திருவைகாவூர் கொள்ளிடத்தின் தென்கரையில்,
காவிரிக்கு வடக்கில் அமைந்துள்ள சிவ ஸ்தலம். கும்பகோணத்திலிருந்து
திருவைகாவூருக்கு சுவாமிமலை வழியாக பேருந்து வசதி உள்ளது. இவ்வூரின் தென்
பகுதியில் மண்ணியாறு ஓடுகிறது. இவ்வாற்றைக் கடந்து இத்தலத்தை அடையலாம்.
ஆலயத்தின் சிறிய முகப்பு வாசலைத்
தாண்டியதும் இடதுபுறம் உள்ள சித்தி விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும். எங்கும்
இல்லாதவாறு நந்தி தேவர் வாயிற்புறம் நோக்கி வீற்றிருப்பார். அதற்கான தல புராணம்:
ஒரு காலத்தில் தவநிதி என்ற முனிவர்
இவ்வாலயத்தில் தங்கி வழிபட்டுக் கொண்டிருந்தார். வேடன் ஒருவன் ஒரு மானை விரட்டிக்
கொண்டுவர, மான் ஆலயத்திலுள்ளிருந்த முனிவரிடம் தஞ்சமடைந்தது. முனிவர் அதைத்
தன்னிடம் தர மறுத்ததால், வெகுண்ட வேடன் முனிவரைத் தாக்க முற்பட்டான். உடன்
சிவபெருமான் புலி வடிவமெடுத்து, அவனைத் துரத்த, அவன் பயந்து அருகிலிருந்த வில்வ மரத்திலேறிக்
கொண்டான். கீழிருந்த புலிக்குப் பயந்து உறங்காமல் இரவு முழுவதும் வில்வ இலைகளைப்
பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான் வேடன்! அன்று மஹா சிவராத்திரி. ஊண்,
உறக்கமின்றி வில்வ இலைகளைப் போட்டு அர்ச்சித்த வேடனுக்கு ஈசன் காட்சி தந்து, அருள்
பாலித்தார்.
அன்று அதிகாலை அவ்வேடனின் ஆயுள்
முடிவதால், அவன் உயிரைக் கவர இயமன் வந்தான். நந்திதேவர் அவன் கோயிலினுள் வந்ததை
பொருட்படுத்தவில்லை. தம் அடியவரின் உயிரைக் கவர வந்த இயமனை, சிவபெருமான்,
தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி கையில் கோலுடன் விரட்ட, இயமன் பயந்து ஓடினான்.
அவனை கோயிலினுள் விட்ட நந்தியுடன் ஈசன் கோபம் கொள்ள, நந்தியம் பெருமாள் வாசல்
நோக்கித் திரும்பி, ஓடிய இயமனைத் தன் சுவாசத்தால் கட்டி இழுத்தார். பிறகு அவன்
பணிந்து நின்றதால், ஈசன் ஆக்ஞைப்படி விடுவித்தார். அதன் காரணமாகவே இங்கு வாசல்
நோக்கித் திரும்பியுள்ளார் நந்தி. வேறு எந்த ஆலயத்திலும் இப்படி இல்லை.
இயமனும் தன் பெயரில் ஆலயத்தின்
எதிரில் குளம் ஏற்படுத்தி, அதில் நீராடி இறைவனை வழிபட்டுச் சென்றான். அந்தக் குளம்
இயம தீர்த்தம் எனும் பெயரில் இன்றும் அங்கு உள்ளது. தெற்குப் பிரகாரத்தில் பிரம்ம
தீர்த்தமும், வில்வ மரங்களும் உள்ளன. வில்வ மரம் இத்தல விருட்சம். ஊழிக்காலத்தில்
வேதங்கள் ஈசனிடம் தாம் அழியாதிருக்க உபாயம் கேட்க, இறைவன் அவற்றை இத்தலத்தில்
வில்வ மரங்களாக நின்று தவம் புரியும்படி சொன்னார். அதன்படி அவை இங்கு வில்வ
மரங்களாக தோன்றின. ஆகவே இவ்வூருக்கு வில்வாரண்யம் என்ற பெயரும் ஏற்பட்டது. உத்தால
முனிவரின் சாபம் நீங்க ஸப்த கன்னியரும் இங்கு தவம் செய்ததால், அருகில் அவர்களின் சந்நிதி
நிறுவப்பட்டிருக்கிறது.
மேற்குப் பிரகாரத்தில் ஆறுமுகப்
பெருமான் பன்னிரு கரங்களுடன் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம்
இங்கு இடப்பக்கம் திரும்பியுள்ளது விசேஷம். வடக்கு பிரகாரத்தில் தரிசனம் தரும்
ஜனரட்சகி அம்பாள், தமிழில் வளைக்கை நாயகி எனப்படுகிறார். அம்பாள் வரப்ரசாதி.
அருகிலேயே அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார்.
துர்க்கை சந்நிதிக்கு எதிரில்
இரண்டு சண்டிகேசுவர மூர்த்தங்கள் உள்ளன. சிவகாமி அம்மை சமேத நடராஜரின் உரு பெரிது.
அர்த்த மண்டப வாசலில் துவார
பாலகர்களாக விஷ்ணுவும், பிரம்மனும் நிற்கின்றனர். வடபுறம் இயமனை விரட்டிய
ரூபத்தில் கையில் கோலுடன் தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். துவார பாலகர்கள் கூட
இயமனைத் துரத்திச் சென்றுவிட்டதால், அவர்களிடத்தில் நான்முகனும், மாலவனும்! இது
இவ்வாலயத்தில் மட்டுமே உள்ள அதிசயக் காட்சி.
கர்ப்பக்கிரகத்தில் அருள்
பாலிக்கும் வில்வாரண்யேசுவரர் சுயம்பு லிங்கம். இப்பெருமான் மீது ஞான சம்பந்தர்
பதிகம் பாடியுள்ளார். 11-ஆவது நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழன்
இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருப்பதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.
சந்திரன், சூரியன், சனீஸ்வர மூர்த்திகள் மட்டுமே உள்ளன. இத்தலத்தில் பூமாதேவி,
அம்மை அப்பனை வணங்கி வழிபட்டதால் இவ்வூருக்கு ‘பூமிபுரம்’ என்ற பெயரும் உண்டு.
சிவராத்திரி அன்று நகைக்காக தூங்கும் குழந்தை ஒன்றை திருடன் ஒருவன் கொலை செய்து
விட்டானாம். பெற்றோர் பிரார்த்தனைக்கு இரங்கி இறைவன் அக்குழந்தைக்கு உயிர் கொடுத்ததால்
‘மகவருளீசர்’ எனப் பெயர் பெற்றார். ஆலயத்தின் அக்னி மூலையில் அக்னி தீர்த்தம் என்ற
கிணறு உள்ளது. ஒரு கற்புக்கரசியின் சாபத்திற்கு ஆளாகிய மகாவிஷ்ணு சாபம் நீங்க
இங்கு தவம் செய்ததால் இறைவனுக்கு, ‘அரிமீசர்’ என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
தெற்குப் பிரகார கீழ்க்கோடியில் பிரம்மன் அமைத்த ‘பிரம்ம தீர்த்தம்’ உள்ளது. ஒரு
கண்ணிழந்த பிராமணன் இங்கு வழிபட்டு ஈசன் அருளால் கண் பெற்றதாக தல வரலாறு
சொல்கிறது. இக்கோயிலில் மாசி மாதம் மஹா சிவராத்திரி விழா மிக விமரிசையாகக்
கொண்டாடப்படும். இரவு நான்கு கால விசேஷ பூஜை. அமாவாசை அன்று பஞ்சமூர்த்தி
புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறும். சிவராத்திரியன்று நான்காம் ஜாமத்தில்
இறைவன் வேடன், வேடுவச்சிக்கு காட்சி தரும் நிகழ்ச்சி, புறப்பாடு இவையும் மிகப்
பிரமாதமாக நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக