Thanjai

Thanjai

திங்கள், 25 மே, 2015

ஜோதிலிங்கத் தலம் – பீமாசங்கர்


பெண்மணி நவம்பர், 2003 இதழில் வெளியானது


சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம், சாக்தம் இவை ஆறு வகையான வழிபாடுகள். சிவனை வழிபடும் பிரிவினர் சைவர் எனப்படுவர். சிவபெருமான் பெரும்பாலும் லிங்க வடிவிலேயே வழிபடப்படுகிறார். கீழேயுள்ள ஆவுடையும், அதன் மேல் அமைந்துள்ள லிங்கமும் ஆண் பெண் ஐக்கியத்தை உணர்த்துவன.

சிவனை வழிபட விசேஷமான நாள் சிவராத்திரி. அன்று இரவு முழுவதும் கண் உறங்காது சிவனை வழிபடுவோருக்கு சிவலோகம் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.

சிவபெருமானுக்கு உகந்த பஞ்சபூதத் தலங்கள் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் (மண்), சிதம்பரம் (ஆகாயம்), காளஹஸ்தி (வாய்), திருவானைக்கா (நீர்), திருவண்ணாமலை (அக்னி) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. அது போன்று பன்னிரெண்டு ஜோதிர் லிங்கத் தளங்கள் நம் இந்தியாவில் ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜூனர்), சோமநாதம் (சோமநாதர்), உஜ்ஜயினி (மகாகாளர்), ஓம்காரம் (அம்லேஷ்வர்), கேதாரம் (கேதாரேஷ்வர்), வாரணசி (விசுவநாதர்), நாசிக் (த்ரியம்பகேஷ்வர்), தாருகாவனம் (நாகேஷ்வர்), வெருல் (க்ருஷ்ணேஷ்வர்), ராமேஸ்வரம் (ராமநாதர்), பீமாசங்கரம் (பீமாசங்கரர்), பர்லி (வைத்தியநாதர்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றை தரிசிப்பது அளப்பரிய நன்மைகளைத் தருமென சிவ புராணம் உரைக்கிறது.

இப்பன்னிரண்டு தலங்களில் நாசிக், பரலி, வெருல் (எல்லோரா குகைகளுக்கு அருகில் உள்ளது), பீமாசங்கர் ஆகிய நான்கும் மகாராஷ்டிர மாநிலத்திலேயே அமைந்துள்ளது. இவற்றில் இறைவன் திரிபுராசுரனை வதைத்து கோவில் கொண்ட இடமே பீமாசங்கர்.

பீமாசங்கர் புனேயில் இருந்து 110 கி.மீ. தொலைவில் சஹயாத்ரி மலையில் அற்பதமான இயற்கை அழகு கொஞ்சும் மலைகள், காடுகளுக்கிடையே பீமரதி நதிக்கரையில் அமைதியாக, மன சாந்தி தரும் ஆலயமாக அமைந்துள்ளது.

சிவபுராணத்தில் பீமாசங்கர் ஆலயம் அசாமிலுள்ள காமரூபத்தில் அமைந்துள்ளதாகக் காணப்படுகிறது. எனினும் திரிபுராசுரனை அழித்து ஈசன் பீமரூபமாகக் கோவில் கொண்டது சஹயாத்ரி மலையில் என்ற குறிப்புகளும் புராணாங்களில் காணப்படுவதால் இதுவே சரியான பீமாசங்கர் தலம் எனக் கூறப்படுகிறது. எனவே இத்தலம் ஜோதிர்லிங்கத் தலமாகப் போற்றப்படுகிறது.

இங்கு இறைவன் குடியேறிய சம்பவம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. ‘கணானாம் த்வா கணபதிம்’ என்ற மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்ஸமதா என்ற முனிவர். மிக்க தவ வலிமை மிகுந்தவர். அவர் ஒரு முறை இருமியபோது, அந்த இருமலிலிருந்து செந்நிறத்தில் உருவானவனே திரிபுராசுரன். அவன் பல நூற்றாண்டுகள் செய்த தவத்தினால் மூவுலகும் அதிர்ந்தது. காற்றையே சுவாசித்து, தன்னை மறந்த நிலையில் கைகளைத் தலைக்கு மேல் கூப்பி, ஒருமையான மனதுடன் அவன் செய்த தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அவன் முன் தோன்றினார். திரிபுராசுரன் மூன்று வரங்களைக் கேட்டான்.

தான் மூவுலகுக்கும் தலைவனாக வேண்டும். வாயு, ஜல மார்க்கமாக தான் உலகின் எப்பகுதிக்கும் செல்லும் திறமையுள்ள வாகனம் வேண்டும். கணேசப் பெருமானால் அளிக்கப்பட்ட இரும்பு, தங்கம், வெள்ளிக் கோட்டைகளை யாராலும் அழிக்க முடியாதபடி செய்ய வேண்டும் என்ற மூன்று வரங்களைக் கேட்க, பிரம்மாவும் ‘அப்படியே’ என்று சொல்லி, ‘யாரால் மூன்று கோட்டைகளும் ஒரே அம்பினால் அழிக்கப்படுமோ, அன்று நீயும் அழிவாய்’ என்றார்.

அதனை அலட்சியமாக எண்ணிய திரிபுராசுரனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அவன் வரத்தின்படி மூவலுகுக்கும் தலைவனானான். அதனால் கர்வம் உண்டாக, தேவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான். அவனது கொடுமையால் மூவுலகும் திணறியது. தர்மம் அழிந்து அதர்மம் தலை விரித்தாடியது. மூன்று தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட தம் லோகங்களை விட்டு மறைந்து வாழ்ந்தனர். திரிபுராசுரன் மற்றும் அவனது அசுரர் கூட்டத்தாரின் கொடுமையை நீக்க வேண்டி இந்திரனும், ஏனைய தேவர்களும் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர்.

அவர்களின் தவத்துக்கு மெச்சிய ஈசன், ‘தாம் திரிபுராசுரனை விரைவில் அழிப்பதாகவும், சஹயாத்ரியிலுள்ள தன் ஜோதிர் லிங்கத்தின் முன்பு தவம் செய்யும்படியும்’ கூறி மறைந்தார். அதன்படி தேவர்கள் மீண்டும் தவத்தைத் தொடர, சிவபெருமான், ‘இன்னும் ஏழு நாட்களில் திரிபுரனை வதம் புரிவேன்’ என்று சொல்லி மறைந்தார்.

வாக்களித்தபடி ஈசன் பிரம்மாண்டமான பீமரூபமெடுத்து, திரிசூலம், டமரு இவற்றை ஆயுதங்களாக ஏந்தி, நந்தி  வாகனத்தில் ஏறி, தன் ஜடாமுடிகள் விரிந்து ஆட, தன் கணங்களுடனும், டாகினி, ஷாகினி என்ற சக்திகளுடனும் திரிபுராசுரனுடன் போருக்கு வந்தார். திரிபுராசுரனும் தன் அத்தனை சக்திகளையும் பிரயோகித்து, பெரும் போர் புரிந்தான். இந்த பிரம்மாண்டமான போரில் உலகமே ஆடியது. பூமியைத் தாங்கும் ஆதிசேஷன், அந்த ஆட்டத்தைத் தாங்க முடியாமல் கதறினான். இருவருக்கும் வெற்றி, தோல்வியின்றி போர் பல்லாண்டு நடந்தது.

திரிபுரனின் சக்தி வாய்ந்த பாணாங்களால் சோர்வுற்ற பரமசிவனின் ரதத்தின் அச்சு முறிந்தது. உலகையே ஆளும் இறைவனாலேயே அவனை அழிக்க முடியவில்லையே என்றூ அனைவரும் விசனப்பட, அங்கு வந்தார் நாரத மகரிஷி. ஸ்ரீகணபதி பெருமானை வணங்கி ஆரம்பிக்காததாலேயே திரிபுராசுரனை வெல்ல முடியவில்லை என்பதை எடுத்துக் கூற, ஈசனும் தன் தவறை உணர்ந்து கணபதியை நோக்கித் தவம் புரிந்தார்.

அவர் முன் மகாகணபதியாக ஐந்து முகங்கள், பத்து கைகள், பாம்புகளை ஆபரணமாகக் கொண்டு, மண்டை ஓடு, மாலை இவற்றுடன் காட்சி தந்த விநாயகர், ‘என்னுடைய பீஜ மந்திரத்தை உச்சரித்தபடி ஒரு அம்பை விட்டால் அவனது வாகனமும், மூன்று கோட்டைகளும் அழியும். பின் அவனும் மடிவான்.’ என்று கூறி மறைந்தார்.

அந்த இடமே அஷ்ட விநாயகத் தலங்களில் ஒன்றான ‘ராஞ்சன் காவ்ன்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாகணபதி ஆலயம். புனேக்கு அருகிலேயே இத்தலமும் அமைந்துள்ளது.

மீண்டும் திரிபுராசுரனுடன் போருக்குச் சென்ற சிவபெருமான், இம்முறை ஒரு விசித்திரமான தேரை உருவாக்கினார். பூமியைத் தேராக்கி, சூரிய சந்திரரை சக்கரங்களாக்கி, மேரு வில்லாகவும், திருமால் அம்பாகவும், அசுவனி குமாரர்களை குதிரைகளாகவும் கொண்டு, பிரம்மா சாரதியாக விளங்க, அதில் ஏறி போருக்கு வந்த ஈசன், மகாகணபதியின் சஹஸ்ர  நாமத்தை சொல்லியபடியே திரிபுரனின் கோட்டையை நோக்கி அம்பு விட்டார். அந்த நேரம் ஏற்பட்ட ஒளி ஆயிரம் கோடி மின்னல்களுக்கு சமமாயிருந்த்து. அவனது மூன்று கோட்டைகளும் ஒரே அம்பில் அழிய அவன் உயிரிழந்து கீழே விழுந்தான். அவனது ஆவி ஜோதி வடிவத்தில் சிவபெருமானின் உடலில் கலந்து, மோட்சம் அடைந்தான்.

போரினால் களைப்புற்று அமர்ந்த சிவபெருமானின் உடலிலிருந்து பெருகி ஓடிய வியர்வை ‘பீமரதி’ என்ற புண்ணிய நதியாக மாறியது. அவரை துதித்துப் போற்றிய தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இறைவன் ‘பீமா சங்கர்’ என்ற பெயரில் அங்கேயே கோவில் கொண்டார். பீமரத நதியில் புனித நீராடுபவருக்கு சகல புண்ணியமும் கிடைக்க இறைவன் அருள்புரிந்தார்.

சஹயாத்ரி மலைகளுக்கிடையில், சுற்றிலும் காடுகள் சூழ்ந்த இயற்கை அழகின் இடையே, சற்று பள்ளமான இடத்தில் அமைந்துள்ள பீமாசங்கர் ஆலயம் மிகப் பெரிய ஆலயமாக இல்லாமல் சிறிய அழகிய கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. கர்ப்பக் கிரகத்துக்கு முன்பு அழகிய வளைவுகளாக அமைக்கப்பட்ட மண்டபம் உள்ளது. கர்ப்பக்கிரகம் சற்று பள்ளமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆவுடை பூமியின் மட்டத்திற்கே அமைந்து, மேலே சிவலிங்கம் மட்டுமே காணப்படுகிறது. மேலேயுள்ள தாரா பாத்திரத்திலிருந்து நீர் விழுந்து கொண்டேயிருக்கிறது. சுயம்புவான சிவலிங்கத்தின் மீது கவசம் அணிவிக்கப்பட்டு, ஐந்து தலை நாகக் குடை அழகு செய்கிறது.

இந்த சிவலிங்கம் அர்த்த நாரி ரூபமாகக் கூறப்படுகிறது. எதிரில் நந்தி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தில் சிவபெருமானுக்கு எதிரில் துவஜஸ்தம்பத்தின் கீழ் சிறிய சனீசுவரர் சன்னிதி அமைந்துள்ளது. பிரகாரத்தைச் சுற்றிலும் தேவி, பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சன்னிதி உள்ளது.

கி.பி. 1350-ம் ஆண்டில், காடாக இருந்த இவ்விடத்தில் மரம் வெட்டச் சென்ற ஒருவன், ஒரு மரத்தை வெட்டியபோது ரத்தம் வர, அவன் பயந்து தன் பசுவைக் கொண்டு அந்த வெட்டிய இடத்தில் பாலைக் கறந்தான். உடன் ரத்தம் நின்றுவிட அவன் வீடு சென்றான். மறு நாள் அவ்விடத்திற்கு சென்று பார்க்க, அங்கு மரத்திற்கு பதில் ஒரு சிவலிங்கம் காட்சியளிக்க, பக்தியில் பரவசமான அவன் அங்கு ஒரு ஆலயத்தை உருவாக்கினான்.

அதன் பின் கி.பி. 1737-ல் பேஷ்வாக்கள் காலத்தில் நானாபட்னவிஸ் என்பவரால் ஆலயம் விரிவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு தூண்கள், கோபுரம், மண்டபங்கள் ஆகியவை கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ளன. சிவாஜி மகாராஜா இவ்வாலயத்திற்கு ‘கரோஸி’ என்ற கிராமத்தை தானமாகக் கொடுத்துள்ளார்.

இத்தலத்தின் புனிதம் மகாராஷ்டிர மகான்களாகிய ஞானேஸ்வர், நாமதேவர் ஆகியோரது பாடல்களில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள பீமரதி நதியின் மகிமையும், அதில் நீராடுவதால் ஏற்படும் புண்ணியமும் கூறப்பட்டுள்ளது.

பீமாசங்கர் ஆல்யத்திலிருந்து சற்று தொலைவில் கமலஜாவின் ஆலயம் உள்ளது. பெரிய கற்பாறை உருவில் சுயம்புவாக அமைந்துள்ள தேவிக்கு முன் வெள்ளி முகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேவி, பார்வதியின் அம்சமாகப் போற்றப்படுகிறாள். திரிபுராசுர வதத்தின்போது, சிவபெருமானுக்கு உதவிய பார்வதியை பிரம்மா தாமரை புஷ்பங்களால் வணங்கியதால் கமலஜா என்ற பெயர் பெற்றாள். தேவர்களின் வேண்டுகோளின்படி இங்கேயே கோயில் கொண்ட தேவிக்கு தாமரை புஷ்ப அர்ச்சனை செய்வது சகல நலன்களையும் உண்டாக்கும்.

‘பீமாசங்கர்’ ஆலயத்திற்குப் பின்னால் அமைந்துள்ள ‘மோட்ச குண்ட்’ என்ற சதுர வடிவத்தில் 30 அடி நீள அகலத்தில் அமைந்துள்ள கிணற்றில் ஸ்நானம் செய்து மூதாதையருக்கான காரியங்கள் செய்வது அவர்களின் முந்தைய ஏழு தலை முறையினருக்கு மோட்சம் தரும் எனக் கூறப்படுகிறது.

இதன் அருகிலுள்ள சர்வ தீர்த்தம் தத்தாத்ரேயரால் ஏற்படுத்தப்பட்ட ஞான குண்ட், குஷாரண்ய தீர்த், குப்த பீமேஷ் ஆகியவை முக்கிய தீர்த்தங்களாகும். பீமா சங்கர் மகாத்மியத்தில் இவை பற்றிய பெருமைகள் உரைக்கப்பட்டுள்ளன. க்ரீட்தீர்த் என்ற இடத்தில் பார்வதியும், சிவனும் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அடர்ந்த காடுகளுக்கிடையிலும், சரிவுகளிலும் க்ரீட்தீர்த் அமைந்துள்ளதால் இங்கு சென்று தரிசிப்பது சற்று கடினமான காரியமே.

தினமும் பீமாசங்கர் பகவானுக்கு மூன்று வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. விடிகாலையில் ‘கக்கட ஆரத்தி’ பூஜை நடத்தப்படுகிறது. பகல் 12 மணிக்கு ‘மகாபூஜாவும்’, ‘மகா நைவேத்யமும்’ செய்யப்படும். அடுத்து மாலை ஆரத்தி நடத்தப்படுகிறது. இங்கு ‘உர்த்ர ஏகாதசினி’ பூஜை செய்வது மிக விசேஷம். பக்தர்கள் பலராலும் அதிகம் செய்யப்படும் பூஜை இதுவே. மகாசிவராத்திரி மிக விசேஷமாக இங்கு கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் சுற்றிலும் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்வார்கள்.

மிகச் சிறிய கிராமமான பீமாசங்கருக்கு செல்ல புனேயில் இருந்து நிறைய பஸ் வசதிகள் உண்டு. ஜனவரி முதல் மே மாதம் வரை இங்கு செல்வதற்கு ஏற்ற காலமாகும். மனதுக்கு ரம்மியமான மலைப்பாதை; வழி நெடுக காடுகளும், பள்ளத்தாக்கும் நிறைந்த சாலை; பல்வேறுபட்ட மூலிகைகளின் மணம் இவற்றை அனுபவித்தபடி பேருந்தில் சென்று, பீமாசங்கர் இறைவனை தரிசித்தபின் நம் மனம் அமைதி அடைவதோடு, அனைத்தும் மறந்து ஈசனுடன் ஐக்கியமாகிறது. பீமாசங்கர் வாழ்வில் நாம் அவசியம் தரிக்க வேண்டிய புண்ணியத் தலமாகும்.1 கருத்து: