பலாப்பழங்களை சாப்பிட்டு
விடுகிறோம். கொட்டைகளை சாம்பார் தவிர வேறு எதிலும் பயன்படுத்துவதில்லை நாம். ஆனால்
பலாக் கொட்டைகளிலும் சில ருசியான சமையல்களை நாம் செய்யலாம்.
பலாக்கொட்டை கறி
பலாக்கொட்டைகளை நசுக்கி மேல் தோலை நீக்கி,
ஒன்றிரண்டாக உடைத்து, தண்ணீரை விட்டு, உப்பைப் போட்டு குக்கரில் நன்கு வேக
விடவும். ஆறியதும் எடுத்து வடி கட்டி நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் 2
ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து உதிர்ந்த பலாக் கொட்டையைப்
போட்டுக் கிளறி, மேலே தேங்காயைத் துருவிப் போட்டு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பலாக்கொட்டை பொடிமாஸ்
20 பலாக்கொட்டைகளை தோலை நீக்கி
குக்கரில் வேக விடவும். 2 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, பெரிய வெங்காயத்தைப்
பொடிப்பொடியாக நறுக்கவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணை விட்டு பெருங்காயம், உளுத்தம்
பருப்பு, கடலைப் பருப்பு, துண்டாக்கிய முந்திரிப் பருப்பு இவற்றைத் தாளித்து,
நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தைப் போட்டு நன்கு உதிர்த்து அத்துடன்
சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு ½ மூடி தேங்காயைத் துருவிப் போட்டு, கறிவேப்பிலையைக்
கிள்ளிப் போட்டு சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். இறக்கிய பின்பு ஒரு மூடி
எலுமிச்சம் பழம் பிழியவும்.
பலாக்கொட்டை பருப்புக் கறி
20 பலாக்கொட்டைகளை நசுக்கி தோலை
நீக்கி உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேக விட்டு வெளியில் எடுத்து உதிர்த்துக்
கொள்ளவும். 1 சிறிய கப் அளவு துவரம் பருப்பு, 4 ஸ்பூன் கடலைப் பருப்பு, 6 மிளகாய்
வற்றல், சிறு துண்டு பெருங்காயம், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக
அரைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து அடை மாதிரி தட்டி குக்கரில்
வேகவிடவும். வெளியில் எடுத்து நன்கு ஆறியதும் உதிர்க்கவும். வாணலியில் 6 அல்லது 7
ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில் அரைத்து வேக விட்டு உதிர்த்த பருப்பைப்
போட்டு நன்கு உதிரும் வரை கிளறவும். நன்கு உதிர்ந்த பின், உதிர்த்த பலாக் கொட்டையைப்
போட்டு எல்லாம் சேர்ந்து கொள்ளும் வரை சிறிது நேரம் கிளறி, இறக்கி கறிவேப்பிலையைக்
கிள்ளிப் போடவும்.
பலாக்கொட்டை துவையல்
10 பலாக்கொட்டைகளை நசுக்கி தோலை
நீக்கி வேக விடவும். 2 ஸ்பூன் எண்ணெயில் 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறு துண்டு
பெருங்காயம், இரண்டு மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும். வேகவிட்ட பலாக் கொட்டைகளுடன்
ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கோலி அளவு புளி, வறுத்த பெருங்காயம், மிளகாய் வற்றல்
சேர்த்து நைஸாக அரைக்கவும். கடைசியாக உளுத்தம் பருப்பு சேர்த்து சற்று கரகரப்பாக
அரைத்து எடுக்கவும்.
பலாக்கொட்டை பக்கோடா
பலாக்கொட்டை – 20
பச்சரிசி - ½ கப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
பெரிய வெங்காயம் – 1
முந்திரிப் பருப்பு – 8
உப்பு
பலாக்கொட்டைகளை நசுக்கி நன்கு
வேகவிட்டு, அத்துடன் பச்சரிசி, உப்பு சேர்த்து நைஸாக கெட்டியாக அரைத்துக்
கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, பெரிய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி
மாவுடன் சேர்த்துப் பிசைந்து, முந்திரிப் பருப்பை துண்டுகளாக்கி கலந்து,
கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு கெட்டியாகப் பிசைந்து, எண்ணெயைக் காய வைத்து,
பக்கோடாக்களாக உருட்டிப் போட்டு சிவக்க எடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக