ஞான
ஆலயம்-மார்ச் 2006 இதழில் வெளியானது
பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் திரியம்பகேஸ்வர், பீமாசங்கர்,
க்ருஷ்ணேஷ்வர் ஆகிய மூன்று ஜோதிர் லிங்கத் தலங்கள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன.
இவை தவிர சுயம்புவாகத் தோன்றிய
லிங்கங்களைக் கொண்ட பல சிவாலயங்கள் இங்கு உள்ளன. சிவலிங்கங்கள் இங்கு சிறிய
அளவாகவே இருக்கும். ஆவுடையும் நம்மூர் மாதிரி உயரமாக அமைந்திருக்காது.
சிவபெருமானுக்கு நாமே அபிஷேகம் செய்து, பூச்சூட்டி, வில்வம் சாற்றி, நைவேத்தியம்
செய்து பூஜிக்கலாம். சிவராத்திரியன்று
இங்குள்ள சிவாலயங்கள் அனைத்திலும் இரவு பூராவும் பூஜை நடைபெறும்.
மும்பை தானாவில் கோவில் கொண்டுள்ள கௌபீனேசுவரர் ஆலயம் மிகப்
பழமையும் சிறப்பும் கொண்டு விளங்குகிறது. இங்குள்ள சிவலிங்கம் மகாராஷ்டிராவிலேயே
மிகப் பெரிய அளவிலான சிவலிங்கமென சிறப்புப் பெற்றது.
மும்பை தானா (மேற்கு) ஸ்டேஷனுக்கு அருகில் அமைந்துள்ள
கௌபீனேஸ்வரர் ஆலயம் பழமையானது. தானாவில் அமைந்துள்ள மாஸன்தா ஏரி மிகப் பிரசித்தி
பெற்றது. இந்த ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ள இவ்வாலய இறைவன், இந்த ஏரியிலிருந்துதான்
கண்டெடுக்கப் பட்டாராம். சர் சுபேதார் ராம்ஜி மகாதேவ் டேவல்கர் என்பவரால் சிறிய
ஆலயம் எழுப்பப்பட்டு, அதன் பின் சிறிது சிறிதாக முன்னேற்றமடைந்து, இன்று
மும்பையின் பிரசித்தி பெற்ற பெரிய ஆலயமாகக் காட்சி தருகிறது.
கர்ப்பக் கிரகத்தின் நடுவில் பிரம்மாண்டமாகக் காட்சி
தருகிறார் கௌபீணேசுவரர். நான்கரை அடி உயரமும், 12 அடி சுற்றளவும் கொண்ட
சிவலிங்கத்தைத் தரிசிக்கும்போது நம் மனம் லேசாகிறது. தஞ்சாவூர் பிரகதீசுவரரை
அடுத்த பெரிய லிங்கம் கௌபீணேஸ்வரர் என்று ஆலய அதிகாரிகள் கூறுகின்றனர். கர்ப்பக்
கிரகத்தில் மேலும் மூன்று சிறிய சிவலிங்கங்களும், பார்வதியின் சிலா விக்ரகமும்
உள்ளது. இறைவனை நாமே தொட்டு பூஜை செய்து அவனருள் பெறலாம்.
ஆலயம் காலை 4 மணி முதல் 2 மணி வரை, மற்றும் 3 மணி முதல்
இரவு 11 மணி வரயும் திறந்திருக்கும். மும்பையில் உள்ளோர் அவசியம் தரிசிக்க வேண்டிய
ஆலயம். சிவராத்திரி இங்கு மிகப் பெரிய உற்சவமாகக் கொண்டாடப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக