சிவ ஸ்தலங்களை அடுத்து விஷ்ணு
கோயில்களே நம் நாட்டில் அதிகம். இந்த விஷ்ணு ஸ்தலங்களில் மகாவிஷ்ணு தனியாகவோ
அல்லது மனைவி மகாலட்சுமி சகிதமாகவோதான் காட்சியளிப்பார். ஆனால் ஒரிசா மாநிலத்தில்
அமைந்துள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வித்தியாசமான ஒரு கூட்டணியில்
காட்சியளிக்கிறார் மகாவிஷ்ணு. அண்ணன் பலராமன் மற்றும் தங்கை சுபத்ராவுடன்தான் இங்கே
காட்சி தருகிறார் விஷ்ணு.
உலகின் முக்கிய திருவிழா!
கி.பி. 1200-ல் உருவாக்கப்பட்ட
இந்த பூரி ஜகந்நாதர் ஆலயம், இந்தியாவின் நான்கு முக்கிய புனித ஸ்தலங்களுள் ஒன்று
வடக்கே பத்ரிநாத், தெற்கே ராமேஸ்வரம், மேற்கே துவாரகாநாத் போல, கிழக்கே ஜகந்நாத்
பூரிதான். மகாமகம், கும்பமேளா, மதுரை கள்ளழகர் திருவிழா, திருவாரூர் தேர்த்
திருவிழா, மைசூர் தசரா என்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு முக்கியத் திருவிழா
இருப்பது போல பூரியிலும் ரத யாத்திரை ரொம்ப ரொம்ப ஃபேமஸ்.
அரைகுறை விக்ரகங்கள்தான்!
ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த ஆலயத்தில்
உள்ள விக்ரகங்கள் அரைகுறையாக வடிவமைக்கப்பட்டது போலிருக்கும். உண்மையிலேயே இவை
பாதி வடிவமைக்கப்பட்ட நிலையில் இருப்பவைதான். இதற்கு ஒரு புராணக் கதையே உண்டு.
சத்ய யுகத்தில் இந்திரத்யும்னன்
என்றொரு அரசன் இருந்தான். அவன் மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன். ஒரு நாள் அவனுக்கு ஒரு
அசரீரி கேட்டது. அதன் வாக்குப்படி அவனுக்கு நதியில் ஒரு மரக்கட்டை கிடைத்தது.
அசரீரி சொன்னபடி அதில் விக்ரகம் அமைக்க சரியான சிற்பிதான் அமையவில்லை.
இந்த நிலையில் ஒரு முதியவர்,
தன்னால் அந்தச் சிலைகளை வடிவமைத்துக் கொடுக்க முடியும் என முன் வந்தார். பூட்டிய
அறையில்தான் சிலைகளை வடிவமைப்பேன் என்றவர், அதற்கு 21 நாட்கள் ஆகும் என்றும்,
அதுவரை அந்த அறையின் கதவை யாரும் திறக்கக் கூடாது என்றும் வினோதமான ஒரு நிபந்தனை
வைத்தார். மன்னனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார்.
நாட்கள் மெதுவாக நகர்ந்தன.
கிழவரும் மும்முரமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ராணி குண்டிச்சா
தேவியால்தான் பொறுமையாக இருக்க முடியவில்லை. கெடு முடிவதற்கு ஆறு தினங்களுக்கு
முன்பே... அதாவது, பதினைந்து நாட்களிலேயே
கதவைத் திறக்கும்படி அவர் கேட்க மன்னரும் கதவைத் திறக்கும்படி உத்தரவிட்டார்.
அங்கே அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட சிலைகள்தான் இருந்தன. மன்னனுக்கு மிகவும்
கஷ்டமாகி விட்டது! அப்போது அவருக்கு ஒரு அசரீரி கேட்ட்து. அந்த அரைகுறை சிலைகளையே
பிரதிஷ்டை செய்து பூஜிக்குமாறு அந்த அசரீரி சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்தான்.
அந்த அரைகுறை உருவங்கள்தான் இன்று நாம் பூரியில் காணும் திருவுருவங்கள்...!
பிரமிப்பு ஏற்படுத்தும் மகா
பிரம்மாண்டமான ஆலயமாக அமைந்திருக்கிறது இது. மொத்தம் நான்கு பிரம்மாண்ட
வாயில்களைக் கொண்டது. இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர்களும் கோபுரமுமே (192 அடி
உயரம்) விழிவிரிய வைக்கும் உதாரணங்களாக இருக்கின்றன.
ஆலயத்தினுள்ளே 120 சந்நிதிகள்
இருக்கின்றன. ஆலயத்தைச் சுற்றிப் பார்க்கவே சுமார் இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது.
இங்கு ஜகந்நாதருக்கு தினமும் 64 வகை உபசாரங்கள் நடைபெறுகின்றன. விதவிதமான
அலங்காரங்களை செய்து பார்த்து மகிழ்கிறார்கள். மேலும் பிரசாதங்கள் பற்றி இங்கே
குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்த ஆலயம் மிகப் பெரிய சமையலறை
கொண்டது. 24 அடுப்புகளும், 600 சமையல்காரர்களும் ஒருங்கிணைந்து உணவு சமைப்பதைப்
பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி! தினுசு தினுசாக பிரம்மாண்ட அளவில் தயாராகும் இந்தப்
பிரசாதங்களை மஹா பிரசாதம் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். அதிலும், இன்றுவரை
மண்பாத்திரங்களை உபயோகித்தே சமைக்கின்றனர்.!
மோட்ச பதவி வேண்டுமா?
கர்ப்பக் கிரகத்தில் அண்ணன் –
தங்கை சகிதமாக ஸ்ரீ கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இப்படி கண்கவர் அலங்காரத்தில்
கிருஷ்ணர் – சுபத்திரை காட்சிகள் உலகுக்கு அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்துவதாகவே
அமைந்திருக்கிறது.
இங்கு வருடந்தோரும் நடைபெறும் மாபெரும்
ரதோத்சவம் உலகப் புகழ் பெற்றதாகும். இத்திருவிழா ஆடி மாதம் வளர்பிறை துவிதியை அன்று
ஆரம்பித்து, திரயோதசி வரை நடைபெறும். அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று இறைவனை
தரிசனம் செய்தால், மோட்சப் பதவி கிடைப்பது நிச்சயமான ஒன்று என்கின்றனர். மேலும்
வாழ்க்கையின் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுவதால், ரதோத்சவம்
சமயத்தில் பூரியில் பெருங்கூட்டம் கூடுகிறது!
மனைவி உத்தரவுடன் ஊர்வலம்!
ஆனி பௌர்ணமியன்று மூன்று தெய்வ
உருவங்களுக்கும் ‘ஸ்நான யாத்ரா விழா’ என்ற பெயரில் குளியல் திருவிழா நடக்கும்.
பிறகு பதினைந்து நாட்கள் மூவரும் ஓய்வெடுப்பர். அச்சமயம் விக்ரகங்கள் படுத்த
நிலையில் இருக்கும். பின் ஜகந்நாதருக்கு ஜூரம் கண்டு விடுவதால் தனியான ஒரு இடத்திலிருந்து
சிகிச்சை பெறுவார். அப்போது பகவான், மஹாலக்ஷ்மியுடன் தனித்து இருப்பார். அதன்பின்
தேவியின் உத்தரவுடன்தான் ரத யாத்திரைக்குக் கிளம்புவார்.
பின் ‘அந்த ராகா’ என்ற பெயரில்
கடவுளர் உருவங்களுக்கு புதிய வண்ணம் பூசி விடுகின்றனர். இதன் மூலம் விக்ரகங்கள்
புதுப் பொலிவுடன் காணப்படும். இப்படி கண்கள் தவிர உடல் முழுதுக்கும் வண்ணம் பூசும்
இந்த விழா ‘நேத்ரோத்சவா’ எனப்படும். இந்தப் புதிய வண்ணத்துடன் பளபளக்கும்
விக்ரகங்கள் ரதத்தில் ஏற்றப்படும். முதலில் சுதர்சனம் பின் பலராமர், தொடர்ந்து
ஜகந்நாதர் – சுபத்திரை!
மூல விக்ரகங்களே உலா போகும் சிறப்பு!
பொதுவாக எந்த ஆலயத்திலும் மூல
விக்ரகங்கள் வெளியில் செல்லாது. உற்சவ விக்ரகங்களே வீதி உலாவுக்குச் செல்லும்.
இந்த ஆலயத்தில் மட்டுமே மூல தேவதைகள் கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியில் செல்லும்
உற்சவம் நடக்கிறது.
பூரி மகாராஜா, தங்க விளக்குமாறால்
ரதங்களை சுத்தம் செய்து, சந்தனம், பன்னீர் தெளித்தபின் மூன்று ரதங்களும் ஒன்றன்
பின் ஒன்றாக, அழகாக ஆடி ஆடிச் செல்லுவது கண்கொள்ளாக் காட்சி!
ஜகந்நாதரின் ரதம் 45 அடி உயரமும்
16 சக்கரங்களும் கொண்டு சிவப்பு, மஞ்சள் துணிகளால் போர்த்தப்பட்டிருக்கும். இதற்கு
‘நந்திகோஷ்’ என்று பெயர். பலராமரின் ‘தாளாத்வஜா’ என்ற ரதம் 44 அடி உயரமும் 14
சக்கரங்களும் கொண்டு, சிவப்பு, பச்சைத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டும்,
சுபத்திரையின் தேர் 43 அடியும் 12 சக்கரங்களும் கொண்டு சிவப்பு, கருப்புத்
துணிகளால் அலங்காரமும் செய்யப்பட்டிருக்கும். அதன் பெயர் ‘பத்மத்வஜா’.
4000 பெரால் இழுக்கப்படும் பிரம்மாண்டமான தேர்!
இவ்வாறு ஏக அமர்க்களத்துடன்,
கம்பீரமாக, அசைந்தாடிச் செல்லும் மூன்று ரதங்களும், 4000 பேருக்கு
மேற்பட்டவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, குண்டிச்சா கோயிலை அடையும். அரைகுறையாக
இறைவனின் உருவங்கள் அமையக் காரணமான இந்த குண்டிச்சா தேவியை சமாதானம் செய்யவே மூன்று
தெய்வங்களும் அவரது இருப்பிடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு 7 நாட்கள்
தங்கியிருக்கும் சமயம், ஜகந்நாதர் கோயிலில் நடைபெறுவது போன்றே எல்லா முறைகளும்
நடைபெறும். பின் மூன்று மூர்த்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஆலயம் நோக்கிப்
புறப்படுவர்.
தக தகக்கும் தங்க உடை
வரும் வழியில் ஜகந்நாதர் அரசரின்
அரண்மனை சென்று, அங்கு மஹாலக்ஷ்மியுடன் மகிழ்ச்சியாக இருந்து பூரி திரும்புவார்.
இரவு முழுதும் ரதத்தில் இருப்பார். ஏகாதசி அன்று தங்க நிற உடை, தங்க நகைகளுடன்
மூர்த்திகள் தக தகவென்று பிரகாசிப்பார்கள். அது மிக சிறப்பான, புண்ணியம் தரும்
தரிசனம் என்பதால், மக்கள் ரதத்தை பிரதட்சணம் செய்து, விழுந்து வணங்குவர். சில மணி
நேரத்தில் ஆபரணங்கள் களையப்பட்டு ஆலயம் செல்வார் ஜகந்நாதர்.
பூமியிலேயே வைகுண்டம்
இந்த ஆலயத்தில் மோட்ச வைகுண்டம்
என்றொரு பகுதியுள்ளது. அது பகவானுடைய சமாதி என்று அங்குள்ளவர்கள் வர்ணித்தபோது
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுபற்றி விசாரித்தோம். இங்குள்ள விக்கிரகங்கள்
மரத்தினால் ஆனவை என்று சொல்லியிருக்கிறேன்.
சிறிது காலத்தில் அவை பழுதடைந்து
போய் விடும். அப்படி பழுதான விக்ரகங்களை சரி செய்வதை ‘ஸ்ரீ அங்கபீடா’ என்கின்றனர்.
எந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருமோ அந்த வருடத்தில் ஜகந்நாதரின்
கட்டளைப்படி வேப்பமரம் தேர்வு செய்யப்படுகிறது. அந்த மரத்தை வைத்து புதிய
விக்ரகங்களை விதிப்படி உருவாக்குகின்றனர். பழுதான விக்ரகங்களை இந்த மோட்ச
வைகுண்டத்தில் புதைத்தும் விடுகின்றனர்.
மூட்-அவுட் ஆகும் மகாலட்சுமி
பத்து நாட்களாக சுற்றுப்பயணம்
செய்துவிட்டு களைப்புடன் வரும் கணவரிடம் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு உள்ளே விட மறுப்பதன்
அடையாளமாக ‘தேவிதாசிகள்’ என்போர் ஆலயக் கதவை மூடி விடுவார்களாம்! தன்னை விட்டு தன்
புருஷன் அவரது தங்கையுடன் ஊர் சுற்றி விட்டு வந்தால் மனைவிக்குக் கோபம் வராதா
என்ன? அன்னை சற்று ஊடல் செய்ய, பின் பகவான் லக்ஷ்மியை சமாதானம் செய்து பரிசுகள்
தருவதாகக் கூற, தேவி கோபம் நீங்கி உள்ளே வர அனுமதி தருவாளாம்!. ஜகத்துகே
நாதனானாலும் கட்டிய மனைவியை தாஜா செய்யத்தான் வேண்டியுள்ளது!
ரத யாத்ரா சமயம் பல
நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நடந்த சம்பவம் இது... அதாவது நேரடியாக சொர்க்கம்
செல்ல விரும்பும் மக்கள், ரதயாத்ரா சமயம், ரதத்தின் சக்கரங்களடியில் பாய்ந்து
உயிரை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததாம். இதிலிருந்தே ஆங்கிலத்தில் ‘JUGGERNAUT’ என்ற சொல் உருவாயிற்று
என்கிறார்கள். இதிலிருந்தே இந்த விழாவின் பழமையும் சிறப்பும் உணரப்படுகிறது.
சூப்பர் சுற்றுலா செல்லலாம்
வருடா வருடம் ஜூன் மாதம்
‘ரத்யாத்ரா’ திருவிழா மிகச் சிறப்பாக பூரியில் நடைபெறுகிறது. வாழ்வில் ஒரு
முறையாவது நாம் கண்டுகளித்து புண்ணியம் பெற வேண்டிய திருவிழா இது. வாய்ப்பும்,
வசதியும் உள்ளேர் ஒருமுறை பூரி ஜகந்நாத் ஆலயத்திற்குச் சென்று, ரத யாத்திரையையும்
கண்ண பரமாத்மாவையும் தரிசித்து வரலாம். மேலும் நீங்கள் பார்த்து ரசிக்க அருகிலேயே
புவனேசுவர் ஆலயம், கொனாரக் சூரியன் கோவில், நந்தன் கானன் மிருகக் காட்சி சாலை
என்று கலையழகும் இயற்கை அழகும் நிரம்பிய பல இடங்களும் கூடுதல் போனஸாக இருக்கின்றன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக