Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

டென்ஷனுக்கு குட்பை

அவள் விகடன் – பிப்ரவரி 2, 2001 இதழில் வெளியானது




டென்ஷன்! டென்ஷன்! எங்கும், எதிலும் டென்ஷன்! பள்ளிக் குழந்தை முதல் கல்லூரி மாணவர் வரை டென்ஷன்! அடுப்பங்கரையிலும் டென்ஷன்! அலுவலகத்திலும் டென்ஷன்! அசந்து தூங்கும் பால் மணம் மாறா பிஞ்சுக் குழந்தையை அழுதுகொண்டே எழ வைத்துப் பள்ளிக்குக் கிளப்பி, கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட வைத்து, பாரதிதாசனார் ‘மலைவாழை’ என்று இனிமையாக அனுபவித்து பாடிய கல்வியை, ‘எட்டிக்காயாக’ குழந்தைகள் நினைக்கும் வண்ணம் அவர்களை புத்தக சுமைதாங்கிகளாக்கி, அவர்களுக்கும் டென்ஷனைக் கற்றுக் கொடுப்பது நாம்தானே?

இந்தப்பக்கம் வேலைக்காரி, அந்தப்பக்கம் பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள், சமையலறையில் குக்கர் சத்தம், இடையில் அஷ்டாவதானியாய் தடுமாறும் பெண்களை எக்கச்சக்க டென்ஷனுக்கு உள்ளாக்குவது - இத்தனை அமளிக்கும் நடுவில் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘ஹாயாக’க் கையில் காப்பியுடனும், பேப்பருடனும் கனஜோராக திருவாளர் கணவர் காட்சியளிப்பதுதான்! நமக்கிருக்கும் டென்ஷனில் கோபமாக ஏதாவது சொல்லப்போக... வேறு வினையே வேண்டாம்! ‘ஆபீஸில் தான் டென்ஷன் என்றால் வீட்டிலும் நிம்மதி இல்லை’ என்ற பாட்டுடன் சாப்பிடாமல் அவர் கிளம்பிப் போக... இந்த காலை நேர டென்ஷனில் வாழ்க்கையே வெறுத்து விட்டது என்று ஆதங்கப்படாத பெண்களே இல்லை எனலாம்! இப்படி காலையில் எழுந்திருக்கும் போதே பல கவலைகளுடன் ஆரம்பிக்கும் நாள் எப்படி அமைதியாக இருக்கும்? இந்த டென்ஷனும் கோபமும் தொடரும்போது நமக்கு ரத்த அழுத்தமும், நிம்மதியின்மையும் அதிகமாவதுதான் மிச்சம். இந்த டென்ஷனைப் போக்க வழி என்ன என்கிறீர்களா? இதோ கீழே பத்து வழிகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள்! டென்ஷனுக்கு ‘குட்பை’ சொல்லுங்கள்!

1. வேலைகளைத் திட்டமிடுங்கள்:

மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை, சமையல் உட்பட முதல் நாளே தீர்மானித்துக் கொள்ளுங்கள். காலை ஐந்தரை மணிக்கு எழ வேண்டுமெனில், ஐந்து மணிக்கு அலாரம் வைத்து விழித்து, படுத்தபடியே 15 நிமிடங்கள் உடலையும், மனதையும் அன்றைய வேலைகளுக்கு தயாராக்கிக் கொள்ளுங்கள். மாலை, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த உடனே மறுநாள் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே கூட வேலைகள் அனைத்தையும் முடிக்கலாம். நிகழ்ச்சி சுவாரசியத்தில் வேலைச் சுமையே தெரியாது!

2. மாறுபட்ட வேலைகளில் ஈடுபடுங்கள்:

டென்ஷனும், கோபமும் ரொம்ப அதிகமாகிவிட்டால், அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபட வேண்டியது மிக அவசியம். பிடித்த புத்தகம் படிப்பது, தோட்ட வேலை, பிரார்த்தனை, சினிமா என்று வேலையை மாற்றும் போது மனம் லேசாகி, டென்ஷன் விலகி விடும்.

3. கடுமையாகப் பேசுவதைத் தவிருங்கள்:

எந்தச் சூழ்நிலையிலும் எதிராளிகளைக் கடும் வார்த்தைகளால் தாக்க நினைக்காதீர்கள். வார்த்தைகளைக் கொட்டினால் அள்ள முடியாது. கோபத்தை ஐந்து நிமிடம் தள்ளிப் போடுங்கள். அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். யோசித்துப் பார்க்கும் போது ‘நல்ல வேளையாக எதிராளி மனதை காயப்படுத்தவில்லை’ என்ற சந்தோஷம் உங்கள் மனதில் தோன்றும்! டென்ஷனின் போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்!

4. அடுத்தவருக்கு உதவுங்கள்:

‘நம்மை யாரும் கவனிப்பதில்லை, நமக்கு இப்படியாகிவிட்டதே’ என்று எப்போதும் நம்மைப் பற்றியே நினைப்பதை விட்டு, அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய யோசியுங்கள். பக்கத்து வீட்டுப் பாட்டி தனியாக கடைத்தெரு சென்று சாமான் வாங்க முடியவில்லை என்று எப்போதாவது சொல்லியிருப்பார். அவருடன் இந்த முறை நீங்களும் உடன் சென்று சாமான்களைத் தூக்கி வர உதவி செய்யுங்களேன். கிடைக்கும் பாராட்டு உங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம்!

5. மனம் விட்டுப் பேசுங்கள்:

குடும்பத்தில் எல்லோருடனும் மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் மனக்குறையை முக்கியமாக கணவரிடம் கொட்டி விடுங்கள். அவர் மனசு ஒன்றி கேட்காவிட்டாலும் உங்கள் மனம் லேசாகிவிடும்! வீட்டில் நீங்கள் மட்டும் ‘கல்லால் கட்டி சிமெண்டால் பூசிய’ உருவமல்ல... உணர்வுகள் உடையவர் என்பதை உணரச் செய்யுங்கள். அன்பு, பாசம், அரவணைப்பு இவை எல்லாம் சேர்ந்தே இனிய இல்லறம். இவை சரியான அளவில் கிடைக்காதபோதுதான் மன அமைதியின்மையும் மன இறக்கமும் உண்டாகின்றன.

6. சிரித்த முகமே வாழ்வின் இன்பம்:

டென்ஷனிலும், கோபத்திலும் சிரிப்பு எப்படி வரும் என்கிறீர்களா? யார் என்ன சொன்னாலும் சீரியஸாக இல்லாமல் லேசாக எடுத்துக் கொள்ளப் பழகுங்கள்! சிரிப்பு தானாக வரும்!

7. பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள்:

மாதர் சங்கம், தையல் வகுப்பு, யோகா என்று பொழுது போக்குக்கு தற்காலத்தில் நிறைய வசதிகள் உள்ளன. அவற்றுக்கு சென்று உங்கள் மனதை உங்களுக்குப் பிடித்த வழிகளில் செலவிடுங்கள். உங்கள் திறமை பாராட்டப்படும்போது தாழ்வு மனப்பான்மையும் குறையும்.

8. வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள்:

எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாமல் குழந்தைகளுக்கும் கணவருக்கும் சில வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம் கொடுங்கள். ‘என் வீட்டில் நான்தான் எல்லாம்’ என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தால், ஏதாவது தவறு நேரும்போது, ‘எனக்கென்ன தெரியும்? நீதானே எல்லாம் செய்கிறாய்?’ என்று சாமர்த்தியமாகக் கூறி கழண்டு கொள்வார்கள். மொத்த பழியும் உங்கள் மேல் விழ, ‘டென்ஷன்’ இன்னும் ஏறும்.

9. தூற்றுதல்களை அசட்டை செய்யுங்கள்:

எவ்வளவுதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், அதில் குறை கண்டு பிடிப்பதையே வேலையாக வைத்துக் கொண்டிருப்பவர்களை சட்டையே செய்யாதீர்கள்! உங்களைக் குறை கூறுவதால் அவர்களுக்குக் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தைக் கெடுப்பானேன்!

10. அகத்தின் அழகு முகத்தில்:


மனம் நிறைய டென்ஷனும், கோபமும் ஆக்கிரமிக்கும்போது, முக அழகே மாறிவிடும். எந்த பியூட்டி பார்லர் சென்றாலும் அழகைத் திரும்பப் பெற முடியாது. எந்த டென்ஷனுக்கும் தீர்வு உண்டு என்ற மனப்பான்மையும், யோசித்து நல்ல முடிவு எடுக்கும் போக்கும் வந்தாலே கலகலப்பான சிரித்த முகம் தன்னாலே வந்துவிடும். அப்புறம் எந்தப் பெண்ணும் அழகிதான்! மொத்தத்தில் ‘டென்ஷன்’ உங்களை விட்டுப் போனால் இளமை உங்களை விட்டுப் போகாது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக