தேநீர் சிறுவர் முதல் முதியோர் வரை
அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான
பானம்.
சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு
கலைதான். ஒரு கப் தேநீர் தயாரிக்க ½ கப் நீரில் இரண்டு ஸ்பூன் சீனி, ஒரு ஸ்பூன்
தேயிலை போட்டு நன்கு கொதித்ததும், அத்துடன் ½ கப் பால் சேர்த்து மீண்டும் ஒரு கொதி
வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில பிஸ்கட்டுகளுடன் அருந்தும் இந்த தேநீர்
களைப்பையும், சோர்வையும் நீக்கி புத்துணர்வு தரும். சில வித்தியாசமான, சுவையான தேநீர்
தயாரிக்கும் முறைகளைப் பார்ப்போமா?
மசாலா டீ:
ஏலக்காய் – 6, கிராம்பு – 6,
சோம்பு – 1 ஸ்பூன், தனியா - ½ ஸ்பூன், ஜாதிக்காய் சிறு துண்டு, சுக்கு சிறு
துண்டு, பட்டை சிறிது.
இவற்றை நைஸாகப் பொடி செய்யவும். தேநீருக்குத்
தண்ணீர் கொதித்ததும், இந்தப் பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும்,
சீனி, பால் சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர் காலத்தில் உடம்பிற்கு சூடு
கொடுக்கும் அருமையான தேநீர்!
ரோஸ் டீ
தேநீர் கொதிக்கும்போது புத்தம்
புதிய ரோஜா இதழ்கள் சிலவற்றைப் போட்டு, தேநீர் தயாரிக்கவும். ரோஜாப்பூ இதழ்களைக்
காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தும், தேவையான போது உபயோகிக்கலாம். இந்த டீ
வாசனையும், மணமும் மிகுந்து அனைவரையும் கவரும் ருசி உடையது.
கோகோடீ
குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட
கோகோ டீயை மிகவும் விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான கோகோ பவுடர் சேர்த்து
கொதிக்கவிட்டு அருந்தும் இந்த ‘சாக்லேட் டீ’ குழந்தைகளை மட்டுமென்ன,
பெரியவர்களையும் சப்புக் கொட்ட வைக்கும்!
இஞ்சி டீ
அஜீரணம், வயிற்றுக் கோளாறுகளை
நீக்கவல்லது இஞ்சி டீ! இஞ்சியை தோலை சீவிவிட்டு, நன்கு நசுக்கி டீ கொதிக்கும்போது
சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.
ஏலக்காய் டீ
ஏலக்காய்களை தோலியுடன் பொடி செய்து
தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும்போது, ஏலக்காய்
தோலிகளை எறியாமல் சேகரித்து வைத்து உபயோகப்படுத்தலாம். மசாலா, இஞ்சி வாசனை
பிடிக்காதோரும் இந்த டீயை விரும்பி சாப்பிடுவர்.
எலுமிச்சை டீ
நீரைக் கொதிக்கவிட்டு, தேயிலையைப்
போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை
சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ் கட்டிகளைப் போட்டு
சாப்பிடவும். பால் தேவையில்லை.
புதினா டீ
சில புதினா இலைகள், துளசி இலைகள்
இவற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 4, 5 மிளகைப் பொடி செய்து போட்டு
நீரில் கொதித்ததும், தேயிலை, சீனி, பால் கலந்து வடிகட்டி அருந்தவும். இது ஜலதோஷம்,
இருமல் இவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும். தேநீர் நம் இருதயத்திற்கும்,
நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி,
புத்துணர்வு தருகிறது. தேயிலை தயாரித்த பின், அந்த சக்கையை ரோஜா செடிகளுக்கு
உரமாகப் போட்டால், செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும். தேயிலை சக்கையை மீண்டும்
கொதிக்க விட்டு வடிகட்டி, அதில் மருதாணிப் பொடியை பிசைந்து கைகளில் இட்டால் நல்ல
சிகப்பு நிறமாகப் பிடிக்கும். காபி அருந்துவதை விட தேநீர் அருந்துவதே நல்லதே!
அதையும் அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மீறினால் நரம்புகளையும், வயிற்றையும்
பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட்சுவர்களைப் புண்ணாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக