Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

பொடிகள் பலவிதம்

ஏப்ரல் 1996 மங்கை இதழில் வெளியானது



கொத்துமல்லி பொடி

ஒரு கப் அளவு பச்சை கொத்துமல்லி தழையை வேர் நீக்கி சுத்தம் செய்து, அலம்பி வெயிலில் நன்கு காய வைக்கவும். ஒரு கப் அளவு கொத்துமல்லிக்கு எண்ணெயில் வறுக்க வேண்டிய சாமான்கள்: மிளகாய் வற்றல் – 15, உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன், கடலைப் பருப்பு – 6 ஸ்பூன், புளி – கொட்டைப் பாக்களவு, பெருங்காயம் சிறிது, உப்பு தேவையான அளவு. மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, புளியைப் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

நைஸானதும் கொத்துமல்லித் தழையைப் போட்டு, கடைசியாக பருப்புகளைப் போட்டு அரைக்கவும். பருப்புகளை சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். இந்த கொத்துமல்லி பொடி சற்று ஈரப்பசையோடு இருக்கும். பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம். பிசைந்து சாப்பிடவும், தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் மிக நன்றாக இருக்கும்.

மணத் தக்காளிப் பொடி

உப்பு போடாமல் காய வைத்த மணத்தக்காளிக்காய் 1 கப் அளவிற்கு தேவையான சாமான்கள்:
மிளகாய் வற்றல் – 10
உளுத்தம் பருப்பு – 6 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
ஜீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிது

உப்பு, மணத்தக்காளி வற்றல், உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை முதலில் அரைத்துக் கொண்டு, பின்பு உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சாதத்தில் ஊற்றி இப்பொடியுடன் பிசந்து சாப்பிட வயிற்றுக் கோளாறுகள், பேதி இவை உடன் சரியாகும். மணத்தக்காளி இலையைக் காய வைத்து, மேற்கூறியபடி பொடி செய்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப் புண் இவை நீங்கும்.

அங்காயப்பொடி

தேவை:
தனியா - ½ கப்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 3 ஸ்பூன்
வேப்பம்பூ - ¼ கப்
சுண்டைக்காய் வற்றல் – 30
பெருங்காயம் – சிறு துண்டு
கருவேப்பிலை - ½ கப்
உப்பு - ¼ கப்
மிளகாய் வற்றல் -8

செய்முறை:

 வெறும் வாணலியில் வேப்பம் பூவைக் கருஞ்சிவப்பாக வறுக்கவும். மற்ற சாமான்களையும் சிவக்க வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாகப் பொடி செய்து எடுத்து வைக்கவும். இது பேதியாவதை உடன் நிறுத்தும்.

வல்லாரைப் பொடி
தேவை:
வல்லாரைக் கீரையை அலம்பி சுத்தம் செய்து 2 நாள் நிழலில் காய வைத்து வெறும் வாணலியில் வறுக்கவும். கீரை 1 கப் அளவிற்கு, மிளகாய் வற்றல் – 6, கடலைப் பருப்பு – 4 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன், பெருங்காயம் சிறிது, உப்பு தேவையான அளவு.

செய்முறை:
சாமான்களை 4 ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுக்கவும். 2 ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் பிரட்டவும். கீரை, உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், சீரகத்தை நைஸாக அரைத்த பின் பருப்புகளைப் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். இது குழந்தைகள் ஞாபக சக்திக்கு ஏற்ற பொடி.

பருப்பு மிளகாய்ப் பொடி

தேவை:
மிளகாய் வற்றல் – 1 கப்
வெள்ளை எள், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவை ஒவ்வொன்றும் கால் கப், பயத்தம் பருப்பு – 6 ஸ்பூன், பெருங்காயம் புளியங்கொட்டை அளவு, உப்பு - ¼ கப்.

செய்முறை:
வெறும் வாணலியை சுடவைத்து எள்ளை சிவக்க வறுக்கவும். அதன் பின் கடலைப் பருப்பு போட்டு சற்று வறுபட்டதும், மேலே துவரம் பருப்பு, மேலே உளுத்தம் பருப்பு, கடைசியாக பயத்தம் பருப்பு போட்டு எல்லா பருப்புகளும் சிவக்க வறுபட்டதும், பெருங்காயத்தைப் பொரித்து, மிளகாய் வற்றலையும் கருகாமல் வறுக்கவும். பின்பு பருப்புகள், மிளகாய் வற்றல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு நைஸாக பொடி செய்யவும். இது இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். எந்த எண்ணெயும் சேராததால் வெகு நாளைக்கு வீணாகாது.

தேங்காய் சட்னிப் பொடி

தேவை:
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
கொப்பரைத் தேங்காய் – 1
புளி – எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 16
பெருங்காயத் துண்டு, உப்பு, எண்ணெய்

செய்முறை:
வெறும் வாணலியில் பருப்புகளை சிவக்க வறுக்கவும். கொப்பரையைத் துருவி 2 ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுக்கவும். மேலும் சிறிது எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்து, பருப்புகள், தேங்காய், மிளகாய் வற்றல், புளி பெருங்காயத்துடன் தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இது சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். பூரி, சப்பாத்திக்கு இது மிக நன்றாக இருக்கும்.

சுக்கு மல்லி காபிப் பொடி

தேவை:
கொத்துமல்லி விதை – 2 கப்
மிளகு – 2 கப்
ஜீரகம் – 1 கப்
சுக்கு – ஒரு துண்டு (1 ரூபாய் அளவுள்ளது)
கிராம்பு – 6
ஏலக்காய் – 3

செய்முறை:
எல்லா சாமான்களையும் வெறும் வாணலியில் சற்று சூடுவர வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.1 டம்ளர் சுக்கு காபி தயாரிக்க, ஒரு ஸ்பூன் பொடியை ¾ டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.  நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, சர்க்கரை 2 ஸ்பூன் சேர்த்து, பால் சேர்த்து சாப்பிடவும். அஜீரணம், வயிற்றுக் கோளாறு இவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். இதே போன்று தயரித்த டிகாக்ஷனில், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக