தை மார்க்கத்தில் திருவையாற்றிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆலய நேரம் காலை 5.30 - 10.30...மாலை - 5.30 - 8.30...தொலைபேசி...0435 2441095

செல்லும் வழி - கும்பகோணாத்திலிருந்து -17 கி.மீ



செவ்வாய், 20 டிசம்பர், 2016

வரம் தரும் வீர மங்கள ஆஞ்சநேயர்

தீபம் 05-01-2017 இதழில் வெளியான கட்டுரை

எடுத்துக் கொண்ட தலைப்புவரம் தரும் வீர மங்கள ஆஞ்சநேயர்எழுதிய தலைப்புவிரும்பும் வரம் தரும் வீர மங்கள ஆஞ்சநேயர் (ஹனுமத் ஜெயந்தி 29 டிசம்பர்)



முழுக் கட்டுரையும் இதோ!

மார்கழியில் வரும் அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்த தினம் ஹனுமத் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ராமபக்தியில் திளைத்து ராமரின் நினைவிலேயே இன்றும் ஹனுமான் சூக்ஷ்ம ரூபமாக இருப்பதாக ஐதீகம். இன்றும் ராமரின் கதை சொல்லப்படும்  இடத்தில் எல்லாம் ஹனுமான் சென்று பயபக்தியுடன் கேட்பதாக கூறப்படுகிறது. அந்த ஹனுமானின் ஆலயங்கள் நாடு முழுதும் உள்ளது. பால  ஹனுமான், பஞ்சமுக ஹனுமான், வீர ஹனுமான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும். ஹனுமத் ஜெயந்தி நாட்டில் மார்கழி மாத அமாவாசையிலும், வட  நாடுகளில் சித்திரை பௌர்ணமி அன்றும், ஆந்திராவில் 41 நாட்கள் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. 

நல்லாத்தூரில் ஆலயம் கொண்டு அருள் தரும் வீரமங்கள ஆஞ்சநேயர் ஸ்ரீவியாசராயரால் உருவாக்கப்பட்டவர். 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களின் குருவாக விளங்கிய வியாசராயர் ஒருமுறை துன்புற்ற போது,ஆஞ்சநேயரைத் துதித்து தன் துன்பம் நீங்கப் பெற்றால், தம் வாழ்நாள் முழுதும் ஹனுமனுக்கு பல ஆலயங்கள் எழுப்புவதாக வேண்டிக் கொண்டார். அவ்வாறே  732 ஹனுமான் ஆலயங்களை ஏற்படுத்தினார். அவற்றுள் பிரசித்தமான ஒன்றே குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம். 

வியாசராயர் தன்  சீடர்களுடன் ஆஞ்சநேயரின் சிலையை திருப்பதியில் பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்றபோது, நதியில் வெள்ளம் வந்துவிட்டதால் நல்லாத்தூரிலேயே ஆலயம் எழுப்பி, அனுமனை ஸ்தாபித்தார். அதனாலேயே திருப்பதியை நோக்கி செல்வது போன்றும், ஹனுமானின் முகம் திருப்பதி இருக்கும் திசை நோக்கியும்  உள்ளதாம்.

பல நாட்கள்  மண்ணில் பாம்புப் புற்றில் புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் நாகங்கள் பூஜித்து வந்ததாம். சென்னையைச் சேர்ந்த திரு சக்கரவர்த்தி என்ற தொழிலதிபரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் தனக்கு ஆலயம் எழுப்பும்படி கூறி, அவரால் சீர்திருத்தப்பட்டு அழகிய ஆலயம் உருவாகியது. 1998ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இன்றும் நாகங்கள் இந்த ஹனுமனை தினமும் வந்து வழிபட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.



ஐந்தரை அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. 


வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. தாமரை ஞானம், ஐஸ்வர்யம், வெற்றி மூன்றையும் உணர்த்துவதால் முத்தேவியரான லட்சுமி, சரஸ்வதி, துர்கையை எடுத்துக் காட்டுகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை, பூணூல் இவற்றோடு வைணவர்களின் அடையாளமாக நெற்றியில் திருமண்   உள்ளது. பிங்காக்ஷம் என்னும் பொன்வண்ண கண்மணிகளுடன் , பாதி மூடிய விழிகளால் பக்தர்களுக்கு தன்  அருளை வாரி வழங்குகிறார்.


பஞ்சமுக குண்டலங்களைக் கொண்ட அவரது அகன்ற காதுகள் சதாநேரமும் ராமகதையில் லயித்துள்ளது.இரண்டு கைகளிலும் கேயூரம், கங்கணம், பரிஹரியாஜா என்ற அழகிய ஆபரணங்களும், காலில் தண்டை, நூபுரம் அணிந்து சர்வாலங்கார பூஷிதனாகக் காட்சி தருகிறார். கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர். 

அவரது பின்பக்கம்மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் வடிக்கப் பட்டுள்ளன. அவர்முன் நின்று நம் வேண்டுதல்களை முறையிடும்போது 'யாம் இருக்க கவலையில்லை' என்று பாதி திறந்த அருள் விழிகளால் நம்மைப்  பார்த்து கையசைத்து ஆறுதல் சொல்வது போல தோன்றுகிறது. மிக்க வரபிரசாதியானவராம்   இவர்! மலை போன்ற துன்பங்களையும் பனிபோல நீக்குவதில் இந்த ஹனுமனுக்கு இணை இவரே என்று கூறுகின்றனர். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, நல்ல வேலை, நோயற்ற வாழ்விற்கு இந்த ஹனுமனை வழிபட்டால் உடன் பலன் நிச்சயம்.

ஆஞ்சநேயரின் கருவறை விமானத்தில் தெற்கில் சங்கு, சக்ரதாரியான யோக   ஆஞ்சநேயரும்,வடக்கில் இடுப்பில் கைகளுடன் காட்சி தரும் வீர ஆஞ்சநேயரும், கிழக்கில் பக்த ஆஞ்சநேயரும், மேற்கில் பத்து கரங்களும், ஐந்து முகங்களும் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரும் அழகுறக் காட்சி தருகின்றனர்.

ஆஞ்சநேயர் சன்னிதியை சுற்றிலும் சீதா, லக்ஷ்மண ஸ்ரீராமர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர், மங்கள கணபதி, தக்ஷிணாமூர்த்தி,நாகதேவதை, வாகனங்களுடன் நவகிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. சனீஸ்வரர் ஆஞ்சநேயரை நேருக்கு நேர் பார்த்தவாறு அமைந்துள்ளார். அதனால் இத்தலம் ராகு, கேது தோஷப் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. 


வெளியில் 42 அடியில் சுதைரூபமாகக் காட்சி தரும் அமர்ந்த ஆஞ்சநேயரின் வால்
  அவரது இடது கைக்குள்ளாக வெளியில் வந்திருப்பது போல் அமைத்திருப்பது அற்புதமான கலையம்சமாகும்.



வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில் ராமநவமி, ஹனுமத் ஜெயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. மற்றும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகள் மிக விசேஷமானவை.

ஆலயம் நல்லாத்தூரில் குசஸ்தலை ஆற்றின் கரையில் திருத்தணியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஆலய நேரம்---காலை 6 -12---மாலை 4 -8    தொலைபேசி...04118-270666




வெள்ளி, 14 அக்டோபர், 2016

மும்பை தஹானு மகாலக்ஷ்மி

. 
தீபம் அக்டோபர் 20, 2016 இதழில் ஆலய தரிசனம் என்ற பகுதியில் வெளியான கட்டுரை






நம் காலில் சிறு முள் குத்தினால் கூட நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை அம்மா என்பதே. தேவியாகிய பராசக்தியே உலகிற்கெல்லாம், அண்ட சராசரங்களுக்கெல்லாம் அன்பான தாயாக நிற்கிறாள். அந்த தேவி நவராத்திரியில் துர்கை, மகாலக்ஷ்மி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் வணங்கப் படுகிறாள். அவர்களை ஒன்பது நாட்கள் சிறப்பாக, இறை சிந்தனையோடு நாம்  நவராத்திரியில் வழிபட்டால்  விரும்பும்  அனைத்தும் பெறலாம்.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையை வழிபடவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியன. இடைப்பட்ட மூன்று நாட்கள் லக்ஷ்மிக்கு உரியனவாகும். விக்ஷ்ணு ஆலயங்களில் மகாலக்ஷ்மி தாயாராக தனி சந்நிதியிலும், சிவாலயங்களில் பிரகாரச் சுற்றில் கஜலக்ஷ்மியாகவும் காட்சி தரும் மகாலக்ஷ்மிக்கு பிரதானமான ஆலயங்களும் உண்டு. மும்பை மகாலட்சுமி, கோலாப்பூர் மகாலட்சுமி,திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார், நாமக்கல் நாமகிரி தாயார் சந்நிதிகள் தனிச்சிறப்பு கொண்டவை. அது போன்று மும்பை தஹானுவில் அமைந்துள்ள மகாலக்ஷ்மி ஆலயம் தனிச்சிறப்பும், சக்தியும் கொண்டு விளங்குகிறது.

மகாராக்ஷ்டிராவின் மிக முக்கியமான சக்தி ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் தஹானுவில் தேவி கோயில் கொண்ட வரலாற்றைக் காண்போம். கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தன்னை இடையறாது வணங்கி செல்வந்தராக விளங்கும் குஜராத்தி மக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, தான் குஜராத்தில் சென்று கோயில் கொள்ள ஆசைப்பட்டாள். அவள் நடந்து சென்ற இடமெல்லாம் புனிதமாயிற்று. செடி கொடி, பறவைகள்,விலங்குகள் பவித்ரமடைந்தன. கானகம் செழுமை பெற்றுக் குலுங்கியது! அங்கு வாழ்ந்த அரக்கன் ஒருவன் மகாலக்ஷ்மியுடன் யுத்தம் செய்தான். தேவிக்கும் அரக்கனுக்கும் மகாபயங்கரமான போர் நடைபெற்றது. தேவியின் கோபத்தில் கானகமே ஸ்தம்பித்தது. மகாலக்ஷ்மியின் ஆயுதம் அரக்கனின் கண்களை எரித்தும், அவன் இறக்காமல் முழு வீரியத்துடன் போர் புரிந்தான். தேவி தன் திரிசூலத்தால் அவனைக் கொன்றாள்.

கோவில் தோற்றம்


அசுரனைக் கொன்ற களைப்புதீர மகாலக்ஷ்மி அந்த மலையில் அமர்ந்தாள். அம்மலையின் இயற்கைக் காட்சிகளின் அழகிலும், செழிப்பிலும் மனம் மயங்கியவள் அங்கேயே கோயில் கொண்டாள். தன் அருளை மக்களுக்கு வாரி வழங்க மனம் கொண்ட தேவி, கன்னா டாக்கூர் என்பவர் கனவில் தான் மலைமீது இருப்பதை சொல்லி பூஜை செய்யும்படி ஆணையிட்டாள்.

தஹானு மலை


சமீபத்திய ஆலயம் கீழேயே உள்ளது. தேவி கீழே கோயில் கொண்டது ஏன்? தேவியின் கருணையைக் கூறும் சம்பவம் இது. மலைமீது தேவியைத் தரிசிக்கச் சென்ற கர்ப்பிணி ஏறமுடியாமல் மயங்கி விழ, தேவி தான் கீழே இருப்பதாக அருள் செய்தாள். சுயம்புவாகத் தோன்றி அவளுக்கு தரிசனமும் தந்தாள். அவ்வாலயமே இன்று அனைவரும் வழிபடும் ஆலயம்.

தேவி முதலில் சாந்நித்யம் கொண்ட மலை 1400 அடி உயரம். அங்குதான் தேவியின் சந்நிதியும் உள்ளது. அங்கு யாரும் செல்ல மிடியாது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பெளர்ணமியன்று 'துவஜ ஸ்தாபனம்' மலைக் கோயிலில் நடைபெறுகிறது. ஆதிவாசிகளே இவ்வாலயத்தில் பூஜை செய்ய தகுதி உடையவர்கள். அக்குடும்பத்தில் ஒருவரே மிக்க நியம நிஷ்டையுடன் இருந்து இரவு பனிரெண்டு மணிக்குக் கொடியையும், மகாலக்ஷ்மியின் மடியை நிறைக்க பனிரெண்டு தேங்காய்கள், தாம்பூலம் இவற்றுடன் மேலே ஏறிச்செல்வார். அந்நாளில் தேவி அங்கு சஞ்சாரம் செய்வதாக ஐதீகம். அவருள் தேவியே ஆட்கொண்டு விடுவதாக சொல்லப்படுகிறது. மேலே சென்று தேவிக்குப் பூஜை செய்து விட்டு, கொடியும் நட்டு விட்டு, அங்கு தேவி ரூபமாக காட்சி தரும் புலியையும் தரிசித்து காலை ஏழு மணிக்குக் கீழே வந்து விடுவர்.

அதைத் தொடர்ந்து பதினைந்து நாட்கள் 'யாத்ரா உத்சவம்' மிக விமரிசையாக நடைபெறுகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அச்சமயம் இங்கு வழிபட வருகின்றனர்.

இனி தேவியைத் தரிசிப்போம். ஓங்கி உயர்ந்த இரு தீபத்தம்பங்களை தரிசித்து, ஆலயத்துள் நுழைவோம். அலங்கார வளைவுகளுடன் பளிச்சென்று காணப்படும் முன் மண்டபத்தை தாண்டிச் சென்றால் தேவியின் கர்ப்ப க்ருஹம். தேவியின் ஜாஜ்வல்லியமான முகதரிசனம் கண்களைக் கொள்ளை கொள்கிறது. இரு யானைகள் தாங்கும் தூண்களுடன் கலை நயம் மிக்க மண்டபத்துள், தேவியின் இருபுறமும் துவாரபாலகர் நின்று காட்சி தருகின்றனர். சிரத்தில் ஜொலிக்கும் தங்க கிரீடத்துடன், மூக்கில் மீன் போன்ற மூக்குத்தி அணிந்து, கருணை பொங்கும் நயனங்களுடன் பூ மாலைகள் அழகு செய்ய காட்சி தருகிறாள் அன்னை மகாலக்ஷ்மி. நேரில் நிற்கும்போது தேவியின் விரிந்து பரந்த கண்கள் நம்மையே பார்ப்பது போல் தோன்றுகிறது!

மஹாலக்ஷ்மி


நாம் சுமங்கலிகளுக்கும், சுவாசினிகளுக்கும் மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தருவோம். ஆனால் மராட்டியப் பெண்களோ தெய்வங்களுக்கே 'வோட்டிபரி' (மடியை நிரப்புதல்) செய்வார்கள். புடவைத் தலைப்பால் மூடியபடி மஞ்சளையும், குங்குமத்தையும் தேவி மால் தெளித்து தாம்பூலம், பழம், தேங்காயை தேவியின் மடியில் சமர்ப்பிப்பார்கள். பக்தியும், பணிவும் கொண்டு தேவியை தம் குடும்பப் பெண்போல் பாவிக்கும் மராட்டியப் பெண்களிடம் தேவி நிரந்தரமாகத் தங்கிவிடுகிறாள்.

தேவி மிகவும் சக்தியுள்ள தெய்வம் என்றும், இவளிடம் எது நினைத்தாலும் நிமிடத்தில் நிறைவேறும் என்றும் ஆலயத்திலுள்ளோர் சொன்னார்கள். தேவியின் பரிபூரண சாந்நித்தியத்தை நன்கு உணர முடிந்தது. இங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் விழாக்கோலம் கொண்டு, அற்புதமான அலங்காரத்தில் அன்னை காட்சி தருவாள். அஷ்டமி நாட்களில் மிக விசே ஷமான வழிபாடுகள் உண்டு.

தஹானு மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் ரயில் பாதையில் மும்பையிலிருந்து 124 கி.மீ திலைவில் உள்ளது. தஹானுவிலுள்ள 'சாரோட்டி நாகா' என்ற இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு வரை தரிசனம் உண்டு. மும்பை செல்வோர் அனைவரும் தரிசிக்க வேண்டிய அழகிய ஆலயம் தஹானு மகாலக்ஷ்மி ஆலயம்.

கோவில் தோற்றம்