Thanjai

Thanjai

செவ்வாய், 26 மே, 2015

என் சினேகிதி



சினேகிதி பிப்ரவரி 2006 இதழில் வெளியானது



நம் வாழ் நாளில் நாம் பலருடன் பழகுகிறோம். நட்புடன் இருக்கிறோம். ஆனால் யாராவது ஒருவர் மட்டுமே உள்ளார்ந்த, ஆழ்ந்த நட்புடன் இருக்க மிடுயும். அப்படி பழக்கத்தால் மட்டுமன்றி, உள்ளத்தாலும், உணர்வுகளாலும் நட்பைத் தொடரும் சினேகிதிகள் நானும், முத்துலட்சுமியும்.

ஈரோட்டில் நாங்கள் இருந்த சமயம், என் மகனின் நண்பனின் தாயாக அறிமுகமான என் தோழி முத்துலட்சுமியின் நட்பின் வயது 15 வருடங்களுக்கு மேல்! எங்கள் எண்ணங்கள், ரசனைகள், அபிப்பிராயங்கள் ஒரே அலைவரிசையில் இருந்த்தனால், எங்கள் நட்பும் இன்று வரை தொடர்கிறது. திருமணம், குடும்பம் என பிரிந்து விட்டாலும், ஒவ்வொரு வருடமும், எப்படியாவது நாங்கள் ஒரு முறை சந்திக்கத் தவறுவதில்லை.

கணவர் சகோதரி, மகள், தாய் என்று யாரிடமும் பேச முடியாத பல விஷ்யங்களை நாங்கள் மனம் திறந்து பேசிக் கொள்வோம். அதனால் கிடைக்கும் ஆறுதலும், நிம்மதியும், சந்தோஷமுமே ஒரு நல்ல சினேகித்த்தின் அடையாளம் என்பது எங்கள் எண்ணம்.

இதே சினேகிதியைப் பற்றி விரிவாக குமுதம் சிநேகிதி பிப்ரவரி 2004 இதழில் வெளியான தகவலைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.




மும்பையின் மிகப் பெரிய சிவலிங்கம்


ஞான ஆலயம்-மார்ச் 2006 இதழில் வெளியானது



பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் திரியம்பகேஸ்வர், பீமாசங்கர், க்ருஷ்ணேஷ்வர் ஆகிய மூன்று ஜோதிர் லிங்கத் தலங்கள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன. இவை தவிர  சுயம்புவாகத் தோன்றிய லிங்கங்களைக் கொண்ட பல சிவாலயங்கள் இங்கு உள்ளன. சிவலிங்கங்கள் இங்கு சிறிய அளவாகவே இருக்கும். ஆவுடையும் நம்மூர் மாதிரி உயரமாக அமைந்திருக்காது. சிவபெருமானுக்கு நாமே அபிஷேகம் செய்து, பூச்சூட்டி, வில்வம் சாற்றி, நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். சிவராத்திரியன்று  இங்குள்ள சிவாலயங்கள் அனைத்திலும் இரவு பூராவும் பூஜை நடைபெறும்.

மும்பை தானாவில் கோவில் கொண்டுள்ள கௌபீனேசுவரர் ஆலயம் மிகப் பழமையும் சிறப்பும் கொண்டு விளங்குகிறது. இங்குள்ள சிவலிங்கம் மகாராஷ்டிராவிலேயே மிகப் பெரிய அளவிலான சிவலிங்கமென சிறப்புப் பெற்றது.

மும்பை தானா (மேற்கு) ஸ்டேஷனுக்கு அருகில் அமைந்துள்ள கௌபீனேஸ்வரர் ஆலயம் பழமையானது. தானாவில் அமைந்துள்ள மாஸன்தா ஏரி மிகப் பிரசித்தி பெற்றது. இந்த ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ள இவ்வாலய இறைவன், இந்த ஏரியிலிருந்துதான் கண்டெடுக்கப் பட்டாராம். சர் சுபேதார் ராம்ஜி மகாதேவ் டேவல்கர் என்பவரால் சிறிய ஆலயம் எழுப்பப்பட்டு, அதன் பின் சிறிது சிறிதாக முன்னேற்றமடைந்து, இன்று மும்பையின் பிரசித்தி பெற்ற பெரிய ஆலயமாகக் காட்சி தருகிறது.

கர்ப்பக் கிரகத்தின் நடுவில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார் கௌபீணேசுவரர். நான்கரை அடி உயரமும், 12 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத்தைத் தரிசிக்கும்போது நம் மனம் லேசாகிறது. தஞ்சாவூர் பிரகதீசுவரரை அடுத்த பெரிய லிங்கம் கௌபீணேஸ்வரர் என்று ஆலய அதிகாரிகள் கூறுகின்றனர். கர்ப்பக் கிரகத்தில் மேலும் மூன்று சிறிய சிவலிங்கங்களும், பார்வதியின் சிலா விக்ரகமும் உள்ளது. இறைவனை நாமே தொட்டு பூஜை செய்து அவனருள் பெறலாம்.

ஆலயம் காலை 4 மணி முதல் 2 மணி வரை, மற்றும் 3 மணி முதல் இரவு 11 மணி வரயும் திறந்திருக்கும். மும்பையில் உள்ளோர் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம். சிவராத்திரி இங்கு மிகப் பெரிய உற்சவமாகக் கொண்டாடப்படும்.




ஊர் சுற்றலாம் வாங்க-ஜெர்மனி


ஒரு முறை குளிக்க 1800 ரூபாய்!

குமுதம் 13-12-2006 இதழில் வெளியானது





நீங்கள் ஒரு குளியல் பிரியரா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் ஜெர்மனிக்கு ஒரு முறை போய் வாருங்கள். விதவிதமான குளியலைப் பார்த்தும், அனுபவித்தும் திக்குமுக்காடிப் போவீர்கள்.

சமீபத்தில் ஜெர்மனி சென்றிருந்த நான், சுற்றிப் பார்க்கக் கிளம்பியபோது, என் மகன் முதலில் அழைத்துச் சென்றது பாதேன்-பாதேன் என்ற ஊருக்குத்தான்.

பாதேன்-பாதேன் (Baden-Baden) என்ற அந்த ஊரில் ஏகப்பட்ட குளியலறைகள்! ஏதோ நம்மூர் குளியலறைகள் என்று நினைக்காதீர்கள்! அத்தனையும் ஸ்பெஷலான, விதவிதமான குளியல் முறைகள். அத்துடன், ரசனையுடன் கூடிய ரோமானிய முறைக் குளியலறைகள். குளிப்பாட்டி(!) விடவும் மஸாஜ் செய்யவும் தனித் தனி நபர்கள் உண்டு. ஆண்களும், பெண்களும் இணைந்து குளிக்கவும் வசதி உண்டு! பதினாறு ஸ்டெப்களில் கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் அதாவது மென்னீர் குளியல், வெந்நீர் குளியல், சோப், மஸாஜ், ஷவர், தெர்மல் ஸ்டீம் பாத், வார்ல்பூல் பாத் (whirlpool bath), குளிர் நீர் குளியல் என்று விதவிதமாகக் குளிப்பாட்டி துடைத்து, மாய்ச்சரைஸிங் க்ரீம் தடவி அனுப்புவார்கள். ஒவ்வொரு குளியலுக்கும் ஒவ்வொரு இடம். இந்த சுகமான குளியலை அனுபவிக்கவென்றே, ஐரோப்பா மட்டுமன்றி, பல வெளி நாட்டினரும் இவ்வூருக்கு வந்து குளிக்கிறார்கள். ஒரு முறை குளிக்க 300 யூரோ அதாவது 1800 ரூபாய்கள். அம்மா...டி! நமக்கு நம்ம பாத்ரூமே போதும் என்று வந்து விட்டோம்!

அடுத்து நாங்கள் சென்றது ‘உல்ம்’ (Ulm) என்ற இடத்திற்கு. அங்குள்ள ப்ராடஸ்டன்ட் சர்ச்தான் உலகிலேயே மிகப் பெரியது. மிக உயரமானது. அண்ணாந்து பார்த்தாலே தலை சுற்றுகிறது! மேலிருந்து பார்த்தால் உல்ம் நகரும். அதனைச் சுற்றி ஓடும் டோனா நதியும், சுற்றிலும் உயரமாக அமைந்துள்ள வலுவான கோட்டைச் சுவர்களும் மிக அழகாக உள்ளன. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த ஊரும் இதுவே.

இங்குள்ள மியூசியம் உலகப் புகழ் பெற்றது. 3200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிற்பியால் செதுக்கப்பட்ட சிங்க மனிதன் உருவம் உலகிலேயே இங்குதான் உள்ளது.

அடுத்து நாங்கள் சென்றது ஹைடல் பெர்க் (Heidelberg) கோட்டை. ஜெர்மனியின் நாகரிகம், பண்பாட்டைப் பறைசாற்றும் மிக முக்கியக் கோட்டைகளில் இதுவும் ஒன்று.

பிரெஞ்சுப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக்க இங்கு கட்டப்பட்டுள்ள பல கோட்டைகள் மிக அற்புதமாக எதிரிகளை மறைந்து தாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. சிறந்த கலையழகுடன் காணப்படும் இந்த உயர்ந்த கோட்டை இன்று இடிந்து விழுந்து காணப்படுகிறது. இது 13-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட போது உலகின் எட்டாவது அதிசயமாகப் புகழப் பட்டதாம்.

இதில் அமைந்துள்ள பேலஸ், வெளித் தோட்டத்தில் ஏகாந்தமாக அழகிய ஃபௌண்டனுக்கு நடுவில் படுத்திருக்கும் ஃபாதர் ரினோவின் சிலை ஆகியவை கண்கவர் காட்சிகள்! அரண்மனையினுள் சாராயம் நிரப்பி வைக்கும் பிரம்மாண்டமான பீப்பாய் நம் வாயைப் பிளக்க வைக்கிறது! 20 அடி உயரமும், 1,00,000 லிட்டர் கொள்ளளவும் கொண்ட இந்த பீப்பாய், உலகிலேயே மிகப் பெரியது என்று கூறப்படுகிறது. இக்கோட்டையினுள் அமைந்துள்ள ஜெர்மன் பார்மஸி மியூசியத்தில் எந்த நோய்க்கு என்ன மருந்து, அதைத் தயாரித்தவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஹைடல் பெர்க்கில் அமைந்துள்ள பல்கலைக் கழகம் ஜெர்மனியின் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமை உடையது.





திங்கள், 25 மே, 2015

ஜோதிலிங்கத் தலம் – பீமாசங்கர்


பெண்மணி நவம்பர், 2003 இதழில் வெளியானது






சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம், சாக்தம் இவை ஆறு வகையான வழிபாடுகள். சிவனை வழிபடும் பிரிவினர் சைவர் எனப்படுவர். சிவபெருமான் பெரும்பாலும் லிங்க வடிவிலேயே வழிபடப்படுகிறார். கீழேயுள்ள ஆவுடையும், அதன் மேல் அமைந்துள்ள லிங்கமும் ஆண் பெண் ஐக்கியத்தை உணர்த்துவன.

சிவனை வழிபட விசேஷமான நாள் சிவராத்திரி. அன்று இரவு முழுவதும் கண் உறங்காது சிவனை வழிபடுவோருக்கு சிவலோகம் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.

சிவபெருமானுக்கு உகந்த பஞ்சபூதத் தலங்கள் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் (மண்), சிதம்பரம் (ஆகாயம்), காளஹஸ்தி (வாய்), திருவானைக்கா (நீர்), திருவண்ணாமலை (அக்னி) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. அது போன்று பன்னிரெண்டு ஜோதிர் லிங்கத் தளங்கள் நம் இந்தியாவில் ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜூனர்), சோமநாதம் (சோமநாதர்), உஜ்ஜயினி (மகாகாளர்), ஓம்காரம் (அம்லேஷ்வர்), கேதாரம் (கேதாரேஷ்வர்), வாரணசி (விசுவநாதர்), நாசிக் (த்ரியம்பகேஷ்வர்), தாருகாவனம் (நாகேஷ்வர்), வெருல் (க்ருஷ்ணேஷ்வர்), ராமேஸ்வரம் (ராமநாதர்), பீமாசங்கரம் (பீமாசங்கரர்), பர்லி (வைத்தியநாதர்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றை தரிசிப்பது அளப்பரிய நன்மைகளைத் தருமென சிவ புராணம் உரைக்கிறது.

இப்பன்னிரண்டு தலங்களில் நாசிக், பரலி, வெருல் (எல்லோரா குகைகளுக்கு அருகில் உள்ளது), பீமாசங்கர் ஆகிய நான்கும் மகாராஷ்டிர மாநிலத்திலேயே அமைந்துள்ளது. இவற்றில் இறைவன் திரிபுராசுரனை வதைத்து கோவில் கொண்ட இடமே பீமாசங்கர்.

பீமாசங்கர் புனேயில் இருந்து 110 கி.மீ. தொலைவில் சஹயாத்ரி மலையில் அற்பதமான இயற்கை அழகு கொஞ்சும் மலைகள், காடுகளுக்கிடையே பீமரதி நதிக்கரையில் அமைதியாக, மன சாந்தி தரும் ஆலயமாக அமைந்துள்ளது.

சிவபுராணத்தில் பீமாசங்கர் ஆலயம் அசாமிலுள்ள காமரூபத்தில் அமைந்துள்ளதாகக் காணப்படுகிறது. எனினும் திரிபுராசுரனை அழித்து ஈசன் பீமரூபமாகக் கோவில் கொண்டது சஹயாத்ரி மலையில் என்ற குறிப்புகளும் புராணாங்களில் காணப்படுவதால் இதுவே சரியான பீமாசங்கர் தலம் எனக் கூறப்படுகிறது. எனவே இத்தலம் ஜோதிர்லிங்கத் தலமாகப் போற்றப்படுகிறது.

இங்கு இறைவன் குடியேறிய சம்பவம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. ‘கணானாம் த்வா கணபதிம்’ என்ற மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்ஸமதா என்ற முனிவர். மிக்க தவ வலிமை மிகுந்தவர். அவர் ஒரு முறை இருமியபோது, அந்த இருமலிலிருந்து செந்நிறத்தில் உருவானவனே திரிபுராசுரன். அவன் பல நூற்றாண்டுகள் செய்த தவத்தினால் மூவுலகும் அதிர்ந்தது. காற்றையே சுவாசித்து, தன்னை மறந்த நிலையில் கைகளைத் தலைக்கு மேல் கூப்பி, ஒருமையான மனதுடன் அவன் செய்த தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அவன் முன் தோன்றினார். திரிபுராசுரன் மூன்று வரங்களைக் கேட்டான்.

தான் மூவுலகுக்கும் தலைவனாக வேண்டும். வாயு, ஜல மார்க்கமாக தான் உலகின் எப்பகுதிக்கும் செல்லும் திறமையுள்ள வாகனம் வேண்டும். கணேசப் பெருமானால் அளிக்கப்பட்ட இரும்பு, தங்கம், வெள்ளிக் கோட்டைகளை யாராலும் அழிக்க முடியாதபடி செய்ய வேண்டும் என்ற மூன்று வரங்களைக் கேட்க, பிரம்மாவும் ‘அப்படியே’ என்று சொல்லி, ‘யாரால் மூன்று கோட்டைகளும் ஒரே அம்பினால் அழிக்கப்படுமோ, அன்று நீயும் அழிவாய்’ என்றார்.

அதனை அலட்சியமாக எண்ணிய திரிபுராசுரனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அவன் வரத்தின்படி மூவலுகுக்கும் தலைவனானான். அதனால் கர்வம் உண்டாக, தேவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான். அவனது கொடுமையால் மூவுலகும் திணறியது. தர்மம் அழிந்து அதர்மம் தலை விரித்தாடியது. மூன்று தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட தம் லோகங்களை விட்டு மறைந்து வாழ்ந்தனர். திரிபுராசுரன் மற்றும் அவனது அசுரர் கூட்டத்தாரின் கொடுமையை நீக்க வேண்டி இந்திரனும், ஏனைய தேவர்களும் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர்.

அவர்களின் தவத்துக்கு மெச்சிய ஈசன், ‘தாம் திரிபுராசுரனை விரைவில் அழிப்பதாகவும், சஹயாத்ரியிலுள்ள தன் ஜோதிர் லிங்கத்தின் முன்பு தவம் செய்யும்படியும்’ கூறி மறைந்தார். அதன்படி தேவர்கள் மீண்டும் தவத்தைத் தொடர, சிவபெருமான், ‘இன்னும் ஏழு நாட்களில் திரிபுரனை வதம் புரிவேன்’ என்று சொல்லி மறைந்தார்.

வாக்களித்தபடி ஈசன் பிரம்மாண்டமான பீமரூபமெடுத்து, திரிசூலம், டமரு இவற்றை ஆயுதங்களாக ஏந்தி, நந்தி  வாகனத்தில் ஏறி, தன் ஜடாமுடிகள் விரிந்து ஆட, தன் கணங்களுடனும், டாகினி, ஷாகினி என்ற சக்திகளுடனும் திரிபுராசுரனுடன் போருக்கு வந்தார். திரிபுராசுரனும் தன் அத்தனை சக்திகளையும் பிரயோகித்து, பெரும் போர் புரிந்தான். இந்த பிரம்மாண்டமான போரில் உலகமே ஆடியது. பூமியைத் தாங்கும் ஆதிசேஷன், அந்த ஆட்டத்தைத் தாங்க முடியாமல் கதறினான். இருவருக்கும் வெற்றி, தோல்வியின்றி போர் பல்லாண்டு நடந்தது.

திரிபுரனின் சக்தி வாய்ந்த பாணாங்களால் சோர்வுற்ற பரமசிவனின் ரதத்தின் அச்சு முறிந்தது. உலகையே ஆளும் இறைவனாலேயே அவனை அழிக்க முடியவில்லையே என்றூ அனைவரும் விசனப்பட, அங்கு வந்தார் நாரத மகரிஷி. ஸ்ரீகணபதி பெருமானை வணங்கி ஆரம்பிக்காததாலேயே திரிபுராசுரனை வெல்ல முடியவில்லை என்பதை எடுத்துக் கூற, ஈசனும் தன் தவறை உணர்ந்து கணபதியை நோக்கித் தவம் புரிந்தார்.

அவர் முன் மகாகணபதியாக ஐந்து முகங்கள், பத்து கைகள், பாம்புகளை ஆபரணமாகக் கொண்டு, மண்டை ஓடு, மாலை இவற்றுடன் காட்சி தந்த விநாயகர், ‘என்னுடைய பீஜ மந்திரத்தை உச்சரித்தபடி ஒரு அம்பை விட்டால் அவனது வாகனமும், மூன்று கோட்டைகளும் அழியும். பின் அவனும் மடிவான்.’ என்று கூறி மறைந்தார்.

அந்த இடமே அஷ்ட விநாயகத் தலங்களில் ஒன்றான ‘ராஞ்சன் காவ்ன்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாகணபதி ஆலயம். புனேக்கு அருகிலேயே இத்தலமும் அமைந்துள்ளது.

மீண்டும் திரிபுராசுரனுடன் போருக்குச் சென்ற சிவபெருமான், இம்முறை ஒரு விசித்திரமான தேரை உருவாக்கினார். பூமியைத் தேராக்கி, சூரிய சந்திரரை சக்கரங்களாக்கி, மேரு வில்லாகவும், திருமால் அம்பாகவும், அசுவனி குமாரர்களை குதிரைகளாகவும் கொண்டு, பிரம்மா சாரதியாக விளங்க, அதில் ஏறி போருக்கு வந்த ஈசன், மகாகணபதியின் சஹஸ்ர  நாமத்தை சொல்லியபடியே திரிபுரனின் கோட்டையை நோக்கி அம்பு விட்டார். அந்த நேரம் ஏற்பட்ட ஒளி ஆயிரம் கோடி மின்னல்களுக்கு சமமாயிருந்த்து. அவனது மூன்று கோட்டைகளும் ஒரே அம்பில் அழிய அவன் உயிரிழந்து கீழே விழுந்தான். அவனது ஆவி ஜோதி வடிவத்தில் சிவபெருமானின் உடலில் கலந்து, மோட்சம் அடைந்தான்.

போரினால் களைப்புற்று அமர்ந்த சிவபெருமானின் உடலிலிருந்து பெருகி ஓடிய வியர்வை ‘பீமரதி’ என்ற புண்ணிய நதியாக மாறியது. அவரை துதித்துப் போற்றிய தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இறைவன் ‘பீமா சங்கர்’ என்ற பெயரில் அங்கேயே கோவில் கொண்டார். பீமரத நதியில் புனித நீராடுபவருக்கு சகல புண்ணியமும் கிடைக்க இறைவன் அருள்புரிந்தார்.

சஹயாத்ரி மலைகளுக்கிடையில், சுற்றிலும் காடுகள் சூழ்ந்த இயற்கை அழகின் இடையே, சற்று பள்ளமான இடத்தில் அமைந்துள்ள பீமாசங்கர் ஆலயம் மிகப் பெரிய ஆலயமாக இல்லாமல் சிறிய அழகிய கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. கர்ப்பக் கிரகத்துக்கு முன்பு அழகிய வளைவுகளாக அமைக்கப்பட்ட மண்டபம் உள்ளது. கர்ப்பக்கிரகம் சற்று பள்ளமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆவுடை பூமியின் மட்டத்திற்கே அமைந்து, மேலே சிவலிங்கம் மட்டுமே காணப்படுகிறது. மேலேயுள்ள தாரா பாத்திரத்திலிருந்து நீர் விழுந்து கொண்டேயிருக்கிறது. சுயம்புவான சிவலிங்கத்தின் மீது கவசம் அணிவிக்கப்பட்டு, ஐந்து தலை நாகக் குடை அழகு செய்கிறது.

இந்த சிவலிங்கம் அர்த்த நாரி ரூபமாகக் கூறப்படுகிறது. எதிரில் நந்தி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தில் சிவபெருமானுக்கு எதிரில் துவஜஸ்தம்பத்தின் கீழ் சிறிய சனீசுவரர் சன்னிதி அமைந்துள்ளது. பிரகாரத்தைச் சுற்றிலும் தேவி, பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சன்னிதி உள்ளது.

கி.பி. 1350-ம் ஆண்டில், காடாக இருந்த இவ்விடத்தில் மரம் வெட்டச் சென்ற ஒருவன், ஒரு மரத்தை வெட்டியபோது ரத்தம் வர, அவன் பயந்து தன் பசுவைக் கொண்டு அந்த வெட்டிய இடத்தில் பாலைக் கறந்தான். உடன் ரத்தம் நின்றுவிட அவன் வீடு சென்றான். மறு நாள் அவ்விடத்திற்கு சென்று பார்க்க, அங்கு மரத்திற்கு பதில் ஒரு சிவலிங்கம் காட்சியளிக்க, பக்தியில் பரவசமான அவன் அங்கு ஒரு ஆலயத்தை உருவாக்கினான்.

அதன் பின் கி.பி. 1737-ல் பேஷ்வாக்கள் காலத்தில் நானாபட்னவிஸ் என்பவரால் ஆலயம் விரிவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு தூண்கள், கோபுரம், மண்டபங்கள் ஆகியவை கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ளன. சிவாஜி மகாராஜா இவ்வாலயத்திற்கு ‘கரோஸி’ என்ற கிராமத்தை தானமாகக் கொடுத்துள்ளார்.

இத்தலத்தின் புனிதம் மகாராஷ்டிர மகான்களாகிய ஞானேஸ்வர், நாமதேவர் ஆகியோரது பாடல்களில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள பீமரதி நதியின் மகிமையும், அதில் நீராடுவதால் ஏற்படும் புண்ணியமும் கூறப்பட்டுள்ளது.

பீமாசங்கர் ஆல்யத்திலிருந்து சற்று தொலைவில் கமலஜாவின் ஆலயம் உள்ளது. பெரிய கற்பாறை உருவில் சுயம்புவாக அமைந்துள்ள தேவிக்கு முன் வெள்ளி முகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேவி, பார்வதியின் அம்சமாகப் போற்றப்படுகிறாள். திரிபுராசுர வதத்தின்போது, சிவபெருமானுக்கு உதவிய பார்வதியை பிரம்மா தாமரை புஷ்பங்களால் வணங்கியதால் கமலஜா என்ற பெயர் பெற்றாள். தேவர்களின் வேண்டுகோளின்படி இங்கேயே கோயில் கொண்ட தேவிக்கு தாமரை புஷ்ப அர்ச்சனை செய்வது சகல நலன்களையும் உண்டாக்கும்.

‘பீமாசங்கர்’ ஆலயத்திற்குப் பின்னால் அமைந்துள்ள ‘மோட்ச குண்ட்’ என்ற சதுர வடிவத்தில் 30 அடி நீள அகலத்தில் அமைந்துள்ள கிணற்றில் ஸ்நானம் செய்து மூதாதையருக்கான காரியங்கள் செய்வது அவர்களின் முந்தைய ஏழு தலை முறையினருக்கு மோட்சம் தரும் எனக் கூறப்படுகிறது.

இதன் அருகிலுள்ள சர்வ தீர்த்தம் தத்தாத்ரேயரால் ஏற்படுத்தப்பட்ட ஞான குண்ட், குஷாரண்ய தீர்த், குப்த பீமேஷ் ஆகியவை முக்கிய தீர்த்தங்களாகும். பீமா சங்கர் மகாத்மியத்தில் இவை பற்றிய பெருமைகள் உரைக்கப்பட்டுள்ளன. க்ரீட்தீர்த் என்ற இடத்தில் பார்வதியும், சிவனும் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அடர்ந்த காடுகளுக்கிடையிலும், சரிவுகளிலும் க்ரீட்தீர்த் அமைந்துள்ளதால் இங்கு சென்று தரிசிப்பது சற்று கடினமான காரியமே.

தினமும் பீமாசங்கர் பகவானுக்கு மூன்று வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. விடிகாலையில் ‘கக்கட ஆரத்தி’ பூஜை நடத்தப்படுகிறது. பகல் 12 மணிக்கு ‘மகாபூஜாவும்’, ‘மகா நைவேத்யமும்’ செய்யப்படும். அடுத்து மாலை ஆரத்தி நடத்தப்படுகிறது. இங்கு ‘உர்த்ர ஏகாதசினி’ பூஜை செய்வது மிக விசேஷம். பக்தர்கள் பலராலும் அதிகம் செய்யப்படும் பூஜை இதுவே. மகாசிவராத்திரி மிக விசேஷமாக இங்கு கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் சுற்றிலும் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்வார்கள்.

மிகச் சிறிய கிராமமான பீமாசங்கருக்கு செல்ல புனேயில் இருந்து நிறைய பஸ் வசதிகள் உண்டு. ஜனவரி முதல் மே மாதம் வரை இங்கு செல்வதற்கு ஏற்ற காலமாகும். மனதுக்கு ரம்மியமான மலைப்பாதை; வழி நெடுக காடுகளும், பள்ளத்தாக்கும் நிறைந்த சாலை; பல்வேறுபட்ட மூலிகைகளின் மணம் இவற்றை அனுபவித்தபடி பேருந்தில் சென்று, பீமாசங்கர் இறைவனை தரிசித்தபின் நம் மனம் அமைதி அடைவதோடு, அனைத்தும் மறந்து ஈசனுடன் ஐக்கியமாகிறது. பீமாசங்கர் வாழ்வில் நாம் அவசியம் தரிக்க வேண்டிய புண்ணியத் தலமாகும்.







வெள்ளி, 22 மே, 2015

கூந்தல் கறுப்பு...ஆஹா!


பெண்மணி ஜூலை 2002 இதழில் வெளியானது




அழகாக பளபளப்பாக, தொட்டால் நழுவும் பட்டுத் தலைமுடிப் பெண்களை நாம் டி.வி.யிலோ, தெருவிலோ பார்க்கும்போது, ‘ஆஹா’ என்று மயங்குகிறோமில்லையா? தலை முடிக்கு மெருகேற்றவும், வண்ணம் மாற்றவும் எவ்வளவு ஷாம்பூக்கள், ஹேர் டைகள், ப்யூட்டி பார்லர்கள்? தலைமுடியைப் பராமரிக்க விரும்பாத பெண்களும் உண்டோ?

‘எண்சாண் உடம்பில் சிரசே பிரதானம்’ என்பதற்கேற்ப தலைக்கு அழகு தரும் முடிதான் நம் உடலில் மிக வேகமாக வளரக்கூடியது. தலையின் மேற்பகுதியின் அளவு சராசரியாக 120 சதுர அங்குலம் இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1000 முடிகள் என்ற கணக்கில் குறைந்த பட்சம் 1,00,000 முடிகளுக்கு மேல் இருக்கும். ஒரு மாதத்திற்கு ஒன்றரை அங்குல அளவு முடி வளரும். அதிக பட்சமாக 36 அங்குலமே வளரும். நம் ஆயுள் முடியும் வரை முடி கொட்டுவதும், வளர்வதும் மட்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

தலைக்கு பாதுகாப்பாக இருக்கும் தலைமுடியின் வேர்கள் தலையின் (மண்டை ஓட்டின்) உட்புரத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு தலைமுடியும் க்யூடிகிள், கோர்டெக்ஸ், மெடுல்லா என்ற மூன்று அடுக்குகளைக் கொண்டது.

க்யூடிகிள் என்பது தலைமுடியின் மேல்பகுதியில் முடியின் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாக விளங்குவது. இந்தப் பகுதி சரியாகப் பாதுகாக்கப் பட்டால்தான் முடி பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும்.

கோர்டெக்ஸ், க்யூடிகிளுக்கு அடியில் அமைந்துள்ள நார் போன்ற செல்தான் முடியின் வலிமைக்கு உதவுகிறது. இதிலுள்ள மெலனின் என்ற சத்து முடிக்கு இயற்கையான வண்ணம் தருகிறது.

மெடுல்லா என்பது முடியின் நடுவில் மென்மையான கேரடின் செல்லை உள்ளடக்கிய பாகம். இதுதான் க்யூடிகிள் மற்றும் கோர்டெக்ஸிற்கு சத்துக்களை எடுத்துச் செல்லும் பாகம். இதனாலேயே நோய்வாய்ப்படும்போது முடி அதிகமாகக் கொட்டுகிறது.

தலைமுடி கேரடின் என்னும் ஒரு வகை புரோட்டீனால் ஆனது. மேலும் இதில் கார்பன் (50.65%), ஹைட்ரஜன் (06.36%),நைட்ரஜன் (17.1%), கந்தகம் (05.00%), ஆக்ஸிஜன் (20.85%) ஆகிய ரசாயனப் பொருட்களும் அடங்கி உள்ளன.

தலைமுடி நேராகவும், சுருள் சுருளாகவும், மெல்லியதாகவும் அவரவர் உடலின் தன்மைக்கேற்ப வளரும். முடிக்கு வண்ணம் தரும் மெலனின் அளவு 40 வயதிற்கு மேல் குறைவதால், முடி நரைக்க ஆரம்பிக்கிறது. ஆன், பெண் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவைப் பொருத்தும் முடி வளர்ச்சி வேறுபடும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்போது தலைமுடியும் வேகமாக வளரும். குழந்தை பிறந்தபின் உடலின் ஹார்மோன்கள் குறைவதால் அதிக அளவில் முடி கொட்டுகிறது. நம் உடல் ஆரோக்கியம், முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

மற்ற உறுப்புகளைப் போன்று தலைமுடியையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும். தலையை மென்மையான சீப்பினால் வாரவேண்டும். கடின பற்களை உடைய சீப்பினால் அழுந்த வாரினால் முடி கொட்டும். தலைமுடியை முடியின் வாகிற்கேற்றபடியே வாரவேண்டும். தலையின் பின்பக்கமிருந்தோ, பக்கங்களிலிருந்தோ வாரினால் க்யூடிகிள் பாதிக்கப்பட்டு முடி சிக்காகி, வறண்டு அழகு இழந்துவிடும்.

ஈரத்தலையை கண்டிப்பாக வாரக்கூடாது. முடியின் வலிமைக்கு காரணமான ஹைட்ரஜன் பகுதி பாதிக்கப்பட்டு முடி வலுவிழந்து கொட்டி விடும். நைலான் பிரஷ் சீப்புகளை வார பயன்படுத்துதல் கூடாது. வட்டமான முனையுள்ள பற்களைக் கொண்ட சீப்பினால் வார வேண்டும். அடிக்கடி சீப்புகளை கழுவ வேண்டும். மற்றவர் உபயோகித்த சீப்புகளை பயன்படுத்தக் கூடாது.

கண்டவரை மயங்கிடச் செய்யும் கண்கவர் அழகான முடியை பெற சில டிப்ஸ்!

வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து மிருதுவான துண்டை இளஞ்சூடான நீரில் பிழிந்து தலையில் கட்டிக் கொண்டால் எண்ணெய் தலையில் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு  20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு அலசவும். தலைமுடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் விளங்கும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் காஸ்மெடிக் வினிகருடன் 6 டேபிள் ஸ்பூன் வெந்நீர் கலந்து, தலை முடியின் அடிவரை படும்படி நன்கு தடவவும். தலையை ஒரு துண்டினால் கட்டி, மறு நாள் காலை ஷாம்பூ தேய்த்து அலசவும். கடைசியாக 3 டேபிள் ஸ்பூன் வினிகரும், 1 கப் வெந்நீரும் சேர்த்து தலையை நன்கு அலசி காய வைக்கவும். இது போல் வாரம் இரு முறை செய்தால் பொடுகு வராது.

ஒரு சிறிய கற்பூரத் துண்டை (சூடம்) 4 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் நன்கு தடவி, துண்டினால் சுற்றிக் கொள்ளவும். மறு நாள் காலை ஷாம்பூவால் நன்கு அலசவும். மாதம் ஒரு முறை இவ்வாறு குளித்தால் பேன்கள் அண்டாது.

ஒரு எலுமிச்சம்பழச் சாறுடன் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்து தலையில் நன்கு தடவி, அரை மணி நேரம் கழிந்ததும் ஷாம்பூ தேய்த்துக் குளிக்கவும். இதை வாரம் ஒரு முறை செய்தால் முடி நன்கு வளரும்.

நாம் உண்ணும் உணவில் புரோட்டீன் அடங்கிய தானியங்கள், பருப்பு வகைகள், பால், தயிர், வைட்டமின்கள் நிறைந்த கீரை, பச்சை காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்வது முடி வளர உதவும். எளிய ஆரோக்கியமான முறைகளைக் கடைபிடித்தால் நீங்களும் முடியரசி, கூந்தலழகிதான்!




அரைக்காசு அம்மன் அருள்


ஞான ஆலயம் ஜூன் 2002 இதழில் வெளியானது



சென்ற மாதம் நானும், என் மூத்த மகனும் என் இளைய மகனைப் பார்க்கச் சண்டிகர் சென்றிருந்தோம். திரும்ப மும்பை புறப்படுவதற்கு முதல் நாள் மாலை, பெட்டியில் எல்லாம் சரி செய்து வைத்துவிட்டு, டிக்கெட்டை என் மகனிடம் கொடுத்துவிட எண்ணிப் பார்த்தபோது டிக்கெட்டைக் காணவில்லை. எனக்கு பகீரென்றது,

டில்லியிலிருந்து மும்பை வருவதற்கான ராஜ்தானி ரயிலுக்கான ரூ 3000 மதிப்புள்ள டிக்கெட், பர்ஸ், ஹேண்ட் பேக் எங்குமில்லை. துணிகளுக்கிடையே சிக்கியிருக்குமோ என்றெண்ணி அத்தனை துணிகளையும் தனித்தனியாக பிரித்து உதறி விட்டேன். ம்ஹூம்... எங்கும் இல்லை.

பதற்றத்துடன் என் மகனிடம் சொல்ல, அவன் பங்கிற்கு மறுபடியும் தேடினான். பெட்டியிலிருந்த டிக்கெட் எங்கு போகும்? டிக்கெட் கிடைக்காவிட்டால், மும்பை வரை எப்படிச் செல்வது? ஜெனரல் கம்பார்ட்மெண்டில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது என்ற கவலை.

டிக்கெட் என் கணவர் கிரெடிட் கார்டு மூலம் வாங்கியது என்பதால், உடனே என் மகன் மும்பைக்கு ஃபோன் செய்து என் கணவருக்கு விஷயத்தைச் சொன்னான்.

அவர் உடனே, அவருக்குத் தெரிந்த ரயில்வே மேலதிகாரியிடம் விசாரிக்க, அதிகாரி, தான் அங்கிருந்து டில்லி ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்வதாயும், எங்கள் ஐ.டி கார்ட் ஏதாவது காண்பித்தால்தான் முடியுமென்றும் சொல்லிவிட்டார். டிக்கெட் தொகையில் 25% கட்ட வேண்டுமென்றும் சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் ஐ.டி. கார்டுக்கு எங்கு போவது, என்ன செய்வது என்று ஒரே குழப்பம்.

சட்டென்று எனக்கு அரைக்காசு அம்மன் நினைவு வர,
“அரைக்காசு அம்மா! நீதான் டிக்கெட் கிடைக்க அருள் புரிய வேண்டும். உனக்கு வெல்லம் நிவேதனம் செய்கிறேன்” என்று வேண்டிக் கொண்டு, மீண்டும் தேட ஆரம்பித்தேன்.

ஞான ஆலயத்தில் சண்டிகரிலுள்ள சக்திபீடத்தில் ஒன்றான மானஸா தேவி கோயில் பற்றிப் படித்ததால், அந்த ஆலயம் சென்று தரிசிக்க எண்ணி, அது பற்றி மஞ்சுளா ரமேஷ் எழுதியிருந்ததை எடுத்துச் சென்றிருந்தேன்.

முதல் நாள் மானஸா தேவியின் தரிசனம் மிக அருமையாகக் கிடைத்தது. அங்கு தலபுராணப் புத்தகம், அம்மன் புகைப்படம் வாங்கினேன். அந்தப் புத்தகத்தை எடுத்தபோது டிக்கெட் அழகாக அதனிடையே இருந்தது. அதே புத்தகத்தை நான் இரண்டு முறை எடுத்துத் தேடியும் கிடைக்காத டிக்கெட், அப்பொழுது எப்படி அதில் வந்தது? அரைக்காசு அம்மன் அருளை அப்பொழுது தான் பூரணமாக உணர்ந்து கொண்டேன்.




கோலத்தை அழிக்க குழந்தை வேண்டும்


மங்கையர் மலர் ஜூலை 2002 இதழில் வெளியானது





கோலம் என்பதற்கு அழகு என்று பெயர். சூரியோதயத்திற்கு முன் எழுந்து பசுஞ்சாணியை நீரில் கரைத்துத் தெளித்து வாசலில் அரிசி மாவினால் போடும் கோலத்தின் அழகு கண்களைக் கொள்ளை கொள்ளும். பசுஞ்சாணம் கிருமிநாசினி. அரிசி மாவு எறும்பு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவாகப் பயன்படும்.

வேத காலத்தில் அங்குரார்பணத்தின் போது பல கட்டங்கள் வரைந்து அவற்றின் மேல் பால் குடம், முளைப் பாலிகைகளை வைத்து பூஜை செய்வர். அக்கட்டங்களில் அரிசி மாவு, மஞ்சள் பொடி போட்டு அழகு செய்வர். அதுவே கட்டக் கோலங்களாயிற்று. ஹோமம் செய்ய அக்னி குண்டத்திற்கென 9 குழிகள் தோண்டி அவற்றை இணைத்து அக்னி வளர்ப்பார்கள். அதுவே புள்ளிக் கோலத்தின் ஆதாரம். பழந்தமிழர் மணலிலும், தோலிலும் கோலம் எழுதியது பற்றி சங்க நூல்களில் காணப்படுகிறது.

மார்கழி மாதம் தேவர்கள் தூங்கி விழிக்கும் காலமானதாலும், ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில் சொல்லியிருப்பதாலும், அம்மாதம் பூஜை, பஜனைகள் செய்ய மிக விசேஷமாக சொல்லப்படுகிறது. வானில் வலம் வரும் தேவர்களை மகிழ்விக்க வீடுதோரும் விதவிதமாய் கோலம் வரைவது விசேஷமாகக் கருதப்படுகிறது. விஞ்ஞான ரீதியாகவும் அம்மாதம் விடியற்காலை காற்றில் ஓசோன் அதிகமாக இருப்பதாக அறிகிறோம். அதன் பயனைப் பெறவே முன்னோர் விடியற்காலை பஜனையையும், கோலம் போடுவதையும் உருவாக்கினார்களோ?

கோலத்தில் அழகு மட்டுமின்றி ஒரு புனிதத் தன்மையும் இருப்பதால் திருமணம், பூஜை, யாகம், திருவிழாக்களின் சமயம் போடப்படுகிறது. வளைந்தும், நெளிந்தும், சுழித்தும் போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுகதுக்கப் பின்னல்களால் ஆனது என்பதையும், சுழிகள் போல பல துன்பங்கள் வரினும் துணிவோடு இருக்க வேண்டுமென்பதையும் உணர்த்துகின்றன. விசேஷ நாட்களில் காவி இடுவது, சிவசக்தி ஐக்யத்தை உணர்த்துகிறது. வெள்ளை மாவி – சிவன், காவி –சக்தி. காவி இட்டு கோலம் போடுவதால் திருஷ்டி நீங்கும். தீய சக்திகளிலிருந்து காக்கும். இதனாலேயே திருமணம், ஆண்டு நிறைவு போன்ற விசேஷ நாட்களில் செம்மண் இட்டுக் கோலம் போட வேண்டும்.

தமிழ்நாடு பழக் கோலங்கள், பின்னல் கோலங்களுக்கு பிரசித்தமானதெனில், ஆந்திராவின் பொட்டுகளை இணைத்து போடப்படும் கோலங்கள் மிக அழகானவை. கர்நாடகாவில் (+) கூட்டல் குறி போன்று வரிசையாய் போட்டு அவற்றை இணைத்தே மிகப் பெரிய கோலங்களைக்கூட நொடியில் உருவாக்கி விடுவார். கேரளாவின் “அத்திப்பூ விடல்” எனும் பூக்கோலம், பல வண்ண முழு மலர்களாலும், மலர் இதழ்களாலும் போடப்பட்டு, நம் கண்ணிற்கும், கருத்துக்கும் விருந்தாக அமையும்.

வடநாடுகளில் “ரங்கோலி” என்ற வண்ணக் கோலங்களே பிரசித்தம். ரங்க் + ஆவலி எனில் “வண்ணங்களின் வரிசை” எனப் பொருள். “ஹோலி” என்ற முனிவரின் பத்தினி தன் கணவர் இறந்ததும் அவர் உருவத்தை பலவகை வண்ணப் பொடிகளல் வரைந்து, அதன் மேலேயே ஒரு மண்டலம் படுத்திருந்து தன் உயிரை விட்டதால், அவளால் பல வண்ணங்களால் போடப்பட்ட கோலம் “ரங்கோலி” எனப்பட்டது.

ரங்கோலியின் பிறப்பிடம் மகாராஷ்டிரா. நல்ல அடர் நிறங்களில், எந்த உருவமும், கோலமும் போடாமல் வட்ட வடிவமாக பல வண்ணங்களைக் கற்பனைக் கேற்றவாறு போடும் மராட்டிய ரங்கோலி பார்ப்போர் கண்களைப் பரவசப்படுத்தும். பல வண்ணங்கள் கற்பனை நயத்தோடு இணைந்து நம் உள்ளத்தை மகிழ்விப்பதுடன், கணிதத்திற்கும், கோலத்திற்கும் இருக்கும் நெருக்கத்தையும் உணர்த்துகிறதே?

குஜராத்திப் பெண்கள் “சாகியா” என்று மஞ்சள் பொடி சேர்த்து ரங்கோலியை வரைவார்கள். வங்காளம், ஒரிஸ்ஸா, ஹிமாச்சல பிரதேசங்களில் “அல்பனா” என்ற கோலமிடுவர். செடிகளிருந்து தயாரிக்கும் சாயத்துடன் அரிசி மாவு கலந்து துர்க்கை, மகாலட்சுமி என்று பெரும்பாலும் உருவக் கோலங்களையே “அல்பனா” முறையில் போடுகின்றனர். கோலம் ஆந்திராவில் “மொக்கு” என்றும், கன்னடத்தில் “மண்ட்னா” என்றும் வழங்கப்படுகிறது.

கோலங்களை அடிப்படையாகக் கொண்டவையே, யந்திரங்கள் எனப்படும் தெய்வீக சக்தி வாய்ந்த கோலங்கள். இந்த யந்திரங்களை முறையான மந்திர உச்சரிப்புகளுடன் பூஜை செய்தால் நினைத்த நலன்களைப் பெறலாம்.  நவகிரகக் கோலம், ஐஸ்வர்ய கோலம், ஹ்ருதய கமலக் கோலம் இவற்றைப் பூஜையறையில் அரிசி மாவினால் போட்டால் தெய்வ அனுக்கிரகம் நிச்சயம் கூடும்.

வீட்டு விசேஷங்கள், பண்டிகைகளுக்குக் கட்டியம் கூறுபவை சுற்றிலும் காவியுடன் காட்சி தரும் இழைக் கோலங்கள்.

குழந்தை பிறந்தாலும், பெண் குழந்தைகள் பருவமடைந்தாலும் எந்நேரமாக இருப்பினும் (இரவாக இருந்தாலும்) கோலம் போடுவது, அந்நல்ல செய்தியை அனைவருக்கும் அறிவிக்கும் ஒரு பாணி!

படிக் கோலத்தின் நான்கு மூலைகளில் போடும் தாமரைப் பூக்கள், நான்கு திக்பாலகர்களின் ஆசியை வேண்டிப்போடுவது!

முற்றத்துக் கோலத்தை அழிக்க குழந்தை வேண்டியும், சுவாமி தேரினால் போட்ட கோலம் அழிந்தால் புண்ணியம் கிடைக்குமென்றும், கோலத்தை அழிக்க மழை வேண்டியும் கோலமிடுவார்கள் கிராமத்துப் பெண்கள்!

கோலத்தை நின்றபடியே போடுவது, உடலுக்கு நல்ல தேகப் பயிற்சி. கோல இழையை வலப்புறம் இழுப்பது மிகுந்த நன்மை சேர்க்கும். இடப்புறம் இழுப்பது கூடாது. கோலத்தை காலால் அழிப்பது பாபம்.

படிக்கட்டுகளில் குறுக்குக் கோடுகள் (---) போடுவது லட்சுமி தேவியின் வரவைத் தடுக்கும்.

வீட்டின் உள்நோக்கிக் கோலம் போடுவது (||||) விருந்தினர்கள், தெய்வங்களை வரவேற்பதாகும்.

இன்று அரசியல் விழாவோ, ஆன்மீக விழாவோ, வீட்டின் பெரிய விசேஷங்களோ எல்லாவற்றிற்கும் அழகு சேர்ப்பவை பல வண்ணப் பொடிகளால் அழகாகப் போடப்படும் கோலங்களே என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் 5000 ஆண்டு பழமையான, மேல் நாட்டினரால் பெரிதும் பாராட்டிப் போற்றப்படும் இந்தக் கோலக் கலை நகர நாகரிகத்தில் அழிந்து வருவதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. வேலைக்குப் போகும் பெண்களின் நேரமின்மை, வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் கோலத்தில் தெரிகிறது.


எனினும், புனிதம், தெய்வீகம், கைத்திறன், அழகு இத்தனையும் நிறைந்த மனதிற்கு மகிழ்ச்சியும், புத்துணர்வும் தரும் கோலங்களை முடிந்த நேரங்களிலாவது போட்டு கோலக் கலை அழியாமல் பாதுகாக்க வேண்டியது பெண்களாகிய நம் முக்கிய கடமை.