Thanjai

Thanjai

வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஸ்ரீ மாவுலம்மன்... பீமாவரம்

அழகே  உருவாய் ஸ்ரீமாவுலம்மன்...

தீபம்  5.1.2014 இதழில் வெளியானதுநம்  நாட்டில்  எல்லை  தெய்வங்கள் மாரியம்மன் , பொன்னியம்மன்காளியம்மன்மதுரை  வீரன்  என்ற  பெயர்களில்   எல்லா  கிராமங்களிலும் அருள்  பாலிப்பார். அந்த எல்லை தெய்வங்களே   தீய  சக்திகளில்  இருந்தும்கொடிய நோய்களில்  இருந்தும்  நம்மைக்  காப்பாற்றும்  என்பது  நம்  நம்பிக்கை. சமீபத்தில்  ஆந்திரா  சென்றிருந்த சமயம்  பீமாவரம்  என்ற  ஊரில் தரிசனம்  தரும்  மாவுலம்மா என்ற  தேவியின் ஆலயம்  சென்றிருந்தேன். 


இவ்வாலயத்தில்  வானளாவ  உயர்ந்து  பிரம்மாண்டமாகக்  காட்சியளித்த  தேவியைக்  கண்டு பிரமித்து விட்டேன்.ஜகன்மாதாவாக , காளிதேவியாகக்  காட்சியளிக்கும்  காவல்  தெய்வம் மாவுலம்மா  தேவி அங்கு  கோயில்  கொண்டது  எப்படி?

கி.பி.1200ல்  இந்த  அம்மன்  தோன்றியதாகக்  கூறப்பட்டாலும் பீமாவரத்தில்  அரசமரம்  மற்றும்  வேப்பமரங்களுக்கு கீழே  காட்சியளித்த  அம்மன் கி.பி. 1880லிருந்தே  மக்கள்  வழிபட  தன்னை  வெளிக்  காட்டிக் கொண்டாள் அவ்விடத்தில்   மாமரங்கள் நிறைந்திருந்ததால்  'மாமில்ல  அம்மா' (மாமில்ல  என்பது  மாமரம்)  என்று  அழைக்கப்பட்டாள்.  சுற்றியுள்ள  கிராம  மக்கள்  இத்தேவியை  தங்கள்  குல  தேவதையாகக்  கொண்டதால் 'மா  உள்ளம்மா' (எங்கள் சொந்த   அம்மன்)  என்ற  பெயர்  பெற்றதாகக்  கூறுகிறார்கள். 
 .
1880ம் வருடம்  வைகாசி   மாதத்தில்  மாறல்ல  மச்சி  ராஜு  மற்றும்  கிராந்தி  அப்பண்ணா  ஆகியோரின்  கனவில்  தோன்றிய  அன்னை  தான்  இருக்குமிடம்  கூறி  தனக்கு  ஆலயம்  கட்டும்படி  சொல்லஅவர்களும்   தேவியைக் கண்டெடுத்து  ஒரு  சிறு  குடிசை  அமைத்து    வழிபட்டு வந்தனர். பின்பு அவ்வூரின் கடைத்தெருவில் ஒரு  ஆலயம்  அமைத்து  வழிபட்டனர். அம்மனின் அற்புத  லீலைகளும்அளப்பரிய கருணையும்  பெற்ற  பலரும்  அத்தேவியை  தங்கள்  குல  தெய்வமாக  வணங்க  ஆரம்பித்தனர்.  தேவியின்  பெருமை  சுற்றியுள்ள  கிராமங்களுக்கும்  பரவலாயிற்று.

1910ம் ஆண்டு வெள்ளத்தில்  தேவியின்  உருவம்  சிதைந்தபோது  கிராந்தி  அப்பாராவ்  என்ற  சிற்பியால்  முன்பிருந்த   மூர்க்கமான உருவம்  மாற்றப்பட்டு  தற்போது  அருள்  தரும்  சாந்தி ரூபமாக  வடிக்கப்பட்டது.அழகிய  கோபுரத்துடன்  காட்சியளிக்கும்  ஆலயத்தில்  எப்பொழுதும் மக்கள்  கூட்டம்  நிரம்பியிருக்குமாம். தென்னிந்திய  பாணியில்  அமைந்துள்ள  ஆலயத்தினுள்  தேவியின்  பல  வடிவங்கள்  வண்ணமயமாகக்  காட்சி  தருகிறது.
அன்னையின்   சந்நிதிக்கு செல்வோம்.  அற்புதமான,   மனத்தைக் கொள்ளை  கொள்ளும்  அழகிய  , அருள்  பொழியும்  திருவுருவம். பத்து  அடி  உயரத்தில்  பளபளப்பும்தகதகப்புமாக  இடக்கால்  மடித்துவலக்காலை  தொங்கவிட்டு  நெடிதுயர்ந்து  காட்சி  தரும்   தேவியின்  நான்கு  கரங்களில்  சூலம்உடுக்கைவாள் கலசம்  என்று  தன்னை  அண்டி  வந்தாரைக் காக்கும்  முகமாகக்  காட்சி  தருகிறாள். அத்தனையும்  பொற் கவசங்களால்  மின்னுகிறது!விசே ஷ நாட்களில்   24 கிலோ   தங்கம்,  274  கிலோ  வெள்ளி  மற்றும்  வைரத்தால்  ஆபரணங்கள்  பூண்டு  65  கிலோ  தங்கப்  புடவை  அணிந்து  அற்புதமாகக்  காட்சி  தருவாள். ஆந்திராவின்  செல்வம்  நிறைந்த  ஆலயங்களுள்  இவ்வாலயமும்  ஒன்றாம். விரிந்த  நயனங்களும்வரம்  தரும்  கருணைக்   கரங்களுமாக  எழிலாகக்  காட்சி  தரும்  அன்னையைக்  காணக்  கண்கோடி  வேண்டும். அவளது  காருண்யம்  நம்மைக்  கட்டிப்போட்டு அங்கிருந்து நகர   முடியாமல் செய்கிறது. 
வரப்பிரசாதியான  அன்னையிடம்  முறையிடும்  வேண்டுதல்கள்  விரைவில்  நிறைவேறுவதால்  மக்கள்  தேவியை  அண்டி  வந்து  பிரார்த்தனைகளை  செலுத்துகின்றனர். நாம்  அர்ச்சனைக்கு  கொடுத்தாலும்இல்லாவிடினும் ஆலயத்திற்கு  தரிசனத்திற்கு  வரும்   அனைத்து  பக்தர்களின்  பெயர், கோத்திரம்நட்சத்திரம்  கேட்டு  அர்ச்சகர்கள்  பொறுமையாக  பூஜிக்கும்  முறை  ஆந்திராவின்  அத்தனை  ஆலயங்களிலும்  நான்  கண்ட  அதிசயம்.

ஆலயத்தில்  தினமும்  பிராதகால  பூஜைகுங்குமார்ச்சனை  ,வேத  பாராயணம், சகஸ்ரநாமம் அன்னதானம்   ஆகியவை  தவறாது  நடைபெறுகிறது.


அன்னையின்  அருளால்  அவ்வூர்  மிகச்  செழிப்புடனும்வளத்துடனும்  கல்வி, தொழில், அனைத்திலும்  சிறப்புற்று  விளங்குவதாக  அவ்வூர்  மக்கள்  பக்தியுடன்  கூறுகிறார்கள். மக்களின்  எல்லாக்  குறைகளையும்   அன்னை  உடனே களைந்து  அவர்களின்  வாழ்வை  இனிதாக்குகிறாள் .

இங்கு  ஆனி மாதம்  பௌர்ணமி  அடுத்து  வரும்  பிரதமையிலிருந்து  கிட்டத்தட்ட  ஒரு  மாதம்  திருவிழா மிக  விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி  மாதம்   சங்கராந்தியின் போது 40  நாட்கள் ஆண்டு  உத்சவம்   கொண்டாடப்  படுகிறது.  நவராத்திரியில்  லக்ஷகுங்குமார்ச்ச்சனாமற்றும்  சண்டி  ஹோமம் நடைபெறும்.   ஆடிதை  பௌர்ணமி  மற்றும்   வெள்ளிக்கிழமைகளில்  அன்னை  அழகிய  அலங்காரத்தில்  காட்சி  தருவாள்.

மேற்கு  கோதாவரி  மாவட்டத்தில்  அமைந்துள்ள  இவ்வாலயம்  பீமாவரத்தில்விஜயவாடாவிலிருந்து   100  கிலோமீட்டர்  தொலைவில்   உள்ளது. சிவபெருமானின்  பஞ்சராம  தலங்களில்   ஒன்றான  ஸ்ரீசோமேஸ்வர  சுவாமி  கோயில்   கொண்டிருக்கும்  பீமாவரம்  செல்பவர்கள்  ஸ்ரீமாவுலம்மனையும்  தரிசித்து  அருள்  பெருக.


வியாழன், 2 ஜனவரி, 2014

இணைந்த மனங்கள்


இணைந்த மனங்கள்

"ஜோதி! இங்க வாம்மா! சமையல் அப்பறம் செய்யலாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி, நைட்டிக்கு மாறியவள், தயாராக வைத்திருந்த காஃபியைக் குடித்தாள். இரவு சமையலைக் கவனிக்க அடுக்களைக்குள் சென்றவளை கமலியின் குரல் தடுத்தது.

"இதோ வரேம்மா! என்ன விஷயம்?" அருகில் வந்து அமர்ந்தாள் ஜோதி.

"என்னங்க...நீங்கதான் சொல்லுங்களேன்!"

"என்னப்பா...அம்மா என்ன சொல்றாங்க?"

"அது.... ஒரு கல்யாண விஷயம். நீயே சொல்லேன் கமலி!"
கல்யாணம் பற்றிப் பேசினாலே பிடி கொடுத்துப் பேசாமல் நழுவி விடுவாள் ஜோதி! அதனால் தயங்கிய வெங்கடாசலம், கமலியைக் கைகாட்டி விட்டார்.

"கல்யாணமா? யாருக்கு? எங்க?"

"அம்மா ஜோதி! இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி தனியா வாழ முடியும்? சேகர் போய் விளையாட்டுப் போல இரண்டு வருஷம் ஆயாச்சு. நாங்க இன்னும் எவ்வளவு நாள் சாஸ்வதம்? உனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க நானும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கோம்மா! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னைப் பார்க்க அந்தப் பையன் வருவான். இந்த நைட்டியை மாற்றி ஒரு நல்ல புடவையைக் கட்டிக்கோ."

"திடீர்னு என்னம்மா இதல்லாம்? என்னால சேகரைத் தவிர இன்னொருத்தரை...."

"இதப்பாரு ஜோதி! உன்னை நீயே ஏமாத்திக்காத. உனக்கும் சின்ன வயசு. குழந்தைகளைப் பெத்துகிட்டு சந்தோஷமா வாழ வேண்டிய வயசு. நாங்க எதுவும் உன் நல்லதுக்குதாம்மா சொல்வோம். மறுத்துப் பேசாதே"
வெங்கடாசலம் கண்டிப்பாகக் கூறினார்.

"ஏம்பா! நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா?

எங்கயாவது லேடீஸ் ஹாஸ்டலுக்கு போயிடவா?"

ஜோதிக்கு அழுகையில் வார்த்தைகள் தடுமாறியது.

"அப்படி இன்னொரு தரம் சொல்லாதம்மா. நாங்க ரெண்டு பேரும்தான் உனக்கு பாரமா இருக்கோம். உன் பிறந்த வீட்டுக்கும் போகாம எங்களுக்கு செய்யணும்னு உனக்கு என்னம்மா தலையெழுத்து?'

"அப்பா! அப்படியெல்லாம் பேசாதீங்க. கல்யாணமான அன்னிக்கே அவருடைய உறவுகளும் என் உறவாயிடுச்சு. அவருக்கு அப்புறம் அவரோட வேலையை நான் ஏத்துகிட்ட மாதிரி, அவரோட பொறுப்புகளையும் ஏத்துக்க வேண்டியது என் கடமை இல்லயா அப்பா? அந்தக் கடமை எனக்கு பாரமில்லப்பா! அது என் உரிமை ஆனா நீங்க ரெண்டு பேரும்தான் என்னை இன்னமும் உங்க பெண்ணா நினைக்கலை."

கண் கலங்கினாள் ஜோதி.

"உன்னை எங்க சொந்தப் பெண்ணா நினைச்சுதாம்மா இந்த முடிவை எடுத்திருக்கோம். நாங்க சொல்றதை நீ எப்பவும் தட்ட மாட்டேங்கிறதாலதான் அந்தப் பையனை வரச் சொல்லிருக்கோம்மா. அவரும் மனைவியை ஒரு வருஷம் முன்னால மூளைக் காய்ச்சல்ல பறி கொடுத்தவர்"
கமலி சொல்ல வெங்கடாசலம் தொடர்ந்தார்.

"அவருடைய மாமனார், மாமியாருக்கு அவர் மனைவி ஒரே மகள். இவங்களை அவர்தான்மா தன்கூட வெச்சுகிட்டிருக்கார். அவங்க வற்புறுத்தலாலதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கார். அவருடைய மாமனார் என் பால்ய நண்பன்மா."

"நீ சேகருக்கு துரோகம் பண்றதா நினைக்காதம்மா. அவன் உயிர் போறதுக்கு முன்னால எங்ககிட்ட உனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வெக்கச் சொல்லி சத்தியம் வாங்கிண்டான். அதை நிறைவேத்தறது எங்க கடமையில்லயாம்மா?'

சொல்லும்போதே கமலியின் நாக்கு தழுதழுத்தது. ஜோதிக்கு பழைய நினைவுகள் மனதில் வந்து நெஞ்சில் அடைத்தது.

சேகருக்கு அடிக்கடி டூர் போகும் வேலை. ஊரில் இருக்கும் நேரங்களில் இருவரும் ஜாலியாக சினிமா, பீச் என்று ஊரைச் சுற்றி சந்தோஷமாக நாட்களைக் கழிப்பார்கள். கமலியும் ஜோதியை எந்த வேலையும் செய்ய விடாமல் சேகரோடு இருக்கச் சொல்லிவிடுவாள்.

அன்றும் இப்படித்தான் மிக சந்தோஷமாக இருவரும் பைக்கில் சினிமாவுக்குக் கிளம்பினார்கள். போகும் வழியில் திடீரென ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் எதிரில் வந்த லாரி மோத, இருவரும் தூக்கி எறியப் பட்டார்கள்.

அவ்வளவுதான் ஜோதிக்குத் தெரியும். மூன்று நாட்களுக்குப் பிறகு ஜோதி கண்விழித்தபோது சேகர் சாம்பலாகியிருந்தான். சேகருக்கு தலையில் நல்ல அடிபட்டு ஆபரேஷன் செய்து, ஒரு நாள் நன்கு பேசிக் கொண்டிருந்ததாயும் பிழைத்து விட்டான் என்று சந்தோஷப் பட்டபோது, திடீரென்று தலையில் ரத்தப் போக்கு அதிகமாகி இறந்து விட்டதாயும் சொன்னதைக் கேட்ட ஜோதி அலறிய சத்தத்தில் மருத்துவமனையே அதிர்ந்தது.


மீண்டும் மயக்கமானவள் நார்மலாக ஒரு வாரமாயிற்று. சேகரை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே அவளுக்கு சில மாதங்களாயிற்று.

பழைய நினைவுகளால் தாக்கப்பட்டு மௌனமாயிருந்த ஜோதி, மாமியாரின் குரலில் நிகழ் காலத்துக்கு வந்தாள்.

"என்ன ஜோதி யோசிக்கற? போய் உடையை மாத்திக்கிட்டு வா. உனக்கு நல்லபடி கல்யாணத்தை முடிச்சுட்டு நாங்க ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்கு போகலாம்னு இருக்கோம்.'

உடை மாற்ற எழுந்த ஜோதி 'பட்'டென்று உட்கார்ந்தாள்.

"வேண்டாம்... நான் இதுக்காகதான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன். நீங்க என்னை விட்டுப் போவதாயிருந்தால் நான் கல்யாணமே செஞ்சுக்க முடியாது. கடைசி வரைக்கும் உங்க கூடவே இருந்துடுறேன்."

"என்ன ஜோதி இது, இதெல்லாம் நடக்கற காரியமா?"

"நானே அந்தப் பையன்கிட்ட பேசிக்கறேன். இதுக்கு அந்தப் பையன் ஒத்துகிட்டா ஓகே! இல்லாட்டி நோ மேரேஜ்!"

ஜோதி உள்ளே சென்றதும் கமலி, வெங்கடாசலத்திடம் கவலையோடு கேட்டாள்.

"என்னங்க இது? இவ இப்படி பேசறாளே? இவ மருமகளா கிடைச்சது நாம பண்ணின புண்ணியம்."

கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கமலி.

"பேசாமல் இரு. முதலில் கல்யாணம் முடியட்டும்."

"வாங்க மகேஷ்! உக்காருங்க! கமலி.... ஜோதியை டிஃபன், காஃபியோட வரச் சொல்லு."

"அந்த ஃபார்மாலிட்டியெல்லாம் எதுக்குங்க?"

மகேஷ் கூச்சத்துடன் சொல்ல ஜோதி தட்டில் குலோப்ஜாமூன், மிக்சருடன் காஃபியை எடுத்து வந்தாள். மகேஷிடம் கொடுத்தவள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"நான் என்னைப் பற்றி ஸ்பெஷலா சொல்ல ஒண்ணுமில்லீங்க. நான் ஒரு மெகானிகல் எஞ்சினியர். உங்களுக்கெல்லாம் 'ப்ரேம் நிவாஸ்' பற்றி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அந்த அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். நான் வேலை செய்த கம்பெனியில் அனுவை சந்தித்தேன். நட்பு காதலாகி கல்யாணம் செய்து கொண்டோம். நாலு வருஷம் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தோம்."

உணர்ச்சி மிகுதியில் வார்த்தைகள் தடுமாறின.

"அனு அவங்க பெற்றோருக்கு ஒரே மகள். ஊர் பேர் தெரியாத எனக்கு அனுவைக் கல்யாணம் செய்து கொடுத்த அவங்களோட பெருந்தன்மை, எனக்கு அவங்க மேல இருந்த மதிப்பை உயர்த்தியது. அவங்களும் எங்க கூடவே இருந்தாங்க. அனாதையா அன்புக்கு ஏங்கிக்கிட்டிருந்த சமயம் அம்மா, அப்பா கிடைச்ச சந்தோஷம் எனக்கு! மகளுக்கு அவள் விரும்பிய நல்ல வாழ்க்கை கிடைச்ச சந்தோஷம் அவங்களுக்கு! எங்க எல்லார் சந்தோஷத்தையும் அனுவுக்கு வந்த ஒரு நாள் ஜுரம் தவிடு பொடியாக்கிடுச்சு. எமனுக்கு என்ன அவசரமோ, ஆஸ்பத்திரியில் சேர்த்த நாலாம் நாள் அனு போய் சேர்ந்துட்டா. மூளை காய்ச்சல்னு காரணம் சொல்லிட்டாங்க டாக்டர்கள்."

துக்கம் நெஞ்சை அழுத்த, சற்று சுதாரித்துவிட்டு மேலே தொடர்ந்தான் மகேஷ்!

"அனு காரியமெல்லாம் முடிந்து அவளுடைய பெற்றோர் தனியா போறதா சொன்னாங்க. ஆனால் அருமையாகக் கிடச்ச பெற்றோரை நான் இழக்க விரும்பல. நான் அவங்க மகனா இருந்து கவனிச்சுக்கறேன். அவங்க வற்புறுத்தல்தான் என்னை இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தது."

"நீங்க உங்க மாமனார், மாமியாரைத் தாங்கற மாதிரிதான் ஜோதியும் எங்களை அவ பெற்றோரா நினைச்சு, எங்களுக்கு மகன் இல்லாத குறை தெரியாம பார்த்துக்கறா. சேகர் போனதும் அவளைப் பிறந்த வீடு போகச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் போக மறுத்துட்டா.... அப்புறம் உங்களுக்கு ஜோதியைப் பிடிச்சிருக்கா?

"முதல்ல அவங்க சொல்லட்டும்!"

"அப்பா...நான் கொஞ்சம் அவர்கிட்ட தனியா பேசணும்."

"சரிம்மா.... உன் அறைக்கு கூட்டிட்டு போ."

அறையினுள் மகேஷை அமரச் சொன்னாள் ஜோதி.

"நான் நேரடியாவே பேச விரும்பறேன். உங்க மனைவியின் பெற்றோரை நீங்க கூடவே வெச்சு  ஒரு மகனாக சேவை செய்வதைப் பற்றி உங்க மாமனாரே பெருமையா சொன்னதா அப்பா சொன்னார். விலை மதிக்க முடியாதது இந்த உலகத்தில தன்னலமில்லாத அன்பு மட்டும்தான். எந்த ஒட்டும், உறவும் இல்லாத மனிதர்களைப் பாலமா இருந்து இணைப்பது அன்புதான். பணத்தை மட்டுமே மதிக்கிற இந்த உலகத்தில மனித மனத்தை மதிக்கிற நீங்க, என்னுடைய இந்த இரண்டு வேண்டுகோளுக்கு சம்மதிப்பீங்கனு நினைக்கிறேன்.."

"என்ன? கைகேயி மாதிரி இரண்டு வரம் கேட்கப் போறீங்களா?" சிரித்தான் மகேஷ்.

"கைகேயி தசரதர்கிட்ட அவர் மகனைப் பிரியச் சொல்லி வரம் கேட்டா! ஆனா நான் என் மாமனார், மாமியாரைப் பிரியாம இருக்க விரும்பறேன். அவங்களும் நம்ம கூட இருக்க நீங்களும், உங்க மாமனார், மாமியாரும் சம்மதிக்கணும்.

"அடுத்து நமக்குன்னு சொந்தமா ஒரு குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேன்."

"முதல் வேண்டுகோளுக்கு ஓகே! ஆனா இரண்டாவது...... புரியலையே?!"

"நம்ம இரண்டு பேருக்குமே பிரிவின் துக்கம் தெரியும். அதுபோல பெற்றோறை இழந்து அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தாலென்ன? நம் சொந்த ரத்தத்திடம் அன்பு காட்டுவது இயல்பு; சுயநலமும் கூட. அதையே நமக்கு சம்பந்தமில்லாதவங்ககிட்ட காட்டும்போது அந்த அன்பு எல்லை கடந்து விரிகிறது.

"அதனால்தான் நமக்கு சம்பந்தமில்லாதவர்களை சொந்தமாக்கிக் கொண்டு அவர்களை என் அன்புச் சங்கிலியால் கட்ட விரும்புகிறேன். இதற்கும் நீங்கள் சம்மதித்தால், எனக்கு இந்தத் திருமணம் சம்மதம்."

அப்படியே விழிகள் வியப்பால் விரிய பேச்சற்று நின்று விட்டான் மகேஷ்! தன்னையே உற்றுப் பார்த்த மகேஷைக் கண்டு வெட்கத்துடன் தலை குனிந்தாள் ஜோதி!

"க்ரேட்! ரொம்ப க்ரேட்டுங்க நீங்க! அனாதையா பிறந்து வளர்ந்த எனக்கே இந்த எண்ணம் வந்ததில்ல. உங்களை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு இதில பரிபூரண சம்மதம். அதோட இன்னொரு பெற்றோர் எனக்கு இலவசமாக கிடைக்கும்போது..... ரொம்ப சந்தோஷமா இருக்குங்க!"

"அப்பறம்.... உங்களுக்கு என்னிடம் ஏதாவது கேக்கணும்னா கேளுங்க."

"என்னைத் திருமணம் செய்துகிட்டு உங்க விருப்பங்களை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா?"

அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, கெஞ்சுவது போல மகேஷ் கேட்க ஜோதி 'களுக்'கென்று சிரித்து விட்டாள்.

"அய்யோ, போதும் உங்க விளையாட்டு. வெளிய நம்ம அம்மா, அப்பா காத்திருப்பாங்க! வாங்க, போகலாம்!"

வெகுநாட்களுக்குப் பின் சந்தோஷமாக, சிரித்த முகத்தோடு மகேஷுடன் இணைந்து வெளியில் வந்த ஜோதியைப் பார்த்த கமலிக்கும், வெங்கடாசலத்திற்கும் மனதிலிருந்த ஒரு பெரிய பாரம் இறங்கியதைப் போல் நிம்மதியாக இருந்தது.

"என்ன மகேஷ்! ஜோதி என்ன சொன்னா? எங்களையும் உங்க கூட வெச்சிக்க அனுமதி கேட்டிருப்பாளே? அதெல்லாம் சரிவராதப்பா."

"அதிலென்ன தப்பு அங்கிள்! இனி உங்களுக்கும், அம்மாவுக்கும் நல்லா பொழுது போகும். பேச்சுத் துணைக்குதான் என் மாமனார், மாமியார் இருக்காங்களே? நாம எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கலாம். இனி நான் உங்கள் மகன்!"

மகேஷ் குனிந்து இருவரின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

சேகரின் நினைவு வெங்கடாசலத்தின் கண்களை நிறைத்தது. ஆதரவாக அவரது கையைப் பிடித்தான் மகேஷ்!

"இனிமே நீங்க எதுக்கும் வருத்தப்படக் கூடாதுப்பா. கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாளாப் பாருங்க!"

வெட்கத்துடன் ஓரக் கண்ணால் ஜோதியைப் பார்த்துக் கொண்டே மகேஷ் சொல்ல, அந்த அறை சந்தோஷ சிரிப்பலையால் நிறைந்தது!