Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

சாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி!

அவள் விகடன் – வாசகி பக்கம் – ஆகஸ்ட், 2000 இதழில் வெளியானது



விலைவாசி விஷம் போல் ஏறிவிட்ட இந்நாளில் சமைத்த அயிட்டம் எது மீந்து விட்டாலும், அதை வீணாக்க மனம் வருவதில்லை. அவற்றை எப்படி உருமாற்றலாம் என்பதற்கான சில ‘டிப்ஸ்’ இதோ:

§  மீந்த சாதத்தில் தண்ணீர் விட்டு வையுங்கள். மறுநாள் தண்ணீரை ஒட்டப் பிழிந்து சாதத்தை குக்கரில் வைத்து சிறிது சூடாக்கவும். சாதம் ஆறியதும், அதில் காரட், வெள்ளரியைப் பொடியாக நறுக்கிப் போடவும். புளிக்காத தயிர், சிறிது பால், உப்பு சேர்த்து கடுகு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் எண்ணெயில் தாளித்துக் கொட்டி மையப் பிசையவும். கடைசியாக கொத்து மல்லியை (விரும்பியவர்கள் பெரிய வெங்காயத்தையும்) பொடியாக நறுக்கிப் போட்டால் பகாளாபாத் ரெடி! ‘ஐயோ, பழையதா? வேண்டாம்...’ என்று முகம் சுளிப்பவர்கள் கூட நாக்கை சப்புக் கொட்டுவார்கள்.

§  மீந்து போன சாதத்தை மைய அரைத்து, அத்துடன் வேகவிட்டு மசித்த உருளைக் கிழங்கு, வேகவைத்த காரட், பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, காரப்பொடி, மசாலாப் பொடி சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக்கவும். கெட்டியாகக் கடலைமாவு கரைத்து அதில் இந்த உருண்டைகளை நனைத்து எண்ணெயில் பொரித்து, சூடாக சட்னி அல்லது தக்காளி சாஸூடன் பரிமாறவும். பழைய சாத கட்லெட்டுக்கு உங்கள் வீட்டார் அடிமை ஆகிவிடுவது நிச்சயம்.


§  சப்பாத்தி அதிகமாகிவிட்டால், அவற்றை ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து விடவும். தேவையானபோது அவற்றைத் தண்ணீரில் நனைத்து மூடிய ஃப்ரைபானில் சுட வைக்கவும். புதிய சப்பாத்தி போன்றே இருக்கும். மீந்த சப்பாத்திகளைத் துண்டுகளாக்கி பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தால் புது சுவையுள்ள பஜ்ஜி தயார்!

§  இட்லி அதிகமாகிவிட்டால், அவற்றை சிறிது வெந்நீர் தெளித்து உதிர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,நிலக்கடலை, முந்திரி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் உதிர்த்த இட்லித் துண்டுகளைச் சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலக்கவும். மேலே துருவிய காரட், தேங்காய் சேர்த்து அலங்கரித்தால் ‘ரிச்’சான இட்லி உப்புமா ரெடி!



§  தேங்காய், தக்காளி, வெங்காயச் சட்னி மிகுந்து விட்டால், ப்ரெட்டில் தடவி, அதன் மேல் உருளைக் கிழங்கு மசாலா வைத்து மேலே மற்றொரு ப்ரெட் வைத்து டோஸ்ட் செய்து சாஸூடன் சாப்பிட சூப்பர் ‘ப்ரெட் சாண்ட்விச்!’

§  தக்காளி, வெங்காயம், தேங்காய்த் துவையல்கள் மீந்து விட்டால், எண்ணெய் விட்டு நன்கு கெட்டியாகும் வரை வதக்கி வைத்தால், மேலும் நான்கு நாட்கள் உபயோகிக்கலாம்.



§  குலாப்ஜாமூன், ரசகுல்லா செய்த சர்க்கரைப் பாகு மிகுந்து விட்டால், சாதத்தை குழய வடித்து, சர்க்கரைப் பாகுடன் சேர்த்துக் கிளறி, நெய்யில் முந்திரி வறுத்துப் போட்டு, ஏலப்பொடி சேர்த்துக் கிளறினால் சூடான சர்க்கரைப் பொங்கல், வாயில் நீர் ஊற வைக்கும்.

§  ஜாம் சிறிதளவு மிஞ்சினால், அத்துடன் சிறிது பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொடுத்தால், வித்தியாசமான சுவை உள்ள ‘மில்க் ஷேக்!’



§  மீந்த ப்ரெட் வெயிலில் மொறு மொறுவென காயவிட்டு, பொடியாக்கி வைத்துக் கொண்டால் கட்லெட் செய்ய உதவும்.

§  விருந்தாளிகள் வருகை, விசேஷ நாட்களில் அல்லது சில சமயம் கூட்டு, குழம்பு, ரசம் மீந்துவிடுவது சகஜம். கொஞ்சம் சின்ன வெங்காயத்தை நறுக்கி, எண்ணெயில் வதக்கவும். குழம்பு, கறி, கூட்டு, ரசம் இவற்றை ஒன்றாகக் கொட்டி, வதக்கிய வெங்காயம் போட்டு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்கவிடவும். இட்லி, தோசை சப்பாத்திக்கு ‘சூப்பர் சைட் டிஷ்!’ தயிர் சாதத்துக்கு நல்ல ‘மேட்ச்!’


§  கார்ன் ஃப்ளவர் (சோள மாவு) ரொம்ப பழையதாகி விட்டால், வெந்நீரில் கொதிக்கவிட்டு துணிகளுக்குக் கஞ்சி போட உபயோகிக்கலாம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக